“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-197
பயன்படுத்தாத திறன் மங்கிவிடும்!
முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு ஒன்று நடந்தது. ஒரு குறிப்பிட்ட ஆண்டு 12-ஆம் வகுப்பு பயின்றவர்கள் அனைவரும் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப்பின் சந்திக்கும் நிகழ்வு. பள்ளி நாட்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மூன்று பெண்கள் [மிகநெருங்கிய தோழிகள்] வந்திருந்தனர். ஆனால் அவர்கள் இன்று வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஆச்சரியமளித்தது. மூன்றாவது இடம் பிடித்தவர் பட்டப்படிப்பு முடித்து, இன்று ஒரு நிறுவனத்தின் செயலதிகாரியாக இருக்கிறார். இரண்டாமிடம் பிடித்தவர் கல்லூரிப்படிப்போடு திருமணம் செய்து குடும்ப வாழ்வில் ஐக்கியமாகினார். முதலிடம் பிடித்தவர் மேற்கொண்டு படிக்க முடியாமல் இல்லற வாழ்வில் ஐக்கியமானார். பள்ளி விழாக்களில் மேடையில் நன்றாக பேசக்கூடியவர்களாக இருந்த இவர்கள் மூவரும் தன் சக மாணவர்கள்முன் தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டனர். முதல் இருவரும் பேச முடியாமல் திணறினர், சிறந்த பேச்சாளர்களாக இருந்தவர்கள் ஏன் திணற வேண்டும்?
எங்கள் பகுதியில் சிறந்த இறகுப்பந்தாட்ட வீரராகவும், உடல் திறனுடையவராகவும் இருந்த ஒருவருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், குடும்பத்தோடு 10 ஆண்டுகாலம் சென்று இருந்துவிட்டு வந்தார். அங்கு வேலை பழுவில் உடற்பயிற்சி, விளையாட்டென இரண்டையும் தவர்த்திருந்தார். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் ஊருக்கு வந்தபின்னர், இறகுப்பந்தை தொடர விரும்பி களம் கண்டபோது, அவரது கைகளுக்கு இறகுப்பந்து மட்டை பிடிபடவே இல்லை. கிட்டதட்ட ஒருமாத காலம் தொடர்ந்து வந்து விளையாடிய பின்னரே, மட்டையும், பந்தும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது. தன் பழைய நிலை ஆட்டத்தை திரும்பப்பெற, கிட்டத்தட்ட 8 மாத காலம் ஆனது. கற்றதும், பயின்றதும் அந்தளவிற்கு மறந்துபோகுமா?
பள்ளியில் பயின்ற காலத்தில் நூல்கள் வாசிப்பதும், பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வெல்வதையும் சர்வ சாதாரணமாக செய்து வந்த மூவரில், இருவர் திருமணமான பின் வாசிப்பையும், மேடைப்பேச்சையும் முற்றிலுமாய் நிறுத்திவிட்டனர். நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர் வாசிப்பையும், மேடைப்பேச்சையும் தொடர்ந்துகொண்டிருந்தார். மூன்றாமவரது பேச்சில் முன்னாள் மாணவர்கள் அசந்து நின்றனர். முதல் இருவரும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியாமல் நன்றி கூறிவிட்டு இறங்கிவிட்டனர். ஒருகாலத்தில் தனது தனிப்பட்ட திறனாக இருந்த மேடைப்பேச்சு, காலப்போக்கில் பயிற்சிக்கப்படாததால், முற்றிலும் அன்னியமாகிப் போனது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
மனித மனம், தினம்தினம் புதிதாக ஆரம்பிக்கிறது. உறங்கும்வரைதான் உங்களின் அன்றைய பயிற்சி & திறன்கள் அதே நிலையில் இருக்கும். மறுநாள் விழித்ததும், நீங்கள் மறுபடியும் பயிற்சிக்க வேண்டும். பயிற்சியை தவறவிட்டால், களத்தில் வெற்றியை தவறவிட நேரிடும். உறங்கி எழும்போது, உங்கள் தசைகள் தளர்ந்து சாதாரண நிலைக்கு வந்துவிடுகிறது. மீண்டும் பயிற்சித்து வலுவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் சோம்பேறித்தனத்தில் திளைத்து பயனற்றுப்போகிவிடும். இந்த நிலை உடல் வழுவிற்கு மட்டுமல்லாமல், தனிமனித திறன்கள் எல்லாவற்றிற்கும் பொதுவானதுதான். ஒருகாலத்தில் கைகளில் வெகுநேர்த்தியாக சுழன்ற இறகுப்பந்து மட்டை, தொடாமல் விட்டதால், படிப்படியாய் அந்த நேர்த்தியை கையும், மூளையும் மறந்துவிட்டது. நீண்ட காலத்திற்குப்பின், அதை திரும்ப எடுக்கும்போது அது புதிய துவக்கம்தான். அடிப்படையிலிருந்துதான் மீண்டும் பயிற்சிக்க வேண்டும். எந்த திறனை நீங்கள் உபயோகிக்காமல் விட்டாலும், அது படிப்படியாய் உங்கள் நினைவுகளிலிருந்து மங்கிப்போகும்.
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் நீங்கள் கற்று நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், சிலகாலம் அவற்றை பயிற்சி செய்யாமல் இருந்தால், படிப்படியாய் அவை உங்கள் நினைவுகளில் இருந்து அழிந்துபோகும். 10-15 ஆண்டுகளுக்குப் பின் திரும்ப செய்வதானால், நீங்கள் அடிப்படை பயிற்சியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
புதிய மொழிகளை எவ்வளவு ஆழமாக கற்றிருந்தாலும், பயன்படுத்தாமல் இருந்தால், மொழியின் வார்த்தைகள் மறந்துபோகும்;
இசைக்கருவிகள் உங்கள் விரல் நுனியில் விளையாடியிருக்கலாம், ஆனால் அன்றாட பயிற்சியை கைவிட்டால், விரல்கள் வாசிப்பின் நேர்த்தியை படிப்படியாய் மறந்துநிற்கும்;
நீங்கள் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் ஆனழகனாக வலம்வந்திருக்கலாம், ஆனால் அன்றாட உடற்பயிற்சியை கைவிட்டால், சீக்கிரத்தில் குண்டாகி நடக்கவே சிரமப்படுவீர்கள்;
சிக்கல்களை நுணுக்கமாக பகுத்தாய்ந்து தீர்ப்பதில் வல்லவராக இருந்திருக்கலாம், ஆனால் அவற்றை தொடர்ந்து செய்வதை விட்டால், உங்களின் பகுத்தாயும் திறன் படிப்படியாய் மங்கிப்போகும்;
உங்கள் கற்பனை வளத்தில் எண்ணற்ற புதிய படைப்புக்களை (ஓவியம், கட்டுரை, கவிதை...) உருவாக்கியிருக்கலாம், ஆனால் தொடராமல் விட்டால், படைப்பாற்றல் குறையத்தான் செய்யும்;
பல இலட்சம் மைல்கள் வாகனங்களை ஒட்டியிருக்கலாம். பத்தாண்டுகாலம் வாகனத்தை தொடவில்லை என்றால், வாகனத்தை திரும்பவும் பயன்படுத்தும்போது திணறத்தான் நேரிடும்;
தட்டச்சில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகளை அடித்திருக்கலாம், ஆனால் 5 ஆண்டுகாலம் தட்டச்சை தொடவில்லை என்றால், 10 வார்த்தைக்கே திணற வேண்டியதுதான்.
சிலமாதம் நண்பரை பார்க்கவில்லை என்றால், நண்பரின் பெயர் கூட பலருக்கு மறந்துவிடுகிறது.
பயின்றவை, தொடர்ந்து பயிற்சிக்கப்படாவிட்டால், அது படிப்படியாய் நினைவுகளிலிருந்து மங்கி பயனற்றுப்போகும் என்பது வாழ்வின் யதார்த்தம்.
நீங்கள் நிறைய படித்து மனனம் செய்திருக்கலாம் – ஆனால்
குறிப்பிட்ட இடைவெளியில் நினைவுகூறத் தவறினால்
மனனம் செய்தவையெல்லாம் படிப்படியாய் மறந்துபோகும்;
ஒருகாலத்தில் நீங்கள் சுவையாக சமைத்திருக்கலாம்
ஒருகாலத்தில் ஓட்டப்பந்தயத்தில் வென்றிருக்கலாம்
ஒருகாலத்தில் கானக்குயிலாக பாடியிருக்கலாம்
ஒருகாலத்தில் பயில்வானாக வலம்வந்திருக்கலாம்
இவைகளை அன்றாடம் தொடர்ந்து செய்யாமல் விட்டால்
பிற்காலத்தில் நீங்கள் மறுபடியும்
ஆரம்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்;
கலைகளும், கல்வியும், செல்வமும்
தொடரந்து பயிற்சித்துக் கொண்டும்
பராமரித்துக் கொண்டுமிருந்தால்தான்
இருப்பது இருக்கும் தரத்திலும், அளவிலும்
தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும்;
இவைகளை கவனிக்காமல் / உபயோகிக்காமல் விட்டால்
அவைகளை உங்கள் எண்ணமும் மனமும் மறந்துவிடும்;
- [ம.சு.கு 24.04.2023]
Comments