top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-112 - அளந்தால்தானே முன்னேற்றம் தெரியும்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-112

அளந்தால்தானே முன்னேற்றம் தெரியும்!


  • தேசிய அளவில் நடக்கவிருக்கும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வெல்ல வேண்டுமென்பது உங்கள் குறிக்கோள். அதற்கு நிறைய பயிற்சி செய்ய வேண்டுமென்று நண்பர்கள் சொன்னதை உணர்ந்து ஓராண்டுக்கு முன்னரே பயிற்சியை தொடங்கிவிட்டீர்கள். தினமும் 2-3 மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்கிறீர்கள். போதுமானளவு உணவு விடயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறீர்கள். உங்கள் வெற்றிக்கு அன்றாட பயிற்சிமட்டும் போதுமா? இப்போது உங்களின் வேகம் எவ்வளவு? இன்னும் எவ்வளவு அதிகரிக்க வேண்டுமென்று எப்படி தெரியும் உங்களுக்கு?

  • பள்ளியில் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. எல்லா மாணவர்களும் வகுப்புக்கு சரியாக வருகிறார்கள். அமைதியாக பாடம் நடத்துவதை கவனிக்கிறார்கள். மாணவர்கள் எல்லோரும் வருகிறார்கள், கவனிக்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் நடத்தப்பட்ட எல்லா பாடத்தையும் நன்றாக கற்றுவிட்டார்கள் என்று கருதிவிட முடியுமா? எல்லோருடைய கற்றல் திறனும் ஒரேமாதிரி இருக்குமா? ஒருவேளை ஒரேமாதிரி இருக்காது என்றால், அவர்களின் கற்றல் திறனில் உள்ள வேறுபாட்டை எப்படி ஆசிரியர் அறிவது?

விளையாட்டுப் போட்டிகள் எதுவானாலும், அதில் வெற்றியடைய ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கை யார், எவ்வளவு குறுகிய நேரத்தில் அடைகிறார்கள் என்பதைப் பொருத்து வெற்றி தீர்மாணிக்கப்படும். முதலாவதாக அந்த இலக்கு அளக்கப்படக் கூடியதாக இருக்கும். அடுத்தது அதை அடையக்கூடிய நேரமும் அளவிடக்கூடியதாக இருக்கவேண்டும். இரண்டும் துல்லியமாக அளப்பதற்கு சாத்தியமிருந்தால் தான், போட்டியில் வெற்றி தோல்விகளை சரியாக கணக்கிடமுடியும்.


நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற விரும்பினால், இதுவரையில் முதல் பரிசு வென்றவர்கள் எத்தனை தூரத்தை, எவ்வளவு மணித்துளிகளுக்குள் கடந்திருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும். அந்த சாதனைகளை முறியடிக்க உங்களுக்கான இலக்கு என்ன என்பதை முதலில் நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி உங்களின் அன்றாட பயிற்சி இருக்க வேண்டும். யாரும் 10 நொடிகளுக்குள் ஓடிக்கடந்திராத 100 மீட்டர் ஒட்டப்பந்தய தூரத்தை தான் கடந்து சரித்திரம் படைப்பேன் என்று இலக்கை நிர்ணயித்து சாதித்த உசேன் போல்ட், இன்றும் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


நீங்கள் அன்றாடம் பயிற்சி எடுப்பது மட்டுமே வெற்றிக்கு போதுமானதாகிவிடாது. அந்த பயிற்சிக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கு தினம் தினம் அளக்கப்பட்டு, உங்களின் முன்னேற்றம் எவ்வளவு என்பது அவ்வப்போது தெரிந்தால் தான், நீங்கள் நினைத்த வெற்றியை நோக்கி முன்னேற முடியும். எங்கிருக்கிறீர்கள் என்ற அளவு தெரியாமல் பயிற்சித்துக் கொண்டிருந்தால், வெற்றியை நோக்கிய உங்களின் பயனம் திக்கற்றதாகக்கூடும். அன்றாட பயிற்சியையும், உங்களின் திறன் வெளிப்பாட்டையும் தொடர்ந்து அளந்து கொண்டே இருங்கள்.


பள்ளியில் மாணவர்கள் எல்லோரும் ஒரே பாடத்தை, ஒரே ஆசிரியரிடம் கற்றாலும், அவர்களின் கற்றல் திறனில் எண்ணற்ற வேறுபாடுகள் இருப்பது இயல்பு. அந்த வேறுபாடுகளை அறிந்து கொள்ள அவ்வப்போது சின்னச்சின்ன சோதனைத்தேர்வுகளை ஆசிரியர்கள் நடத்துவார்கள். எவ்வளவு கற்பித்தாலும், கற்றல் என்பது மாணவரின் தனிமனித ஆற்றல் சார்ந்த விடயம். யாருக்கு அதிக கவனம் செலுத்தி சொல்லிக்கொடுக்க வேண்டுமென்பதை ஆசிரியர் அறிய, இந்த சோதனைத் தேர்வுகள் என்ற அளவீட்டு முறை வழிவகுக்கும். தேர்வு, மதிப்பெண் என்ற அளவீட்டு முறைகள் இல்லாவிட்டால், மாணவர்களின் ஆற்றல், கற்றல் திறன், அவர்களின் ஈடுபாடு போன்றவற்றை எப்படி ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் அறியமுடியும்.


அளவீடுகள் என்பது கல்வி, விளையாட்டு என்பதைத் தாண்டி, இன்று நிறுவனங்களின் வளர்ச்சி, மக்களின் தற்போதைய நிலைமை (வறுமைக்கோட்டுக்கு கீழ் / மேல்), தேசத்தின் வளர்ச்சி போன்ற எண்ணற்ற பெருமப் பொருளியல் விடயங்களிலும் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அரசாங்கங்கள் இந்த புள்ளிவிவரங்களை சேகரிக்க தனியாக புள்ளியியல் துறையையே ஏற்படுத்தி தொடர்ந்து கண்கானித்து வருகிறது. இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் என்ன? புதிதாய் செயல்படுத்திய திட்டத்தின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும், முன்னேற்றங்களும் என்ன என்பதை, இந்த அளவீடுகள் ஆள்பவர்களுக்கு தெளிவு படுத்துகிறது.


எந்தவொரு நிறுவனம், தங்களின் மாதாந்திர இலாப-நட்டக் கணக்கையும், பண வரவு-செலவு கணக்கையும் சரியாக பார்க்காமல் இருக்கிறதோ, அந்த நிறுவனம் சீக்கிரத்தில் சரிந்துவிடக்கூடும். வியாபாரத்தில் 10 ரூபாய்க்கு வாங்கியதை 11 ரூபாய்க்கு விற்றேன், அதனால் நஷ்டமில்லை என்று இருந்துவிட முடியாது. வாங்கிய விலையென்ன? வாடகை என்ன? இதர செலவுகள் என்ன? வட்டிச் செலவு என்ன? விற்றதற்கான பணம் எல்லாம் சரியாக வருகிறதா? என்று எண்ணற்ற விடயங்களை அவ்வப்போது அளந்து தீர்மாணிக்காமல் இருந்தால், வியாபாரத்தில் வரும் சிறிய இலாபங்கள் எல்லாம் நமக்கு கண்ணுக்குத் தெரியாத சின்னச்சின்ன செலவீணங்களில் கரைந்து போகும்.


கல்வி, விளையாட்டு, வியாபாரம், மருத்துவம்

துறை எதுவாகவும் இருக்கலாம்

இப்போது எங்கு இருக்கிறோம்

இனி எதை அடைய வேண்டும்

எவ்வளவு நேரத்தில் அடைய வேண்டும்

என்ற அளவீடுகள் இல்லாமல்

நாம் சாதிக்க ஒன்றுமில்லை!!


எல்லாவற்றிற்கும் அறிவியல் அளவீடுகளை வகுத்து வருகிறது;

பூமியின் அதிர்விற்கும், மனிதனின் அறிவிற்கும்

பிரசவ வலிக்கும், ஒளியின் வேகத்திற்கும்

அளவீடுகள் வகுக்கப்பட்டு விட்டன;


அளவீடுகளை அறிந்து

உங்களின் பயனத்தை அவ்வப்போது அளந்திடுங்கள்;


இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது சரியாக தெரிந்தால்

போகவேண்டிய இடத்திற்கு - இனியென்ன

செய்யவேண்டுமென்பதை சரியாக திட்டமிட முடியும்;

அளவீடுகள் உங்கள் முன்னேற்றத்தின் வழிகாட்டி;


- [ம.சு.கு 29.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page