top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-192 - ஒருமுகப்பட்ட கவனம் / முயற்சி!"

[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-192

ஒருமுகப்பட்ட கவனம் / முயற்சி!


  • ஒருமுறை விவேகானந்தர், சிகாகோ நகர ஆற்றங்கரையில் சென்று கொண்டிருக்கும்போது, சில மாணவர்கள் நீரில் மிதக்கும் முட்டையோடுகளை துப்பாக்கியால் சுட முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அதை சரியாக சுடமுடியவில்லை. இவற்றை கவனித்த விவேகானந்தர், அந்த பிள்ளைகளிடம் தானொரு முறை முயற்சிப்பதாக கூறி துப்பாக்கியை வாங்கி பொருமையுடன் குறிபார்த்து எல்லாமுறையும் சரியாக அந்த முட்டையோடுகளை சுட்டார். பலமுறை தொடர்ந்து முயற்சித்த சிறார்களால் முடியாததை, துப்பாக்கியை தொட்டுப்பழக்கப்படாத விவேகானந்தர் எளிதில் செய்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு அவர் ஒருமுகப்பட்ட எண்ணமும், கவனமுமே இதற்கான ஒரே வழி என்று கூறினார்.

  • அலுவலக வேலையில், பகல் பொழுதில் எண்ணற்ற தொலைபேசி அழைப்புக்கள், வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். நாம் காலையில் செய்ய நினைத்ததை, ஒருசேர உட்காரந்து செய்து முடிக்கமுடியாமல் திணருவோம். மாலை 6 மணிக்கு, எல்லோரும் வீட்டிற்கு சென்ற பின், எந்த இடையூறும் இல்லாம சமயத்தில், அந்த வேலைகளை சீக்கிரமாக செய்து முடிப்போம். காலையிலிருந்து பல மணிநேரங்களாக செய்துமுடிக்க முடியாமல் இழுத்துக்கொண்டிருந்த வேலைகள் ஒவ்வொன்றாய் மாலை ஓரிரு மணி நேரங்களில் முடிக்கப்படும். காலையிலிருந்து முயற்சித்தும், மாலையில் தான் அது சாத்தியப்படுவது ஏன்? [எனக்கு இது வழக்கமாகிவிட்ட ஒன்று. உங்களுக்கு எப்படி?]

துப்பாக்கியை இதுவரை தூக்கிப் பழக்கப்படாத கைகள், தன் முதல் முயற்சியில் முட்டையோடுகளை சரியாக சுட்டது. அவர் கைகளில் துப்பாக்கி வந்த கணம் முதல், செயல் முடியும்வரை, தன் இலக்கின் மீது முழுக்கவனத்தை செலுத்தி, ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் காரியமே கண்ணாக செயல்பட்டதன் மூலம், தன் இலக்குகளை எளிதாக சுட முடிந்தது. இதுவரை துப்பாக்கிகளை தொட்டிராத விவேகானந்தரால் இது முடியும்போது, தொடர்ந்து முயற்சி செய்யும் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்கமுடியும், கவனம் சிதறாமல் ஒருமுகப்பட்டு முயற்சித்தால்!


நீங்கள் செய்கின்ற வேலைக்கு, எந்த அளவிற்கு உங்களின் கவனமும், விழிப்பும் தேவை என்பதைப் பொருத்து, அதை முடிப்பதற்கு உங்களின் ஒருமுகப்பட்ட தொடர் முயற்சிக்கான தேவை நிர்ணயமாகிறது. நீங்கள் அன்றாடம் செய்யும் பழக்கப்பட்ட வேலைகளுக்கு உங்களின் கவனம் அவ்வளவாக தேவையில்லை. உங்கள் கைகள் தானாக செய்துவிடக்கூடிய வேலைகளுக்கு, இடையிடையே என்ன கவனச்சிதறல் வந்தாலும், வேலை ஓடிக்கொண்டே இருக்கும். அதே சமயம், நீங்கள் கவனமாக பார்த்து, சிந்தித்து செய்யவேண்டிய வேலைகளை செய்யும் போது, இடையூறுகள் வந்தால், உங்கள் கவனம் சிதறிவிடும். மீண்டும் உங்கள் கவனம் ஒருமுகப்பட சில மணித்துளிகளாகும். அதற்குள் இன்னொரு இடையூறு வந்தால், தொடர்ந்து தாமதமாகும். அந்த இடையூறுகள் இல்லாத நேரத்தில், ஒருமுகப்பட்ட கவனத்துடன் வேலையை செய்யும்போது, ஒரே மூச்சில் உங்களால் செய்துமுடிக்க முடிகிறது.


பகல்பொழுதில் தொலைபேசி அழைப்புக்கள், வாடிக்கையாளர் வருகைகள் என்று எண்ணற்ற இடையூறுகள் வரும்போது, கவனம் ஒருமுகப்படுவது முடியாமல் போகிறது. அதனால் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. மாலையில், கவனச்சிதறல் இல்லாதபோது, அவை எளிதில் முடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் எல்லோரும் கடந்து போகும் இந்த கவனம் சார்ந்த, ஒருமுகப்பட்ட முயற்சியின் தேவையை சரிவர உணர்ந்து, உங்கள் செயல்களுக்கான நேரத்தை சரிவர அமைத்து, கவனச்சிதறல்களை களைந்து ஒருமுகப்பட்டு முயற்சித்தால், உங்கள் இலக்குகள் எல்லாம் எளிதாக எட்டப்படும்.


உங்களின் கவனம்சிதறாமல், ஒருமுகப்பட்டு முயற்சிக்கும்போது

  • நீங்கள் செய்யும் செயல்கள் எளிதாகும்;

  • உங்களின் உற்பத்தித் திறன் கூடி, வேலையின் தரமும் சிறப்புற்றிருக்கும்;

  • வேலையின் நுணுக்கங்களை எளிதாக புரிந்துகொண்டு, புதுமைகளை படைக்க முடியும்;

  • வேலையின் சாதக-பாதகங்களை புரிந்து, சாமர்த்தியமாக செயல்பட வழியேற்படும்;

  • வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை சரிவர புரிந்துகொண்டு தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்து சந்தையில் நற்பெயருடன் நீடித்திருக்க முடியும்.

இன்றைய அவசர உலகில் கவனம் சிதறாத ஒருமுகப்பட்ட முயற்சி அதிமுக்கியம். அதேசமயம், அந்த ஒருமுகப்பட்ட முயற்சி என்ற பெயரில், உங்களைச் சுற்றி ஏற்படுகின்ற மாற்றங்களை கண்டுகொள்ளாமல், கண்மூடித்தனமாக கடிவாளம் கட்டிய குதிரைபோல ஒரே திசையில் ஒடிவிடக் கூடாது. நீங்கள் முயற்சிக்கும் பாதையில் வருகின்ற மாற்றங்களை, தொழில்நுட்ப முன்னேற்றங்களை தொடர்ந்து கவனித்து, உங்கள் முயற்சிகளை முழுக்கவனத்துடன் செம்மைப்படுத்தினால், வெற்றி நிச்சயம்;


கல்வியோ, விளையாட்டோ, வியாபாரமோ,

உங்கள் இலக்குகளை அடைய

புதிய சாதனைகளை படைக்க

உங்கள் எண்ணமும் செயலும் ஒருமுகப்பட வேண்டும்;


சிதறாத எண்ணங்களும்

ஒருமுகப்பட்ட கவனமும்

விடாமுயற்சியும் இருந்தால்

எல்லா கற்பனைகளும் ஒருநாள்

உங்கள் சாதனைகளாகும்;


எல்லாவற்றையும் ஒரு சேர செய்ய முற்பட்டு

எதிலும் முழுக்கவனம் செலுத்தாமல்

ஆற்றிலொரு கால், சேற்றிலொரு கால் என்று

பலதிசைகளில் ஒரே நேரத்தில் ஓடினால்

இலக்குகள் எல்லாம் எட்டாக் கனியாகவே இருக்கும்;

ஒன்றன்பின் ஒன்றாய்

முழுக்கவனத்துடன், ஒருமுகப்பட்டு முயற்சித்தால்

ஒவ்வொன்றாய் எல்லாம் கைகூடும்;


வாருங்கள் – நிறைய சாதிக்கலாம் - ஒவ்வொன்றாய் !!


- [ம.சு.கு 19.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page