“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-55
சற்று முன்னதாக கிளம்பலாமே!
தினம்தோறும் காலையில் எல்லா வீடுகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் தயாராவது ஒருபுறம், உணவுகளை தயார்செய்வது மறுபுறம் என்று பரபரப்பு நிறைந்தது, இந்த அன்றாட வழக்கம். இது அன்றாட வழக்கமென்ற போதிலும், எத்தனை வீடுகளில் இவை பரபரப்பின்றி இயல்பான நடையில் நிகழ்கின்றன. உங்கள் பிள்ளைகள் எத்தனை முறை பள்ளி வாகனம் வருவதற்கும் முன்னர் நிறுத்தத்தில் தயாராக நிற்கின்றனர்? எத்தனை முறை தாமதமின்றி, அலுவலகத்திற்கு வாகனத்தை வேகப்படுத்தாமல் சாதாரணமாக ஒட்டிச் சென்றிருக்கிறீர்கள்?
அன்றாடம் எண்ணற்ற நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் தேசம் பூராவும் நடைபெறுகின்றன. இவற்றில் எத்தனை நிகழ்ச்சிகள் சரியான நேரத்துக்கு துவங்கி, சரியான நேரத்திற்கு முடிகிறது. நிகழ்ச்சி தாமதமாகத்தான் துவங்கும், அரை மணி நேரம் தாமதமாகவே போகலாம் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டது. நேரக் கட்டுப்பாடும், ஒழுக்கமின்மையும் மக்களின் இரத்தத்தில் ஊறிவருகிறது. ஒருவர் சரியான நேரத்திற்கு செய்ய வேண்டும் என்று முயன்றாலும், பிறருடைய ஒத்துழைப்பின்மை காரணமாக, நேரத்தை கடைபிடிப்பது கடினமாகி வருகிறது.
வீடுகளுக்குள் காலையில் நிகழும் கலேபரங்களுக்கு அளவே இல்லை. ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்! உங்கள் வீட்டில், காலைவேளையில் தாமதத்தின் காரணமாக தேவையில்லாத திட்டுதல்கள் இல்லாமல் வேலை நடக்கிறதா? ஏன் இந்த அவசரகதி? காலையில் எழுவதில் தாமதம், காரணம் முந்தைய நாள் தொலைக்காட்சி கைப்பேசிகளில் நேரம் செலவழித்துவிட்டு உறங்குவதில் தாமதம். தாமதமாக எழுந்தாலும், பள்ளி வாகனம் வருவதற்குள் காலைச் சிற்றுண்டியும், மதிய உணவுப்பையும் தயாராக வேண்டும். நம்மோடு குழந்தைகளும் தாமதமாக எழுந்து பழகுவதால், அவர்கள் தயார் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இப்படி எல்லாமே தாமதமாக, அரையும்-குறையுமாக செய்வதற்கு பதிலாக, அரை மணி நேரம் முன்னதாக எழுந்தால், எல்லாமே பரபரப்பின்றி பொறுமையாக நடக்குமே. சட்னியில் உப்பு போட மறக்கும் அவசரகதி நிலைகள் இல்லாமல் இருக்குமே!
நாட்டில் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் பெரும்பாலும் தாமதமாக துவங்குவது வழக்கமாகி, அவையின்று சாதரணமாகிவிட்டது. இயல்பாகிவிட்ட இந்த தாமதத்தை கருத்தில் கொண்டு, நம்மவர்கள் அழைப்பிதழ்களில் ஒரு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ச்சிநிரலில் குறிப்பிடுகின்றனர். இந்த தாமதங்கள், மக்கள் அனைவராலும் படிப்படியாக, கவனக்குறைவின் காரணமாக, தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொண்ட ஒரு மிகப்பெரிய ஒழுக்கச் சீர்கேடு. உண்மையில், நேரத்தின் விலையை உணராதவர், வெற்றியாளராக வருவது சத்தியமே இல்லை.
ஒரு புதிய வாடிக்கையாளரை சந்தித்து, அவரின் நம்பிக்கையை வென்று புதிய வியாபாரத்தை பெற விரும்புகிறீர்கள். அவருடனான நேர்காணலுக்கு, குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாக அங்கு இருப்பதற்கும், வரும்வழியில் வாகன நெரிசலில் 10 நிமிடம் தாமதமாகிவிட்டது என்று அவரிடம் சாக்கு சொல்வதற்கும் வித்தியாசம் எப்படி இருக்கும்? சந்திப்பிற்கு சரியான நேரத்தில் வர தெரியாதவனால் எப்படி தொழிலில் பொருட்களை சரியான நேரத்தில் தயார் செய்து கொடுக்க முடியும் என்று அந்த புதிய வாடிக்கையாளர் யோசிக்காமல் இருப்பாரா?
இப்படி இயல்பாக ஊறிவிட்ட தாமதத்தின் காரணமாக, மக்கள் எண்ணற்றவைகளை தங்களின் கண்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் இழந்து வருகின்றனர்.
குறித்த நேரத்தில் பொருட்கள் கொடுக்கப்படாததால், வாடிக்கையாளர் இழப்பு!
தாமதமாகச் சென்றதால், இரயில், விமானங்களை தவற விட்டு முக்கிய நிகழ்வுகளை தவறவிடுவது!
குறித்த நேரத்தில் பணத்தை திருப்பித் தராததால், மக்களின் வார்த்தை நாணயங்கள் சரிகின்றன!
செல்வத்தைச் சேர்க்க போராடும் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில், எல்லாத் தாமதங்களும், ஏதேனுமொரு வகையில் பொருளிழப்பாகவே முடிகிறது.
ஒரு நண்பர் 10:30 மணி சந்திப்புக்கு, 10:00 மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும். ஒருவேளை வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும், அதிகபட்சம் 10-15 நிமிடம் தாமதம் மட்டுமே ஏற்படும் என்று இயல்பாகச் சொன்னார். அப்படி சிறிய தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதென்று நன்கு தெரிந்திருந்தும், ஏன் நாம் அந்த 10-15 நிமிடம் முன்னதாக கிளம்புவதில்லை? 10-15 நிமிட தாமதம் இயல்பென்று நாம் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். இந்த கவனக்குறைவு உணர்த்தும் பாடம் – “நாம் நம்முடைய நேரத்தையும் மதிப்பதில்லை! பிறருடைய நேரத்திற்கும் உரிய மதிப்பளிப்பதில்லை!”
நண்பர்களே!
உலகில் சாதித்தவர்கள் எல்லோருக்குமான
பொதுவான குணம் “நேரம் தவறாமை”
ஜனாதிபதியானாலும் துப்புரவு தொழிலாளியானாலும்
சொல்லியதைச் சொன்ன நேரத்தில் செய்தால் தான்
உங்களுக்கும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பிருக்கும்;
எண்ணிய எண்ணியாங்கு நடைபெற வேண்டுமானால்
நம் கைமீறிய தாமதங்களையும் கருத்தில் கொண்டு
சற்று முன்னதாகவே துவக்கினால் வெற்றி நிச்சயம்;
- [ம.சு.கு 03.12.2022]
Comments