top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-198 - உங்களின் புதிய முயற்சி என்ன?"

Updated: Apr 26, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-198

உங்களின் புதிய முயற்சி என்ன?


  • குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவதொரு பொருள் கையில் கிடைத்தால், அடுத்த 2-3 நாட்களுக்கு அதை வைத்தே தொடர்ந்து விளையாடுவார்கள். அந்தப் பொருள் எப்படி வேலை செய்கிறதென்று ஆராய்வார்கள். அந்த முயற்சியில் பல விளையாட்டுப் பொருள்கள் பழுதடைந்துவிடும். ஆனாலும், அவர்களின் புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் முன்னாள் எதுவும் தடையாவதில்லை. எது கிடைத்தாலும், எங்கு போனாலும், அது என்ன? அது யார்? அது எப்படி வேலை செய்கிறதென்று கேள்வி கேட்பதையும், ஆராய்வதையும் மிகுந்த ஆர்வத்துடன் தொடர்வார்கள். அதனால் தானோ என்னவோ, வளர்ந்தவர்களைக் காட்டிலும் குழந்தைப் பருவத்தில் கற்றலின் வேகம் மிக அதிகமாக இருக்கிறதோ!!

  • 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த புகழ்பெற்ற நிறுவனங்கள் பல, இன்று இல்லை. அவை இருந்ததற்கான தடையமும் இல்லாமல் போனது. இப்போதைய தொழில்நுட்ப உலகில், நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நிற்க, புதிது புதிதாய் ஒன்றை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டிப்பறந்த கைபேசி தயாரிப்பு நிறுவனம்“நோக்கியா”, “பிளாக்பெர்ரி” போன்றவைகள் இன்று சந்தையில் இல்லை. “கூகுள்”-க்கு இணையாய் போட்டியில் இருந்த “யாகூ” “ரீடிப்” நிறுவனம், புதியவற்றை அறிமுகம் செய்வதில் தாமதம் காட்டியதால், இன்று போட்டியில் இல்லை. மக்களின் புதிய தேவைகளைப் புரிந்த, அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன்னர் எந்த நிறுவனம் சந்தை படுத்துகிறதோ, அந்த நிறுவனத்தை மக்கள் போற்றுகின்றனர்.

தங்களுக்கு நன்றாக தெரிந்ததை மட்டுமே செய்துகொண்டிருந்தால், ஒருபுறம் அதில் நிபுனத்துவம் வளர்ந்தாலும், புதிதாய் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. செய்ததையே செய்துகொண்டிருந்தால், குழந்தைகளுக்கு சீக்கிரத்தில் சலிப்பு வந்துவிடுகிறது. அந்த சலிப்பை போக்க அடுத்து புதிதாய் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். பெரியவர்கள் செய்யும் செயல்கள் ஏதாவதொன்றை அவர்கள் புதிதாக முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு புதிய முயற்சியின் மூலம் அவர்கள் தங்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயார்படுத்திக் கொள்கிறார்கள். பிள்ளைப்பருவத்தில் இவை எல்லாவற்றையும் செய்யும் நானும் நீங்களும், ஏனோ வளர்ந்த பின்னால் சோம்பேறித்தனத்தில் ஊறி புதியவற்றை கற்கும் முயற்சியை, புதியவற்றை தைரியமாக பரிசோதிக்கும் முயற்சியை கைவிட்டுவிடுகிறோம்.


தொழில்நுட்பம் தினம்தினம் மாறிக்கொண்டிருக்கிறது. 800 கோடி மக்களின் தேவைக்கேற்ப, தினமும் ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்பு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. மக்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இன்றைய தினமே புதிய முயற்சிகளை, புதிய சோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனம், தொடர்ந்து புதியவற்றை சந்தைப்படுத்தி, தன் முதன்மைத் துவத்தை தக்கவைக்க முயற்சிக்கிறது. புதிய சோதனை முயற்சிகளை செய்யாமல், மற்றவர்கள் செய்துகொண்டிருப்பதை மட்டும் செய்துகொண்டிருந்தால் பத்தோடு பதினொன்றாக சந்தையில் சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். பொருளாதார சரிவு, வியாபார மந்த நிலைகள் வரும்போது, இந்த நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.


இன்றைய உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தாக்குப்பிடித்து நிற்க, நீங்கள் தினம்தினம் புதியவற்றைப் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நிறுவங்கள் தாக்குப்பிடித்து நிற்க புதியவற்றை கண்டுபிடித்து சந்தைப்படுத்த வேண்டும்.


  • நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், புதிய திறன்களை தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே, அடுத்த கட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். பணியில் எவ்வளவு ஆண்டுகள் இருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் கொடுத்து வந்த பதவி உயர்வு முறைகள் மலையேறிவிட்டன. இன்று நீங்கள் எந்தளவிற்கு புதியவற்றை கற்றும், புதிய முயற்சிகளை மேற்கொண்டும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களின் அடுத்த கட்ட வளர்ச்சி தீர்மானமாகிறது.

  • செய்த சமையலையே செய்து கொண்டிருந்தால், செய்பவருக்கும், உண்பவருக்கும் சீக்கிரத்தில் சலிப்பு வரும். இன்று “யூடியூப்”-ல் பார்த்து பாட்டிமார்கள் கூட புதிய பதார்த்தங்களை முயற்சி செய்கின்றனர். நீங்கள் அப்படியென்ன முயற்சி செய்தீர்கள்? எத்தனை பதார்த்தங்களை செய்ய கற்றுக்கொண்டீர்கள்? என்ன புதிய கலைகளை வலைதளத்தில் கற்றுள்ளீர்கள்? என்று உங்களை நீங்களே சுயஅலசல் செய்யுங்கள்;

புதிய முயற்சிகள் ஒரு சிலசமயம் தவறாகும். ஒரு முறை அப்படி தவறானால், என்னென்னவற்றை சரியாக செய்தோம்? எங்கே தவறவிட்டோம்? என்று அலசினால், அடுத்த முறை அவை சரிசெய்யப்பட்டு, புதியவைகளை வெற்றிபெற வைக்கமுடியும். முதல் முறை ஏற்படும் தவறுகளுக்கு பயந்து முயற்சியே செய்யாமல் இருந்தால், சராசரியாளர்களைவிட கீழ்நிலைக்கு கட்டாயம் நீங்கள் தள்ளப்படுவீர்கள்.


உலகின் பொதுவான யதார்த்தம், மனிதனால் கற்பனை செய்யக்கூடிய எல்லாமே நிஜத்தில் சாதிக்கக்கூடியனவே. அதற்கான அடிப்படைத் தேவை, தொடர்ந்து முயற்சிக்கவேண்டியது ஒன்றே. புதிய முயற்சிகளை யாராவதொருவர் மேற்கொள்ளாமல், எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை. அடுத்தவர்கள் செய்யட்டும் என்று நீங்கள் காத்துக்கொண்டிருந்தால், நீங்களும் அந்த சராசரியாளர்களின் கூட்டத்தில் ஒருவராய் வாழ்ந்து மடியவேண்டியதுதான்.

புதிய முயற்சிகளின்போது

  • தவறுகள் நேரலாம், ஆனால் அவை உங்களுக்கு அனுபவமாய் நின்று அடுத்தகட்டத்திற்கு வழிநடத்தும்;

  • உங்களுக்கு சிலசமயம் காலவிரயங்களும், பணவிரயமும் ஏற்படலாம், ஆனால் புதியவைகள் சந்தையில் வெற்றிபெறும்போது, நீங்கள் நேரத்திலும், பொருளிலும் எல்லோருக்கும் முன்னால் மிகப்பெரிய வெற்றியாளராக நின்றிருப்பீர்கள்;

  • புதிய முயற்சிகளில் பயம் நிறைய இருக்கக்கூடும், ஆனால் இருப்பதை தக்கவைக்க போராடும் யுத்தத்தில் அதைவிட பயம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்;

  • எப்படியும் எல்லோரையும்போல ஒருநாள் மடியத்தான் போகிறோம், எதற்கிந்த போராட்டம் என்று சலிப்பு வரலாம், ஆனால் வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தீர்கள் என்பதுதான் உங்களின் மனநிறைவு.

விளையாட்டோ, வியாபாரமோ, பொதுசேவையோ, களம் எதுவானாலும் செய்தவற்றையே திரும்ப செய்துகொண்டிருந்தால் அவற்றின் தேவையும், தரமும் படிப்படியாய் குறைந்துபோகும். புதியவற்றை முயற்சித்து மேம்படுத்தினால் மட்டுமே, உங்களுடையவை எல்லாமே நீண்டகாலம் நிலைத்திருக்கும். எதற்காகவும், யாருக்காவும் உங்களின் புதிய முயற்சிகளில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். உங்களின் மேம்பாடு, உங்களின் புதிய முயற்சிகளில் தான் அடங்கியிருக்கிறதென்ற நிதர்சனத்தை மறந்துவிடாதீர்கள்;


தினம் தினம் புதிதுபுதிதாக நிறைய படைக்கப்படுகிறது

நடந்த சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன;

புதிய துறையில், புதிய முயற்சியில் தொடங்கப்பட்டு

புதிய சாதனைகள் படைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன;


நடந்துகொண்டிருந்த மனிதன் சக்கரத்தை யோசித்தான்

கையில் செய்வதற்கு பதிலாய் இயந்திரத்தை யோசித்தான்

பறவைகளைப் பார்த்து விமானம் கண்டான்

ஒருபுறம் இருப்பதை ஓரு கூட்டம் தொடர்ந்துகொண்டிருக்க

மறுபுறம் புதிய முயற்சிகள் புதியவற்றை அறிமுகப்படுத்துகிறது;

புதிய முயற்சிகள் இல்லாமல் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை!


ஒருநிமிடம் யோசித்து பதில் கூறுங்கள் !!

நேற்றுவரை புதிதாய் என்ன முயற்சி செய்தீர்கள்?

இன்றைக்கு என்ன புதிதாய் செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நாளைக்கு புதிதாய் எதைப்படைக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?


மூன்று கேள்விகளுக்கும் நேரடியான ஆக்கப்பூர்வமனா பதிலிருந்தால்

நீங்கள் உங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது உறுதி – இல்லாவிட்டால்

காலத்தின் போக்கில் வெறுமனே உருண்டுகொண்டிருக்கிறீர்கள் !!


- [ம.சு.கு 25.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page