top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-74 – எதிர்மறை கருத்துக்களை ¼ பங்காக்குங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-74

எதிர்மறை கருத்துக்களை 1/4 பங்காக்குங்கள்!  • ஒரு பள்ளி மாணவன் கணித பாடத்தில் 100% மதிப்பெண் எடுக்கிறான். ஆனால் மற்ற பாடங்களில் தேறுவதே கேள்விக்குறி. தலைமை ஆசிரியருக்கு இந்த வினோதம் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்த மாணவனிடம் ஏன் என்று விசாரித்ததில் தனக்கு கணக்கு பிடிக்கிறது, சுலபமாக வருகிறதென்று சொல்கிறான். மற்ற பாடங்களில் விருப்பமில்லை என்கிறான். ஓராண்டு காலம் மாணவர்களின் கல்வியை கூர்ந்து கவனித்து தலைமை ஆசிரியருக்கு, இந்த வினோதத்தின் காரணம் தெளிவாக புரிந்தது. கிட்டத்தட்ட 6 வகுப்புகளில் கணக்கு பாடத்தில் 99% தேர்ச்சி அடைந்திருந்தது, அவரது அனுமானத்தை உறுதிப்படுத்தியது. ஒருவருடம் முன்பு புதியதாய் வந்த கணக்கு ஆசிரியரின் தன்னம்பிக்கையான வார்த்தைகள், மாணவர்களை மாற்றியதை கண்கூட உணர்ந்தார். ஆசிரியரின் நம்பிக்கையான வார்த்தைகள், நேர்மறை அனுகல்கள் இப்படியும் மாயாஜாலம் செய்யும் என்பது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தான்;

  • சமீபத்தில் “டோஸ்ட்மாஸ்டர்ஸ்” எனும் பேச்சாற்றல் வளர்க்கும் ஒரு அமைப்பினை அறிந்து, அங்கு சில முறை சென்று வந்தேன். ஒவ்வொரு நபரும், மேடை பயமின்றி பேச்சுத்திறனை வளர்க்க முயற்சிப்பதும், அவர்கள் பேச்சில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரி செய்ய வழிகாட்டுவதும் அந்த அமைப்பின் முக்கிய நோக்கம். அதற்கென்று யாரையும் தனியாக வேலைக்கு அமர்த்திக் கொள்வதில்லை. சக உறுப்பினர்களையே முறைப்படி பயிற்றுவிக்கிறது. ஒவ்வொருவரின் பேச்சிலிருக்கும் குறிப்பிட்ட ஓரிரு குறைகளை சுட்டிக்காட்டுவதோடு, அவர்கள் செய்த மாற்றங்கள். முன்னேற்றங்கள் யாவற்றையும் சுட்டிக்காட்டி மேலும் ஊக்கப்படுத்துகிறது.

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு வருவதும், குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புற விளங்குவதற்குமான மூல காரணம் அதை நடத்தும் ஆசிரியர்களே. ஆசிரியர்களின் நம்பிக்கையான வார்த்தைகள், மாணவர்களின் எண்ணத்தை, தன்னம்பிக்கை வழி நடத்துகிறது. சமீபத்தில் கண்ட சில திரைப்படங்கள் (சாட்டை, ராட்சஷி) ஆசிரியர்கள் பங்களிப்பை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது. அவர்களின் கடமையை எளிமையாக சுட்டிக்காட்டியுள்ளது.


கல்வியில் ஈடுபாடு இல்லாத மாணவனை தொடர்ந்து திட்டுவதில் என்ன பயன்? அதீதமான எதிர்மறை வார்த்தைகள், அவனை இன்னும் விலகி ஓடவே தூண்டுகிறது. ஒருபுறம் எதிர்மறை அதிகம் வேண்டாம் என்று சொன்னாலும், அதற்காக எந்தவொரு தவறையும் சுட்டிக்காட்டாமலே இருக்க முடியுமா? என்று இன்னொரு சாரார் கேட்கலாம். தவறுகள் சுட்டிக் காட்டப்படாவிட்டால், அதுவே சரியென்று ஆகிவிடும். அதேசமயம், தவறுகள் குறித்து எவ்வளவு பேச வேண்டும் என்பதற்கு ஒரு அளவு வேண்டும். ஆக்கத்தை விதைக்க நினைத்தால், நேர்மறையான எண்ணங்களை அதிகமாக வித்திட வேண்டும்; குறைகளை ஒரு முறை சுட்டிக்காட்டுவது நிறுத்திக் கொண்டு, அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகளையும், தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் பற்றி பேசலாம்;


“டோஸ்ட்மாஸ்டர்ஸ்” அமைப்பில், ஒவ்வொரு பேச்சு முயற்சியையும் கூர்ந்து கவனித்து, அதன் நிறை குறைகளை அவர்களுக்கு எல்லோரும் கூறுகிறார்கள். குறிப்பிட்ட ஓரிரு குறைகளை மட்டும் கூறிவிட்டு, அவர்கள் பேச்சில் இருந்த நிறைகளை, முந்தைய முயற்சிகளில் கற்று இந்த முறை செய்த முன்னேற்றங்களை குறிப்பிடுவதும் வழக்கமாக உள்ளது.


எத்தனையோ பேர் மேடை ஏறிப்பேசுவதென்றாலே கதிகலங்கிப் போவார்கள். ஆனால் இந்த அமைப்பில், படிப்படியாக தைரியம் வளர்க்கிறார்கள். குழுவினர் வழங்கும் அறிவுரைகள், சகபேச்சாளரின் பேச்சில் இருக்கும் நிறைகளை கவனித்து சுட்டிக்காட்டும் வார்த்தைகள், அவர்களுக்கு இன்னும் தங்களை கவனத்துடன் மேம்படுவதற்கான உந்துதலை கொடுக்கிறது. தன் பேச்சாற்றலை வளர்க்க மற்றவர்களின் பேச்சில் உள்ள நிறைகுறைகளை காண்பதற்கான அந்த கள அனுபவம், தன் பேச்சாற்றலை வளர்க்கும் முயற்சியை மிக எளிமையாக்குகிறது.


எப்படி நம்மையொருவர் திட்டினால் மனவருத்தம் ஏற்படுகிறதோ, அவ்வண்ணமே எதிர்மறையான வார்த்தைகள், மற்றவரை சீக்கிரமாக காயப்படுத்த கூடும். யார் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாது. யதார்த்தத்தில், மேலும், எந்தவொரு எதிர்மறை கருத்துக்களையும் உடனே எதிர்ப்பது பெரும்பாலானவர்களின் இயல்பு. ஒரு எதிர்மறை கருத்தை சரி செய்ய, குறைந்தபட்சம் 4 சமாதானங்களோ, நம்பிக்கை மொழிகளோ தேவையென்று உளவியலாளர்கள் சொல்கின்றார்கள்.


உளவியல் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். உங்களின் அன்றாட வாழ்வுமுறையையும், உங்கள் பேச்சையும் தொடர்ந்து நீங்களே கவனியுங்கள். உங்களைச் சார்ந்தவர்களின் முறைமைகளை கவனியுங்கள். ஒவ்வொரு வார்த்தையையும், அதன் தாக்கத்தையும் கவனியுங்கள். தவறான வார்த்தைகள் உங்களை எப்படி மனவேதனை அடையச்செய்கிறதோ, அதுபோல உங்களின் அஜாக்கிரதையான வார்த்தைகள் அடுத்தவரையும் அப்படித்தான் காயப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்

தவறுகள் குத்திக்காட்டப்படக் கூடாது;


நிறைகளை கவனித்து ஊக்கப்படுத்துங்கள்

குறை கூறுவதை கால் பங்காக்குங்கள்;

நிறைகளை கவனித்துப் பேசப் பழகினால்

உறவுகளும் நட்பும் ஓங்கி வளரும்;


குறை சொல்ல ஆயிரம் பேர் இருக்கிறார்கள்

நிறைகளை கவனித்து ஊக்கப்படுத்துபவர் இருந்தால்

எந்த கல்லும் சிலையாகும்;


நீங்கள் பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்;

பேசும் மொழியை கவனியுங்கள்;

திருத்தப்பட்ட தவறுகளை அங்கீகரியுங்கள்;

ஆக்கத்தை விதைக்க முயற்சித்தால்

நம்பிக்கையொளி தானாய் துளிர்விடும்;

நம்பிக்கை நிறைந்த மக்களே

வாழ்வதற்கேற்ற சமுதாயமாகும்!


- [ம.சு.கு 22-12-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page