top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-107 – அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-107

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்!


  • எனக்குத் தெரிந்த ஒருவர், சிறுதொழில் துவங்க அரசாங்க சிறுதொழில் வளர்ச்சி மையத்தில் பதிவு செய்து, நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்குத் தெரிந்த வண்ணம் திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பித்தார். அதில் பல குறைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டப்படும் குறைகளை நிவர்த்தி செய்து சமர்ப்பித்தார். அடுத்தது என்ன? அனுமதி கடிதம் எப்போது கிடைக்கும்? நிதி உதவி எப்போது கிடைக்கும்? என்று எதுவுமே தெரியாமல் நடையாய் நடந்தார். மாதங்கள் பல கடந்து வருடங்களாகின. ஆனால் அவரது திட்டஅறிக்கைக்கு ஒளி கிடைத்த பாடில்லை. அரசாங்கத்தை நம்பி நீண்ட பொழுதை வீணடித்துவிட்டு, இறுதியில் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற துவங்கினார். தன் சொற்ப ஊதியத்தில் சிறிதுசிறிதாய் சேர்த்து அந்த சிறுதொழிலை வீட்டளவில் இப்போது தொடங்கியுள்ளார்!

  • விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை அரசாங்கத்தின் வரிச்சலுகைகளுக்காகவும், மானியங்களுக்காகவும், அரசின் கொள்முதலுக்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்திற்காகவும், இலவச மின்சாரத்திற்காகவும், கடன் தள்ளுபடிக்காகவும் தொடர்ந்து எண்ணற்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆள்பவர்களும் ஒட்டுக்காக, சாத்தியமே இல்லாத எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அவற்றில் எத்துனை நிறைவேற்றப்படுகின்றன? எனக்குத் தெரிந்து அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாய் போராடுகிறார்கள். அரசாங்கம் அதை செயல்படுத்தாது என்று தெரிந்தும், பல தொழிற்சங்க தலைவர்கள் தங்களின் அரசியல் பிழைப்பிற்கு இன்னும் அதையே அரைத்துக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் பணி, தரமான இலவச கல்வி, இலவச மருத்துவ வசதியை ஏற்படுத்தி, மக்களின் பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். இந்த அத்தியாவசியங்களைத் தாண்டி, அரசாங்கம் உங்களுக்கு வேலை வாய்ப்பும், உதவித்தொகையும், கடனும் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? 125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பாரத தேசத்தில், அரசாங்கத்தால் எல்லோருக்கும் தொழில் துவங்க நிதி உதவி அளிக்க முடியுமா? அப்படியே அளிப்பதனாலும், எத்தனை இடைத்தரகர்களும், எத்தனை ஏமாற்றுப் பேர்வழிகளும் அவற்றை சுருட்டி விடுகின்றனர்? இவை அனைத்தையும் தாண்டி, நீங்கள் அரசாங்கத்திடம் கடனுதவியும், மானியமும் கிடைத்து வியாபாரத்தை துவக்கி வெற்றி காண்பது சாத்தியமா?


விவசாயம் ஒரு தொழில். கைவினைப் பொருட்கள் செய்வது ஒரு தொழில். பொருட்களை தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதும் ஒரு தொழில். அந்தந்த தொழிலை எப்படி இலாபகரமாக செய்வது? எப்படி உற்பத்தியை பெருக்குவது? எப்படி சிறப்பாக சந்தைப்படுத்துவது? என்று யோசித்து சரிவர செய்தால் இலாபம் ஈட்டலாம்! மாறாக செய்கின்ற தொழிலை சாமர்த்தியமாக செய்யத் தெரியாமல், நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அரசாங்கத்திடம் வரட்சி நிவாரணம். வெள்ள நிவாரணம் என்று சலுகைகளையும், மானியங்களையும் எதிர்பார்த்திருந்தால், காலகாலத்துக்கும் அரசாங்கத்திடம் கையேந்தி நிற்க வேண்டியதுதான்.


தொழில் செய்யத் தெரியாமல் நஷ்டப்பட்டுவிட்டு, அல்லது கடன் வாங்கி வீணடித்துவிட்டு, விவசாய பயிர்கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி என்று கோரிக்கைகளை ஏந்திப்போவதில் என்ன பயன்! தேசத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களின் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற, அரசாங்கம் குபேரனிடம் கடன் வாங்கினாலும் போதாது.


ஒருபுறம் சாமர்த்தியமில்லாமல் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அரசாங்கத்திடம் கையேந்தி பலபேர் நிற்கிறார்கள். மறுபுறம் பணக்காரர்கள் அரசாங்க முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி தங்களுக்கு வேண்டியதை சாதிக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதை, யாரிடம்? எப்படி? கேட்டுப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரிகிறது. ஒருவேளை அரசாங்கம் கைவிரித்தாலோ (அல்லது) தாமதித்தாலோ என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையை எதிர்பார்த்து இருப்பதில்லை. ஒன்று அரசாங்கத்தின் முடிவை நிர்ணயிக்கின்றனர் (அல்லது) அரசாங்கத்தைத் தாண்டி தாங்களே வழியமைத்து காரியத்தை சாதிக்கின்றனர்.


ஆனால் இந்த சாமானியர்கள்தான், அரசாங்கம் தங்களுக்கு சலுகைகளும், இடஒதுக்கீடும், இலவசங்களும், மானியங்களும், தள்ளுபடியும் தர வேண்டுமென்று தொடர்ந்து யாசித்துக் கொண்டே காலத்தைக் கழிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையின் மொத்த வருவாயை கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் அரசிடம் யாசித்துப் பெற்ற மொத்தத்தையும், நீங்கள் சரியாக திட்டமிட்டு உழைத்திருந்தால், ஓரே ஆண்டில் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் இன்னமும் அரசிடம் பிச்சை எடுக்கும் எண்ணம் பலரை விடுவதில்லை அரசாங்கம் சும்மா கொடுப்பதை ஏன் வேண்டாம் என்று மறுக்க வேண்டுமென்று, இன்னும் பணக்காரர்கள் கூட அந்த இலவச அரிசி, கோதுமை, சமையல் சிலிண்டர் மானியம், இலவச தொலைக்காட்சி என்று கேட்டு கேட்டு பெறுகின்றனர்.


இளைஞர்களே

நீங்கள் வெற்றி பெற விரும்பினால்

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்!


அரசு இயந்திரம் சரியாக வேலைசெய்து

நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால்

இன்னொரு ஜென்மம் தேவைப்படலாம்!


இப்போதைக்கு உங்கள் வெற்றி பாதையை

நீங்களேதான் நிர்ணயம் செய்ய வேண்டும்;


பெரிய கடனுதவிகளை எதிர்பார்க்காமல்

இருக்கின்ற செல்வத்தை வைத்து

சிறிதாய் தொழிலை ஆரம்பியுங்கள்;

படிப்படியாக வளரலாம்!


அரசாங்கத்தை நம்பி காத்துக்கொண்டிருக்காமல்

1% வளர்ச்சியானாலும்

தன்னம்பிக்கையுடனான வளர்ச்சிதான்

வெற்றியின் அடித்தளம்!


- [ம.சு.கு 24.01.2023]


Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Post: Blog2 Post
bottom of page