top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-25 – சொல்லிச் சொல்லி செய்ய வைப்பதில் பயனில்லை!"

Updated: Nov 3, 2022

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-25

சொல்லிச் சொல்லி செய்ய வைப்பதில் பயனில்லை!


  • வீட்டிலே உங்கள் குழந்தையிடம் பழம்வெட்ட கத்தி எடுத்து வரச் சொல்கிறீர்கள். குழந்தை சரியாக கத்தி எடுத்து வந்து தருகிறது. அதே வேலையை, உங்கள் மனைவியிடம் சொல்கிறீர்கள். அவர் கத்தியுடன் ஒரு தட்டையும் கூடவே எடுத்து வந்து தருகிறார். இவர்களில் யார் செய்தது சரி?

  • அலுவலகத்தில் உங்கள் பணியாளரிடம், இன்ன பொருள் குறிப்பிட்ட அறையில் இருக்கிறது. அதை எடுத்து இன்ன வேலையை செய்து முடிக்கச் சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறீர்கள். சில மணிநேரங்களுக்கு பின்னால் நீங்கள் திரும்ப வந்து பார்த்தால், அந்த வேலை செய்யப்படவில்லை. ஊழியரிடம் கேட்டால், நீங்கள் சொன்ன பொருள் அந்த அறையில் இல்லை. அதனால் அதை துவக்கவில்லை என்று சாதாரணமாக சொல்கிறார்.

  • உங்கள் ஊழியர் ஒருவரிடம், சிறு பட்டியல் ஒன்றை கொடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் முறையாக வாங்கி வரச் சொல்கிறீர்கள். பொருட்கள் பல்வேறு கடைகளில் வாங்க வேண்டும். அதை கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தி, போகும் வழியில் இருக்கும் ஒவ்வொன்றையும் வாங்கிச் சென்றால், வேலை சீக்கிரத்தில் முடியும். அதை விடுத்து, முதலாளி முறையாக வாங்கச் சொன்னார் என்ற வார்த்தையை அப்படியே எடுத்துக்கொண்டு, பட்டியலில் உள்ளபடியே ஒவ்வொன்றையும் வரிசையாக வாங்க முயற்சித்தால், ஒவ்வொரு பொருளாய் கடை ஏறி இறங்கி, சென்ற கடைக்கே திரும்பச் சென்று பெரும்பாலான நேரத்தை வீணாகுவார்கள்.

இவை வெறும் உதாரணங்கள் அல்ல; அன்றாடம் நம் வாழ்வில் நிகழும் யதார்த்தங்கள்;


குழந்தைக்கு சிந்திக்கும் திறன் இப்போதுதான் வளர்ந்துவரும். அது சொன்னதை சரியாக செய்வதே பெரிய விடயம் தான். ஆனால் கையில் பழத்தை வைத்துக்கொண்டு கத்தியை கேட்பதை பார்க்கும் மனைவி, அடுத்து என்ன தேவைப்படும் என்று சிந்தித்து பழத்தை கொய்தால், அதை வைக்க தட்டு வேண்டும் என்று அதையும் சேர்த்துக் கொண்டு வருகிறார். இந்த சிந்தனை திறன் தான் மனித ஆற்றலின் சிறப்பு. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவது எல்லா வகையிலும் நம்மை தயார் நிலையில் வைத்திருக்கும். யதார்த்தத்தில் அப்படி எல்லோரும் சிந்தித்து செயல்படுகின்றனரா?


அதே சமயம் உங்கள் ஊழியர், உரிய பொருள் கிடைக்கவில்லை என்று எதையுமே செய்யாமல் அப்படியே நிறுத்தி வைத்தால், உங்களுக்குத்தான் மிகப்பெரிய நேர இழப்பு. குறிப்பிட்ட இடத்தில் பொருள் கிடைக்காவிட்டால், வேறு இடத்தில் தேடலாம் [அல்லது] உங்களை தொலைபேசியில் அழைத்து கேட்கலாம் [அல்லது] அந்த பொருள் தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் முடிந்தவரை தயார் செய்து வைக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை என்றால், அதுபோன்ற அடி முட்டாள்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நீங்கள் முன்னேறுவது கடினம் தான்.


உங்களைச் சுற்றி “எள் என்றால் எண்ணெய்”-ஆக நிற்கக்கூடிய சுயபுத்தியுடைய நபர்கள் இருந்தால், உங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும். “சொன்னால் தான் செய்வார்கள் - சொல்வதை மட்டுமே செய்வார்கள்” என்ற சொல்புத்தி உடையவர்களை வைத்திருந்தால், உங்களால் அதிக தூரம் பயணிக்க முடியாது. ஏனெனில் எல்லாவற்றிற்கும் நீங்களே வரிவரியாய் உத்தரவு கொடுக்க வேண்டுமானால், உங்களுக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் ஓரளவுக்கு தான் செய்ய முடியும்.


எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லியே செய்யும் சொல்புத்திக்காரர்களை காட்டிலும், நாம் சொன்ன செயலுக்கு ஏற்ப தன் சுயபுத்தியை பயன்படுத்தி, அந்த வேலையை சீக்கிரமாக / சிறப்பாக செய்து முடிக்கும் சுயபுத்தியாளர்களை, தேடித்தேடி உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பெரிய வெற்றிகளைப் பெற விரும்பினால், நிறைய செயல்களை நீங்கள் புள்ளிவைத்து தொடங்க மட்டுமே முடியும். அந்த செயலின் முழுகோட்டையும், உங்கள் குழு தான் பயனித்து முடிக்க வேண்டும். அதற்கு நம்பிக்கையான சுயபுத்தியாளர்கள் உங்களுடன் இருந்தால், உங்களால் எளிதில் மிக நீண்ட தூரம் பயணித்து பெரிய வெற்றிகளை பெற முடியும்.


சாதிக்க விரும்பினால்

சொல் புத்தியாளர்களை காட்டிலும்

சுயபுத்தியாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்;

நீங்கள் சொல்ல மறந்ததையும்

அவர்கள் சிந்தித்து நிரப்பி விடுவார்கள்;


- [ம.சு.கு 03.11.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page