top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-77 – முக்கியமில்லை என்றால் தோற்றுவிடுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-77

முக்கியமில்லை என்றால் தோற்றுவிடுங்கள்!!


  • அலுவலகத்திலிருந்து தாமதமாக வீட்டுக்கு வந்தால், மனைவி சில சமயங்களில் கடிந்து கொள்ளக்கூடும். “வீடு என்றொன்று இருப்பதாக ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்கக்கூடும். அவர்களின் கேள்விகளுக்கு சரிக்குசமமாக பதிலளித்து நீங்கள் சாதிக்கப் போவது என்ன? தேவையற்ற நேரத்தில், தேவையற்ற விடயங்களில் ஏட்டிக்குபோட்டியாய் பேசுவது, பெரிய வாக்குவாதமாக முற்றி இறுதியில் மனவருத்தம் அடைவதுதான் மிஞ்சும். தாமதமாக வந்தது தவறுதான். இனி அதற்கு 100 காரணம் சொல்வதில் ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறது? இல்லை என்றால் மனைவியிடம் தோற்றுப்போக வேண்டியது தானே! விவாதம் எதற்கு!!

  • நீங்கள் உங்கள் குடும்பத்தோடும், நிறைய உறவுகளோடும் கூடி இருக்கும் பலதருணங்களில், சில விளையாட்டுக்கள், சில விவாதங்கள், சில கிண்டல்கள் வரும். எல்லாவற்றிலும் உங்கள் வார்த்தையே இறுதியானதாக இருக்க வேண்டுமென்றும், நீங்களே எல்லாவற்றிலும் வெற்றி காண வேண்டும் என்று முந்திக் கொள்ளாதீர்கள். எல்லாவற்றிலும் நீங்கள் ஜெயித்தால், அது ஒருசிலர் மனதில் பொறாமை எண்ணங்கள் வளர வாய்ப்பாகிவிடும். தேவையற்ற போட்டி பொறாமைகளை தவிர்க்க, முக்கியமானவற்றைத் தவிர, ஏனையவற்றில் தோற்றுவிடுங்கள். எல்லாவற்றிலும் நீங்கள் வென்று சாதிப்பதைக் காட்டிலும் சில தோல்விகளை ஏற்று, அமைதியையும், உறவையும் காப்பது மிகச்சிறந்தது. இது வீடு, உறவு, நட்பு என்பதோடு நின்றுவிடாமல், அலுவலகம், சமுதாயம் என்று எல்லா இடத்திலும் தேவைப்படக்கூடிய ஒரு சமயோசிதமான விடயமே.

இல்லறத்தில் எங்கு விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்பது, மிக சூட்சமமான விடயம். அதை அறிந்தவரின் இல்லறம் இனிமையாகிறது. அதை அறியாமல், தேவையின்றி போட்டியிடுபவர் வாழ்க்கை நரகமாகிறது. உங்கள் துணையுடன் போட்டியிடுவதற்கு / சண்டையிடுவதற்கு முன், குறிப்பிட்ட பிரச்சினையை நீங்கள் அவர்களின் கோணத்திலிருந்து நோக்கினால், பெரும்பாலான விவாதங்கள் ஆரம்பத்திலேயே மறைந்து போகும். குடும்பத்தில், சமுதாயத்தில் எல்லா விடயங்களையும், எல்லோரும் அவரவர் கோணத்தில் மட்டுமே பார்ப்பதாலேயே, எல்லா வேறுபாடுகளும் விவாதங்களும் முற்றி பிரிவினைகளுக்கு வழிவகுக்கின்றன.


குடும்பங்கள், உறவுகள், நண்பர்கள், சக ஊழியர்களிடம் பொறாமை எண்ணம் வளராமலிருக்க வேண்டுமானால், நீங்கள் தொடர்ந்து வெற்றியாளராக இருப்பதை தவிர்த்துவிடுங்கள். எவ்வளவுதான் உறவும், நட்பும் உறுதியானதாக இருந்தாலும், தொடர்ந்து அவர்களின் தோல்வியில் நீங்கள் வெற்றி பெறுவது, தேவையற்ற இதர எண்ணங்களுக்கு அது வழிவகுக்கக்கூடும். மேலும் தொடர்ந்து ஒருவர் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தால், எவ்வளவுதான் அவர் தன்னடக்கம் உள்ளவரானாலும், சுற்றியுள்ளவர்கள் அவரது கர்வத்தை அவ்வப்போது தூண்டிவிடுவதற்கான வாய்ப்பதிகம்.


நீங்கள் பங்கேற்பதொன்றும் ஒலிம்பிக் போட்டி அல்ல, எல்லாவற்றிலும் வென்று தேசத்திற்கு பதக்கம் கொண்டு வர. அன்றாட வாழ்க்கையில் சக மனிதருடன், சமுதாயத்துடன் எப்படி விட்டுக்கொடுத்து இணக்கமாக வாழ்வது என்று நாம் பழகிக்கொள்ள வேண்டும்.


நாம் எவ்வளவுதான் நல்லவராக, அன்பானவராக இருந்தாலும், நம்மை அதேகோணத்தில் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் நமது நடை, உடை, பாவனைகளை எடை போடுவார்கள். எல்லாவற்றிலும் வெற்றிபெற்று பொறாமையாளர்களையும், எதிரிகளையும் வளர்த்துக் கொள்வதை விட, மிக முக்கியமான விடயங்களில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, ஏனைய முக்கியமற்ற விடயங்களில் சமுதாயத்திடம் கணக்குப்போட்டு தோற்றுவிடுவது நல்லது. முக்கியமானது முக்கியமில்லாதது என்பது உங்கள் கோணத்தில் தான். சமுதாயத்தை பொருத்தமட்டில், நீங்கள் பாதி விடயங்களில் வென்றீர்கள். பாதி விடயங்களில் தோற்றீர்கள். இந்த தோல்விகளும், நீங்கள் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக தோற்பது போல நடிப்பதை போன்றதுதான்.


எப்படி குழந்தையிடம் தோற்பதில் உங்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறதோ, அதே வண்ணம் சமுதாயத்திடம் அவ்வப்போது தோற்று உறவுகளையும், நட்புகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.


வெற்றி மட்டுமே மகிழ்ச்சியன்று

குழந்தைகளிடம், துணையிடமும் அவ்வப்போது

தோற்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்;


தொடர்ந்த வெற்றி அகங்காரத்தைக் கூட்டி

போட்டி பொறாமைகளை வளர்க்கும்;

நட்பும் உறவுகளும் செழித்திட

சமுதாயத்துடனான இணக்கம் பலப்பட

அவ்வப்போது விட்டுக்கொடுத்து தோற்றுவிடுங்கள்;


சில தோல்விகள்

பொறாமை, காழ்ப்புணர்ச்சிகளை குறைத்து

உங்கள் வாழ்வை நிம்மதியடையச் செய்யும்;

நிம்மதி முக்கியம் என்றால்

அவ்வப்போது தோற்பதும் அவசியமாகிறது;


- [ம.சு.கு 25-12-2022]




Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page