top of page

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-189 - நேர்மையை தவறவிடாதீர்கள்!"

  • Writer: ம.சு.கு
    ம.சு.கு
  • Apr 16, 2023
  • 2 min read

Updated: Apr 17, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-189

நேர்மையை தவறவிடாதீர்கள்!


  • அரசாங்க கடைகளுக்கான குத்தகை ஏலம் நடைபெற்றது. ஒவ்வொரு கடைக்காரரும் தங்களின் விலைகளை குறிப்பிட்டு ஏலத்தை எடுத்தனர். இரண்டு நபர்கள் மட்டும் தங்களுக்கு தெரிந்த அதிகாரியின் துணையுடன் மிகக் குறைந்த விலைக்கு மற்றவர்களை ஏமாற்றி கடையை எடுத்தனர். சில நாட்களில் இது மற்றவர்களுக்கு தெரியவர, பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பிறகு, அந்த வழக்கில் இரண்டு கடைக்காரர்களும் மூன்றுமடங்கு கட்டணத்தை நஷ்டஈடாக செலுத்த உத்தரவு வந்தது. அந்த அதிகாரியின் வேலையும் பறிக்கப்பட்டது.

  • இந்தியாவின் மிகப்பெரிய மேலான்மைக் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர போட்டித் தேர்வுகள் கடுமையாக இருக்கும். அங்கு படிக்கும் எல்லா மாணவர்களும், கல்வியில் சிறந்தவர்களே. ஒரு குறிப்பிட்ட ஆண்டில், நான்கு மாணவ நண்பர்கள் கல்லூரி இடைத்தேர்வில் புத்தகங்களைக் கொண்டு பார்த்து எழுதிவிடுகிறார்கள். அவர்கள் நால்வரும் பிடிபடவே, கல்லூரி முதல்வர் முழுமையாக விசாரித்தார். மாணவர்கள் தங்கள் தவறுகளுக்கு மண்ணிப்புக் கோரினர். இறுதியில், முதல்வர் அந்த நான்கு மாணவர்களையும் நிரந்தரமாக கல்லூரியை விட்டு அனுப்பினார். இடைத்தேர்வில் தவறு செய்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்று எல்லோரும் திகைத்தனர்.

எல்லோரையும் ஏமாற்றி, தனக்கு மட்டும் ஆதாயம் தரும் வகையில் ஏலத்தில் எடுப்பது அப்போதைக்கு வெற்றி பெற்ற தோற்றத்தை கொடுத்தாலும், யாராவதொருவர் விஷயம் தெரிந்து கேள்விகேட்கும்போது எல்லாம் அம்பலப்படும். அன்றைய தினம் அவமானமும், நஷ்டமுமே மிஞ்சும். இன்றைய அவசரயுகத்தில் இந்த தண்டனைகள் வர தாமதமாகலாம். ஆனால் வரும்போது, அதன் தீவிரம் மிகக்கடுமையாக இருப்பதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம்.


மாணவர்களை நீக்கிய முதல்வரிடம் பெற்றோர்கள் வந்து தண்டனையை குறைக்குமாறு முறையிடவே, முதல்வர் இவ்வாறு தெளிவுபடுத்தினார் “இந்தக் கல்லூரி அடுத்த தலைமுறை நிர்வாகத் தலைவர்களை, தொழில் முனைவோரை உருவாக்குகிறது. இங்கு மாணவர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, தேர்வுகளில் அவர்களை பெரிதாய் கண்கானிப்பதில்லை. ஏனெனில், எதிர்காலத் தலைவர்கள் சுய ஒழுக்கம் கொண்டவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. அந்த நம்பிக்கையை சிதறடித்த மாணவர்களை வைத்தால், இங்குள்ள ஏனைய மாணவர்களுக்கு அது தவறான உதாரணமாகிவிடும். யாரும் கவனிக்கவில்லை என்று தவறு செய்பவர்கள், எப்படி எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக, நம்பிக்கைக்குரிய தலைவராக உருவாக முடியும்?” என்ற கேள்விக்கு பெற்றோர்களிடத்தில் பதில் இல்லை.


நேர்மையை கடைபிடிப்பவர்களுக்கு உடனுக்குடன் பெரிதாய் பலன் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதேசமயம் நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய ஆதாயங்களை குறுகிய காலத்தில் அடைந்துவிடக்கூடும். இதைக் கண்டு அநீதியான பாதையை சிலர் தவறாக தேர்ந்தெடுக்கக்கூடும். உண்மையாதெனில், நேர்மையற்றவர்கள் சிக்கிக்கொள்ளும்போது, தாங்கள் சேர்த்த செல்வம், குடும்பத்தின் நற்பெயர், நம்பிக்கை எல்லாவற்றையும் ஒருசேர இழந்து நிற்கவேண்டிய நிலைவரும்.


நேர்மைக்கு ஆதாயம் இல்வாவிட்டாலும், நஷ்டமேதுமில்லை;

அநீதிக்கு, ஆதாயமுண்டு – அதேசமயம்

கட்டாயம் ஒருநாள் மிகப்பெரிய இழப்பும் உண்டு.


இன்றைய காலகட்டத்தில், இரண்டு விதமான அநீதியாளர்கள் இருக்கிறார்கள்.

  1. பொருள் சேர்க்கும் பொருட்டு எந்தவொரு அநீதியையும் வெளிப்படையாக செய்து, அதை எதிர்த்துக் கேட்பவர்களை மிரட்டுபவர்கள்;

  2. எல்லா அநீதிகளையும் கள்ளத்தனமாக செய்துவிட்டு, வெளியுலகிற்கு உத்தமர் வேடமிடுபவர்கள்;

இதில் முதல் இரகத்தைப்பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அந்த நபர் தன் ஆதாயத்திற்கு எதையும் செய்வார் என்பதை எல்லோரும் அறிவர். ஆதலால், அவர் வழியில் குறுக்கிடாமல், ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால் கள்ளத்தனமாக செய்யக்கூடியவர்கள் தான் சமுதாயத்தில் பேராபத்தானவர்கள். அவர்களிடத்தில் நீங்கள் எப்படி கவனமாக இருக்கிறீர்கள் என்பதைப்பொருத்தே உங்கள் வளர்ச்சிப் பாதை அமையும்.


நீங்கள் நேர்மையாக இருக்கவேண்டியது அவசியம். அதேசமயம், இன்றைய கலியுகத்தில், யார் அநீதிக்காரர்கள், அவர்கள் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்த தெளிவான அறிவு இருந்தால் மட்டும், அந்த அநீதிகளிலிருந்து விலகி பத்திரமாக வாழ முடியும்.


கோடாரியை கிணற்றுக்குள் போட்ட விறகு வெட்டியின் கதையை பிள்ளைப்பருவத்தில் கேட்டிருப்பீர்கள். அதில் வரும் தேவதை போன்று இன்றைய காலகட்டத்தில் யாரும் வந்து உங்கள் நேர்மையை பாராட்டி பரிசு கொடுக்கப்போவதில்லை. ஆனால் தேவதை வராவிட்டாலும், உங்கள் நேர்மை, குற்றவுணர்வு இல்லாத மன நிம்மதியான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும். நேர்மை மிகப்பெரிய ஆதாயத்தை கொடுக்காவிட்டாலும், எந்தவொரு பெரிய இழப்பையும் ஏற்படுத்தாது. உங்கள் குடும்பம், உறவுகள், நண்பர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.


வாய்மையே அதிகாரம் வாய்ந்தது என்பதால்

வள்ளுவர் தனியொரு அதிகாரம் வைத்து விளக்கினார்;


கல்வியோ, விளையாட்டோ, வியாபாரமோ

எல்லா இடங்களிலும், எல்லா விடயங்களிலும்

பொதுவான ஒரு விடயம் வாய்மையும்-பொய்மையும்;


பொய்மையை யாரும் விரும்புவதில்லை;

பொய்மை என்றறிந்தால் யாரும் ஏற்பதுமில்லை;

கூடாதவற்றை கைக்கொள்வதில் நீண்டகால பயனில்லை;


நேர்மையை கைக்கொள்ளுங்கள்!

இனிமையானாலும், இன்னலானாலும்

அன்பானாலும், பகையானாலும்

வெற்றியானாலும், தோல்வியானாலும்

வாய்மை வழி வந்தால் மட்டுமே

அதை உங்களால் காலகாலத்திற்கும்

பெருமைப்பட எடுத்துரைக்க முடியும்;


- [ம.சு.கு 16.04.2023]

Recent Posts

See All
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

 
 
 

Comentarios


Post: Blog2 Post
bottom of page