top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-184 - எப்போதும் கொஞ்சம் பசியிருக்கட்டும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-184

எப்போதும் கொஞ்சம் பசியிருக்கட்டும்!


  • ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சில இளைஞர்கள் கல்லூரியில் இருந்து நேரடித் தேர்வில் வேலைக்கு சேர்ந்தார்கள். மூன்று மாதங்கள் பயிற்சிக்குப்பின்னர், எல்லோரும் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு வாடிக்கையாளர் திட்டச் செயல்பாடுகளில் பணியமர்த்திப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தில், 15% பேர் வேலைபழுவைத் தாங்காமல் வேலையை விட்டு நின்றிருந்ததும், 20% பேர் அடுத்த கட்ட பதவி உயர்வு பெற்று முன்னேறியுள்ளதையும் வெளிப்படுத்தியது. மீதமுள்ள 65%-தினர், கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்துகொண்டிருந்தனர். ஒரே கல்லூரியில் சமமான கல்வியை பெற்றவர்கள் களத்தில் இரண்டாண்டுகளில் சமநிலையில் இல்லை, ஏன்?

  • தன் ஆரம்ப காலங்களில், அமைதியையும் ஆன்மீகத்தையும் நாடி பாரதத்தில் சுற்றித்திறிந்த ஒரு அமெரிக்க தொழில்நுட்ப பொறியாளர், பின்னாளில் உலகின் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனத்தை யாரும் அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடியாத உச்சத்தில் கொண்டு நிறுத்தினார். ஆன்மீகத்தை நாடிய ஒருவர், மீண்டும் பழையபடி தொழில்நுட்பத்துறைக்கு திரும்பி, மக்களின் தொழில்நுட்ப கற்பனைகளை நிஜமாக்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மற்றவர்கள் மெதுவாக வளர்ந்துகொண்டிருந்த காலத்தில், அசுர வளர்ச்சிக்கு புதிய இலக்கணத்தை படைத்தார். அது எப்படி?

கற்றது ஒரே பாடமானாலும், ஒவ்வொருவரின் புரிதலும் வெவ்வேறானது. கற்கும் வேட்கையை பொருத்து, கற்பிக்கப்பட்ட பாடத்தின் நுணுக்கங்களை மேலும் கேட்டும் / படித்தும் தெரிந்து கொள்கின்றனர். வேலைக்கு சேருமிடத்தில், கற்ற பாடத்திற்கு ஏற்ற நேரடி வேலையாக அது இருக்கலாம், அல்லது முற்றிலும் வேறுபட்டாதகவும் இருக்கலாம். பாடங்களில் கற்றவற்றிற்கும், களத்தில் வேலை நடைமுறைக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் இருக்கும். களத்தின் யதார்த்தத்தை உணர்ந்து, மேலும் கற்பவர்கள், தங்கள் திறன்களை வளர்ப்பவர்கள், எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள். கல்லூரியில் கற்றதுடன் கற்பதை நிறுத்துபவர்கள், களத்தின் சவால்களை சந்திக்க முடியாமல் திணறி விலகுகிறார்கள். கற்கின்ற பாடத்தில் புதியவற்றை கற்கவேண்டும், செய்கின்ற வேலையில் சாதிக்கவேண்டுமென்ற வேட்கை உடையவரா நீங்கள்?


கணினி மெதுவாய் மக்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது, மக்களின் எதிர்பார்ப்புக்கள் வளர்ந்து கொண்டே இருந்தது. மக்களின் கணினி, கைபேசி தொழில்நுட்ப தேவைகளின் ஒவ்வொன்றையும் புரிந்து, மற்ற நிறுவனங்கள் யோசிக்கத் துவங்கும் முன், ஆராய்ச்சி செய்து களத்தில் புகுத்தியர் ஸ்டீவ் ஜாப்ஸ். புதியவற்றை சந்தைக்கு கொண்டுவரும் அவரது தீராத வேட்கையின் முன், அவரது நிறுவனமே அசந்து நின்றது. அவரது தொழில்நுட்ப பசியின் விளைவுதான், இன்று உங்கள் கைகளில் விளையாடும் எண்ணற்ற கணினி மற்றும் கைபேசி உபயோகிப்பு முறைமைகள் என்பது அசைக்கமுடியாத உண்மை. இன்னும் சிலகாலங்களில் அவர் கொண்டுவந்தவை பின்தங்கிவிடும். ஆனால் அவரது பசி தொழில்நுட்ப உலகிற்கு கற்றுக்கொடுத்த பாடம் என்றென்றும் அழியாதிருக்கும்.


நமக்கு பசியெடுத்தால் உணவைத்தேடி அலைகிறோம். உணவு கிடைக்கும்வரை தொடர்ந்து தேடுகிறோம். ஒரு கட்டத்தில், பசியைப்போக்க எதைவேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு நம் எண்ணத்தை பசி ஆட்கொண்டுவிடுகிறது. பசியின் காரணமாகத்தான் பல சிறிய திருட்டுகளும் ஆரம்பிக்கின்றன. எப்படி பசி நம்மை கடுமையாக போராடவைக்கும் உந்துதலையும், வேட்கையையும் தன்னுள் கொண்டுள்ளதுபோல், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பசி, உங்களுக்குள் தீராத வேட்கையாய் ஆட்கொண்டிருக்க வேண்டும்.


எடுத்த காரியத்தை முடிப்பதற்கான வேட்கை உங்களுக்குள் இருப்பது முக்கியம். காரியத்தை முடிக்க பசி, தூக்கம் என்று பாராமல் முடிப்பவர்கள்தான், தாங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுகிறார்கள். நாளை செய்துகொள்ளலாம் என்று சொல்பவர்கள், தினம் தினம் ஒவ்வொரு புதிய காரணத்திற்காக, கடுமையான முயற்சிகளை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள். அப்படி தள்ளிப்போடுபவர்கள், தங்களின் வெற்றியையும் அதனுடனே இரு மடங்கு தள்ளிப்போட்டு விடுகிறார்கள்.


நல்ல பசி எடுத்தால், நிறைய உணவைத்தேடி உண்பீர்கள். ஒருவேலை வயிறு நிறைய உணவு கிடைத்து உண்டு முடித்தால், உடனே சற்று தலைசாய்த்து ஓய்வெடுக்க தோன்றும். 5 நிமிடம் என்று ஆரம்பித்த ஒய்வு நேரம், பல மணிநேர சோம்பலாகக் கூடும். எப்போதும் வயிறு நிறைய உண்ணாதீர்கள். ஒருபுறம் உங்கள் உடல் எடை அதிகரிக்க அது வாய்ப்பாகக் கூடும். மறுபுறம், வயிறு நிறைந்துவிட்டால், மனம் ஓய்வை நாடும். எப்போதும் ஒரு சிறிய அளவு பசி இருக்கட்டும். அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உங்கள் உடல் எடையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.


பசி மட்டும் தான் புதியவற்றை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். பசி இல்லாவிட்டால், மனிதனின் இயல்பான சோம்பேறித்தனம் அவனை மிக எளிதில் ஆட்கொண்டு தேங்கச் செய்துவிடும். அது உணவுப் பசியாக இருக்கலாம், அறிவுப் பசியாக இருக்கலாம், செல்வத்திற்கான பசியாக இருக்கலாம், புகழுக்கான பசியாக இருக்கலாம். ஏதாவதொரு பசிமட்டும்தான் உங்களின் வளர்ச்சியை நோக்கி உழைக்க உந்துதலாக இருக்கும். பசி உந்துதலை கொடுத்த அறிவு, பணம், புகழ் என்று தேட வைக்கும்போது, அவற்றிற்கு நீங்கள் ஒரு அளவுகோலை வைத்து கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பசி உங்களை அதர்மத்தின் பாதைக்கு வழிநடத்திடாமல் இருக்க, செய்யும் ஒவ்வொன்றிலும் தர்மத்தை தேர்வு செய்யும் கவனம் உங்களிடம் இருப்பது மிகமுக்கியம்.


உங்களிடம் எத்தனை செல்வம் இருந்தாலும்

எப்போதும் சிறிதளவு பசி இருக்கட்டும்;

உணவுப் பசி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்;

அறிவுப் பசி ஞானத்திற்கு வழிவகுக்கும்;

புகழுக்கான பசி சேவை மனப்பான்மையை வளர்க்கும்;

செல்வத்திற்கான பசி உழைப்பை மேம்படுத்தும்;


பசி இல்லாவிட்டால் வேடிக்கை மனிதராய்

விதிவழி வாழ்ந்து மடிவதன்றி வேறொன்றுமில்லை;


சோம்பலை ஒழிக்க வயிற்றுப் பசிவேண்டும்;

சாதனைப்படைக்க அறிவுப் பசி வேண்டும்;

பசிமட்டும் தான் புதியவற்றை படைத்தலுக்கான வேட்கை;

பசியை உணரத் துவங்கினால்

உங்களால் எப்போதும் ஓய்ந்திருக்க முடியாது;

நீங்கள் சாதனை மனிதராய் வலம்வர

எப்போதும் சிறிதளவு பசி தொடரட்டும்!


- [ம.சு.கு 11.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page