top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-101 – எல்லாம் உங்கள் தேர்வுதான்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-101

எல்லாம் உங்கள் தேர்வுதான்!


  • பண்டிகையை முன்னிட்டு வேலைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களில் உறவுகளோடு பண்டிகை கொண்டாடலாம், விதவிதமாய் சமைத்து உண்ணலாம், சுற்றுலா செல்லலாம், நன்றாக உறங்கலாம், திரையரங்கு செல்லலாம், கேளிக்கை விடுதி செல்லலாம், உறவுகளை கண்டு வரலாம், தொலைக்காட்சி பார்க்கலாம், புத்தகம் வாசிக்கலாம், விளையாட போகலாம், மிச்சம் வைத்த பழுதுபார்க்கும் வேலையை செய்து முடிக்கலாம், யாருடனேனும் சண்டை போடலாம், கோவிலுக்கு போகலாம், பொதுக் கூட்டங்கள் போகலாம், வீண் அரட்டை அடிக்கலாம்...... அப்பப்பா!! இரண்டு நாளில் செய்வதற்கு எத்தனை இருக்கிறது. இன்னும் கையில் இருக்கும் பணத்தின் அளவை பொறுத்து, தெரிவுகள் இன்னும் நிறையவே வரும். கடந்த பண்டிகை விடுமுறையில் நீங்கள் எதை தேர்வு செய்தீர்கள்?

  • நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு வழக்கம் போல செல்கிறீர்கள். சென்றடைந்தது முதல் மாலை அலுவலகம் முடியும் வரையான 8 மணி நேரத்தில், செய்யவேண்டிய ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்து முடிக்கலாம், மேலாளர் சொன்னதை மட்டும் செய்துகொண்டிருக்கலாம், வேலையை பின்னர் செய்யலாம் என தள்ளிவைத்துவிட்டு சகஊழியரோடு அரட்டை அடிக்கலாம், வருகின்ற வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்யலாம், வாடிக்கையாளரை கவனிக்காமல் விட்டுவிடலாம், ஏதேனும் காரணம் சொல்லிவிட்டு வெளியே சென்று சுற்றிவரலாம், நாளை செய்ய வேண்டிய வேலைகளுக்கு தேவையான ஆயத்தங்களை செய்யலாம், கணினியில் விளையாடலாம், சமூக வலைதளத்தில் உலவலாம், கைபேசியில் நேரம் கழிக்கலாம், கதை படிக்கலாம், உட்கார்ந்து கொண்டே தூங்கலாம்...... உங்களுக்கான 8 மணி நேரத்தில் நன்றாக பணிசெய்யலாம் (அல்லது) ஒன்றும் செய்யாமலோ, தேவையற்றதை செய்தோ நேரம் கழிக்கலாம். நேற்று அலுவலகத்தில் நீங்கள் எதை செய்தீர்கள்?

பண்டிகை விடுமுறைகள் உறவுகளோடு கூடி பண்டிகையை கொண்டாடுவதற்கு. அதை சரிவர செய்தால் விடுமுறை விட்டதற்கான முதல் காரணம் பூர்த்தியாகும். பெரும்பாலும் எல்லா கொண்டாட்டங்கள் ஓரிரு மணி நேரங்களில் முடிந்துவிடும். மீதமுள்ள நேரத்தில் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் நேரம் பொன்னாக மதிக்கப்பட்டதா? மண்ணாகிப் போனதா? என்பது தெரியும். அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளை தொலைகாட்சிகளில் பார்க்கலாம் அல்லது கேளிக்கைகளில் நேரம் கடத்தலாம். நீங்களாக இடம் கொடுக்காத வரை, யாரும் உங்கள் மீது எதையும் திணிக்கப் போவதில்லை.


உங்களிடம் உள்ள நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவு உங்களிடம் தான் இருக்கிறது. எதையுமே தேர்வு செய்யாமல் வெறுமனே உறங்கி நேரத்தை கழிப்பதும் உங்களின் தேர்வுதான். இரண்டு நாள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது, வீட்டுப்பாடம் முடிக்கவில்லை என்று வருந்தினால் அதுவும் உங்கள் தேர்வு தான். அந்த விடுமுறை நாட்களில் அவசியம் செய்ய வேண்டியவைகளை முடிப்பதும்-முடிக்காமல் மிச்சம் வைப்பதும் உங்கள் தேர்வுதான்!


அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் போகலாம், அல்லது அரை மணி நேரம் தாமதமாகவும் போகலாம். பணியாற்றும் 8 மணி நேரத்தில், நன்றாக பணிசெய்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகலாம் அல்லது வீண் அரட்டை பேசி உங்கள் வேலையை கெடுப்பதோடு சகஊழியரின் நேரத்தையும் வீண்டிக்கலாம். உங்கள் பணி நேரம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதும், உபத்திரமாவதும் உங்களுடைய விருப்பத்தேர்வின் விளைவுகள்தான். ஒருவேளை உங்கள் செயல் எல்லை மீறி நிறுவனத்தை பாதிக்கும் போது, மேலாளர் உங்களை பணி நீக்கம்செய்து வீட்டுக்கு அனுப்பக்கூடும். எதுவும் எல்லைமீறும் போது, அமைதியாய் இருந்தவர்கள் பொங்கியெழுந்து அவர்களின் தேர்வுகளை நிறைவேற்றத்தான் செய்வார்கள்.


விடுமுறை தினம், அலுவலக வேலை என்று இரண்டு உதாரணங்களை பார்த்தோம். நடைமுறையில் நீங்கள் பிறந்தது முதல், இறப்பு வரை ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் முன்எண்ணற்ற தேர்வுகள் இருக்கும். அதில் நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களின் வாழ்க்கைப்பாதை நிர்ணயமாகிறது. குழந்தை பருவத்தில் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கான தேர்வுகளை செய்திருப்பார்கள். உங்களின் சுயஅறிவு வளரவளர, தேர்வுகளை நீங்கள் செய்வீர்கள். தள்ளாடும் வயதில் உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் பிள்ளைகள் தேர்வுசெய்வார்கள். எல்லா கட்டத்திலும் எல்லாமே தேர்வுகள் தான். எப்போது, யார், எதை தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவரவர்களின் வாழ்க்கை சொர்கமாகவும், நரகமாகவும் அமையப் போகிறது.


வீட்டிலே குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு நாளின் 24 மணி நேரம் போதுவதில்லை. அவர்களுக்கு விளையாடவும், நண்பர்களோடு ஊர் சுற்றவும் நிறைய நேரம் தேவைப்படுகிறது. அதேசமயம் வயதானவர்களுக்கோ, அந்த நேரமே அவர்களைக் கொல்கிறது. எப்படி நேரத்தை கடத்துவது என்று தெரியாமல் கஷ்டப்படுகின்றனர். எல்லோருக்கும் இருக்கும் நேரத்தில் அளவு ஒன்றுதான். ஆனால் அந்த நேரத்தில் யார் எதை தேர்ந்தெடுத்து செய்கிறார்கள் என்பதை பொறுத்து, நேரத்தை நாம் கட்டுப்படுத்துகிறோமா? அல்லது நேரம் நம்மை கொல்கிறதா? என்பது தீர்மானமாகிறது.


சாதிக்க விரும்புபவருக்கும் தெரிவு உண்டு;

வேடிக்கை விரும்பிகளுக்கும் தெரிவு உண்டு;

சொல்புத்திக்காரர்களுக்கு தெரிவுகள் திணிக்கப்படும்;

சுயபுத்திக்காரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்;


தெரிவுகள் சரியானால் வெற்றி;

தெரிவுகள் தவறானால் தோல்வி;


தெரிவுகள் தான் வாழ்க்கை எனும் போது

உங்கள் தெரிவுகளில் போதிய கவனம் செலுத்தி

நல்லவற்றை தேர்ந்தெடுத்து

வாழ்க்கையில் வெற்றி காண முயற்சி செய்யுங்கள்;

முயற்சி செய்பவருக்கு மட்டுமே வெற்றிகிட்டும்!!


- [ம.சு.கு. 18.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page