“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-195
சராசரியாளர்களை அனுசரித்துப் போங்கள்!
சரக்குகளை கையாளும் நிறுவனத்தின் முதலாளி, புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஒரு ஊழியரிடம், அப்போது வாகனத்தில் வந்திருந்த சரக்குகளை இறக்கி, ஒரு மூலையில் சீராக அடுக்கி வைக்க சொல்லிவிடுகிறார். அந்த ஊழியர் எல்லாவற்றையும் இறக்கி, ஒன்றன் மீது ஒன்றாக சீராக அடுக்கிவைத்துவிட்டார். மேலே அடுக்கப்பட்டிருந்த பெட்டியின் எடை அதிகரிக்கவே கீழ்வரிசையில் இருந்த பெட்டிகள் மடங்கி முறியத்துவங்கியிருந்தன. அந்தப் பெட்டியில் அச்சிடப்பட்டிருந்து மேலடுக்கும் எண் குறியீடுகள் குறித்து அந்த ஊழியருக்கு தெரியாது. முதலாளியும் அதைப்பற்றி ஏதும் சொல்லாததால், அவர் 5 வரிசைகளுக்கு மேல் அடுக்கக்கூடாத இடத்தில், 10 வரிசைகளுக்கு மேல் அடுக்கியிருந்தது பெட்டிகளில் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவியர்களில், ஒரு சிலர் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு பாடங்கள் புரிவதில் சிரமம் இருக்கும். ஆசிரியர்கள், அந்த புத்திசாலி மாணவர்களை மட்டும் கருத்தில் கொண்டு பாடம் நடத்தினால், நிறைய பாடங்களை சீக்கிரமாக நடத்திமுடிக்க முடியும். ஆனால், அப்படி வேகமாக நடத்தினால், சராசரி மாணவர்களின் நிலை படுமோசமாகிவிடும். வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆசிரியர் சற்று நிதானாமாகத்தான் பாடத்தை விளக்கி எடுக்க வேண்டும். புத்திசாலிகளுக்கு பெரிதாய் சொல்லித்தரத் தேவையில்லை. அவர்கள் புள்ளிவைத்தால், கோடுபோட்டு விடுவார்கள். ஆசிரியரின் திறன், எப்படி சராசரி மாணவர்களை ஊக்குவித்து வெற்றி பெற வைக்கிறார் என்பதில் தான் உள்ளது.
பெட்டியின் மேல் எவ்வளவு பெட்டிகள் வைக்கலாம் என்று தெளிவுற அச்சிடப்பட்டிருப்பதை ஊழியர் கவனித்து வேலை செய்வார் என்று முதலாளி நினைத்தார். அந்த ஊழியருக்கு அந்த எண்கள் எதற்கு அச்சிடப்பட்டிருக்கிறதென்று தெரியாததால், கூடுதலாக அடுக்கிவிட்டார். இப்போது நடந்த தவறுக்கு யார் காரணம்? புதியவரை வேலைக்கு வைக்கும்போது, சில அடிப்படை விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். ஊழியர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள் என்று நம்பியிருந்தால், பல சமயங்களில் சிக்கலாகி விடும். ஒன்றை மறந்துவிடாதீர்கள், ஊழியர் நல்ல புத்திசாலியாக இருந்தால், உங்களிடம் ஏன் ஊழியம் செய்கிறார். அவர் சுயமாக தொழில் செய்ய துவங்கிவிடுவாரே.
பல மாணவர்கள் பயில்கின்ற இடத்தில், ஒரு சிலர் சராசரியாக இருப்பதும், சிலர் படிப்பில் படுசுட்டியாக இருப்பதும் இயல்பான ஒன்று. நன்றாக படிக்கும் மாணவர்கள், தன்னுடனான சக மாணவர்களை அனுசரித்து, தனக்குத் தெரிந்ததை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து படிக்கும்போது, பரஸ்பர புரிந்துணர்வும், நட்பும் ஆழமாகிறது. ஆசிரியர்கள் எல்லா மாணவர்களையும் சமமாக பாவித்து, அந்த சராசரி மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும். ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் பாரபட்சமான முறையில் நடந்துகொள்வதால், பிள்ளைகளுக்கிடைய ஏற்றத்தாழ்வுகளும், ஆகங்காரமும், பிரிவிணை எண்ணமும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட பிரிவிணை எண்ணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுடையது.
ஆயிரம் பேர் படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில் எல்லா நிலையிலானவர்களும் இருப்பார்கள். சிலர் புத்திசாலிகளாகவும், பலர் சராசரியானவர்களாகவம், ஒருசிலர் அறிவு வளர்ச்சி குன்றியவர்களாகவும் இருக்கக்கூடும். அதிலும், சராசரியானவர்கள், தங்களை புத்திசாலிகளாக, அதிமேதாவிகளாக காட்டிக்கொள்ள ஆசைப்பட்டு சில கிறுக்குத்தனங்களை செய்யக்கூடும். எல்லோரும் எல்லாவற்றையும் பொருத்தும், சகித்தும் தான் வாழ்க்கையை நகர்த்தவேண்டும். அவருக்கு சாமர்த்தியம் பத்தாது என்று விலக்கிவிட முடியாது. அவர்கள் திறமையின் அளவை அறிந்து அவர்களுக்கேற்ற வேலைகளை கொடுத்து மேற்பார்வையிட வேண்டியதுதான்.
உங்கள் நிறுவனத்தில் பணிபுரியம் அனைவரும் புத்திசாலிகளாக இருக்க வாய்ப்பு மிகமிக குறைவு. ஒவ்வொருவரின் திறமையும் வெவ்வேறு விதத்தில் மாறுபட்டிருக்கும். நீங்கள் எடுத்திருக்கும் பணிக்குத் தேவையான தகுதி திறமைகளை பட்டியலிட்டு, அதற்குரிய நபர்களை நியமித்து பார்க்க வேண்டும். மிக நுணுக்கமான, சாமர்த்தியமாக செய்யவேண்டிய வேலைக்கு புத்திசாலிகளையும், செய்வதையே திரும்பத்திரும்ப செய்கின்ற வேலைக்கு சராசரியாளர்களையும் நியமித்து பணிகளை துவக்க வேண்டும். வேலைகளின் போக்கில், சராசரியாளர்களுக்கு படிப்படியாக பயிற்சியளித்து அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும். சராசரியாளர்களை அப்படியே அதே அளவில் விட்டால், அவர்களுக்கு சலிப்பு வந்துவிடும். அவர்களை ஊக்குவித்து மேம்படுத்தும் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு தன் ஊழியர்களை தயார் செய்கிறது.
சந்தையில் எப்போதும் புத்திசாலிகளே வேலைக்கு கிடைப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. பல சமயங்களில், அவசரத்திற்கு கிடைப்பவர்களை கொண்டு வேலையை செய்ய வேண்டும். சராசரியாளர்களை நியமித்து செய்கின்ற இடத்தில், நீங்கள் கவனமாக வேலைகளை வடிவமைத்து, தவறுகள் நேர்வதற்கான வாய்ப்பை குறைத்து, போதுமான மேற்பார்வைகளை ஏற்படுத்தி வேலைகளை முடிக்கவேண்டும்.
சராசரியாளர்கள் தான் இங்கு அதிகம் என்ற பொதுவிதியை மறந்துவிடாதீர்கள். நீங்கள் சாதனையாளர்களாக வேண்டுமானால், நிறைய சராசரியாளர்களை பயிற்றுவித்து மேம்படுத்தினால் தான் உங்களால், உங்கள் நிறுவனத்தை வளர்க்க முடியும். நீண்டகால நம்பிக்கையான ஊழியர்கள் பலர், இந்த சராசரி கூட்டத்திலிருந்து வந்தவர்கள் தான். சந்தேகமிருந்தால், உங்களுக்கு தெரிந்த சிலமுதலாளிகளை விசாரித்துப் பாருங்கள். அவர்களின் வலது கையாகவும், இடது கையாகவும் இருக்கும் நபர்கள், ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாதவர்களாகத்தான் அவரிடம் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். அவர்களை அந்த முதலாளிகள் படிப்படியாக பயிற்றுவித்து மேம்படுத்தியிருப்பார்கள்.
நீங்கள் மிகப்பெரிய சாதனைகள் புரிய, உங்களைச் சுற்றி புத்திசாலிகள் இருக்கவேண்டியது எவ்வளவு அவசியமோ, அதைவிட இரண்டு மடங்கு சராசரியாளர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் இருக்க வேண்டும். உங்கள் களம் வியாபாரமானலும், போரானாலும், சராசரியாளர்களை அனுசரித்து உங்கள் பணிகளை சாமர்த்தியமாக திட்டமிட முடிந்தால், உங்களால் மிகப்பெரிய படையை உருவாக்கி வழிநடத்த முடியும்.
நீங்கள் மிகச்சிறந்த செயல்திறன் உடையவராக இருக்கலாம் – ஆனால்
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவ்வாறு இருக்கமாட்டார்கள்;
நடைமுறையில்
10% அதீத திறமைசாலிகளும்
80% சராசரிகளும்
10% திறமையற்றவர்களும்
நிறைந்ததுதான் இந்த உலகம்;
நீங்கள் வேண்டுமானால் முதலாம் 10%-ல் இருக்கலாம் – ஆனால்
மீதமுள்ள 80% சராசரிகளுடன்தான் உங்கள் வேலை நடந்தாகவேண்டும்;
அந்த சராசரிகளை குற்றம் சொல்வதில் பயனில்லை - அவர்கள் அப்படித்தான்;
அவர்களை விரட்டினாலும் அவர்களால் செய்யமுடிவது அவ்வளவேதான்;
சராசரியாளர்களை வைத்து திறம்பட வேலையை நகர்த்த பழகிவிட்டால்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்;
மூளையும், திட்டமும் உங்களுடையது
சராசரியாளர்கள் உங்களுக்கான கூடதல் கைகள்;
அவர்கள் செய்ய வேண்டியதை தெளிவுற வகுத்துவிட்டால்
அதற்கான மேற்பார்வைகளையும் கட்டுப்பாடுகளையும் சரிவர வகுத்துவிட்டால்
அவை அவர்களின் சராசரிமட்டத்தில் தானாக நடந்துகொண்டிருக்கும்
நீங்கள் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட முயற்சிகளை தைரியமாக செய்யலாம்!!
- [ம.சு.கு 22.04.2023]
コメント