“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-182
பந்தய மனப்பான்மையை விட்டொழுயுங்கள்!
ஒரு கல்லூரி மாணவன் சாலையில் வாகனம் ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். அதே பாதையில், வேறொரு மாணவன் சற்று வேகமாக இவனது வாகனத்தை முந்திக்கொண்டு சென்றான். அதை கவனித்த இந்த மாணவன், உடனே தன் வண்டியின் வேகத்தை அதிகரித்து முந்திய வாகனத்தை மீண்டும் முந்த முயற்சித்தான். தன்னை முந்திச் சென்ற வாகனத்தை ஓட்டுபவன் யாரென்று தெரியாது. ஏன் அவன் சற்று அபாயகரமாக வேகத்தில் செல்கிறான் என்பது தெரியாது. அவனுடைய அவசரம் என்ன என்பதும் தெரியாது. ஆனால் அவன் தன்னை முந்தியதற்கு மனம் பொருக்காமல் தன் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கிறான். ஏனென்று தெரியாமல் ஏதற்காக போட்டிபோட வேண்டும்?
பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை பெரிய பள்ளியில் நன்றாக படிக்கவைக்க வேண்டுமென்று ஆசை. அந்த பள்ளியில் சேர்ந்து படிக்கும்போது, மற்ற மாணவர்ளை விட தங்கள் பிள்ளை முதல்மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று ஆசை. அதுவும் அதேபள்ளியில் உடன்படிக்கும் சகமாணவன் இவர்கள் வீட்டினருகில் இருந்தால், எப்படியாவது தங்கள் பிள்ளை அந்த இன்னொரு பிள்ளையை விட அதிகமதிப்பெண் எடுத்துவிடவேண்டுமென்று தங்களின் தற்பெருமைக்காக, குழந்தையினிடத்து போட்டி மனப்பானையை தூண்டி விடுகிறார்கள்;
கல்லூரி மாணவர்கள் என்றில்லாமல், பள்ளி சிறார்களிடமும் இந்த தேவையற்ற போட்டி மனப்பான்மை வழக்கமாக வருகிறது. யாரோ ஒருவர், ஏதோ அவசரத்தின் காரணமாக தன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டினால், உடனே அவனுக்கு முன்னாள் தான் இருக்கவேண்டுமென்று போட்டி போட மனம் தானாக உந்தப்பட்டு விடுகிறது. விபரீதம் தெரியாமல், வேகத்தை அளவுகடந்து அதிகரித்து விபத்தில் சிக்கியவர்கள் ஏராளம்;
பெற்றோர்கள் தங்கள் பிள்ளை நல்லவனாகவும், வல்லவனாகவும் வரவேண்டும் என்று யோசித்த காலம்போய், நல்ல மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடிக்க வேண்டும், சக பெற்றோர் மத்தியில் தங்கள் கௌரவம் அதிகரிக்க வேண்டும், பெரிய கல்லூரியில் இலவசமாக சேர வாய்ப்புகிடைக்க வேண்டுமென்று வெவ்வேறு காரணங்களுக்காக, பிள்ளைகளை எல்லைமீறி படிக்க மனஅழுத்தம் கொடுத்து நிர்பந்திக்கிறார்கள்: இயல்பாக போய்க்கொண்டிருக்கும் விடயங்களிலும், போட்டி மனப்பான்மையை வளர்த்து பந்தயக் குதிரையாய் ஓட விடுகிறார்கள்;
போட்டி மனப்பான்மை தேவையற்ற பொறாமைகளை வளர்க்கக்கூடும். சிலசமயங்களில் விளையாட்டாக தோன்றும் சில தேவையற்ற போட்டிகள், மிகப்பெரிய விபரீதங்களில் முடிந்திருக்கின்றன. கைபேசியில் சில அபாயகரமான செயலிகள், சிறார்களை தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு போட்டிகளை உருவாக்கி, எண்ணற்ற உயிர்களை காவுகொண்டிருக்கிறது. ஏன் இந்த போட்டிமனப்பான்மை உருவாகிறது?
இந்த சமுதாயத்தில் தனக்கென ஒரு தனிப்பட்ட அங்கீகாரத்தை உருவாக்கும் ஆசையில் போட்டியில் குதிக்கிறார்கள்;
எல்லாவற்றிலும் தான் மட்டுமே முதலில் இருக்கவேண்டும், எங்கும் முதல் மரியாதை தனக்கே கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்;
தன்னை யாரும் பயந்தவனாக, தோல்வியாளனாக பார்த்துவிடக்கூடாதென்று, போட்டியில் இறங்குகிறார்கள்;
தன்னுடைய வருவாயை போட்டியில் ஜெயித்து பெருக்கவேண்டுமென்ற ஆசையில் இறங்குகிறார்கள்;
தன்னைப்பற்றிய சுயபுரிதலும், வேலை குறித்த நீண்டகால பார்வையும் இல்லாமல், போட்டி போட முயற்சிக்கிறார்கள்;
இருக்கின்ற வளம் தீர்ந்துபோய்விடும் என்பதற்காக, அவற்றை முதலில் அடைய போட்டியில் குதிக்கிறார்கள்;
போட்டியில் ஜெயித்தால் வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையில், தன் சக்திக்கு மீறிய சில போட்டிகளில் குதித்து அல்லல் படுகிறார்கள்;
எங்கு பார்தாலும், எதை எடுத்தாலும், மக்களுக்குள் போட்டி மனப்பான்மை தானாக வந்துவிடுகிறது. குழந்தை வளர்ப்பில், தங்கள் பிள்ளை மற்ற எல்லா பிள்ளைகளையும் விட சிறப்பானவனாக வரவேண்டுமென்று ஆசை. எல்லோரையும் விட தான் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை. மற்ற ஊழியர்களை விட சிறப்பாக பணியாற்றி நற்பெயர் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை. இப்படி ஆசை வெவ்வேறு கோணங்களில் ஒரு வரை ஆக்கிரமித்திருக்கும்போது, அந்த பாதையில், வேற யாரேனுமொருவர் அனைபோட முயற்சித்தாலோ, அவரை முந்திச் செல்ல முயற்சித்தாலோ, வளைவுக் விபரீதமாகி விடுகின்றன.
வாழ்க்கையில் வெற்றிபெற நிறைய உழைக்க வேண்டும்”
பல போட்டிபொறாமைகளை சந்திக்க வேண்டும்
ஆனால் எந்நேரமும் போட்டிகள் குறித்தே சிந்தித்தால்
தேவையற்ற மனஅழுத்தமும், நோய்களுமே வரும்;
போட்டி இருந்தால் ஒரு புறம் இருக்கட்டும்
எல்லா போட்டியிலும் நீங்கள் ஒடவேண்டுமென்று நிர்பந்தமில்லையே!
முடியாவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தான் இந்த போட்டிகள்;
போட்டி என்பது வாழ்வின் அங்கம்தான் – ஆனால்
முழுமையல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்;
எல்லாவற்றிலும் போட்டிபோட முயிற்சிக்காதீர்கள்;
- [ம.சு.கு 09.04.2023]
Comments