பயணங்கள் தடைபட்டால்
ஒரு குறிப்பிட்ட ஊருக்கு செல்ல முடிவு செய்து பேருந்து நிலையம் செல்கிறோம். சில காரணங்களினால் தாமதம் ஏற்பட்டு நாம் செல்ல வேண்டிய பேருந்தை தவற விடுகிறோம். வேறு பேருந்து இல்லாததால் நாம் திரும்ப வீடுவர நேருகிறது. வேறு பேருந்து இல்லை என்பதால் வீடு திரும்புவது மட்டும்தான் நமக்கிருக்கும் ஒரே தேர்வா? வேறு மாற்று வழிகள் இருக்கின்றனவா? என்று யோசித்தால், இவைகளில் ஏதேனும் ஒன்று பொருந்த நேரிடலாம்.
அந்த ஊருக்கா நேரடியான பேருந்தை விட்டால், வேறு ஏதேனும் அருகாமையில் உள்ள ஊருக்கு செல்லும் பேருந்து வழியாக, அந்த ஊரை அடைய முடியுமா என்று பார்க்கலாம்.
நமது அவசரத்துக்கும், பொருளாதார நிலைக்கு ஏற்ப தனி வாகனம் ஒன்றை வைத்து செல்லலாம்.
நம்மைப் போன்று வேறு சிலர் இருந்தால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து தனிப்பட்ட வாகனம் எடுத்துச் செல்லலாம்.
காரியம் அவசரம் இல்லை என்றால் நாளைய தினம் வேறு பேருந்தில் செய்து முடிக்கலாம்.
ஒருவேளை போக முடியாமல் போனாலும் முன்னர் சென்ற உறவினர் / நண்பர்களுடன் தொடர்பு கொண்டு நமக்கு வேண்டிய செயலை நிறைவேற்றலாம்.
இந்த யோசனைகள் பேருந்துக்கு மட்டுமென்றில்லை, செல்லும் பாதையில் மரம்விழுந்து தடைபட்டால், நாம் உடனடியாக மாற்றுப் பாதையை தேடிப்பிடிக்கிறோம்.
ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றோம். திடீரென்று மழை வந்தால் எப்படி, எங்கு மாற்றியமைத்து நிகழ்ச்சியை நடத்துவது என்று முன்னரே யோசித்து வைக்கிறோம்.
எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும், விளையாடும் 10-12 நபர்களுடன், கூடுவதாக 1-2 நபர்களை தயாராக வைக்கிறோம். எவரேனும் ஒருவர் காயம் பட்டு ஆட முடியாமல் போனால் மாற்று வீரரை களம் இறக்க தயாராக இருக்கிறோம்.
திடீர் மாப்பிள்ளைகள்
இவை எல்லாம் என்ன, திருமண வீட்டில் மாப்பிள்ளையோ, பெண்ணோ கடைசி நிமிடத்தில் திருமணத்துக்கு மறுக்கும்போது, திடீர் மணமகனோ, மணமகளோ தயாராவதைப் பற்றி செய்திகளை பத்திரிகைகளில் பார்க்கிறோமே. திருமணத்தை நிறுத்தவா முடியும் ? மாற்று மாப்பிள்ளையை தேடிவிடுகின்றனர்.
கட்டாயம் தேவையென்றால் மாற்றுவழிதான்
ஒன்றைக் செய்ய திட்டமிடுகிறோம். அதை செவ்வனே செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் சரிபார்க்கிறோம். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளினால் நாம் திட்டமிட்டவைகள் நடப்பது தடைபடலாம். அந்த நிகழ்வு தாமதப்பட்டாலும் பரவாயில்லை நஷ்டம் ஏதும் இல்லை என்கிற பட்சத்தில், அமைதியாய் கால சூழ்நிலைகள் சரியாகும் வரை காத்திருக்கலாம். ஆனால் திட்டமிட்ட செயல்கள் கட்டாயம் நடந்தே தீரவேண்டும் என்கிற போது, அதற்கான மாற்று வழிகளைக் காண வேண்டிய கட்டாயம் வருகிறது.
அனுபவம் வாய்ந்தவர்கள் எல்லாத் திட்டங்களுக்கும் கூடுமானவரை மாற்றுத் திட்டங்களை யோசித்து வைத்திருப்பார்கள்.
நிறுவனங்களின் மாற்றுத் திட்டங்கள்
பெரிய நிறுவனங்கள் மாற்று திட்டங்கள் இருக்க வேண்டுமென்பதை கட்டாய கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. மூலப் பொருட்கள் கொள்முதல் துவங்கி வாடிக்கையாளர் வரை, எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று ஏற்பாடுகளை பெருநிறுவனங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.
ஒரு மூலப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமோ அல்லது வாடிக்கையாளர் நிறுவனமோ மூடப்பட்டால், நமது நிறுவனத்தை மூடுகின்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதனால் தொடர்ந்து மாற்று விற்பனையாளரையும், வாடிக்கையாளரையும் தேடி வைக்கிறது. இது பொருட்கள் வாங்க-விற்க என்று மட்டுமில்லாமல், ஒரு ஊழியர் திடீரென்று வேலையைவிட்டு நின்றால், அந்த வேலையை எப்படி, யாரைக் கொண்டு செய்வது என்ற திட்டமிடல்களை நிறுவன கொள்கைகளாக வகுத்து வைத்துள்ளனர்.
வாழ்க்கையில் மாற்றுத்திட்டங்கள்
இப்படி மாற்று ஏற்பாடு என்பது வியாபாரத்துக்கு மட்டும் என்றில்லை, நமது அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை. ஒன்று இல்லாவிட்டால் அதற்கு இணையான / ஈடான மற்றொன்றை தேர்வு செய்து வாழ்க்கையை நகர்த்த வேண்டும். நாம் எதிர்பார்ப்பது இல்லை என்று வருந்திப் பயனில்லை.
குழந்தைகளைப் பாருங்கள். நன்றாக வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும். திடீரென்று மழை பெய்தால், அதிகம் கவலைப்படுவதில்லை. உடனே அருகிலுள்ள கூரையின் கீழ் மாற்று விளையாட்டுக்களை தொடங்கிவிடும். குழந்தைகளின் ஆசை விளையாடுவது. எதிர்பார்த்த விளையாட்டுகளை விளையாட முடியவில்லை என்றால், கூரையின் கீழ் விளையாடவல்ல ஏதேனுமொரு விளையாட்டை தேர்வு செய்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும்.
மாற்றுதிட்டங்கள் – காலத்தின் கட்டாயம்
இன்றைய அவசர உலகில் எதுவும் நிகழலாம்-நிகலாமலும் போகலாம். எதற்கும் மாற்று ஏற்பாடுகள் தேவையென்பது காலத்தின் கட்டாயம்.
ஒன்றை மட்டும் நம்பி பயணித்தால், சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், நட்டாற்றில் நிற்க வேண்டியதாகி விடும். அதற்காக கையில் உள்ளவற்றை விட்டுவிட்டு, வேறு வழிகளை பற்றி மட்டுமே யோசித்தலும் வீண்!
எல்லாவற்றிற்கும் திட்டமிடுங்கள்
வெற்றிபெற ஆசையிருந்தால் திட்டமிடல் தான் அதிமுக்கியம்.
மாற்று வழிகள், திட்டங்களை முன்னரே யோசித்து வைப்பது,
தன் இலட்சியப் பாதையில் தோல்வியை தவிர்க்க அரணமைப்பது போன்றது.
கடின உழைப்புடன் சற்றே சமயோசிதமாய் மாற்றுத் திட்டங்களையும் முன்னரே யோசித்து வைப்போம். யதார்த்த வாழ்க்கையில், எதற்கும் தயாராக இருப்போம். நடப்பதெல்லாம் நன்மைக்கே.நடக்காமல் போகின்றவைகளுக்கு, அசராமல் மாற்றுத் திட்டங்களை செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்வோம்.
-

[ம.சு.கு – 05.03.2022]
Comments