top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-181 - கனிவான பேச்சு முக்கியம்!"

Updated: Apr 9, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-181

கனிவான பேச்சு முக்கியம்!


  • உங்கள் பகுதியில் இரண்டு மளிகைக்கடைகள் இருக்கின்றன. ஒரு கடையில், வாடிக்கையாளரை அன்போடு வரவேற்று, என்ன வேண்டும் என்று கனிவான வார்த்தைகளில் கேட்டு பொருட்களை வழங்குவார்கள். இன்னொரு கடையில் அந்த கனிவு இருக்காது. வேண்டியதைக் கேட்கவேண்டும், இருந்தால் கொடுப்பார்கள், இல்லாவிட்டால் இல்லை என்ற ஒரு வார்த்தை பதிலோடு நின்றுவிடும். அதேசமயம், மற்ற கடைக்காரரோ, பொருள் இல்லாவிட்டால் மாற்றுப் பொருள் குறித்து சொல்லுவார் அல்லது நாளை உங்களுக்கு அதை தருவித்து கொடுக்கிறேன் என்பார். இப்போது சொல்லுங்கள – இந்த இரண்டு கடையில் எங்கு வழக்கமாக வாங்க நீங்கள் விருப்பப்படுவீர்கள்?

  • கடுமையான வார்த்தைகளை வழக்கமாக பேசக்கூடியவர், ஒரு வியாபார விஷயமாக புதிய வாடிக்கையாளரை சந்திக்க ஒரு பெரிய வணிக வளாகத்திற்கு சென்றார். அங்கு மின்தூக்கியில் செல்லும்போது அருகில் இருந்தவரின் கால் இவர்மீது பட்டதற்கு, இவர் சற்று முறைத்தார். 6-7 பேர் மின்தூக்கியில் இருந்ததால், சற்று இடநெரிசல் இருந்தது. பின் வாடிக்கையாளரின் அலுவலகம் சென்று அவரை சந்திக்கும்போது, அந்த கால் பட்ட நபர்தான் அங்கு உயதிகாரி என்றது தெரியவந்தது. இப்பதே அந்த நபருக்கு அங்கு வியாபார வரவேற்பு எப்படி இருக்கும்?

பொதுவாக கனிவாக பேசக்கூடியவர்களின் கடைக்கு செல்லத்தான் எல்லோரும் விரும்புவார்கள். முரட்டுத்தனமான வார்த்தைப் பயன்பாடுகளை கேட்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஒரு வேலை அந்த கனிவான பேச்சுடையவரின் கடை சற்று தொலைவாக இருந்தாலும், “இந்த சிடுமூஞ்சிக்காரன் கடைக்கு போறதுக்கு பதிலா, தூரத்து கடைக்கே போய்ட்டுவரது மேல்” என்று சொல்லிக்கொண்டே கனிவான மொழிகளைத் தேடித்தான் எல்லோரும் வருவார்கள்.


நீங்கள் எதேச்சையாக சந்திக்கும் நபரை தேவையின்றி திட்டிவிட்டால், பின்னர் தேவையேற்படும்போது அவரை எப்படி அணுக முடியும்? சின்னச்சின்ன தவறுகளையெல்லாம் பெரிதுபடுத்தி கடுமையான வார்த்தைகளில் வசைபாடினால், அவர்கள் மனதில் நீங்காத வடுக்களைத்தான் ஏற்படுத்தியிருப்பீர்கள். பின்னர் அவர் எப்படி உங்களுக்கு மனமுவந்து உதவ முன்வருவார்?


மக்கள் நல்லவர்களாக இருந்தாலும், ஒரு சிலர் கனிவான மொழிகளை தவிர்த்து கடுமையாக பேசுவதற்கான காரணங்களை என்னவாக இருக்கும்?

  • ஒரே வேலையை பலமுறை திரும்பத்திரும்ப செய்யும்போது ஒருவித சலிப்பு வருகிறது. அந்த சூழ்நிலையில் யாராவது சாதாரண சந்தேகங்களை கேட்டாலோ, செய்த தவறையே திரும்ப செய்தாலோ வேலை செய்பவருக்கு சலிப்பு வருகிறது;

  • அதீத மனஅழுத்தத்தில் இருக்கும் போது, யார் எதைக் கேட்டாலும் கோபம் வர வாய்ப்பிருக்கிறது;

  • கடுமையாக உழைத்து களைத்திருக்கும் சூழலில், மீண்டும் கஷ்டப்படவேண்டிய நிர்பந்தம் வந்தால் எரிச்சல் வருகிறது;

  • தனக்கு விருப்பமில்லாத சூழலில் இருக்கும்போது, வேலையில் பிடிப்பில்லாமல் தவிர்க்கும் பொருட்டு வேண்டுமென்றே கடுமையான மொழியில் பேசுவார்கள்;

  • தங்களுக்கு சொந்தமான பொருட்களை யாராவது கேட்காமல் எடுத்தாலோ, அல்லது அபகரிக்க முயற்சித்தாலோ, அல்லது அதற்கான வாய்ப்பிருக்கிறதென்ற சூழ்நிலை உருவானாலோ, பலர் கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்;

  • அதிக சத்தம், அதிக கூட்டம், அதிக வெப்பம், என்று இயற்கை சூழல் அதீதமாக இருக்கும்போது, உடல் இயல்புநிலையிலில்லாமல் சிந்தனைகளை கடுமையாக்குகின்றன.

  • அதிகமான பசி, இயற்கை உபாதை சிக்கல்களில் இருக்கும்போது, தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டால் கோபம் வந்து கடுமையான வார்த்தைகள் வருகிறது;

இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். யதார்த்தத்தில் பெரும்பாலான மக்கள் இயல்பாக கனிவாக பேசுவார்கள். அவர்கள் மேற்சொன்னதுபோல ஏதாவதொரு சூழலில் கடுமையானவர்களாகி விடுகிறார்கள். வார்த்தைகள் கடுமையாகும்போது,

  • எதிரிலிருப்பவரும் கடுமையாக பேச ஆரம்பிப்பார், அல்லது

  • அப்போதைக்கு அவர்களிடமிருந்து / அவ்விடத்திலிருந்து விலகிவிடுவார்;

  • வியாபாரமானால், அடுத்த முறை அந்த கடைக்கு வருவதை தவிர்த்திடுவார்;

  • ஊழியரானால், வேறு நல்ல வேலையை தேட ஆரம்பித்துவிடுவார்;

  • உங்களுடைய மனம் நிம்மதியின்றி, அமைதியிழந்து இருக்கும்;

வாழ்வில் நீங்கள் சிறிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் மட்டுமே உழைத்து சாதித்துவிடலாம். நீங்கள் பெரிய வெற்றிகளை / சாதனைகளை சாதிக்க விரும்பினால், தனிமனிதனாக அதை செய்ய சாத்தியமில்லை. உங்களைச் சுற்றி நம்பிக்ககையான ஒரு கூட்டம் வேண்டும். உங்கள் குழு முழுமனதோடு உங்களுக்காக பாடுபட வேண்டுமானால், குழுவினருக்குள் ஒருங்கிணைப்பும், அரவணைப்பும் அத்தியவசியத் தேவை. இங்கு நீங்கள் கடுமையான மொழியில் பேசினால் என்னவாகும்? கனிவாக பேசினால் எப்படியிருக்கும்? என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். எங்கு, யாரிடம், எப்படி பேசவேண்டுமென்பது ஒரு வாழ்க்கைக் கலை, தவறு செய்யும் பிள்ளையை, ஊழியரை திருத்த சிலசமயம் கண்டிப்பு தேவை. கண்டிப்பும், கடுமையான மொழியும் வெவ்வேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


இயல்பில் உங்கள் மொழி கனிவாக இருக்கட்டும். இன்முகமும், இன்மொழியும் பல இன்னல்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க வழிவகுக்கும்.


நமக்கு வேண்டியதை நாம் விரும்பி செய்வோம் – அதேசமயம்

இன்னொருவர் நமக்காக அதை விரும்பி செய்வாரா?

அந்த இன்னொருவர் யாராக இருந்தால் அது சாத்தியம்?


அதிகார பலத்தில் இயங்கும் இராணுவமல்ல வியாபாரம்!

அரச கட்டளையில் இயங்குவதல்ல குடும்பம்!

ஆசிரியர் கண்டிப்பில் அடங்குவதல்ல நட்பு!


நட்போ, குடும்பமோ, வியாபாரமோ – எல்லாமே

அன்பான மொழியின் பின்னால் வளைந்துகொடுக்கூடியதே!

“கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்று

வள்ளுவம் சொன்னதை மறந்தீரோ!


உங்கள் வெற்றிக்கு உள்ளங்களை வெல்லுங்கள்!

உள்ளங்களை வெல்ல இனிமையை கைக்கொள்ளுங்கள்!

இனிமையான வார்த்தைகளுக்கு முன்னால்

வளையாத வினையொன்று உண்டா?


- [ம.சு.கு 08.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page