“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-143
வளர்ச்சியில்லாவிட்டால் வீழ்ச்சிதான்!
கணினி மென்பொருள் தொழில்நுட்பமும், கணினியின் செயல்பாட்டுத் திறன் மேம்பாடும் அனுதினமும் அசுரவேகத்தில் மாற்றம் கண்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பல மென்பொருட்கள் இன்றில்லை. அவற்றை கற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு இன்று வேலைவாயப்பில்லை. கற்றறிந்த ஒரு மென்பொருளை மட்டுமே நம்பி காலம் கடத்த முயன்றால் 2-3 வருடங்களில் நீங்கள் தேவையற்றவராகிவிடுவீர்கள். அனுதினமும் ஏற்படும் புதிய மாற்றங்களை, புதிய வரவுகளை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் தளம் அடுத்த ஆண்டு இருக்குமா என்பது சந்தேகம். புதிதாய் வரும் கணினி இயக்கத்தளங்களுக்கு, உங்கள் மென்பொருள்கள் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே அவற்றை அடுத்த ஆண்டு இயக்கவே முடியும். புதிதாய் வரும் தளங்கள், கணினி மற்றும் கைபேசி பாகங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொண்டே இருந்தால் மட்டுமே இன்று சந்தையில் தாக்குபிடிக்க முடியும்;
உங்கள் ஊரில், நீங்கள் சிறுவர்களாக இருந்துபோது உங்கள் ஆடைகளை தைத்துக்கொடுத்த தையல்காரர் இன்றும் அங்கு இருப்பார். ஆனால் இன்றும் நீங்கள் அவரிடம் தான் உங்கள் ஆடைகளை தைப்பதற்கு கொடுக்கிறீர்களா? “இல்லை” என்றால், என்ன காரணம்? உங்கள் தந்தையார் வீடுகட்டிய போது, கட்டுமானம் குறித்த முடிவுகளை கொத்தானாருடன் பேசி முடிவு செய்தார். இன்று அந்த கொத்தனார் இருக்கிறார். ஆனால் உங்கள் புதிய வீட்டை அவரிடமே ஆலோசித்து கட்டுகிறீர்களா?
இன்றைய கணினி மயமான வளைதள உலகில், எல்லாமே விரல் நுணியில் தயாராக இருக்கிறது. வீட்டில் சமையல் செய்யவில்லை என்றால், கைபேசி செயலியில் பதிவிட்டு எல்லாவற்றையும் 10-20 நிமிடங்களில் வகைவகையான உணவுகளை வீட்டிற்கே வரவழைத்து விடலாம். நீங்கள் கணினி துறையில் வேலைபுரிபவராக இருந்தால், புதிதாக வரும் எல்லா மென்பொருட்கள், அதன் பயன்பாடுகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும். மென்பொருள் தொழில்நுட்பத்திலும் புதிய முறைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய தினம், “சேட்.ஜி.பி.டி” என்ற செயற்கை நுண்ணறிவு தளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இன்னும் நிறைய செயற்கை நுண்ணறிவு தளங்கள் போட்டிக்கு வர தயாராக இருக்கின்றன. இவை மக்கள் உபயோகித்து பழகிவிட்டால், எண்ணற்ற செயல்களுக்கு மனித அறிவின் அவசியம் இருக்காது. செயற்கை நுண்ணறிவு செல்கின்ற வேகத்தில் நிறைய வேலைகள் இல்லாமல் போகும் – ஒட்டுனர், நடத்துனர், ஆசிரியர், வீட்டுவேலையாள், விவசாயி, மருத்துவர், கணக்காளர், உதவியாளர்,...என்று எண்ணற்ற பணிகளுக்கு மனிதர்களின் அவசியம் இருக்காது. இவற்றில் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்கள் வேலையிழப்பை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?
பழைய தையல்காரர், நவீனகால ஆடைவடிவமைப்பு முறைகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாததால் நீங்கள் அவரிடம் செல்வதைவிட்டு புதிய தையல்காரரிடம் செல்கிறீர்கள். புதிய கட்டிட வடிவமைப்புக்களுக்கு பழைய கொத்தனார் இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ளாததால், நீங்கள் புதிய கட்டிட வடிவமைப்பாளர்களிடம், கட்டுமான பொறியாளர்களிடமும், வல்லுனர்களிடம் செல்கிறீர்கள். பழைய தையல்காரர், பழைய கொத்தனார், பழைய முடிதிருத்துபவர், பழைய சமையல்காரர் என்று மாற்றம் காணாத எல்லா நபர்களையும் நீங்கள் ஒதுக்குவது போல, உங்கள் துறையில் புதிய மேம்படுத்தல்களை நீங்கள் செய்யத்தவறினால், இந்த சந்தை உங்களையும் சீக்கிரத்தில் ஒதுக்கிவிடாதா?
உங்களை மேம்படுத்தி வளர்ச்சியை நோக்கி முன்னேறத்தவறினால்
உங்கள் போட்டியாளர்கள் உங்களை புறந்தள்ளி முன்னேறிவிடுவார்கள்;
காலமாற்றத்தில் நீங்கள் பயனற்றவர் ஆகிவிடுவீர்கள்;
உங்கள் தன்னம்பிக்கை தளர்ந்து வாழ்க்கை கேள்விக்கிறியாகலாம்;
உங்கள் உற்பத்தித்திறன் மேம்படாமல், பழைய பாதுகாப்பற்ற முறைகளில் இன்னும் செய்வதால், உற்பத்தி செலவும் கூடுதலாகவே இருக்கும். சந்தையில் உங்களால் புதிய போட்டிகளை சமாளிக்க முடியாது;
உங்களை நீங்கள் தொடர்ந்து மேப்படுத்திக் கொண்டால், உங்கள் அறிவு மேம்பாடு, உற்பத்தி திறன் அதிகரிப்பு, கற்பனை வள மேம்பாடு, வேலையில் பதிவி உயர்வென்று எண்ணற்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்களை, முன்னேற்பங்களை நீங்கள் சந்திக்கலாம்;
அதேசமயம், மேம்படுத்திக்கொள்கிறேன், வளர்ச்சிக்காக போராடுகிறேன் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக உங்களை வருத்தினால்
மனஅழுத்தமும், மனஉளைச்சலும் அதிகரிக்கும்;
ஆரோக்கியத்தின் மீதான கவனம் குறைந்து உடல்பருமன், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற எண்ணற் வாழ்வியல் நோய்களால் கஷ்டப்பட நேரிடலாம்;
எல்லா மாற்றங்களுமே சந்தையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியாக சொல்ல முடியாது. நீங்கள் எதிர்பார்த்து கற்கின்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படாமல் வேறுபட்டவைகள் சந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்களின் முயற்சியும், நேரமும் வீணாகியிருக்கும்;
மாற்றம் ஒன்றே நிலையானதென்பது உலகநியதி.
மாற்றத்தின் நியதியை உணர்ந்து
மாற்றத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொண்டால்
மாற்றத்தை ஏற்று நீங்கள் முன்னேறலாம்;
மாற்றத்தை உணராமல்
பழையன பேசிக்கொண்டிருந்தால,
புதியவைகளும், புதியவர்களும் – உங்களை
தயவுதாட்சன்யமின்றி ஏறிமிதித்துச் சென்றிடுவார்கள்;
மாற்றத்திற்கு நீங்கள் தயாராகாமல்
சமுதாயத்தையும், இளைய தலைமுறையினரையும்
சாடுவதில் பயனொன்றுமில்லை;
புதியவற்றை கற்று நீங்கள் வளரவேண்டும்;
கற்கத் தவறினால் வீழ்ச்சி தானாய் நிகழும்;
வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமிடைய
நீண்ட நாட்கள் பயணிக்க முடியாது;
புதியவற்றை தொடர்ந்து கற்போம்;
புதியவற்றை படைப்போம்;
- [ம.சு.கு 01.03.2023]
Comments