top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-61 – சரியா-தவறா? என்பது முக்கியமில்லை!

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-61

சரியா-தவறா? என்பது முக்கியமில்லை!


  • பெரும்பாலான வீடுகளிலும் காணப்படும், கணவன்-மனைவியிடையேயான கருத்து வேறுபாடுகள், மாமியார்-மருமகள் சண்டைகள், சகோதரர்களுக்கு இடையிலான போட்டாபோட்டிகள், ஒரு மிகப்பெரிய பனிப்போராய் வீட்டுக்குள் அரங்கேறிக் கொண்டிருக்கும். இவர்கள் யாரிடம் கேட்டாலும், ஒரு நீண்ட கதையை சொல்லி தான் செய்வது சரி என்று நியாயப்படுத்தி, மற்றவர் செய்வது தவறு என்று கதையை முடிப்பார்கள். உங்களுக்கு சுவாரசியம் வேண்டுமானால், அந்த மற்றவரிடமும் தனியாக கேட்டால், இதற்கு நேரெதிரான கண்ணோட்டத்தில், இன்னொரு கதை அரங்கேறி அவர்கள் செய்தது சரி என்றும் மற்றவர் செய்தது தவறு என்றும் நியாயம் கூறுவர். இதில் யார் செய்வது தான் சரி?

  • ஒவ்வொரு தேசத்திலும், ஏதேனுமொரு மூலையில் மக்களிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வு, பிரிவினைகளின் காரணமாக, ஒரு புரட்சிக்குழு உருவாகி நாட்டிற்குள் போராடிக் கொண்டிருக்கும். அந்த புரட்சியாளர்களிடம் கேட்டால், தங்களின் இனத்தை அரசாங்கம் கவனிக்கவில்லை என்று தங்கள் பக்கத்து நியாயத்தை கூறுவர். அதே சமயம் அரசாங்கமோ, அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கும். இந்த இருதரப்பு சரி-தவறென்ற சண்டையில், சில உயிரிழப்புக்கள் நிகழ்வது வேதனைக்குரியது. ஏன் இந்த ஆயுதம் ஏந்திய சண்டைகளும், உயிரிழப்பும்?


வீடுகளில் நடக்கும் இந்தப் பனிப்போர், நெருப்பே இல்லாமல் அவ்வப்போது புகைந்து கொண்டிருக்கும். இந்த போரை, வேண்டுமென்றே கிளறிவிட, பல கதாபாத்திரங்கள் அவ்வப்போது வந்துபோகும். எல்லா பாத்திரங்களும் அவர்கள் செய்வதுதான் சரியென்று சாதிப்பார்கள். இப்படி எல்லாருமே தங்கள் தரப்பு நியாயத்தை கூறி, தங்களுடையதையே சரி என்று சொன்னால், உண்மையில் எது தான் சரி? யார்தான் சரியானவர்?


இந்த குடும்ப சச்சரவுகளையெல்லாம் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லவா முடியும்! இவற்றின் நடுவில் சிக்கியுள்ள பலருக்கு அவ்வப்போது எண்ணற்ற மன உளைச்சல்கள். ஒரு சிலர் கவலை ஏதுமின்றி வாழ்க்கையை நகர்த்துவார்கள். இவர்களை பொருத்தமட்டில், யார் சரி? எது சரி? என்ற கவலை இல்லை. இருவருமே தனக்க வேண்டும். இருவர் சொன்னதையும் கேட்டுக் கொண்டு, வெறுமனே தலையாட்டிவிட்டு நகர்ந்து விடுவார்கள். யதார்த்தம் யாதெனில், சண்டையிடும் குடும்ப உறவுகளுக்கு, தங்கள் தரப்பு ஆதங்கத்தை செவிகொடுத்து கேட்டதே ஆறுதலாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் அப்போதைக்கு சாந்தப்படுத்தப்பட்டு வாழ்க்கை நகரும்.


வீட்டின் நிலை இப்படி இருக்க, தேசத்தில் ஏற்படும் சச்சரவுகளோ, அவ்வப்போது சிறு யுத்தங்களாகவே மாறி சில உயிரிழப்புகள் அரங்கேறுகின்றன. உயிரிழப்பு போராட்டத்தை மேலும் தூண்டி, யுத்தத்தை தீவிரப்படுத்துகிறது. ஒரு சில சமயங்களில், அரசாங்கம் பெரும் படை கொண்டு போராட்டத்தை முற்றிலுமாய் சிதைக்கிறது. என்னதான் அடக்கினாலும், அதன் வித்தை ஒழிக்க முடிவதில்லை. புரட்சியாளர்கள் ஆயுதமேந்தத் தொடங்கிய கணத்தில், இருதரப்பிலும் குருதிகசிவது வழக்கமாகிறது. அதேசமயம் இன்னொருபுறம் அறவழியில் போராடி தர்மநியாயங்கள் நிலைநாட்டப் படுவதும் நிகழ்கிறது. இப்படி தேசத்திற்குள் இருக்கும் வேறுபாடுகள், சண்டைகளை கடந்து, தேசம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இவைகளினிடையே சிக்கிய பொது ஜனங்கள், எது சரி-தவறென்று தங்களுக்குள் வாதிடுவதோடு நிறுத்திக் கொண்டு, எப்பக்கமும் சார்ந்திராமல், தங்களின் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.


இப்படி எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் வாழ்வின் எல்லா இடங்களிலும் வெவ்வேறு கோணங்களில் தொடர்கிறது;

  • ஊழியர்கள்-மேலாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு;

  • பள்ளி-ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு;

  • தேசங்கள்-மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு;

  • நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு;

  • திட்டங்களை செயலாக்கும் குழுவில் சகஊழியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு;

இருபுறத்திலும், அவர்கள் கோணத்தில் நியாயம் இருக்கலாம். இருபுறத்தையும் கேட்டுவிட்டு, இருவரையும் சமாளித்து முன்செல்வதுதான் இங்கு சாமர்த்தியம். ஒருசில பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்காது. ஒருவேளை தீர்வு இருந்தாலும் அதை அவர்களுக்கு புரியவைப்பது இப்போதைக்கு முடியாமலிருக்கும். விளைவுகளின் போக்கையும், வீரியத்தையும் கருத்தில் கொண்டு, சரி-தவறுகளை பெரிதுபடுத்தாமல், நடப்பவற்றை உள்ளவாறு அப்படியே ஏற்றுக்கொண்டு முன்னேறுவதில் தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது.


கருத்து வேறுபாடுகள் இல்லாத உயிரினம் இல்லை;

வேறுபாடுகள் முற்றி கைகலப்பிலும் முடியலாம்;

சண்டை சச்சரவுகளின் விளைவுகளை உணர்ந்தவர்கள்

சரி-தவறுகளுக்கு மத்தியில்

சமயோசிதமாக பயணித்து சாதிக்கிறார்கள்;

சூழ்நிலைக்கேற்ப எந்தப் பக்கமும் சாயாமல்

சாமர்த்தியமாய் அமைப்பை வழிநடத்துபவர்களே

அமைதியை நிலைநாட்டி வெற்றிகாண முடியும்;


- [ம.சு.கு 09.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page