“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-160
நம்பிக்கையோடு போராடுகிறீர்களா?
சதுரங்க விளையாட்டில் மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றிருந்த ஒரு மாணவனுக்கு ஒரு காட்சிபோட்டியில் உலகின் முன்னனி வீரர் விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் பத்து நபர்களுடன் ஒரே நேரத்தில் விளையாடினார். இந்த மாணவனுக்கு ஆனந்துடன் விளையாடப்போவதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி. மறுபுறம் அவர் தன்னை மிக எளிதாக வீழ்த்திவிடுவாரோ என்கிற பயம். தன் திறமையக் காட்டிலும் எதிராளியின் திறமையின் மீது அவனுக்கு அதிக பயம் இருந்ததால், 16-வது நகர்த்தலிலேயே தோல்வியுற நேர்ந்தது. அந்த ஆட்டத்தில் விளையாடிய 10 பேரும் தோற்றிருந்தாலும், ஓரிருவர் 50-60 நகர்த்தல் வரை அவருக்கு கடுமையான சவாலாக இருந்தனர். எல்லோருமே மாவட்ட அளவில் வென்றவர்களானாலும், ஒரு சிலரால் மட்டும் எப்படி தாக்குபிடிக்க முடிகிறது?
ஒரு நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை பெற வேண்டும். அந்த உரிமையை பெற கடுமையான போட்டி நிலவிய சூழ்நிலையில், அந்த நிறுவனத்தின் மேலாளருக்கு சற்று பயம் இருந்தது. அந்த மேலாளரின் பயத்தை உணர்ந்த தலைமை செயல் அதிகாரி, தன்னம்பிக்கை நிறைந்த இரு ஊழியர்களை களத்தில் இறக்கினார். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு, அந்த திட்டத்தின் தனித்துவங்களையும், குறிப்பிட்ட தேவைகளையும் கண்டறிந்து, மற்ற எல்லா நிறுவனங்களையும் விட 100 சின்னச்சின்ன சிறப்பம்சங்களை, முன்னேற்றங்களை தங்கள் நிறுவனம் செய்யும் என்று நிரூபிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அந்த திட்டத்தின் கடைசி கட்ட கலந்தாய்வில், செயல் அதிகாரி தன்னுடன் அந்த இரு ஊழியர்களையும் வைத்து திட்டத்தை மற்ற எல்லா பெரிய நிறுவனங்களையும்விட தங்களால் எப்படி சிறப்பாக செய்ய முடியும், திட்டத்தின் தனித்துவத்திற்கு தங்கள் நிறுவனம் என்ன கூடுதல் முன்னேற்றத்தை அளிக்க முடியும் என்று திறம்பட விளக்கி, தான் எதிர்பார்த்த விலைக்கே அந்த திட்டத்தை செயல்படுத்தும் உரிமையை வென்றார்.
தான் எதிர்த்துவிளையாடப்போவது உலகின் மிகச்சிறந்த வீரர் என்றவுடன், தன்னால் அவரை வெற்றிகொள்ள முடியாது என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டது. மனதளவில் அவரிடன் தோற்றுவிட்ட பின், களத்தில் எப்படி வெற்றிகாண முடியும். அதேசமயம் தன்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் களம்கண்ட ஓரிரு வீரர்கள் அவருக்கு சரியாண சவாலாக நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடிந்தது. சிறந்த வீரருடன் விளையாட வேண்டுமென்ற சூழ்நிலையில், உங்கள் திறமையை நிரூபிக்க அதையொரு பெரிய வாய்ப்பாக பயன்படுத்தி, அவரை வெற்றிகொள்ள வேண்டுமென்று போராடுவதற்கும், அவர் தன்னை ஜெயித்துவிடுவார் என்று விளையாடுவதற்கும் எத்தனை வேறுபாடு இருக்கும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். இப்படி எத்தனை பேருடன், எந்தெந்த களங்களில் நம்பிக்கையில்லாமல் விளையாடியுள்ளீர்கள் என்று சுயபரிசீலனை செய்து பாருங்கள்!
தங்கள் நிறுவனத்தைவிட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு திட்டங்களை வெல்வதற்கு மேலாளர் பயப்பட்டார். பயந்தவர்களால் முடியாது என்றுணர்ந்த செயல் அதிகாரி, அந்த திட்டத்தை வெல்வதற்கான திட்டத்தை தீட்டி களமிறங்கினார். மற்றவர்கள் யோசிக்கத் தவறும் எல்லாவற்றையும் பட்டியலிட்டு மேம்பட்ட முறையில் செயல்படுத்துவோம் என்று தெளிவுபடுத்தியது, கலந்தாய்வில் எல்லாரது பாராட்டுதலையும், திட்டதிற்கான உரிமையையும் பெற்றுத்தந்தது.
எதையும் வெல்ல முடியும்!
யாரையும் வெல்ல முடியும்!
அதற்கு முடியுமென்று முதலில்
உங்கள் எண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும்!
இங்கு எல்லாமே, எல்லாருமே பூஜ்ஜியத்தில் இருந்து துவக்கப்பட்டவைதான். இன்று நீங்கள் துவக்குகிறீர்கள். உங்களை போட்டியாளர் சற்று முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியிருப்பார். களத்தில் அவர் அனுவப்பட்டு நிறைய தெரிந்திருப்பார். புதிதாக நீங்கள் துவக்குவதால், உங்களுக்கு கள அனுபவம் குறைவாக இருக்கும். அந்த நிதர்சனத்தை புரிந்துகொண்டு, அதற்கான மாற்று திட்டங்களை வகுத்து செயல்பட்டால், எந்த களத்திலும் நீங்கள் ஜெயிக்க வாய்ப்பு உண்டு;
அதேசமயம், எதிராளி பலசாலி, எங்களால் முடியுமா என்று சந்தேகத்தில் களம்கண்டால், உங்களால் எந்தவொரு புதிய உத்தியையும் கண்டறிந்து செயல்படுத்த முடியாது. புதிய உத்திகள் இல்லாமல் ஜாம்பவான்களை வீழ்த்த முடியாது.
வெற்றி எல்லோருக்குமான பொதுவுடைமை. அது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும், அதை நோக்கி கடுமையாக முயற்சிப்பவருக்கு மட்டுமே வந்து சேருகிறது. பயந்தவர்களிடம் வெற்றியும் வருவதற்கு பயப்படும்.
எல்லாருமே வெற்றிபெற போராடுகிறார்கள் – ஆனால்
உங்களில் எத்தனை பேருக்கு வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது;
உங்கள் வெற்றி
உங்கள் செயலில் தீர்மானமாவதற்கு முன்
உங்கள் எண்ணத்தில் தீர்மானமாகிறது;
நம்பிக்கை என்பது குருட்டு நம்பிக்கையில்லை;
என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்?
என்ற முழுமையான புரிதலுடன்
சாதக-பாதகங்கள், இலாப-நட்டங்கள்
என்ன என்று தெரிந்து கொண்டு
எதையும் தன்னால் சமாளிக்க முடியும்
என்ற தைரியத்துடனான நம்பிக்கைதான்
உங்கள் வெற்றியின் அஸ்திவாரம்;
- [ம.சு.கு 18.03.2023]
Σχόλια