top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-111 – நிறைய ஜீரணிக்க கற்றுக்கொள்ளுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-111

நிறைய ஜீரணிக்க கற்றுக்கொள்ளுங்கள்!


  • குழந்தைகள் அடிக்கடி பெற்றோரிடமோ, தாத்தா-பாட்டியிடமோ வந்து ஏதேனுமொரு குறை சொல்லுவார்கள். யாராவதுடன் சண்டை போட்டுவிட்டு வந்து, அவன் அடித்துவிட்டான் என்று குறைசொல்லுவார்கள். அப்போதைய சூழ்நிலை, குழந்தை செய்த செயலின் தாக்கத்தைப் பொருத்து, பெரியவர்களும் சற்று தட்டிக்கேட்கக்கூடும். இந்த விடயத்தில் பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகள் தவறே செய்திருந்தாலும், ஒத்துக்கொள்ளாமல் அடுத்தவர் செய்தது தவறுன்று வாதிடுவார்கள். ஒருசிலர் குழந்தைகளின் குறைகளை பெரிதுபடுத்தாமல், அப்போதைக்கு குழந்தையை சமாதானப்படுத்த ஏதாவது தட்டிக்கேட்பது போல பாவனை செய்து குழந்தையை அடுத்தசெயலுக்கு திசைதிருப்பி விடுவார்கள். இந்த குற்றங்குறை கூறுவது குழந்தைகள் மட்டுமல்லாது, வீட்டில் உடன்பிறந்தவர்களுக்கு இடையிலும், மாமியார்-மருமகளுக்கு இடையிலும், சில உறவுகளுக்கு இடையிலும் அவ்வப்போது வரும். இப்படி வரும் எல்லா குறைகளையும் தீர்க்க வேண்டுமா?

  • அலுவலகத்தில் சில சமயம் நீங்கள் சரியாக வேலை செய்திருந்தாலும், உங்கள் குழுவினரின் சிலதவறுகளால் உங்களுக்கு சற்று திட்டுவிழுகலாம். அதற்காக உங்களால் பொங்கி எழ முடியுமா? நீங்கள் ஒரு நிறுவன மேலாளராக இருக்கும்போது, தன் சகஊழியரைப்பற்றி சிலர் குறை சொல்லக்கூடும். சொல்லப்பட்ட குறைகள் சரியாக இருக்கலாம். சில சமயம் பொறாமையினால் சொல்லப்படுவாதகவும் இருக்கலாம். உடனுக்குடன் அடுத்தவரை கூப்பிட்டு விசாரித்தால் விளைவுகள் வேறுவிதமாகலாம். அதற்காக எதையும் செய்யாமலும் இருக்கமுடியாது. குறைகூறியவரை அப்போதைக்கு சமாதானம் செய்ய ஏதாவது ஆறுதல் சொல்லவேண்டும். ஒரு மேலாளராக நீங்கள் நிறைய கேட்கக்கூடும். எல்லாவற்றுக்கும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது தாமதிக்க வேண்டுமா? அல்லது தவிர்த்துவிட வேண்டுமா? எது சரி?

குழந்தைகள் குறைகூறுவது இயல்பு. எல்லாவற்றிற்கும் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றில்லை. எல்லா பின்விளைவுகளையும் சற்று யோசித்து பின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல குடும்ப உறவுகளுக்கு இடையில் சொல்லப்படும் எல்லா குற்றங்குறைகளையும் முதலில் பொறுமையாக கேட்கவேண்டும். சொல்லிமுடிப்பதற்கு முன் அனுமானம் செய்து முடிவெடுக்கும் ஒரு சில அவசரகுடுக்கைகளும் இருப்பார்கள். சில குறைகளுக்கு எந்தவொரு நடவடிக்கையும் தேவைப்படாது. அவர்களின் ஆதங்கத்தை, கஷ்டத்தை காதுகொடுத்துக் கேட்டால் போதும். அவர்கள் மன ஆறுதல் அடைந்து விடுவார்கள். அப்படி சொல்லப்படும் விடயங்கள் பலவற்றை ஜீரணித்து, தேவைப்படும் முக்கியமானவற்றிற்கு மட்டும் நடவடிக்கை எடுத்தால், உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக போகும்.


அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வந்து போவார்கள். நிறைய நிகழ்வுகள் தினம்தினம் நடந்தேறும். சிலவற்றில் குற்றங்குறைகள் நமக்கே தென்படும். எல்லாவற்றையும் குறைகூறிக்கொண்டிருந்தால், உங்களை குறைசொல்லி என்ற முத்திரை குத்திவிடுவார்கள். சில நிறைகுறைகளை கண்டும்காணாமல் ஜீரணித்துக் கொண்டு போக வேண்டும். மற்றவர்கள் வந்து குறைசொன்னாலும், சரிசரியென்று பொறுமையாக கேட்டுக் கொண்டு அவர்களை சமாதானம் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் நடவடிக்கை எடுக்க முற்பட்டால், தேவையில்லாத வேறு சலசலப்புக்கள் உருவாகிவிடும்.


உங்கள் வாழ்க்கையில் பொறுப்புக்கள் அதிகமாக அதிகமாக, நீங்கள் ஜீரணித்துக் கொள்ள வேண்டிய விடயங்களும் அதிகமாகும். அதேபோல, அலுவலகத்தில் நீங்கள் பதவி உயர்வு பெற்று வளர்ச்சியடையும்போது, நிறைய விடயங்கள் காதுகளுக்கு வந்தாலும், உடனடியாக எதிர்வினையாற்றாமல், பொறுமையாக சிந்தித்து விளைவுகளை யூகித்து சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுப்பது உங்கள் சாமர்த்தியம்.


அதேபோல சமுதாயத்தில், எல்லோருமே அறிவுப்பூர்வமாக நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கோவிலில் இறைவனை தரிசிக்க வரிசையில் நீங்கள் நின்றிருக்கும் போது, ஏதாவதொரு பெரியமனிதர் சிபாரிசில், சிலர் உங்களை கடந்து முன்செல்வர். நீங்கள் பொறுத்தாக வேண்டிய சூழ்நிலை. சிலசமயம் வேண்டுமென்றே சில அறிவற்றவர்கள் அந்த வரிசைக்கிடைய புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்காக அந்த குண்டர்களுடன் நீங்கள் மல்லுகட்ட முடியாது. சில அநியாயங்களை ஜீரணித்துக் கொண்டு போக வேண்டியதுதான். அநியாயங்களை பொறுக்க மாட்டேன் என்று பொங்கி எழுந்தால், உங்கள் நேரமும்,ஆற்றலும் தான் வீணாகும். சில மனிதர்களை உங்களால் திருத்த முடியாது. சில நிகழ்வுகளை உங்களால் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது. அவற்றை ஜீரணித்துக் கொண்டு முன்செல்வதுதான் புத்திசாலித்தனம்.


எங்கு பொங்கியெழ வேண்டும்

எதை ஜீரணிக்க வேண்டுமென்று

வாழ்க்கையில் கற்பதுதான்

உங்களின் அனுபவ அறிவாகும்;


நட்பு, உறவு, சகஊழியர், சமுதாயம்

வீடு, நிறுவனம், அரசாங்கம் – என்று

களமும், மனிதர்களும் யாராகவும் இருக்கட்டும்

எந்த செயலுக்கு, எந்த மனிதருக்கு

எப்படி எதிர்வினையாற்ற வேண்டுமென்று

சிந்தித்து செயல்பட்டால்

மனித உறவுகள் அமைதியாகச் செல்வதோடு

உங்கள் வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்;


- [ம.சு.கு 28.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page