top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-149 - நம்பிக்கை துரோகங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-149

நம்பிக்கை துரோகங்கள்!


  • பலநிறுவனங்கள், பெரிய அரசுதிட்டங்களின் பணிகளை மூடப்பட்ட ஒப்பந்த சமர்ப்பித்தலின் வாயிலாக எடுக்கின்றன. அந்த ஒப்பந்தங்கள், போட்டியாளர்களில் யார் குறைவான விலையை சமர்ப்பித்துள்ளாரோ, அவருக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தப் போட்டியில், நிறுவனங்கள் தங்களின் விலையை நிர்ணயிப்பதோடு நின்றுவிடாமல், போட்டி நிறுவனங்கள் என்ன விலை சமர்ப்பிக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளவும் சில சதிவேலைகளில் இறங்குவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்கள் போட்டியாளர்கள், அப்படித்தான் செய்வார்கள் என்பது கணிக்கக்கூடியதே. ஆனால், அவர்களின் சதிவேலைக்கு துணைபோகின்றவர்கள் யாரென்று பாருங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி அங்குதான் இருக்கும்?

  • இன்று கைப்பேசியைக்கடந்து, மக்களின் வழக்கமான பொழுதுபோக்கு, தொலைக்காட்சியில் வரும் பெரிய நாடகத் தொடர்கள். அந்த எல்லா நாடகங்களிலும் உள்ள பொதுவான ஒரே விடயம் சதி, நம்பிக்கை துரோகம், முதுகில் குத்தப்படுதல். எல்லா நாடகங்களிலும் கதாநாயகன் / கதாநாயகி யாரேனுமொருவரை நம்பிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் துரோகியாகி இவரை வீழ்த்துவார். பின்னர் பாதிக்கப்பட்டவர் மீண்டு வருவதுதான் மீதி கதை. திரைப்படங்களிலும் இதே கதைதான். ஏன் இந்த கதைப்பாணி எல்லாவற்றிலும் பொதுவாக இருக்கிறதென்று யோசித்திருக்கிறீர்களா?

பெரிய நிறுவனங்கள், எவ்வளவுதான் ஊழியர்களை நன்கு பார்த்துக்கொண்டாலும், ஒரு சிலரின் பேராசை, சில துரோகங்களுக்கு வழி வகுத்துவிடுகிறது. முக்கிய திட்டங்களும், விலை குறிப்புக்களும், பொருள் தயாரிப்பு இரகசியங்களும் துரோகிகளால் விற்கப்பட்டு விடுகிறது. இவற்றை தடுக்க நிறுவனங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், அவ்வப்போது சில சரிவுகள் நிகழத்தான் செய்கிறது. இது நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் இருக்கக்கூடிய பெரிய சவால்தான். நிறுவனம் தன் எல்லா ஊழியர்களையும், நாடு தன் எல்லா மக்களையும் சந்தேகிக்க முடியாது. ஆனால், சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை திறம்பட கையாண்டு பெரிய துரோகங்களை தவிர்க்கும் நிறுவனமும், நாடும் சாமர்த்தியமாக முன்னேறுகிறது.


மகிழ்ச்சி, துக்கம், வேதனை என்பவை அன்றாட வாழ்வின் அங்கங்களாக இருப்பது போல, நம்மைச் சுற்றிலும் சதிகளும், நம்பிக்கை துரோகங்களும் இன்று வழக்கமாகிவிட்டன. அதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நாடகங்களும், படங்களும் நம் அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாக எடுக்கபடுகின்றன. நம்பிக்கை துரோகங்களால், மிகப்பெரிய சாம்ராஜ்யங்களும் சரிந்து மண்ணாகிய வரலாறு நிறைய படித்திருக்கிறோம். நீங்ளும், நானும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அதைத்தாண்டி, நாமும் அவ்வப்போது ஏமாற்றுகிறோம்.


குழந்தைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டுமென்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்து பெற்றோர் வெளியே அனுப்புகின்றனர். ஆனால், ஒருசில மாணவர்கள் பெற்றோரை ஏமாற்றி தவறான வழிகளில் சென்று சீரழிகின்றனர்; குழந்தைகளாக நீங்கள் உங்கள் பெற்றோரை ஏமாற்றியிருக்கலாம் அல்லது உங்கள் குழந்தைகள் உங்களை ஏமாற்றலாம்; யார் யாரை ஏமாற்றினாலும், இழப்பு அந்த குடும்பம் முழுமைக்கும்தான்;


தன் கனவனை முழுமையாக நம்பி மனைவியிருக்க, ஆங்காகங்கே எண்ணற்ற ஆண்கள் தவறுகளை செய்துவருகின்றனர். சில பெண்களும் ஏமாற்றத்தான் செய்கின்றனர். இந்த நம்பிக்கை துரோகங்கள் குடும்பத்தை சீர்குலைத்து, அடுத்த தலைமுறையை கேள்விக்குறியாக்கி விடுகிறது!


வியாபாரத்தில், கூட்டாளிகளை நம்பி வியாபார பொருப்புக்களை, பண மேலாண்மையை ஒப்படைக்கின்றனர். அந்த நம்பிக்கை காக்கப்படும் வியாபார கூட்டுகள் நீண்டகாலம் தொடர்ந்து எல்லோரும் வளர்கின்றனர். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட கூட்டுத்தொழில்கள், ஒருசிலரின் பேராசையினால் துரோகங்கள் நிகழ்ந்து சீக்கிரத்தில் முறிந்துவிடுகின்றன. கூட்டுத் தொழிலின் வெற்றிக்கு பிரதானம் அவர்களுக்குள்ளான பரஸ்பர நம்பிக்கையும், விட்டுக்கொடுத்தலுமேயாகும். அதில் துரோகங்கள் நிகழ்ந்தால், எப்படி முன்னேற முடியும்?


குடும்ப உறவுகளுக்குள்ளும், நட்புக்குள்ளும், வியாபாரத்திலும் ஏற்படும் துரோகங்கள்,


o உங்கள் உறவுகளை பாதித்து, மனநிம்மதியை குலைக்கலாம்;

o உங்கள் வளர்ச்சியை பாதித்து வெற்றியை இழக்கச் செய்யலாம்;

o உங்களின் நற்பெயரையும், நாணயத்தையும் சோதிக்கலாம்;

o உங்கள் சிந்தனைகளை திசை திருப்பி மன உளைச்சலை ஏற்படுத்தலாம்;


இந்த துரோகங்கள் நிறைய நடப்பதை கண்கூட பார்த்தபின்னும், நம்மை அதிலிருந்து காத்துக்கொள்ளாமல் இருந்தால், அதுநம் முட்டாள்தனம். பொதுவாக நமக்கு யார் பணம் கொடுத்தாலும், அதை அவர் முன்னிலையிலேயே எண்ணிப்பார்த்து வாங்குவது வழக்கம். அதே ஜாக்கிரதை உணர்வு, எல்லா விடயத்திலும் இருக்கவேண்டும். நீங்கள் பணத்தை எண்ணிப்பார்த்ததற்காக உங்கள் நண்பரோ, உறவினரோ கோபித்துக்கொள்ளப் போவதில்லை. அது வழக்கமாகிவிட்ட ஒன்று. அதுபோல, எங்கும், எதிலும் ஏமாற்றப்படாமல் இருக்க, போதுமான அளவு கவனத்துடன் செயல்பட்டால் எல்லோருக்கும் நல்லது.


ஏமாற்றத்தை தவிர்க்க, எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது சாத்தியமில்லை. நீங்கள் உங்களை கவனமாக காத்துக்கொள்ள, எங்கெல்லாம், எப்படியெல்லாம் துரோகங்களும், முதுகில் குத்தும் செயல்களும் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கின்றன என்பதை அறிந்து கவனமாக இருக்க சொல்கிறேன். சில பொதுவான ஏமாற்றுதல்களை இங்கு பட்டியலிடுவோம்;

  • நீங்கள் பணிபுரியும் இடத்தில், சக ஊழியரால் உங்கள் வளர்ச்சியைத் தடுக்க,ஏமாற்றப்படலாம் அல்லது உங்கள் உழைப்பு திருடப்படலாம்;

  • உங்களைப்பற்றி உங்களின் குடும்பத்தினரிடம் / நண்பர்களிடம் / சக ஊழியரிடம் அவதூறு சொல்லி, கோள்மூட்டி விட்டு, உறவுகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி குழப்பத்தை உங்கள் உடன் இருப்பவர்களே செய்யலாம்;

  • நீங்கள் படைத்த கதையோ அல்லது புதிய கண்டுபிடிப்போ, திருடப்பட்டு இன்னொருவர் படைத்ததாக பிரசுரிக்கப்படலாம்;

  • அரசியலில், பொது அமைப்புக்களில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்கள், பதவிகளை உடன் இருப்பவர்கள் திட்டமிட்டு, வேண்டுமென்றே தவறாக வழிநடத்தி கிடைக்காமல் செய்யலாம்;

  • விளையாட்டில், அணியின் சக உறுப்பினர், நீங்கள் வெற்றியாளராகிவிடாமல் இருக்க, தேர்வாளர்களை, போட்டியாளர்களை தூண்டிவிட்டு உங்களை வெளியேற்றலாம்;

  • வியாபாரத்தில், போட்டியாளர்கள் உங்களின் ஊழியர்களை விலைக்கு வாங்கி, உங்களின் நுணுக்கங்களை திருடலாம்;

  • ஊடகத்தில், உங்களைச் சார்ந்தவர்களே பல போலியான கணக்குகளை துவக்கி, உங்களைப் பற்றி அவதூறுகளை பரப்பலாம்;

  • உங்களுக்கே தெரியாமல், உங்கள் நடத்தையில், நாணயத்தில் சந்தேகம் வரும்படியான செயல்களில் உங்களை சிக்கவைக்கலாம்;

இவையனைத்தும் சிறு உதாரணங்களே. உங்கள் வாழ்க்கைப் பயனத்தில், எண்ணற்ற மனிதர்களோடு பழகும் போது, ஒவ்வொருவரும் அவர்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, உங்களை நம்பவைத்து ஏமாற்றக்கூடும். ஏமாற்றுவது குற்றம் என்றாலும் ஏமாறுவதும் குற்றம் தான்; அதிலும் இரண்டாவது முறை அதே நபரிடமோ, அதே விடயத்திலோ ஏமாறுவது மாபெரும் முட்டாள்தனமும், குற்றமுமாகும்;


நீங்கள் ஏமாற்றப்பட்டால்

ஏமாற்றத்தின் இழப்பு உங்களுக்குத்தான்;

ஏமாற்றியவன் ஆதாயத்தோடு ஓடியிருப்பான்;

ஏமாற்றியவனை குறைகூறிக்கொண்டிருப்பதற்கு பதிலாய்

ஏமாறாமல் இருக்க என்ன வழியென்று பாருங்கள்!


சரித்திரத்தில் பல சாம்ராஜ்யங்களின் சரிவுகள்

துரோகிகளால் தான் துவங்கியது!


பொன்னுக்கும் பொருளுக்கும் புகழுக்கும் ஆசையிருக்கும்வரை

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும்வரை

நம்பிக்கை துரோகங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!


வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து

ஏமாறுவதற்கு வாய்ப்பளிக்காமல்

போதுமான விழிப்புணர்வுடன் இருந்துவிடுங்கள்!!



- [ம.சு.கு 07.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page