top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-185 - எல்லாவற்றிற்கும் விலை நிர்ணயிக்கமுடியாது!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-185

எல்லாவற்றிற்கும் விலை நிர்ணயிக்கமுடியாது!


  • பொதுவாக புத்தகங்களை வாசிப்பில் நாட்டமில்லாத ஒருநபர், புத்தகம் வாங்கும் தன் நண்பர்களைப் பார்த்து கிண்டலடித்து பணத்தை விரயம் செய்வதாக கூறுவார். ஒருசமயம் அந்த நபர் தன் உடல் நலக்குறைபாட்டை சரிசெய்ய ஒரு ஆசிரமத்தில் ஒரு மாதகாலம் தனியறையில் தங்கவேண்டிய கட்டாயம் வந்தது. முதல் ஓரிரு நாட்கள் எப்படியோ நேரத்தை கடத்தியவருக்கு மேற்கொண்டு அந்த அறையில் இருப்பது நரகமாகத் தெரிந்தது. தன்னை பரிசோதிக்க வந்த மருத்துவரிடம் தன் இயலாமையை கூறினார். மருத்துவர் தன் பையில் வைத்திருந்த புனைவு நூல் ஒன்றை கொடுத்துவிட்டு போனார். அடுத்தநாள் மருத்துவர் வந்தபோது, புத்தகத்தை திருப்பிக்கொடுத்து, அந்த நூலின் இரண்டாம் பாகத்தை வழங்குமாறு கேட்டார். ஒரு வேலை உங்களிடம் இல்லையென்றால், தானே பணம் தருவதாகவும், எப்படியாவது அதை உடனே வாங்கிவருமாறு வற்புறுத்தினார். ஏன் இந்த மாற்றும்?

  • நண்பர் ஒருவரின் குழந்தை மழலையர் பள்ளி முடித்து ஒன்றாம் வகுப்பிற்கு முன்னேற உள்ளார். அவர்கள் பள்ளியில் அதை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு சிறிய விழாவிற்கு ஏற்பாடு செய்து எல்லா பெற்றோர்களையும் அழைத்துள்ளனர். விழா அவ்வளவாய் முக்கியத்துவம் இல்லை என்றும், தன் மனைவியை மட்டும் போய்வரச் சொன்னார். கடைசியில் அவரது மனைவியின் பிடிவாதத்தில், வேலைக்கு விடுப்பெடுத் அவரும் சென்றார். அன்றைய தின விடுப்பினால், சில ஆயிரங்கள் அவருக்கு நஷ்டம். ஆனால் அன்று அந்த மழலைகளின் கொஞ்சும் மொழி பேச்சக்களை பார்த்ததும், என்றுமில்லாத ஒரு வகை மனநிம்மதி. இறுதியில் குழந்தையிடம் வருடாவருடம் இதை செய்வார்களா என்று ஆவலாக குழந்தையிடம் கேட்டார். ஏன் இந்த மாற்றம்?

இரண்டு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தபோது, சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. அந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையில், எது கிடைத்தாலும் செய்யத் தயாராக இருந்தவருக்கு, மருத்துவர் கொடுத்த நூல் ஒரு நல்ல நேரம் கடத்தியாக ஆரம்பத்தில் இருந்தது. அதைப்படிக்கப் படிக்க, அதில் இலயித்து அந்த நூலின் கதாபாத்திரத்திற்கு தீவிர இரசிகராகிவிட்டார். முன்பு புத்தகத்திற்கு செலவிடும் பணத்தை வீண் விரயமென்று கூறியவர், இன்று பணத்தை வாரிவழங்க தயாராக இருக்கிறார்! காலத்தின் கட்டாயம், நிகழ்வுகளின் யதார்த்தம், நீங்கள் என்றோ வேண்டாம் என்று சொன்னதை இன்று வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரலாம். காலத்தின் கட்டாயத்தில் தேவைகள் மாறும்போது, நீங்கள் தேவையற்றதென்று நினைத்தவற்றிற்கு இன்று நீங்கள் அதிக விலை கொடுக்கலாம். ஒரு வேலை அதிக விலை கொடுத்த பொருட்களை நீங்கள் இன்று உதாசீனப்படுத்தலாம்.


“குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்ற வள்ளுவரின் அமுத மொழியை உணர, அந்த நண்பருக்கு அன்றைய தினம் ஒரு வாய்ப்பானது. ஒரு நாள் வேலைக்கு போகாததால் சில ஆயிரங்கள் நஷ்டம் எற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அன்றைய தினம் தன் பிள்ளையின் சிறிய மேடைப்பேச்சை கேட்கும் அறிய வாய்ப்பு கிடைத்தது. நிறைய குழந்தைகளின் பேச்சுக்கள், திறமைகளை காணும்போது, அளவுகடந்த பூரிப்பு உண்டாகிறது. அன்றைய தினம் உங்கள் உழைப்பில் இலட்ச ரூபாய் சம்பாதித்திருந்தாலும் இந்த மனநிம்மதி கிடைத்திருக்குமா என்று சொல்லாமுடியாது. பணத்தை விட, சில தருணங்களின் முக்கியத்துவத்தை அன்றைய தினம் நண்பர் உணர்ந்தார். ஆம்! உண்னமைதான், பெற்றோர்களுக்கு தங்களின் பி்ள்ளைகளோடு இருக்கும் பொன்னான மணித்துளிகளுக்கு விலை நிர்ணயிக்க முடியாது.


எல்லா பொருளுக்கும், எல்லா செயல்களுக்கும் உங்களால் விலை நிர்ணயிக்க முடியாது. ஒருவேலை நீங்கள் நிர்ணயித்தாலும், அவை பின்னாளில் பயனற்றதாக இருக்கலாம். புத்தகங்களின் அருமை தெரியாமல், ஆரம்பத்தில் கிண்டலடித்தவர், பணத்தை விரயம் என்றவர், காலமாற்றத்தில், புத்தகப்பிரியராகவே மாறினார். அந்த முதல் நாள் அவர் படித்து புத்தகத்தின் விலை மிகவும் மலிவுதான். ஆனால் அவருள் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதற்கான விலை அளவுகடந்தது. வேலைக்கு செல்லாதது இழப்புதான், ஆனால் அன்றைய தினம் தன் பிள்ளையோடு செலவிட்ட மகிழ்ச்சிக்கு விலை நிர்ணயிக்க முடியாது.


நடைமுறை வாழ்வில், பல செயல்களுக்கு உங்களால் விலை நிர்ணயிக்க முடியாது:

  • உங்கள் மனைவி, மக்களுடன் மகிழ்ந்திடும் நேரம்

  • உங்கள் நீண்டகால நண்பர்களை பார்த்து பரவசப்படும் நேரம்

  • உங்கள் பெற்றோர்களுடன் அவர்களது கடைசி காலங்களில் செலவிடும் நேரம்

  • நீங்கள் வாசிக்கும் நேரம், இசையில் இலயித்திருக்கும் நேரம்

  • உங்களுக்கு பிரியமான கலைகளில் ஈடுபட்டிருக்கும் நேரம்

இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். வாழ்வின் நிறைய தருணங்கள் ஒருமுறைதான் வரும். அந்த பொன்னான வாய்ப்பே வேலையிருக்கிறதென்று தவறவிட்டால், இழப்பு உங்களுக்குத்தான். நீங்கள் கோடிகளில் சம்பாதிக்கலாம். ஆனால் அவற்றை ஆனந்தமால் செலவு செய்ய உங்கள் குடும்பம் இருக்கவேண்டுமே. இல்லாவிட்டால், அவ்வளவு பணத்திற்கு என்ன தேவை?


வாழ்வில் அவ்வப்போது வந்துபோகும் பல பொன்னான தருணங்களுக்கான விலை உங்கள் நேரம் மட்டும்தான். பணத்தால் அதற்கு விலை சொல்ல முடியாது. ஏனெனில், அது உங்கள் உணர்வுப்பூர்வமானது. அது உங்களுக்கு பிடத்தமானவருடன் செலவிடும் நேரம் முதல், நீங்கள் மனமுவந்து கொடுக்கும் தான-தர்மங்கள் வரை, எல்லாவற்றிலும் அடங்கியிருக்கிறது. எது அந்த பொன்னான தருனம் என்பதை நீங்கள் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் மனநிம்மதியும், வாழ்வின் பொருளும் அந்த பொன்னான, விலை மதிக்கமுடியாத தருணங்களில் தான் புதைந்துள்ளன.


எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டென்பர்

சிலவற்றிற்றுக் விலை நிர்ணயம் செய்யமுடியாதென்பர்

எல்லாம் சரிதான்

எதற்கு விலையாய் எதை கொடுப்பதென்று கேள்விவரும்!


குடும்பமா? வேலையா? என்ற சூழல் வரும்!

ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்

எல்லாவற்றிற்குமான விலையை உங்ளால் நிணயம் செய்யமுடியாது!


சிலவற்றை இழந்து சிலவற்றை பெற வேண்டிவரும்;

சிலவற்றை எவ்வளவு முயற்சித்தாலும், உங்களால் பெறமுடியாது;

இந்த யதார்த்தங்களை புரிந்து

வாழ்வின் தருணங்களை சுவைத்துணர்ந்தால்

வாழும் காலம் மனநிறைவுடையதாகும்;


- [ம.சு.கு 12.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page