top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-179 - கற்பனைக் குதிரை ஓடட்டும்!"

Updated: Apr 7, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-179

கற்பனைக் குதிரை ஓடட்டும்!


  • திரைப்படங்களில் மாயாஜால வித்தை செய்பவர், நடிகர் கேட்கும் உணவுகளையெல்லாம் உடனுக்குடன் வரவழைத்து கொடுப்பார். கதாசிரியரின் கற்பனைக்கு இயக்குனர் வடிவம் கொடுத்து அதை படமாக்கி இருப்பார். அதே உணவுத் தேவையை இன்றைய தலைமுறை வேறு விதத்தில் கற்பனை செய்தது. மாயாஜால வித்தைக்காரர் எப்படி எல்லோருக்கும் கிடைக்கபெறுவதென்று கற்பனைக் குதிரையை ஓடவிட்டு உருவாக்கியதுதான் “ஜொமேட்டோ” “ஸ்விக்கி” போன்று உணவு வாங்கும் செயலிகள். வீட்டில் உட்கார்ந்துகொண்டே எந்த கடையிலிருந்து? எந்த உணவு? வேண்டுமோ, அதை நீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்களுக்கு தெரியாத ஒருவர் கொண்டுவந்து கொடுப்பார். இது எப்படி சாத்தியமாயிற்று?

  • நிலத்தில் பயனம் செய்ய சக்கரத்தையும், சுழலும் இயந்திரத்தையும், நீராவி இயந்திரத்தையும் உருவாக்கினான். நீரில் பிரயானிக்க கப்பலையும், காற்றில் பயனிக்க விமானத்தையும் உருவாக்கினான். சில மணித்துளிகளில் தமிழ்கடவுள் ஞானப்பழத்திற்காக மயில்வாகனத்தில் உலகைச்சுற்றியதாக படித்தோம். அதை கற்பனை என்று ஒருகூட்டம் வாதிட்டுக்கொண்டிருக்க, இன்று 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உலகைச் சுற்றிவர வாகனம் தயாராக இருக்கிறது. இராமனும், அர்ச்சுனனும் ஏவிய பானங்கள் கற்பனை என்றனர். அதை விட பலமடங்கு அபாயகரமான ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் நிஜமாகி இருக்கின்றன. இன்றைய முன்னேற்றம், மனிதனின் கற்பனைக்கும், நிஜத்திற்குமான இடைவெளியை குறைத்துவிட்டது.

கடந்த இருபதாண்டுகளில், கைபேசி எனும் மாயாஜால வித்தைக்காரன், நம் கைகளில் இருந்துகொண்டு, நம் பல்லாயிரம் கற்பனைகளை நிஜமாக்கிவிட்டான். இந்த கைபேசி திடீரென்று வானிலிருந்து கீழே விழுந்த அதிசயம் அல்ல. அதுவும் சிலரின் கற்பனையில் படிப்படியாய் பரிணமித்த ஒரு மாயாஜாலம். மனிதன் தன் தேவைகளை எப்படியெல்லாம் பூர்த்தி செய்யலாம் என்று கற்பனை செய்கிறான். அவன் கற்பனை செய்த பலவற்றை தன் கையிலிருக்கும் பொருட்கள் மூலம் எப்படி செயல்படுத்துவதென்று தேடுகிறான். அதன் விளைவுதான் கைபேசியில் உணவிற்கும், வாகனத்திற்கும், திரைப்பட நுழைவுச் சீட்டிற்கும், பயனமுன் பதிவிற்கும் எண்ணற்ற செயலிகள் உருவாகி நம் தேவைகளை விரல் நுனியில் நிஜமாக்கியது.


சென்ற நூற்றாண்டுகளில் கற்பனையாக இருந்துவந்தவையெல்லாம், இன்று நிஜப்பொருளாக நம் முன்னால், எளிய பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது. எங்கோ, யாரோ, எதற்கோ எழுதிய கற்பனை படைப்புக்கள் இன்று இயந்திர மனிதனாய், தானியங்கி வாகனங்களாய், பேரழிவு ஆயுதங்களாய், விரல் நுணியில் பணப்பரிவர்த்தனைகளாய் நிஜவுருவம் தாங்கி நிற்கிறது.

மனிதன் தன்னால் கற்பனை செய்யகூடிய எல்லாமே, சாத்தியப்படக்கூடியது தான். பறக்க கனவுகண்டான். பறந்து காட்டினார்கள். தூரத்திலிருப்பவருடன் பேசிட கனவுகண்டான். இன்று முப்பரிமான வடிவில் தூரத்திலிருப்பவர், உங்கள் அருகில் அமர்ந்து பேசுவது சாத்தியமாகிவிட்டது. இன்று கண்டுபிடிக்கப்பட்டவை, உருவாக்கப்பட்டவை எல்லாமே, யாரோ ஒருவரின் கற்பனையில் உதித்தவைதான். அந்த கற்பனைக்கு அவர் உருவம் கொடுத்ததன் பலனை நாம் எல்லோரும் அனுபவிக்கிறோம்.


மனிதனின் கற்பனைதான்

  • மூலாதாரமாக, ஆரம்பப்புள்ளியாக இருந்து எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணியாகிறது;

  • மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்து புதியவற்றை உருவாக்க வழிவகுக்கிறது;

  • தனக்கு என்ன வேண்டும், அது எப்படி இருக்க வேண்டுமென்று ஒரு வடிவத்தை கொடுக்கிறது;

  • வெறுமையை போக்கி, எப்போதும் நம்மை இயக்கத்தில் வைக்கிறது;

கற்பனை வாழ்வின் அங்கம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம், அந்த கற்பனை அளவுகடந்து, யதார்த்தத்திலிருந்து விலகி எதிர்வினையாற்றவும் வாய்ப்பிருக்கிறது;

  • சாத்தியமில்லாதவை ஏதுமில்லை என்றாலும், ஒரு சில கற்பனைக்களுக்கான அடித்தளம் அன்றைய காலகட்டத்தில் தயாராக இருக்காது. 1000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் பறக்க ஆசைப்பட்டான். ஆனால் தொழில்வளர்ச்சி சென்ற நூற்றாண்டில் தான் அதை சாத்தியமாக்கியது.

  • ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது, வெவ்வேறான கற்பனைகள் உங்களை திசை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்;

  • சில சமயம், எதிர்மறையான கற்பனைகள் அதிகரித்து, உள்ளூர உங்களுக்குள் பயத்தை உருவாக்கிவிடக் கூடும். எதைப்பற்றிய சிந்தனையில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம், எங்கு எல்லையை கடக்கிறோம் என்பதில் நீங்கள் தான் கவனமாக இருக்கவேண்டும்.

கற்பனைக் குதிரை எல்லையின்றி ஓடினால் தான், புதிய யோசனைகள், புதுமைகளை படைக்க வழியேற்படும். அதேசமயம், கற்பனை உலகிலேயே சஞ்சரித்துக்கொண்டு, யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் காலத்தை கழித்தால், நேரம் விரையமாவதோடு, நீங்களும் பயனற்றுப் போவீர்கள். தினம் தினம் கற்பனையை வளர்த்திடுங்கள். எல்லா கற்பனைக்கும், இன்றைய யதார்த்த சூழ்நிலைக்குமான இணைப்புப் பாலத்தின் சாத்தியக் கூறுகளை அலசுங்கள். படிப்படியாய் எல்லா கற்பனைகளும் நிஜமாகும்;


கற்பனை தான் எல்லாவற்றின் ஆரம்பம்

எல்லா புதிய படைப்புகளும் கற்பனையில்தான்

எல்லா அழிவுகளும் கற்பனையில்தான்

பிரச்சனைகள் உருவாவதும் கற்பனையில்தான்

பிரச்சனைகள் தீர்வதற்கான யோசனையும் கற்பனையில்தான்


கற்பனை ஓட்டத்தை அணைபோடாதீர்கள்

எல்லா துவக்கமும் கற்பனையில் உதித்த புள்ளிதான்;

புள்ளிகள் வளர்ந்து பெரும் கோலமாக மாற

கற்பனை யதார்த்தத்தோடு இணைந்து செயல்பட்டால்

உலகம் ஒருநாள் வசப்பட்டே தீரும்;


சென்ற நூற்றாண்டின் கற்பனைகள்

இந்த நூற்றாண்டின் யதார்த்தங்க்ள்;

இந்த நூற்றாண்டின் கற்பனைகள்

அடுந்த பத்தாண்டின் யதார்த்தங்கள்;

கற்பனை வளர்ந்து காவியம் படைப்போம்;



- [ம.சு.கு 06.04.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page