top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-69 – குறிக்கோள் இல்லாதவர்களுடன் பயணிப்பதில் என்ன பயன்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-69

குறிக்கோள் இல்லாதவர்களுடன் பயணிப்பதில் என்ன பயன்?


  • உங்களிடம் பணிபுரியும் ஊழியரிடம் ஓரிரு செயல்களை செய்து முடிக்குமாறு கூறுகிறீர்கள். அவற்றை எப்படி செய்வதென்று தெரியாமல் அவர் நிற்கிறார். அதை எப்படி செய்வதென்று பயிற்சி கொடுக்கிறீர்கள். அப்போதைக்கு செய்து முடிக்கிறார். அடுத்தமுறை அதே வேலையை சற்று மாற்றிச் செய்யச் சொல்கிறீர்கள். இப்பொழுதும் தெரியாமல் முழிக்கவே, அதை செய்யவும் படிப்படியாக சொல்லித் தருகிறீர்கள். 3-வது,4-வது,5-வது,... முறையும் ஊழியர் உங்களின் உதவியையே எதிர்பார்த்து இருக்கிறார். இதே நிலை நீடிப்பதனால், அந்த ஊழியரை நீங்கள் வேலைக்கு வைத்திருப்பதும் ஒன்றுதான்! அந்த வேலையை நீங்களே செய்வதும் ஒன்றுதானே!

  • நான்கு நபர்கள் ஓடும் தொடர் ஓட்டத்தில் (4 X 100) வெற்றி பெற வேண்டும் என்று மூவருக்கு அதீத ஆர்வம். கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். அதேசமயம் நான்காவது நபருக்கு போட்டியில் பெரிதாய் ஆர்வமில்லை. சாதிக்க வேண்டும், வெற்றி பெறவேண்டும் என்ற வெறியும் இல்லை. அந்த நபரை தொடரில் எங்கு நிறுத்தினாலும், வெற்றிக்கான வாய்ப்பு குறைந்துபோகும். இவனை குழுவில் ஏன் சேர்த்தோம் என்று காலம் தாழ்த்தி வேதனை கொள்கிறீர்களா?

ஒவ்வொரு பணியாளரும், நல்ல ஊதியம் பெற்று தன் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலே பணிக்குச் செல்கிறார்கள். அவர்களில், மிகுந்த ஆர்வத்துடன் பணிகளை கற்று அதை சிறப்பாக செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அதில் மேலும் என்ன முன்னேற்றங்களை செய்து பணியை எளிமையாக்கி, உற்பத்தியை பெருக்குவது என்று யோசித்து செயல்படும் சுயபுத்தியாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். அப்படி வளர்ச்சிக்கான சிந்தனை உடையவர்கள் கிடைக்கப்பெற்றால், நிறுவனத்தின் வளர்ச்சி சுலபமாகும். அதேசமயம், 9 மணிக்கு வந்தோம், சொன்னதை ஏதோ செய்தோம், 5 மணிக்கு கிளம்பினோம் என்று கடிகாரம் பார்த்து வேலை செய்யும் கூட்டம் இருந்தால், வெற்றிக்காக வரும் வாய்ப்புகள் கூட, கடிகாரம் பார்த்து ஓடிவிடும்.


குழு விளையாட்டோ, தனிநபர் விளையாட்டோ, எதுவாயினும் உங்களுடைய குழுவும் உங்களுடைய பயிற்சியாளரும் போதிய உத்வேகமும் நம்பிக்கையும் உடையவர்களாக இல்லாவிட்டால், உங்கள் பாடு திண்டாட்டம் தான். நீங்கள் வெற்றியை நோக்கி அவர்களை இழுத்தாலும், அவர்கள் உங்களை எதிர்மறை எண்ணங்களால் திசை திருப்ப முயற்சிப்பார்கள். “முடியும்” என்று முயற்சி செய்பவர்களாக இல்லாமல், “முடியுமா?” என்று சந்தேகப்படுபவர்களாக, இருந்தால் எப்படி அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்துவது?.


முதல்முறையாக நிகழ்த்தப்பட்ட எல்லா சாதனைகளும், மற்றவர்களால் “முடியாது” என்று முத்திரை குத்தப்பட்டவைதானே. யாரோ ஒருவர் முடியும் என்று எண்ணினார். அவர் சொல்வதை நம்பும் கூட்டத்தை கூட்டி போராடினார். சாதித்துக் காட்டினார்! முடியும் என்று நம்பி போராடும் கூட்டம் வேண்டும். தனக்கென இலட்சியம் இல்லாமல், ஏதோ பிறந்தோம் - ஏதோ செய்கிறோம் என்று ஏனோதானோ என்று வாழும் நபரை உடன் வைத்திருந்தால், நீங்கள் துவங்கிய இடத்திலேயே தங்கிவிட வேண்டியதுதான்.


யார் உங்கள் அணியில், செல்லும் பாதையில் இருக்கிறார்கள் என்பது முக்கியம். எதிர்மறையாளர்களே அதிகம் நிரம்பியிருந்தால், உங்கள் தன்னம்பிக்கை கேள்விக் குறியாகிவிடும். செய்வதை விரும்பி செய்பவர்களானால், குறைவாகச் செய்தாலும் செய்தவற்றை நிறைவாக செய்வார்கள். வேலை செய்வதை பாரமாக எண்ணுபவர்கள் இருந்தால், எத்தனைதான் அவர்கள் செய்தாலும், செய்தவற்றில் தரம் இருக்காது. தனக்கென ஒரு இலட்சியம் இல்லாமல், ஏனோதானோ என்று செய்பவர்களைக் கொண்டு என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டிருந்தால், அவர்களின் தரத்துக்கு நீங்கள் கீழிறங்க நேரிடும். உங்கள் இலட்சியங்கள் அவர்கள் மட்டதிற்கு தாழ்ந்து விடும்.


சாதிக்க வேண்டுமென்ற ஆசையிருந்தால், சாதிக்கத் துடிக்கும் நெஞ்சங்களை தேடித்தேடி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆக்கத்திற்கான சிந்தனையோடு ஒத்துவராத, சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளேதும் இல்லாதவர்களை இனம் கண்டு சீக்கிரத்தில் விலக்கிவிடுங்கள். குறிக்கோளில்லாதவருடன் பயணிக்கும் ஒவ்வொரு மணித்துளிகளிலும், உங்கள் வளர்ச்சியும் முன்னேற்றமும் உங்களிடமிருந்து விலகிக் கொண்டே இருக்கும். அவர் நீண்ட தூரம் உங்களோடு பயணித்துவிட்டால், நீங்கள் இலட்சியங்களை அடையமுடியாமல் அவரது எண்ணவோட்டத்திற்கு கீழிறங்கி நின்றிருப்பீர்கள்.


நீங்கள் சாதிக்க, உங்களைச் சுற்றிலும் நம்பிக்கையும், இலட்சியமும் உடைய சுயபுத்தியாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வழிதவறும் நேரங்கிளில், அவர்களின் சிந்தனை உங்களை சரி செய்யும். நீங்கள் கலந்தாலோசிக்க ஏற்றதொரு கூட்டம் உங்களிடம் இருக்கும்.


சாதாரணமானவர்களையும், சராசரியானவர்களையும் தேர்ந்தெடுத்தால்

காரியங்களை வெறுமனே நகர்த்த மட்டும் முடியும்;

அசாதாரமான சாதனைகளை நிகழ்த்த

சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையாளர்களையும்

சவால்களை வாய்ப்பாக எதிர்நோக்கும் தைரியசாலிகளையும்

தேடித் தேடி சேர்த்துக் கொள்ளுங்கள்;

வெல்வதும், வீழ்வதும் சரித்திரமாகவே எழுதப்படும்!


- [ம.சு.கு 17.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page