top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-169 - நற்பெயர் என்றென்றைக்கும் முக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-169

நற்பெயர் என்றென்றைக்கும் முக்கியம்!


  • திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்பது, தமிழகத்தில் பிரசித்திபெற்ற இனிப்பு பதார்த்தம். தமிழகத்தில் பலபேர் அந்த உண்மையான இருட்டுக்கடை அல்வாவை இன்றுவரையிலும் சுவைத்ததே இல்லை, காரணம் அந்த இருட்டுக்கடை நிறுவனத்திற்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. இருப்பினம், காலங்காலமாய் அவர்கள் தங்களின் தரத்தில் தொடர்ந்து நாட்டம் செலுத்தி நிலையான நற்பெயரை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த கடைபெயரில் பல போலி உற்பத்தியாளர்கள் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கடையின் புகழ் இன்றும் நிலைபெற்றிருப்பது ஏன்?

  • இன்று தன் அப்பா, தாத்தாக்களின் நற்பெயரைக் கொண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார்கள். அரசியல் மற்றும் நிர்வாகம் எதுவும் தெரியாமல் இப்படி முன்னோர்களின் நற்பெயரை பயன்படுத்தி வெற்றிபெறுபவர்கள் ஒரு புறம் இருக்க, தன் மூதாதையரின் நற்பெயர் காக்க, இன்றும் சில குடும்பங்கள் சத்தியாகிரகத்தையும், வாய்மையையும் உயிரென காத்து நிற்கின்றன. தனிமனித நற்பெயர் என்பது நிஜமா? மக்கள் தற்போதிருப்பவர்களை கண்டுகொள்ளாமல், முன் இருந்த நற்பெயரை மட்டும் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்களா? அப்படி என்ன பெரிய மாற்றத்தை இந்த நற்பெயர் அவர்களின் வாழ்க்கை செழிப்பிற்கு வழங்குகிறது?

ஒரு பொருளின் நிலையான தரத்தினால் நற்பெயரை ஏற்படுத்திக் கொண்டால், அந்த புகழை அழிக்க யாராலும் முடியாது. நீங்களாக தரத்தைக் குறைத்து உங்கள் பெயரை கெடுத்துக்கொண்டால்தான் அது வீழ்ச்சியடையும். தினந்தோறும் குறிப்பிட்ட அளவு மட்டுமே அல்வா உற்பத்தி செய்து விற்றவர்கள், தங்களின் நிலையான தரம் மற்றும் சுவையின் காரணமாக, தமிழகத்தில், அல்வாவின் மறுபெயராக நிலைபெற்றிருப்பதற்கு, அவர்கள் சம்பாதித்து காத்துவரும் “நற்பெயர்” தான் மூலகாரணம். அப்படிப்பட்ட நற்பெயரை, நீங்கள் தயாரித்து விற்கும் பொருட்கள் சந்தையில் ஏற்படுத்துமா? அப்படி ஏற்படுத்த, மேற்கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று யோசியுங்கள்!


நீங்கள் பிறந்ததுமுதல், உங்கள் திருமணம் வரை எல்லாம் உங்கள் குடும்பம் ஈட்டிய நற்பெயர் கொண்டே நிர்ணயிக்கப்பட்டு நடந்தேறுகிறது. உங்களுக்கு பெண் கொடுப்பவர்கள், உங்களின் ஒழுக்கத்தை பார்க்கும் அதே நேரத்தில், உங்கள் குடும்பத்தின் நற்பெயரையும் அளவிடுகிறார்கள். நல்லொழுக்கத்தையும், நற்பெயரும் கொண்ட குடும்பத்தில் வளரும் பிள்ளைகள், அந்த நல்லொழுக்கத்தை கற்றவர்களாக, மதிப்பவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம் என்பது ஒரு காரணம். நீங்கள் ஒரு குடும்பஸ்தராகி பிள்ளைகள் வரும்போது, உங்களுக்கென்று தனிப்பட்ட அடையாளத்தை, நற்பெயரை சம்பாதிக்க நீங்கள் முயற்சிகளை தொடர்கிறீர்கள். ஏனெனில், அந்த நற்பெயரெனும் சங்கிலித் தொடரை நீங்கள் உங்கள் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நீங்களும் நற்பெயரை ஈட்டி தக்கவைக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது.


தனிமனித நற்பெயரைத்தாண்டி, எல்லா நிறுவனங்களும் தங்களின் பொருளுக்கு, தங்கள் நிறுவனத்தின் பெயருக்கு தனிப்பட்ட அங்கீகாரத்தை, நற்பெயரை சம்பாதிக்க எண்ணற்ற பணத்தை விளம்பரங்களிலும், வாடிக்கையாளர் சேவையிலும் செலவிடுகிறார்கள்.

  • நிறுவனம் ஈட்டும் நற்பெயர், அவர்களின் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த உதவுகிறது. நற்பெயர் கொண்ட நிறுவனத்தின் பொருட்களை 5%-10% விலை கூடதலாக கொடுத்து வாங்க சந்தை தயாராக இருப்பதால், இலாபம் அதிகரிக்கிறது;

  • நல்ல மனிதவள கொள்கைகளை கொண்டு நற்பெயரை பெற்றுள்ள நிறுவனங்கள், தன் ஊழியர்களை நீண்ட காலம் தக்கவைப்பதற்கும், அவர்களை புதிய ஆராய்ச்சிகளில் ஊக்கப்படுத்தவும் வழிவகை செய்து, வியாபாரத்தின் வெற்றிக்கு வழிவகுக்கிறது;

  • நல்ல வாடிக்கையாளர் சேவைகளைக் கொண்டு நற்பெயரை சம்பாதித்த நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்து வியாபாரத்தை வளர்க்க வழி ஏற்படுத்திக் கொள்கின்றன;

  • நற்பெயரை தக்கவைக்கும் நிறுவனங்கள், தன் வாடிக்கையாளர், ஊழியர், அரசு இயங்திரங்கள், வங்கிகள், தனிக்கையாளர்கள், பொதுமக்கள் என்று எல்லோரிடமும் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்து, நிறுவனத்தை வளர்க்க வழிவகை செய்கிறது;

  • நற்பெயரை சம்பாதித்து தக்கவைக்கும் நிறுவனங்கள் எந்த சூழ்நிலையையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டு, மக்களின் நம்பிக்கையை பேனுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது;

இப்படி நற்பெயரானது, எல்லாவகையிலும் தனிமனித வளர்ச்சிக்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுவது ஒரு புறம் இருக்க, ஒரு சில எதிர்மறைவிளைவுகளையும் அது ஏற்படுத்த வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது;

  • ஒருவரது நற்பெயரை பயன்படுத்தி மற்றவர்கள் ஆதாயம் அடைய முயிற்சிப்பார்கள்;

  • நற்பெயர் கொண்டு சாதிக்கக் கூடியது ஒரு எல்லைவரைதான். அளவுகடந்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி, சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்;

  • தங்களின் நற்பெயரை முன்னிறுத்தி, பெரிய நிறுவனங்கள், தங்களின் தீவிர சந்தைப்படுத்துதல் வேலைகளில் இறங்கி முயற்சிக்கும் போது ஏற்படும் சில தவறுகள், மற்ற நிறுவனங்களால் பெரிதுபடுத்தப்பட்டு சம்பாதித்த நற்பெயரை இழக்கும் நிலைக்கோ, அல்லது பெரிய நஷ்டத்திலோ தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது;

நற்பெயர் என்பது ஒருநாளில் வருவதல்ல. உங்கள் தொடர் பழக்கவழக்கத்தில் நற்செயல்கள் வேரூன்றி, அதன் பலனை சமுதாயம் கண்டுணரும் போதுதான், நற்பெயர் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறது. ஏதோ ஒருநாள் பிறருக்கு நன்மை செய்ததற்காக நீங்கள் போற்றப்படலாம். ஆனால் அந்த போற்றுதலை தக்கவைக்க, நாள்தோறும் அந்த நற்செயலைத் தொடர வேண்டும். அது தொடர்ந்து பழக்கமானால், படிப்படியாய் நிலையான நற்பெயராய், உங்களின் மறுபெயராய், அது வேரூன்றும். நற்பெயர் என்பது தனிமனித வாழ்விற்கு மட்டுமல்லாமல், இன்று வியாபார உலகையும் ஆட்டிப்படைக்கிறது.


உங்கள் பெற்றோர்களின், மூதாதையரின் நற்பெயரால்

நீங்கள் இன்று மதிக்கப்படுவீர்கள்!

அந்த நற்பெயரை மேலும் வலுப்படுத்தி

உங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்கிறீர்களா?


வியாபாரத்தில் நற்பெயருக்கென்று ஒரு விலையுண்டு!

தனிமனித வாழ்வில் நற்பெயருக்கு விலையில்லை – ஆனால்

நற்பெயர்தான் வாழ்வின் எல்லாமுமாகும்;


தனிமனிதனின் நற்பெயர் விற்பனைக்கானதல்ல – அது அவனது

ஒழுக்கத்தின், நேர்மையின், சத்தியத்தின் அடையாளமாகும்!

வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் – ஆனால்

எதற்காகவும் நற்பெயரை இழக்க சம்மதித்துவிடாதீர்கள்!


- [ம.சு.கு 27.03.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page