top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-186 - பலன்கள் தாமதமாகலாம்!!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-186

பலன்கள் தாமதமாகலாம்!


  • இந்தியாவில், தொலைக்காட்சி நிலையத்தை அரசாங்கம் முதன் முதலில் 1959-ல் துவக்கியது. அன்றைய தினம் தேசத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்திருக்கும். அரசாங்கம் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து தொலைக்காட்சி நிலையம் மற்றும் சேவைகளை துவக்கியது. தேசத்தில் சில ஆயிரம் தொலைக்காட்சிகள் வருவதற்கே 15-20 ஆண்டுகளாகின. அரசாங்கம் தொலைத்தொடர்பை துரிதப்படுத்தும் நோக்கில் நிறைய முதலீடு செய்தது. அன்று அரசாங்கம் முதலீடு செய்தவற்றின் பலன், இன்று 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

  • நீங்கள் மிகவும் குண்டாக இருப்பதாக நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் என்பதற்காக, ஒரு வார காலம் உணவு விடயத்தில் அதீத கட்டுப்பாட்டுடன் இருக்கிறீர்கள். வார இறுதியில், ஒரு கிலோ எடை குறைந்தது. அடுத்த வாரமும் கட்டுப்பாடு தொடர்கிறது. அனுதினமும் எடைபோட்டு பார்க்கிறீர்கள். அடுத்த வாரம் அரைகிலோ குறைந்திருந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு உணவைக் குறைத்தாலும், எடை அவ்வளவாக குறைந்த பாடில்லை. இந்த முறை சரியில்லை என்று கட்டுப்பாட்டை தளர்த்தி பழைய முறைக்கே திரும்பி விடுகிறீர்கள். இது சரியா? இப்படி ஒரே வாரத்தில் எல்லா எடையும் குறைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமா?

அரசாங்கம் அன்றைய தினத்தின் இலாபத்தை மட்டும் பார்க்காமல், பொதுமக்களுக்கு புதிய சேவை, குறைந்த விலையில் கிடைக்க வேண்டுமென்று முதலீடு செய்து ஆரம்பித்தது. அப்படித்தான் தபால் துறையும் உருவானது. இன்று தனியார் நிறுவனங்கள் நிறைய வந்தாலும், முந்தைய காலங்களில் தபால் முறையை பட்டிதொட்டியெங்கும் பரப்பியது தபால் துறைதான். அரசாங்கம் இன்று கிடைக்கப்போகும் பலனைப் பற்றி பெரிதாய் கணக்கிடாமல் நீண்ட கால நோக்கில் கிடைக்கப்போகும் பலன்களைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுத்ததால், எண்ணற்ற சேவைகள் மக்களுக்கு கிடைத்தன.


அரசாங்கம் மக்கள் நலனுக்காக பணத்தை முதலீடு செய்தது. தனியார் துறையினர் அவ்வாறு பணத்தை வாரி இறைக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். இந்த உதாரணம் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கானது. அங்கும் பலன் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கவே!


எடையை குறைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான கட்டுப்பாடுகளை அனுதினமும் கடைபிடிக்கும் பொறுமை உங்களிடம் இருக்கிறதா? யாருக்கும் ஒரு நாள், ஒரு வாரத்தில் எடை அதிகரித்து விடவில்லை. பல மாதங்கள் தவறான உணவுப் பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட உடல் பருமணை ஒரே வாரத்தில் குறைக்க முற்படுவது சாத்தியமா? இந்த யதார்த்தம் புரியாமல், உடனுக்குடன் பலன் கிடைக்கவில்லை என்று வருந்து முயற்சியை கைவிட்டால் யாருக்கு நஷ்டம்?


நாம் செய்த செயல்களுக்கான பலன் கிடைக்க நேரம் மாறுபடுவதற்கான காரணங்கள் என்ன?

  • சில செயல்கள் இயல்பாக குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்டவை (கல்லூரியில் சேர்ந்ததும் பட்டம் கிடைக்காது. மூன்றாண்டு காலம் பொறுமையாக படித்து தேறினால் தான் பட்டம் கிடைக்கும். எடையை குறைக்க நான்கு முதல் ஆறு மாத காலமாகும்)

  • சிலவற்றில் போட்டிகள் அதிகமாக இருக்கும். களத்தில் நீங்கள் முதல் இடம் பெற வேண்டுமானால், பல விடயங்களில் நீங்கள் படிப்படியாக முன்னிலை பெற நிறைய காலம் பிடிக்கலாம்;

  • சில திடீர் நிகழ்வுகள், அசம்பாவிதங்கள் இயல்பாக கிடைக்கும் பலன்களை இன்னும் தாமதப்படுத்தலாம்;

  • சந்தை நிலவரம், தேசம் / வீட்டின் பொருளாதார நிலவரம், சட்டதிட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் கிடைக்கப்போகும் பலன்களை தாமதப் படுத்தலாம்;

  • திட்டங்களை எவ்வளவு சிறப்பானதாக நீங்கள் வடிவமைத்தாலும், அதை செயல்படுத்த தேவையான பணம் மற்றும் ஆள்பலம் கிடைப்பதில் தாமதமேற்படுலாம்;

  • உங்களால் திட்டமிட்ட எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றாலும், அதற்கான நேரம் போதிய அளவு இருக்க வேண்டியது முக்கியம். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தான் உங்களால் அதிகபட்சம் வேலை செய்யமுடியும், அதிலும் போதுமான ஒய்வு நேரத்தை ஒதுக்கி மீதமுள்ள நேரத்தில் தான் நீங்கள் நினைத்ததை சாதிக்கவேண்டும்.

நீங்கள் எவ்வளவுதான் களத்தில் அசுர வேகத்தில் செயல்பட்டாலும், முன்னேற்பாடுகளை செய்தாலும், எல்லா விடயங்களும், அவை நிகழ்ந்தேறுவதற்கென்று ஒரு கால எல்லை உண்டு. அவையவை அதன் கால எல்லைகளுக்குள் தான் நிகழும். நீங்கள் உங்கள் கடமைகளை சரியான நேரத்திற்கு செய்துவந்தால், அதற்குரிய பலன்கள் அவற்றின் கால வரையரைக்குள் வரும்.

  • கல்லூரியில் மேலாண்மைப் பட்டம் பெற்றவுடன், பெரிய நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஆகவிட முடியாது. களத்தில் சில ஆண்டுகள் எல்லா நிலைகளிலும் பணிபுரிந்து அனுபவம் பெற்றால் மட்டுமே, நிர்வாக அதிகாரி பதிவிற்கு பரிசீலிக்கப்படுவீர்கள்;

  • புதிதாக சேவை நிறுவனம் தொடங்கியவுடன், வாடிக்கையாளர் கூட்டம் வந்துவிடாது. படிப்படியாக வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்குவதன் மூலம் நற்பெயரை வளர்த்து சந்தையில் நிலைக்க வேண்டும்.

  • நீங்கள் ஒரு புதிய பொருளையோ, மென்பொருளையோ கண்டுபிடித்தால், அதற்கு உடனே வரவேற்பு கிடைக்குமென்று உறுதிபட கூறமுடியாது. அவற்றை சந்தைப்படுத்த சில காலம் பிடிக்கும். மக்களுக்கான தனிப்பட்ட தேவைகளை அது பூர்த்தி செய்தால், படிப்படியாக சந்தை அதை ஏற்றுக்கொள்ளும்.

  • உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்க, ஒரு புறம் உணவுக் கட்டுப்பாடும், மறுபுறம் சற்று வியர்வை சிந்த உடற்பயிற்சியும் தேவை. இரண்டையும் தொடர்ந்து செய்துவந்தால், எவ்வளவு உடல்பருமணானாலும், படிப்டியாய் கட்டுப்பாட்டில் வரும்.

கீதை குறிப்பிடுவதுபோல, “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற பொன்மொழியை ஒரு ஓரத்தில் நினைவில் வைத்திருப்போம். வியாபாரத்தில், நடைமுறை வாழ்க்கையில் கீதை கூறும் ஞானநிலை பொன்மொழிகள் அவ்வளவாக சாத்தியப்படாமல் இருக்கலாம். ஆனால், எங்கும், எதிலும் உடனுக்குடன் பலனை எதிர்பார்ப்பது நீண்டகால நோக்கில் மிகவும் தவறானது என்பதை புரிந்து கொள்வோம். உடனுக்குடன் கிடைக்கும் பலன்கள் நிரந்தரமற்றவை.


நல்ல செயல்களை நீங்கள் செய்தாலும்.

சமுதாயம் அதைக்கண்டு பாராட்ட சிலகாலமெடுக்கும்;

அதேசமயம் தவறான செயல்களை செய்தால்

உங்களை திட்டுவதை சமுதாயம் உடனுக்குடன் செய்துவிடும்;


இன்று நீங்கள் செய்த செயல்களுக்கு

இன்றே முழுப்பயனையும் பெறவேண்டுமென்று

பேராசை கொள்ளாதீர்கள்:

நீண்டகாலப் பலன்கள் பெரும்பாலும்

பொறுமையாகத்தான் வந்து சேரும்;


நீண்டகால பயனை கருத்தில் கொண்டு வேலைசெய்தால்தான்

செய்கின்ற வேலைக்கான உண்மையான பலனை அனுபவிக்க முடியும்;




- [ம.சு.கு 13.04.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page