top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-26 – சாமானியனுக்கு புரியும் வகையில் எளிமையாக சொல்லுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-26

சாமானியனுக்கு புரியும் வகையில் எளிமையாக சொல்லுங்கள்!


  • எனது நண்பர் ஒருவர், நான் குறிப்பெடுக்க வைத்திருந்த சட்ட புத்தகம் ஒன்றை எடுத்து படித்துப் பார்த்தார். ஆங்கிலத்தில் எண்ணற்ற வழக்கியல் வார்த்தைகள் கொண்டு இயற்றப்பட்ட சட்டம், தனி ஒரு வரியை மட்டும் படித்து புரிந்து கொள்ளமுடியாத வண்ணம் சட்டத்தின் சரத்துக்கள் இருந்ததை உணர்ந்து, இது எனக்கு வேண்டாம் என்று கீழே வைத்து விட்டார்.

  • உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கடிதம் வருகிறது. அதில் வெறுமனே “வரி குறைவாக செலுத்தியுள்ளீர்கள், மீதி வரியை உடனே செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கைகள் பாயும்” என்று மொட்டையாக எழுதப்பட்டிருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள். இந்த கடிதம் எந்த வரியை பற்றி குறிக்கிறது? எந்த ஆண்டிற்குரியது? எவ்வளவு குறைவாக உள்ளது? என்று எதுவும் தெரியாமல், யாரிடம் கேட்பது என்று புரியாமல், திண்டாட வேண்டியதுதான்.

இப்படித்தான், நமக்கு வருகின்ற தகவல்களும், கோரிக்கைகளும், உத்தரவுகளும் அரைகுறையாக இருக்கின்ற பட்சத்தில், நம்முடைய நிலைமை திண்டாட்டம் தான்;


சட்டத்தில் ஓட்டைகள் அதிகம். அதில் ஏதேனுமொரு வழி கண்டுபிடித்து பலர் தப்பிக்க, அது எளிமையான மொழி வழக்கில் எழுதப்படாமல், பலவற்றோடு இணைத்து, மிக நீண்ட சொற்றொடர்களாக எழுதப்பட்டிருப்பதும் ஒரு காரணமாகும். அப்படி சிக்கலாக எழுதப்பட்டுள்ள சரத்துக்களை, ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ற வண்ணம் திரித்து புரிந்து கொள்கின்றனர். பின்னர் அவை வழக்காக நீதிமன்றத்தில் வந்து நிற்கிறது.


சில சமயங்களில், நம் நண்பர்கள் / உறவினர்களில் நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை தெளிவாக சொல்லாமல், “நான் அன்று சொன்னேனே, அதுதான் இன்று நடக்கிறது” என்று மொட்டையாக சொல்வார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள்? எப்பொழுது சொன்னார்கள்? என்று நாம் சூழ்நிலைக்கேற்ப தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆகிவிடும். சில சமயங்களில், தவறான புரிதலினால், நாம் வேறேதேனும் ஒன்றை செய்துவிட்டு, கடைசியில் “நீ அப்படி சொன்னாய், நான் இப்படி நினைத்தேன்” என்று வாதாட வேண்டியதுதான். பல சமயங்களில், என்னைச் சார்ந்தவர்கள் அப்படி மொட்டையாய் என்னிடம் பேச ஆரம்பித்ததை கேட்டு, எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று புரியாமல், திருதிருவென்று முழித்து நின்றிருக்கிறேன்.


அலுவலக வேலையில், சில சமயங்களில், தெளிவற்ற மின்னஞ்சல்கள் வரும். அது எதற்காக எனக்கு அனுப்பப்பட்டுள்ளது? அதைக்கொண்டு நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று தெரியாமல் ஓரமாக வைத்து விட்டிருக்கிறேன். ஓரிருமுறை சில அவசர காரியங்கள் கூட, அரைகுறையாக வந்த மின்னஞ்சல் தவிர்க்கப்பட்டதால், இறுதியில் எனக்கு நஷ்டத்தில் முடிந்திருக்கிறது. உங்களுக்கும் அப்படி எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒவ்வொரு அனுபவமும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கும்.


நாம் எழுதுவது / பேசுவது / செய்வது எல்லாம், நமக்கு நன்றாக புரிந்திருக்கும். அதேசமயம், அடுத்தவர் அதை எப்படி புரிந்து கொள்வார் என்ற நோக்கில் அதை நாம் திருப்பிப் பார்ப்பது அதிமுக்கியம். நம்முடைய எழுத்து / பேச்சு / செயல்கள் எல்லாம், மற்றவர்களுக்கு புரியும் வகையில் இயல்பாகவும், எளிமையாகவும் இருப்பதற்கு, எனக்குத் தெரிந்த சில எளிமையான யோசனைகளைச் சொல்கிறேன்;


  • எதைப் பற்றி, யாரைப் பற்றி சொல்கிறோம் என்று முதலில் தெளிவாக குறிப்பிடுங்கள்;

  • இது யாருக்கு எழுதப்படுகிறது, யாரை சென்றடைய வேண்டும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கட்டும்;

  • இதற்கு முந்திய கடிதங்கள் குறித்த குறிப்புக்கள் - கடித எண், தேதி / பேச்சு வார்த்தைகள் குறித்த குறிப்பையும் எழுதுங்கள்.

  • முன் குறிப்பை தொடர்ந்து, எழுதப்படுகின்ற பொருள் என்ன? யதார்த்தத்தில் என்ன நடந்திருக்க வேண்டும்? களத்தில் என்ன நடந்திருக்கிறது? என்று தெளிவாக எழுதுங்கள்.;

  • கூடியவரை, சிறிய வாக்கியங்களாக எழுதுங்கள். உங்கள் புலமையை அங்கு காட்டாதீர்கள்;

  • நீங்கள் எழுதியதை, ஓரிருமுறை நீங்களே வாசித்துப் பார்த்து திருத்திய பின் அனுப்புங்கள்;

  • எழுதிய உங்களுக்கு எப்போதும் அது புரியும். ஆனால் அதை புதியவர் ஒருவர் வாசித்தால், எப்படி புரிந்து கொள்வார்? என்ற நோக்கில், நீங்கள் மறுமுறை வாசித்து திருத்தம் செய்தால், சொல்லப்பட்ட செய்தி உரிய வகையில் மற்றவர் முழுமையாக புரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம்;.

  • நீங்கள் அனுப்பிய கடிதம், உரியவரிடம் சென்று சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்;

சொல்லப்படும் கருத்துக்களும்

எழுதப்படும் எழுத்துக்களும்

கூடிய வரை எளிமையாக இருக்கட்டும்

எதுகை மோனையும்

வெண்பா ஆசிரியப்பாக்களும்

அழகான கவிதைக்கு தான்;

உங்களின் சாதாரண கடிதங்களுக்கு இல்லை.


- [ம.சு.கு 04.11.2022]

5 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page