top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-100 – இக்கரை மறையாமல் அக்கரை எப்படி தெரியும்?"

Updated: Jan 18, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-100

இக்கரை மறையாமல் அக்கரை எப்படி தெரியும்?


  • உங்கள் பிள்ளை சதுரங்க விளையாட்டில் கெட்டிக்காரனாக இருக்கிறார். இன்னும் பயிற்சியளித்து தேசிய அளவில் பங்கெடுக்க அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் விளையாட்டின்பின் சென்றால் படிப்பு முழுமையாய் பாதிக்கும். உங்கள் பிள்ளையை மருத்துவராக்க வேண்டுமென்று கனவு கண்டிருக்கிறீர்கள். அதேசமயம் இன்று பள்ளி வகுப்புகளை தவிர்த்து சதுரங்க பயிற்சி, போட்டிகளுக்கு பல இடங்களுக்கு சென்றால்தான், தேசிய அளவில் விளையாட முடியும். தேசிய அளவில் வென்றால்தான் சர்வதேச அளவில் விளையாட முடியும். பிள்ளை மருத்துவராக சாதிப்பதை விட சதுரங்கத்தில் மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. ஆனால் அவன் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்காமல் சதுரங்கம் விளையாடட்டும் என்று நீங்கள் சொன்னால், அவனால் இரண்டிலும் போதியகவனத்தை செலுத்த முடியுமா?

  • மென்பொருள் வடிவமைப்பில் வல்லுனரான நீங்கள், சுயமாக ஒரு சேவை மென்பொருளை தயாரிக்கும் சிறந்த யோசனையை வைத்துள்ளீர்கள். இருக்கும் வேலையை விட்டுவிட்டு, உங்கள் யோசனையை பின்தொடர்ந்து, உலகம்வியக்கும் ஒரு சேவை மென்பொருளை தயாரிப்பது உங்களின் கனவு. மறுபுறம் குடும்பம், குழந்தையென்று நன்றாக போய்கொண்டிருக்கும் உங்கள் வாழ்வில், வேலையை விடுவதன் மூலம் உங்கள் குடும்ப பொருளாதாரம் சோதனையில் சிக்கிவிடுமோ என்று பயம். வேலையை தொடர்ந்து கொண்டே உங்கள் கனவு மென்பொருள் குறித்து பலரிடம் பேசுகிறீர்கள். இப்போதைக்கு உங்களால் முழுநேரம் அதில் ஈடுபட முடியாதென்பதால் உங்களை நம்பி யாரும் அதில் இணைய, முதலீடு செய்ய விரும்பவில்லை. நீங்கள் சாதிக்க வேண்டுமானால் வேலையை விட்டு முழுநேரம் உங்கள் கனவை பின்தொடர வேண்டும். சேர்த்த செல்வத்தையெல்லாம் உங்கள் கனவிற்கான பணயம் வைக்க வேண்டும். இந்த முக்கிய முடிவையெடுக்காமல், புதிய மென்பொருளை முடித்து சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை. இரண்டில் எதை தேர்ந்தெடுப்பதென்ற குழப்பத்திலேயே காலம் போய்க்கொண்டிருக்கிறது?

பிள்ளைகள் படித்து மருத்துவரானால் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்பது ஒருபுறம், சதுரங்க விளையாட்டின் பின்சென்று ஒருவேளை சாதிக்க முடியாமல் போனால், அவனது எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் மறுபுறம். இது எல்லா பெற்றோர்கள், பிள்ளைகள் முன்னிருக்கும் இக்கட்டான கேள்விதான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக முடிவெடுத்து களம்காண்பரால் மட்டுமே வெற்றி வீரராக உலா வரமுடிகிறது. ஏனையவர்கள் இரண்டிற்கும் இடையே குழம்பி சாதாரண மனிதராய் வாழ்ந்து சாகின்றனர்.


கோடி மருத்துவர்களில் ஒருவனாய் இருப்பதைவிட, 100 சிறந்த சதுரங்க வீரர்களில் ஒருவனாய் இருப்பது மிகப்பெரிய சாதனைதான். இன்று சதுரங்க விளையாட்டிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல சாமர்த்தியமான பிள்ளையென்றால், தைரியமாக களம் இறங்கித்தானாக வேண்டும். அடிப்படைக் கல்வியை திறந்தவெளி கல்வி முறையின் மூலம் படித்துக்கொள்ளலாம். மருத்துவம் மட்டுமே வாழ்க்கையென்றில்லை. எது சிறப்பாக வருமோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி, களத்தில் ஒரேமூச்சாய் குதித்தால், கட்டாயம் ஜொலிக்க முடியும்.


எந்தவொரு தொழிலும் வெற்றி பெறவேண்டுமானால், அந்த தொழிலில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும். “ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால்” என்று தொழில், வேலை என்று இரண்டு குதிரையின் மீது பயணித்தால், தொழில் வளர்ச்சிக்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமல் திண்டாட வேண்டியதுதான். மேலும் நீங்களே முழு நம்பிக்கையோடு உங்கள் தொழிலில் இறங்க பயப்படும்போது, உங்களை நம்பி எந்த ஊழியர், எந்த முதலீட்டாளர் வருவார்? நல்ல ஊழியர்களும், போதுமான முதலீட்டாளர்களும் இல்லாமல், பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை குறுகிய காலத்தில் எப்படி உருவாக்க முடியும்?


கப்பலில் ஏறியபின், கடல் சீற்றங்களுக்கு பயந்து கரை தென்படும் தூரத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தால், மறுகரையை எப்படி அடைய முடியும்?


பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று

எல்லோருக்கும் ஆசைதான் – ஆனால்

அதீதமாக பாதுகாப்பை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால்

சாதிப்பதையும், கனவுகளையும் மறந்து

சாமானியனாகவே சாக வேண்டியதுதான்;


விளையாட்டோ, வியாபாரமோ, களம் எதுவானாலும் முழுமூச்சுடன் இறங்கிப் போராடினால்தான் வெற்றிபெற முடியும். நடக்குமோ? நடக்காதோ? என்ற ஐயத்தில், உங்கள் கையிலிருப்பதைவிட்டு வெளிவர பயந்தால், புதிய துறைகளில் எதையும் சாதிக்க முடியாது.


எப்படி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு தாவிட, குரங்கு தன் கையில் பிடித்திருக்கும் இம்மரத்தின் விழுதை விட்டு தைரியமாக குதித்து அடுத்த மரத்தின் கிளையை பற்றுகிறதோ, அதுபோல நீங்கள் தற்போதிருக்கும் சுலபமான, சௌகரியமான சூழ்நிலைகளில் தங்கிவிடாமல், தைரியமாக கனவுகளை பின்தொடர்ந்தால் மட்டுமே, புதிய முயற்சிகளின் மூலம் அரும்பெரும் சாதனைகளை படைக்க முடியும்.


ஆறுகளில் இருகரைகளும் ஒரு சேர தெரியலாம்;

ஆனால் கடலில் மறுகரை தெரியவேண்டுமானால்

இக்கரையைவிட்டு விலகி வெகு தூரம் பயணிக்க வேண்டும்;


பயணத்தில் கடல்சீற்றம், புயல் எதுவும் வரலாம்;

எல்லாவற்றையும் தாண்டி சமாளித்தால்தான்

மறுகரையை அடைய முடியும்;

அதுபோலத்தான் மனித வாழ்வும்

ஒன்றை விடாமல் பற்றிக்கொண்டு

மற்றொன்றில் சாதிக்க நினைப்பது சாத்தியமில்லை;


எது உங்கள் கனவு? எது உங்களின் அவசியத்தேவையென்று

உங்களை நீங்கள் சுயஆய்வு செய்துகொண்டு

தைரியமாய் களம் கண்டால் மட்டுமே

சாதிக்க விரும்பியதை செய்துகாட்ட முடியும்;


இருப்பதையும் தொலைத்து விடுவோமோ? என்று பயந்தால்

இருப்பதை மட்டும் பிடித்துக் கொண்டு

இருக்கின்ற இடத்திலேயே

காலத்திற்கும் இருக்கவேண்டியதுதான்;

இருப்பதை விட்டு தைரியமாய் வெளிபவருக்குத்தான்

அடுத்த பெரிய வெற்றிகள் சாத்தியப்படும்;


- [ம.சு.கு. 17.01.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Commentaires


Post: Blog2 Post
bottom of page