“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-178
பரந்த கண்ணோட்டத்தில் பாருங்கள்!
உங்கள் வீட்டின் அருகில் மாநகராட்சி குப்பைத் தொட்டி வைக்கக்கூடாதென்று வாதிடுகிறீர்கள். உங்கள் தெருவில் உள்ள அனைவரும் அதே போல வாதாட, மாநகராட்சி அலுவலர்கள் குப்பைத் தொட்டியை சற்று தொலைவான இடத்தில் வைக்கிறார்கள். அன்றாடம் தெருவினர் அனைவரும் குப்பைக் கூடையை சுமந்து கொண்டு சற்று தூரம் நடந்துவர வேண்டி இருக்கிறது. ஒரு சிலர் நடப்பதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டு, அங்கேயே சாக்கடையில் வீசுகின்றனர். அதனால், அவ்வப்போது சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பிரச்சனை ஏற்படுகிறது. இப்போது அந்த தெருவே கஷ்டப்படுகிறது. ஏன்?
கொரோனா என்ற பெருந்துதொற்று காலத்தில், அரசாங்கம் ஊரடங்கு உத்தரவுகளை பிரப்பித்து, சிலமாதங்கள் எல்லோரையும் வீட்டில் அடைத்தது. இந்த ஊரடங்கால் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியானது. நிறைய தொழில்கள் முடங்கின. இதை அறிந்திருந்தும், பரவும் கோவிட் கிருமிகளின் அபாயத்தையும், அதனால் ஏற்படும் உயரிழப்புக்களையும் கருத்தில் கொண்டு உலக நாடுகளே ஊரடங்கை பிரப்பித்தன. இன்றைய தொழில், வருமானம் என்று மட்டும் பார்த்து பல இலட்சம் உயிர்களை காவு கொடுக்க அரசாங்கம் விரும்பவில்லை. இது சரிதானா?
குப்பைத் தொட்டி வீட்டின் அருகில் இருந்தால் அசிங்கமாக இருக்குமென்று எல்லோரும் தவிர்த்தால், பின் அதை எங்குதான் வைப்பது. சமுதாயத்தில், ஒரு தனிமனிதனின் விருப்புவெருப்புக்களை பார்த்துக் கொண்டு, சமுதாயத்தின் பொது தேவைகள் செயல்படுத்தப்படுவதை தாமதித்தால், பாதிப்பு எல்லோருக்கும் ஏற்படுகிறது. குப்பைத் தொட்டி வீட்டின் அருகில் இருந்தால் அசௌகரியமென்றாலும், தெருவின் பொது நலனை கருத்தில் கொண்டு, ஒரு சில வீடுகள் அருகில் குப்பைத் தொட்டியும், ஒரு இடத்தில் மின் மாற்றிகளும் [டிரான்பார்மர்] என்று ஒவ்வொன்றும் நிறுவப்பட்டால் தான், எல்லோருக்கும் உதவியாக இருக்கும். ஒரு தெருவில் வாழும் மக்கள், குறைந்தபட்சம் தன் தெருவின் பொதுநலன் என்ற பரந்த கண்ணோட்டத்தில் பார்த்து முடிவெடுத்தால் எல்லோருக்கும் நல்லது.
கொரோனா ஊரடங்கால் நிரந்தரமாய் தொழிலையும், சொத்தையும் இழந்தவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால், அரசாங்கத்தின் உத்தரவு தவறானதாக தெரியும். ஆனால், அந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, அரசாங்கம் விபரீத முயற்சிகளை மேற்கொள்ள முடியாது. வியாபாரமா? மக்களின் உயிரா? என்ற கேள்வியெழும்போது, அரசாங்கம் தன் மக்களின் உயிர்நலனையே கருத்தில் கொள்ளும். ஏனெனில் தேசமென்பது, அதன் மக்கள்தான், பணமல்ல!! அரசாங்கம் நீண்ட கால நலனையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பரந்த கண்ணோட்டத்தில் முடிவுகளை எடுப்பதால் தான், பல பிரச்சனைகள் நமக்கு வராமல் ஆரம்பத்திலேயே தடுக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட செயலை, அதன் அப்போதைய தேவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதன் பின்விளைவுகள், சாதக-பாதகங்கள் என்னவென்று விரிந்த கண்ணோட்டத்தில் பார்த்து முடிவெடுத்தால்;
செயல் குறித்த தெளிவான, ஆழமான புரிதல் ஏற்படும்;
பின்னாளில் வரப்போகும் தேவையற்ற ஆச்சர்யங்களும், அதிர்ச்சிகளும் தவிர்க்கப்படும்;
கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் அதிகரிக்க வாய்ப்பாகும்;
அவசரத்தில் தவறான முடிவுகள் எடுக்கப்படுவது தவிர்க்கப்படும்;
பரந்து கண்ணோட்டத்தில் பார்த்து முடிவெடுக்கும்போது, மக்களுக்கிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்து பரஸ்பர புரிதல் ஏற்படும்;
தீர்க்கமுடியாத சில பிரச்சனைக்ளுக்கான தீர்வு சாத்தியப்படும்;
பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதிகரித்து யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளரும்;
பரந்த கண்ணோட்டத்தில் பார்த்து முடிவெடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருந்தாலும், அதுவே சில தாமதங்களுக்கு காரணியாகி விடக்கூடாது;
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து முடிவெடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு, முடிவெடுப்பதை தாமதித்தால், எல்லாம் வீணாகிவிடக்கூடும்.
நிறைய விடயங்களை அலசிப் பார்க்கும்போது, சிக்கல்களும் அதிகமாக தெரியும். அந்த சிக்கல்களில் சிக்கி முடிவெடுக்க முடியாமல் திணற நேரிடும்;
சில சமயங்களில் ஆழமாக ஆராய்ந்து முடிவெடுக்க நேரமிருக்காது அல்லது போதுமான ஆள்பலமும் பணபலமும் இருக்காது;
சில சமயம் பரந்த கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு வலுவான எதிர்ப்புகள் இருக்கும்;
இவை எல்லாவற்றையும் கடந்து, ஒவ்வொரு விடயத்தையும் நாளைய தேவைகளையும், சமுதாயத்தின் பொது தேவைகளையும் கருத்தில் கொண்டு, பரந்த கண்ணோட்டத்தில் பார்த்து முடிவெடுத்தால், எல்லோருக்கும் நீண்ட கால பயனை அளிக்கக்கூடியதாய் இருக்கும்.
இன்றைய தேவையை மட்டும் கருத்தில் கொண்டு முடிவெடுத்தால்
இன்றைக்கு நன்றாக இருக்கும்;
நாளைக்கும் அது பயனுடையதாய் இருக்குமா?
உங்கள் தனிநபர் ஆதாயத்தை மட்டும் கருத்தில்கொண்டு முடிவெடுத்தல்
உங்களுக்கு நன்றாக இருக்கும்
ஊரார் அனைவருக்கும் பயன் படும் வகையில் இருக்குமா?
எதையும் இன்றைக்கானது, எனக்கு மட்டுமானது என்ற
குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து
உங்களை நீங்களே சிறிய வட்டத்தில் சிறைபடுத்தாமல்
பரந்த கண்ணோட்டத்தில் பாருங்கள்;
நாளையும் நீ்ங்கள் இருப்பீர்கள்
உங்கள் சுற்றமும் ஊரும் உடனிருக்க வேண்டும்
என்ற விடயங்களை மனதில் கொண்டு
கூடியவரை எல்லாவற்றிலும்
பரந்த கண்ணோட்டத்தில் முடிவெடுங்கள்;
- [ம.சு.கு 05.04.2023]
Comments