top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-194 - எல்லாம் ஒருசான் வயிற்றுக்குத்தான்!"

Updated: Apr 22, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-194

எல்லாம் ஒருசான் வயிற்றுக்குத்தான்!


  • சமீபத்தில் ஒரு கள்வர்கூட்டம் காவலர்களிடம் அகப்பட்டது குறித்து நாளிதழில் செய்தி வந்தது. காவல் விசாரனையில், அந்த குழுவினர், கொரோனா காலகட்டத்தில் வேலைகளை இழந்ததால் போதுமான வருவாயின்றி உணவிற்கே கஷ்டப்பட்டிருக்கின்றனர். பின் அவர்களில் ஒருவர் அளித்த திட்டத்தின் அடிப்படையில், அவர்கள் முன்னர் வேலைசெய்த முதலாளி வீட்டில் திருடியிருக்கின்றனர். அடுத்தடுத்த மாதங்களில் ஓரிரு திருட்டுக்களாக அது தொடரவே, அவர்களின் உணவு மற்றும் வீட்டுத் தேவைக்கு பொருள் வந்தவண்ணம் இருந்தது. பொருளாதாரம் சீறடைந்த நிலையில் அவர்களுக்கு வேலை கிடைத்தாலும், அவர்கள் அதை ஒப்புக்கு ஏற்றுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு திருடினார்கள். முதலில் கஞ்சிக்கு திருடியவர்கள், இன்று பிரியாணிக்கும், பீட்ஸாவிற்கும் திருடுகிறார்கள். அதற்கு போதுமான பணம் சேர்ந்தபின், ஐந்து நட்சத்திர விடுதியில் அமர்ந்து சாப்பிட திருடுவார்கள். திருட்டோ, கொலையோ, பொய் பித்தலாட்டமோ, எல்லாம் அவரவர்ளின் வயிற்றுப்பசியிலிருந்துதான் பெரும்பாலும் ஆரம்பிக்கிறது.

  • சமீபகாலமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான முயற்சிகளை பல்வேறு நாடுகள் முன்னெடுத்துள்ளதை கேள்விப்படுகிறோம். இது குறித்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உயரதிகாரியுடனான நேர்காணலில், அங்கு என்ன செய்வதாக உத்தேசம் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில், “முதலில் அங்கு விவசாயம் செய்து உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்ய முயற்சிக்க உள்ளோம்” என்றார். பல்லாயிரம் கோடி செலவு செய்து, பல இலட்சம் மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள கிரகத்தில் குடியேறுவதானாலும், அங்கு அடிப்படை ஆராய்ச்சி துவங்குவது நம் ஒரு சான் வயிற்றை நிரப்ப தேவைப்படும் உணவைத் தயாரிக்கத்தான்.

பசியில் ஆரம்பிக்கும் சில தவறான பழக்கங்கள், காலப்போக்கில் ருசிகண்ட பூணைபோல், பழக்கங்களின் நன்மை-தீமைகளைப்பற்றி பொருட்படுத்தாமல், அவற்றிலிருந்து தனக்கு கிடைக்கும் இலாப-நட்டங்களை மட்டும் பார்த்து நீண்ட காலம் தொடர்கிறது. சில குற்றங்கள் சிக்கினாலும், பல குற்றங்கள் கண்டுகொள்ளப் படாமல் தப்பிவிடுகிறது. எவ்வளவுதான் குற்றம் சிறிதாக இருந்தாலும், அல்லது பெரிதாக இருந்தாலும், அடிப்படையில் அது வயிற்றுப் பசியில் ஆரம்பித்து, பதவி வெறி, புகழ்ச்சிக்கான வெறி, ஆடம்பரத்திற்கான வெறியாக உருவெடுத்து எல்லாவற்றையும் மூடி மறைத்து விடுகிறது.


எந்த நிலப்பரப்பை கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடந்தாலும், எந்த புதிய கோள் குறித்த ஆராய்ச்சி நடந்தாலும், அங்கு ஆராய்ச்சியாளர்கள் தேடும் முதல் விடயம் காற்றும், நீரும் அங்கிருக்கிறதா என்பதுதான். அவை கண்டுபிடிக்கப்பட்டவுடன், அடுத்ததாக அங்கு உணவு உற்பத்தி செய்யமுடியுமா என்று பார்க்கிறார்கள். இன்று மக்கள் தொகை அதிகரிக்கும் வேகத்திற்கும், உலகம் மாசுபட்டுக்கொண்டிருக்கும் வேகத்திற்கும், இனி விவசாயமோ, குடி நீரோ இங்கு சாத்தியமற்றுப் போகலாம் என்று கருதுவதால், எல்லா ஆராய்ச்சிகளும் புதிய நிலப்பரப்புக்களை தேடி நிகழ்கிறது.


சமுதாயத்தில் நிகழும் நன்மைகளை தொடர, ஆங்காங்கே நிகழும் தீமைகள் ஒழிய, ஜகத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் உறுதி செய்யப் படவேண்டும். யாரொருவருக்கு அது கிடைக்கப்பெறவில்லையோ, அவர் தன் அத்தியாவசியத் தேவைகளை வேறு எவ்வகையிலேனும் பூர்த்தி செய்ய முயல்கிறார். தன் அத்தியாவசியத் தேவைகளின் முன்னால், அவர் தர்மம்-அதர்மம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. யாரும், எதையும் செய்கிறார்கள். இந்த யதார்த்த புரிதல் இருந்தால் மட்டுமே, அரசாள்பவர்களால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டமென்று முடிவெடுக்க முடியம். இது அரசாள்பவர்களுக்கு மட்டுமன்றி, நம் அன்றாட வாழ்வில் சகமனிதருடனான கொடுக்கல்-வாங்களில், தன் ஊழியர்கள் நலன் காப்பதில், தான-தர்மங்கள் செய்வதில், என்று எல்லாவற்றிலும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகிறது.


உங்கள் வியாபாரம் நன்றாக நடைபெற வேண்டுமென்றால்

  • உங்கள் ஊழியர் நலனை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு பசித்தால், உழைப்பு உறிஞ்சப்படுவதாக கருதினால், அவர் உங்களை ஏமாற்றத் துவங்குவார்!

  • உங்கள் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் பொருளின், சேவையின் தரம் குறைந்தால், அவர் ஏமாற்றப்படுவதாக கருதி, அடுத்த கடைக்கு சென்று விடுவார்.

நாடு செழிப்புற வேண்டுமானால், முதற்கண் தேசத்தில் அமைதி நிலவ வேண்டும்

  • பசி, பட்டினி இல்லாதநிலையில், திருட்டும்-கொள்ளையும் குறைவாக இருக்கும். சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கும் தேசத்தில், அமைதியை நிலைநாட்டி, முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை செயல்படுத்த முடியும்.

  • நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட இனமக்கள், குறிப்பிட்ட தொழில் என்று ஒருதலை பட்சமாக இல்லாமல், எல்லா மக்களுடைய அடிப்படை தேவைகளின் மீது சீராக கவனம் செலுத்தி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்போது, பிரிவினைகள் குறைந்து, பரஸ்பர புரிந்துணர்வும், ஒற்றுமையும் ஓங்குகிறது.

இங்கு நல்லமுறையில் நீங்கள் வாழ, உங்கள் நலனை மட்டும் நீங்கள் பார்த்தால் போதாது. உங்களைச் சார்ந்தவர்கள் நலனையும், சமுதாயத்தின் நலனையும் சமமாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உங்கள் உணவிற்கும், ஆடம்பரத்திற்கும் நீங்கள் உழைப்பதுபோலத்தான், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் உழைக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள் என்ற புரிதல் இருந்தால், சண்டை சச்சரவுகள் குறைந்து விட்டுக்கொடுத்து வாழ வழியேற்படும்.


மறந்துவிடாதீர்கள்! இங்கு எல்லோருமே தங்களின் ஒருசான் வயிற்றை நிரப்பத்தான் ஓட ஆரம்பிக்கிறார்கள்!!


இங்கு திருடுவதும், பொய்பேசுவதும்

ஏமாற்றுவதும், அடித்துப்பிடுங்குவதும்

வேஷமிடுவதும், போற்றுவதும், தூற்றுவதும்

எல்லாமே அடிப்படையில்

ஒருசான் வயிற்றை நிறப்பத்தான்;


உண்டது போக மிச்சம்தான்

பேரும், புகழும் ஏனையவைகளும்!


ஆரம்பத்தில் பணத்தை சம்பாதிக்க

பேரையும் புகழையும் இழக்கிறான்:

பிற்காலத்தில் பேரை சம்பாதிக்க

நேரத்தையும், பொருளையும் இழக்கிறான்;

எப்போதும் ஏதாவதொன்றை சாம்பாதிக்க

இன்னொன்றை இழந்துகொண்டே இருந்தாலும்

இவையனைத்தும் அடிப்படையில்

அவரவரின் ஒருசான் வயிற்றுக்குத்தான் என்பது

உலகறிந்து நிதர்சனம்!!



- [ம.சு.கு 21.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Bình luận


Post: Blog2 Post
bottom of page