“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-64
பணத்தைப் பற்றி என்ன தெரியும்?
நூலகத்தில் பணிபுரிந்தவர், தன் காலமெல்லாம் ஈட்டிய ஒவ்வொரு ரூபாயையும், தனக்கென கொள்ளாமல் உடனுக்குடன் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்துள்ளார். தான் ஈட்டிய மாதவருவாயை தாண்டி, தன் ஓய்வூதிய பணம் முழுவதையும், தான் பெற்ற கோடிக்கணக்கான பரிசுகளையும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் செய்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல், தனக்கென செல்வம் சேர்க்க வேண்டுமென்ற ஆசையில்லாமல், ஒருவரால் தொடர்ந்து உழைத்து, கிடைக்கும் செல்வத்தையெல்லாம் வாரிவழங்க முடியுமென்றால், இவருடைய பார்வையில் பணம் என்றால் என்ன?
கையில் ஒரு பைசா இல்லாமல் நகரத்திற்கு வந்து தன் கடுமையான உழைப்பால் கோடிகணக்கில் சம்பாதித்து பெரும் செல்வந்தர்களாக வலம்வருகின்ற பல உழைப்பாளிகளை கண்டிருப்பீர்கள். இவர்களில் சிலர், இன்னும் வேகமாக வளரவேண்டுமென்ற ஆவலில், அதிகமாக கடன்வாங்கி ஒரு சில தவறான முதலீடுகளில் எல்லாவற்றையும் இழந்து பழைய நிலைக்கு சரிந்துவிட்டதையும் பார்த்திருப்பீர்கள். தன் கடுமையான உழைப்பால் செல்வத்தை சேர்க்கத் தெரிந்த அவர்களுக்கு, ஏன் அதை கட்டிக்காக்கத் தெரியவில்லை? அப்படியென்ன பணத்தைப்பற்றிய புரிதல் இல்லாமல்போனது அவர்களுக்கு?
தாயின் வளர்ப்பில் ஈகையைக் கற்று, கொடைக்கு புதிய இலக்கணம் வகுத்த பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை பயணம் முழுதும் ஈதல் மட்டும்தான். உயர் கல்வி, நல்ல வேலை என்று துவங்கிய வாழ்க்கை திருமணம், குடும்பம், குழந்தைகள் என்ற திசையில் பயனிக்காமல், ஏனோ சம்பாதிப்பது, ஏழைகளுக்கு கொடுப்பது என்ற திசையில் லயித்துவிட்டது. பணத்தால் ஏழைகளின் துயர் துடைக்கமுடியும் என்று கருதி, தொடர்ந்து உழைத்து சம்பாதித்து தர்மம் செய்தார். இவரது பார்வையில் பணம் ஏழைகளின் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமானதொரு கருவி.
காசில்லாமல் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து, கிடைத்த வேலையை செய்து, கிடைத்த 1-2 வேலை உணவை மட்டும் உண்டு வாழ்க்கையை துவக்கியவர்கள், தன் ஒவ்வொரு நொடியையும் உழைப்பு, வியாபாரம் என்று கண்ணும் கருத்துமாக இருந்து பெருஞ்செல்வத்தை சேர்த்திருக்கின்றனர். அதிலிருந்து மேலும் கவனத்துடன் இன்னும் பலமடங்காக சிலர் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், ஒருசிலர் தங்களின் தவறான அணுகுமுறையினால், பேராசையினால், சேர்த்தவையெல்லாம் தொலைத்து, கடனாளியாய் நிற்கிறார்கள். மிகவும் கஷ்டப்பட்டு செல்வம் சேர்க்கத் தெரிந்த இவர்களுக்கு, ஏன் திடீரென்று கவனக்குறைவும், பேராசையும் தொற்றிக்கொள்கிறது. ஏன் பணம் சிலரை இப்படி திசை மாற்றுகிறது?
ஆரம்பத்தில் நன்றாக வியாபாரம் ஓடிக் கொண்டிருக்கும். அதை மேலும் விரிவடையச் செய்ய படிப்படியாக திட்டமிட்டு செயல்படலாம். ஆனால் சில நண்பர்களும், ஆலோசகர்களும், சீக்கிரமாக முன்னேற வேண்டுமானால், தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி, அளவுக்கு மீறி கடன்வாங்கி முதலீடு செய்ய வைக்கின்றனர். தொழிலில் 20% இலாபம் இருப்பதால், வருடத்திற்கு 10% வட்டியில் கடன் பெறுவது தவறில்லை என்கின்றனர். இந்த விரிவாக்கத்தில் நடக்கும் விபரீதம் யாதெனில், சந்தையின் முழுநிலவரத்தையும் தெரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக விரிவுபடுத்தி விடுகின்றனர். போதுமான வாடிக்கையாளர் வரவேற்பில்லாமல், முறையான பணமேலாண்மை / நடப்பு முதலீடு மேலாண்மையும் இல்லாமல், அவ்வப்போது ஏற்படும் வியாபாரச் சரிவுகளில், தங்கள் சாம்ராஜ்யத்தையே முற்றிலுமாய் சரித்துவிடுகின்றனர்.
எங்கே தவறு செய்கிறார்கள்:
சந்தையின் எதிர்பார்ப்பு குறித்த புரிதல் இல்லாமல், முதலீடு செய்து சிக்கிக் கொள்கிறார்கள்;
நடப்பு மூலதனத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து, போதிய பணத்தை அதற்கு ஒதுக்காமல் மாட்டிக் கொள்கிறார்கள்;
போட்டிக்காகவும், கௌரவத்திற்காகவும் சக்திக்கு மீறிய சில சவால்களை ஏற்றுக்கொண்டு சிக்கிக் கொள்கிறார்கள்;
ரொக்கத்திற்கு வாங்கி கடனுக்கு விற்பதால், பணம் வந்து-போவது சமன் ஆகாமல், பற்றாக்குறையில் பரிதவிக்கிறார்கள்.
பணப்பிரச்சினைகளின் போது எடுக்கவேண்டிய கடினமான முடிவுகளை எடுக்காமல், அதிக வட்டிக்கு கடன்வாங்கி பிரச்சினைகளை தள்ளிப்போட்டு மேலும் பெரிதாக்கி மீளாத்துயரில் மூழ்கி விடுகின்றனர்.
பணத்தை, பண்டபரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக மட்டும் பார்க்காமல், உயிர்களையும், உறவுகளையும்விட அதிக மதிப்பளித்து, பகட்டில் வாழ்வை நகர்த்தி மாயையில் மாட்டிக்கொள்கின்றனர்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள்;
உண்மையில் பணம் ஒன்றும் செய்யாது;
பணத்தைக் கொண்டுள்ள
மனம்தான் எல்லாவற்றையும் செய்கிறது;
பணம் அல்ல இங்கு பிரச்சனை. அது தன்னிடம் இருக்கிறது, இல்லை என்கிற எண்ணம்தான் எல்லா பிரச்சனைக்கும் மூலாதாரம். பணத்தை ஒரு கருவியாக பார்ப்பவர்கள் அதை வைத்து ஆக்கத்திற்கான வழியை தேடுகிறார்கள். அதை தன் பகட்டாகக் கொள்பவர், அகங்காரத்துடன் மனிதத்தை துச்சமாக எண்ணி மிதிக்கிறார்கள். அந்த பணத்தை சேர்ப்பதில் பயனில்லை என்பவன் ஞானியாக முயற்சிக்கிறான் (அல்லது) சேர்த்து வைத்ததை எல்லாம் தன் சுற்றமும், ஏழைகளும் களிப்புற வாரி வழங்குகிறாரன்.
பணம் - யார் கையில்
இருக்கிறது என்பதைப் பொறுத்து
தர்ம, அதர்மங்கள் – எப்படி
வேண்டுமானாலும் வழிநடத்தப்படுகிறது;
பணத்தை ஒரு கருவியாக உணர்ந்தவன்
உறவையும், மனிதத்தையும் மதிக்கிறான்;
பணத்தின் மாயையில் சிக்கியவன் – ஒருநாள்
எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான்;
- [ம.சு.கு 12.12.2022]
Commenti