top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : கேள்விகளை செம்மைப்படுத்துங்கள்

தியானமும் – புகைபிடித்தலும்


ஒரு ஜென் குருவிடம் இரண்டு மாணவர்கள் நீண்ட காலமாக பயின்றுவந்தனர். இருவருக்கும் எல்லா ஆன்மீக கல்வியையும் பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்துவிட்டார். இரண்டு மாணவர்களுக்கும், ஒருமுறை வெண்சுருட்டை (சிகரெட்) புகைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர். ஆனால் அதை புகைப்பதற்கு தங்கள் குருவின் முன்அனுமதி பெற விரும்பினர்.


முதலாவது மாணவன், குருவிடம் சென்று, ‘குருவே, அன்றாட தியானம் யோகப் பயிற்சியின் போது புகை பிடிக்கலாமா?’ என்று கேட்டான். குருவிற்கு கோபம் வந்து அவனை திட்டி விட்டார். அடுத்த முயற்சியை தாமதப்படுத்தினான் இன்னொரு மாணவன்.


இரண்டு வாரங்கள் கழித்து, இரண்டாவது மாணவன் குருவிடம் சென்று, ‘குருவே புகைப்பிடிக்கும் போது தியானம் செய்யலாமா?’ என்று கேட்டான். குரு உடனே, ‘கட்டாயம் செய்யலாம். எந்த செயலை செய்யும்போதும் தியானம் செய்வது மிக நன்று" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இந்த பதில் அவனுக்கு புகைக்க நேரடி அனுமதி தரவில்லை என்றாலும், அவன் குருவிடம் இதைப்பற்றி உரையாடி, செய்யலாம் என்ற கருத்தை பெற்றதால் அவன் புகைபிடித்தான்.


கேள்வியின் விதத்தில் பதில் மாறுபடும்


இந்த இரு மாணவர்களின் தேவையும் ஒன்றுதான். இருவருக்கும் இருந்த சூழ்நிலையும், குருவும், களநிலவரமும் ஒன்றுதான். ஆனால் கிடைக்கப்பட்ட பதில்கள் வெவ்வேறு. இது பதிலளித்தவரை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அவரிடம் கேட்ட கேள்வியின் விதத்தில்தான் அதன் பதில் அமைந்தது.


பொதுவாக, நேரடியாக இல்லை என்று சொல்லுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய கேள்விகளைக் கேட்கக் கூடாது. எடுத்த எடுப்பில் இல்லை / முடியாது என்று சொல்லிவிட்டால், உங்களால் மேலும் தொடர முடியாது. உத.; உங்களுக்கு நண்பரிடம் இந்த பொருள் வேண்டுமா? இல்லையா? என்று கேட்டால், நேரடியாக இல்லை என்று சொல்லிவிட்டால், மேலே எதுவும் பேச முடியாது. மாறாக, நான் இதை பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. நீயும் சற்று பயன்படுத்திப்பார் என்று சொன்னால் மறுப்பதற்கான வாய்ப்பு குறைவு.


கேள்விகளுக்கும் திட்டமிட அவசியம்


  • உங்களுக்கு வேண்டிய பதில் பெறுவதற்கு முதலில் உங்கள் கேள்விகள் திட்டமிடப்பட வேண்டும்.

  • யாரிடம் கேட்கிறோம்? அவர் பொதுவாக இதற்கு சம்மதிப்பாரா? இல்லையா? அவர் ஏற்கமாட்டார் என்கிற பட்சத்தில், அவர் ஏற்கும் வண்ணம் இதை எப்படி கேட்டுப் பெறுவது? என்று சிந்தித்து கேள்விகளை வடிவமைக்க வேண்டும்.

  • எடுத்தவுடன் கேள்வியை நேராக கேட்க வேண்டுமா? அல்லது எல்லா விளக்கங்களையும் முன்னரே சொல்லி, பின் கேள்வி கேட்க வேண்டுமா? என்ற தெளிவு வேண்டும்.

  • நமது குறிக்கோள் - நம் கேள்விகளுக்கு நேர்மறையான பதில்கள் வேண்டும். அதற்கு எந்த விதத்தில் கேள்விகளை கேட்க வேண்டும் என்பதில் அதிக திட்டமிடல் தேவை.


குழந்தைகளின் சாமர்த்தியம்


ஒரு குழந்தைக்கு மிட்டாய் வேண்டும். ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர்கள், அதற்கு மறுப்பு சொல்வர் என்பது அந்த குழந்தைக்குத் தெரியும். அந்த குழந்தை உடனே அங்கு கடையில் உள்ள மிகப்பெரிய தேவையில்லாத பொருள் ஒன்றைக் காட்டி, தனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்கத் துவங்குகிறது. அது தேவையற்றது என்று எவ்வளவு சொன்னாலும் கேட்பதற்கு தயாராக இல்லை. சிறிது நேரத்திற்குப் பின் குழந்தையை சமாதானம் செய்ய ‘அது வேண்டாம், வேறு ஏதேனும் ஒன்றைக் கேள் வாங்கித் தருகிறோம்’ என்று பெற்றோர்கள் சொல்கின்றனர்.


குழந்தை சற்று யோசித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட சின்ன மிட்டாய் வேண்டும் என்று சொல்கிறது. பெற்றோரும் எப்படியோ சமாளித்தாள் போதும் என்று வாங்கி கொடுக்கின்றனர். குழந்தை தனக்கு வேண்டிய மிட்டாயை முதலில் கேட்டிருந்தால் கிடைத்திருக்காது. ஆனால் அது அடம்பிடித்து கவனத்தை திசை திருப்பியதால், இந்த மிட்டாயை வாங்கி கொடுப்பதே சிறந்தது என்று பெற்றோரை ஏற்றுக்கொள்ளும் வகையில் செய்துவிட்டது. குழந்தைகளின் சாமர்த்தியங்களைப் பாருங்கள்.


கேள்வி-பதில்களின் உளவியல்


யார் கேட்கும் கேள்விகளுக்கும் இல்லை / முடியாது என்பது நிரந்தரமான பதில் இல்லை. கேட்கும் விதத்தில், கேட்பவர் கேட்டால் எல்லாம் சாத்தியமாகும்.


கால சூழ்நிலைகள், மனிதர்களின் மனநிலை, அவர்களின் தேவைகள், என்று பல உளவியல் சார்ந்த பினைப்பு நம்மைச் சுற்றி இயங்குகின்றன. இந்த உளவியலை தொடர்ந்து புரிந்துகொண்டு, கேள்விகளை வடிவமைத்தால் நமக்கு தேவையான நேர்மறையான பதில் கட்டாயம் கிடைக்கும்.


எப்போது நேரடியாக கேள்வி கேட்க வேண்டும், எப்போது அதிக பீடிகை வைத்து மறைமுகமாக கேள்வி கேட்க வேண்டும், என்கிற சாதுரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.


இதுதான் யதார்த்தம்



கேள்விகள் பலவிதம்
கேட்பவர் சாதுரியம்:

கேட்டால்தான் கிடைக்கும்
கிடைக்கும்படி கேட்க வேண்டும்:

கேட்பதற்கு தயங்கினால்
எதுவுமே கிடைக்காது"

இடம்-பொருள்-ஏவலறிந்து
கேள்வியால் ஜெயிக்க
உன்
கேள்விகளை செம்மைப்படுத்து;


- [ம.சு.கு 12-03-2022]




10 views0 comments

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 360 - பூஜ்ஜிய நம்பிக்கையில் ஆரம்பிக்கவேண்டும்!"

யார்வேண்டுமானாலும் வந்துபோகலாமென்கிற இடத்தில் எல்லா பாதுகாப்பையும் செய்துவிடுங்கள்–ஏனெனில் உங்களால் எல்லோரையும் அறிந்துவைத்திருக்க முடியாது

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 359 - பொருட்களின் வரத்தும், இருப்பும்!"

பற்றாக்குறையை சமாளிக்க உங்களிடம் போதுமான இருப்பிருந்தால் அன்று சந்தைக்கு நீங்கள் தான் எஜமானன்! நீங்கள் நிர்ணயிப்பதுதான் விலையும்,விற்பனையும்

Post: Blog2 Post
bottom of page