top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-135 - மூடப்பழக்கங்களை தவிர்ப்பது முக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-135

மூடப்பழக்கங்களை தவிர்ப்பது முக்கியம்!


  • புகழ்பெற்ற அடிபந்தாட்ட (பேஸ்பால்) விளையாட்டு வீரரொருவர், தான் விளையாட ஆரம்பிக்கும் முன் கோழி இறைச்சியை கட்டாயம் உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தார். அது அவருக்கு அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பினார். எத்தனையோ அறிவுரைகள், விஞ்ஞான சான்றுகளைச் சொன்னாலும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு முறை ஆட்டிறைச்சி உண்டு களம்கண்டபோது அவரால் சோபிக்க முடியாமல் போகவே அவரின் இந்த குருட்டு நம்பிக்கை மேலும் ஆளமானது. விளையாடத் துவங்கும்முன் கோழி இறைச்சி சாப்பிட்டால் விளையாட்டில் அதிர்ஷ்டம்வருமென்று நீங்கள் நம்பத் தயாரா?

  • “13” என்ற எண், உலகம் முழுவதும் பரவலாக துரதிஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. பல கட்டிடங்களில் 13-வது தளம் இருப்பதில்லை. சில விடுதிகளில் 13-ஆம் எண் அறை இருப்பதில்லை. ஐரோப்பிய நாடொன்று, 2013 ஆண்டு விற்கப்பட்ட வாகனங்களுக்கு, வாகன எண்ணில் வழக்கமான ஆண்டு குறியீடு 13-க்கு பதிலாக “131” & “132” என்று குறிப்பிட்டது. ஒரு அரசாங்கமே மக்களின் இந்த அதீத மூடபழக்கத்திற்கு செவி சாய்த்து முறைமைகளை மாற்றியது. ஏன் இப்படி?

விளையாடும் விளையாட்டுகளுக்கு ஏற்ப, தேவையான சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கோழி இறைச்சியில் அதிகம் புரதம் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த புரதத்திற்கும், அடிபந்தாட்டத்திற்குமான தொடர்பு இன்று வரையிலும் யாருக்கும் புரியவில்லை. நடைமுறையில் இன்றும் சில வீரர்கள் புகழ்பெற்ற வீரர் “வேட் போக்ஸ்”-ன் மூடப்பழக்கமான விளையாடும் முன் கோழி இறைச்சி எடுக்கும் பழக்கத்தை நம்பி தொடர்வது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!


அதேபோல இன்றுவரையிலும் எண் “13” துரதிஷ்டம் ஏற்படுத்தும் என்பதற்கு எந்த பெரிய அறிவியல் சான்றும் இல்லை. சொல்லப்படும் எல்லா உதாரணங்களும் சாதாரணமானவையும், ஏதேச்சையானவையுமே. அவற்றை விட மிகப்பெரிய விபத்துக்களும், அபாயங்களும் வேறு தேதிகளில் நடந்துள்ளன. எவ்வளவுதான் “13” ஆம் எண்ணுக்கும் துரதிஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவியல் பூர்வமாக சொன்னாலும், இன்னும் ஏனோ மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை (13-ஆம் எண் குறித்த அச்சம் நம் தேசத்தில் இல்லாதபோதிலும், வாகன எண்களில் கூட்டு எண் 8 வந்தால் துரதிஷ்டமென்ற மூடப்பழக்கம் பரவலாக இருக்கிறது)


திடீரென்று ஏன் மூடப்பழக்கம் பற்றி தொடரில் எழுதுகிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். நம் அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற மூடப்பழக்கங்கள் நம் செயல்பாடுகளை பாதிப்பதை நாம் உணர வேண்டுமென்பதற்கே இந்த தலைப்பு.


வெளியே கிளம்பும்போது எதிரில் இவரிவர்கள் வந்தால் துரதிஷ்டம், இந்த இராசி/நட்சத்திரக்காரர்களுக்கு இன்று நாள் சரியில்லை, இந்த நிறமோதிரம் போட்டால் நன்மை, இந்த பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும், இந்த நிறசட்டை / இந்த பேனா தனக்கு இராசியானது, இவர் அதிர்ஷ்டக்காரர் / துரதிஷ்டக்காரர், இது நல்ல நேரம் / இராகு காலம் / எமகண்ட நேரம், பூனை குறுக்கே போனால் துரதிஷ்டம், இங்கு பல்லி விழுந்தால் துரதிஷ்டம் என்று எத்தனையெத்தனை மூடப்பழக்கங்கள் நம் மக்களின் எண்ணங்களில் ஊறித்திளைத்திருக்கிறது. இன்று கிழக்கே சூலம், அதனால் மேற்குப்பக்கமாக போய் திரும்புகிறேன் என்று 5 கி.மீ வாகனத்தை கூடுதலாக ஓட்டினால் யாருக்கு நஷ்டமென்று நீங்களே சிந்தியுங்கள்.


இவ்வாறான மூடப்பழக்கங்களில் எதை நீங்கள் நம்புகிறீர்கள் என்று உங்களை நீங்களே சுய ஆய்வு செய்து பாருங்கள். அந்த பழக்கங்களால் ஏற்பட்ட தாமதங்களும், பின்வாங்கலும், நஷ்டங்களும் என்னவென்று யோசியுங்கள். வெற்றியை நோக்கிய பயனத்தினிடையே, நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஊறிவிட்ட எண்ணற்ற மூடப்பழக்கங்கள் என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதென்றால்;

  • மூடப்பழக்கம் தவறான புரிதலை ஏற்படுத்தி, பயனத்தின் கண்ணோட்டத்தை மாற்றிவிடுகிறது;

  • தேவையற்ற பயத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்திவிடுகிறது;

  • மூடப்பழக்கங்களினால் பகுத்தறியும் திறனும், சுயசிந்தனையும் பாதிப்படைகிறது;

  • சிலசமயங்களில் சுயகட்டுப்பாட்டையும், பொறுப்புணர்ச்சியையும் இழக்கச் செய்கிறது;

  • அதிர்ஷ்டத்தை நம்பி, உழைப்பு குறைவதால், வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பாகிறது;

மூடப்பழக்கங்களால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. எத்தனை பெரியார் வந்தாலும், சிலவற்றை நீங்களாக உணராமல் மாற்றவே முடியாது. இந்த மூடப்பழக்கங்களைத் தாண்டி வெற்றிபெற ஆசையிருந்தால்

  • எல்லாவற்றிற்குமான காரண-காரியங்களை சிந்தியுங்கள்;

  • அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் தேடுங்கள்;

உங்கள் எண்ணத்தில் ஊறிய மூடப்பழக்கத்திலிருந்து உடனே வெளிவருவது சற்று கடினம். ஆனால் தொடர்ந்து பயிற்சியும், முயற்சியும் செய்தால் எந்தவொரு தவறான மூடப்பழக்கத்தையும் வெற்றிகொள்ளலாம். அதையும் தாண்டி பாதிப்பு இருந்தால், சீக்கிரத்தில் ஒரு நல்ல மனநல ஆலோசகரை அனுகி ஆலோசனை பெறுங்கள்.


சமுதாயத்தில் ஊறிய மூடப்பழக்கங்களுக்கு எதிராக கற்றறிந்த சமுதாயம் சவால்விட்டு சாதித்தால், படிப்படியாய் எல்லாம் மாறும். யாதர்த்தத்தில், இந்த மாற்றம் ஏற்பட சற்று நீண்டகாலம் தேவைப்படலாம். உங்களில் துவங்கும் மாற்றம், படிப்படியாய் உங்கள் சமுதாயத்தில் மலர, பகுத்திறவை பிரதானப்படுத்துங்கள். அதற்காக இறைவன் இருக்கிறான் / இல்லை என்ற தேவையற்ற விவாதங்களுக்கள் புகுந்து நேரத்தை வீணாக்காதீர்கள். மூடப்பழக்கத்திற்கும், சில நம்பிக்கைகளுக்குமான வேறுபாட்டை உணர்ந்து, வாழ்வின் வெற்றிக்கும், அமைதிக்கும், நிம்மதிக்கும் தேவையானவற்றை பகுத்தறிந்து முன்னேறுங்கள்.


சுயசிந்தனையும், பகுத்தறிவும்

வாழ்வின் அன்றாட பழக்கமானால்

மூடப்பழக்கங்கள் ஏதுமின்றி

வாழ்வின் பயனம் இனிமையாகும்;


சிலவற்றை / சிலநபர்களை மாற்ற

நிறைய நேரம் எடுக்கலாம்;

சில பழக்கங்களை மாற்ற

நிறைய பயிற்சி தேவைப்படலாம்;

வெற்றிக்கு மாற்றம் தேவையெனில்

நேரத்தைப் பற்றி கவலைப்படாமல்

பயிற்சியை தொடருங்கள்;


பயிற்சி எனும் முயற்சி

கட்டாயம் சீக்கிரத்தில் பலனளிக்கும்;


- [ம.சு.கு 21.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page