top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வலியில்லாமல் வெற்றியில்லை

Updated: Jul 2, 2022

தாய்மையின் சேவை


“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.”

-குறள் (66)


கேட்பதற்கினிய அந்த மழலைச் சொல்லைக் கேட்க, ஒரு தாய் மரணவலியை பொறுத்தால் தான் முடியும். மனித இனம் தழைக்க, தாய்க்குலங்கள் தொடர்ந்து வலிகளின் உச்சத்தை, காலங்காலமாய் பொறுத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த மரண வலியையும் தாண்டி, பல இரவுகள் கண்விழித்து, குழந்தையை வளர்க்கின்றனர்.


படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரர் என்று எந்த பாகுபாடுமின்றி, எல்லாத் தாய்மார்களும் இந்த பெரும் சேவையை மனித குலத்திற்கு எந்த பிரதிபலனும் பாராது ஒருபுறம் செய்து கொண்டிருக்க, மறுபுறம் வாழ்வில் சாதிக்க, வெற்றியடைய ஏனோ நாம் மட்டும் உழைக்கவும், சின்னச்சின்ன வலிகளை பொறுத்துக் கொள்ளவும் மிகவும் தயங்குகிறோம்.


உழைக்காமல் வெற்றியா?


"உழைக்காமல் வெற்றிபெறலாம்" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டால், குறைந்தபட்சம் ஒரு கோடி பிரதிகளேனும் ஒரே வாரத்தில் விற்றுத் தீரும். அந்த அளவிற்கு உழைப்பதற்கு தயங்கும் மக்கள் கூட்டம் இன்றைய தினத்தில். அதிலும் முக்கியமான விடயம் ஒன்று யாதெனில், அந்த புத்தகத்தை வாங்கினாலும் படித்துப் பின்பற்ற கூட சோம்பேறித்தனம் படுபவர்கள் ஏராளம்.


  • தேர்வில் முதல் மதிப்பெண் பெற நிறைய படிக்க வேண்டும்;

  • விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடிக்க நிறைய பயிற்சி செய்யவேண்டும்;

  • பணக்காரனாக அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும்;

  • ஓவியராக, எழுத்தாளராக நிறைய வரைய / எழுத வேண்டும்;


இவை அனைத்திற்கும் உங்கள் மனம் ஏதேனும் ஒரு குறுக்குவழியை யோசிக்கக்கூடும். ஆனால் எந்த ஒரு குறுக்குவழியும் நிரந்தரமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


ஆரம்பத்திலேயே உழைக்கப் பழகிவிட்டால்

உழைப்பு பழகிப்போய்விடும்;

சோம்பேறித்தனத்தில் ஊறியவர்களுக்கு

உழைப்பெனும் வார்த்தையே கசக்கும்;

உழைப்பில்லாமல் உன்னதநிலை அடைந்தோர்

உலகில் எவருமில்லை;


அதிர்ஷ்டத்தில் வருவதல்ல வெற்றி


சிலருக்கு, சில சமயங்களில், அதிர்ஷ்டத்தினால் சில வெற்றிகள் கிடைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்க வைக்க, அதற்கான உழைப்பு தேவை. உழைப்பைக் கொடுக்காவிட்டால், எந்தவொரு வெற்றியும் சீக்கிரத்தில் கைகழுவிவிடும்.


வாழ்வின் எல்லாவற்றிற்கும், உழைப்பு பொதுவானது. அதேசமயம், அந்த உழைப்பினுள்ளே, பலவகை உண்டு.

  • தங்களின் அறிவாற்றலால், செயல்களை சீர்படுத்தி / எளிமைப்படுத்தி செய்பவர்கள் உண்டு.

  • தங்களின் நிர்வாகத் திறமையால் / வசீகரிக்கும் ஆற்றலால், ஊழியர்களைக் கவர்ந்து வேலைகளை பகிர்ந்தளித்து முடிப்பவர்கள் உண்டு.

  • தங்களின் அதிகாரத்தினால், பிறரை மிரட்டி அடிபணிய வைத்து வேலையை சாதிப்பவர்கள் உண்டு.

  • தங்களின் சாதுர்யத்தால், பிறரை ஏமாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டி சாதிப்பவர்கள் உண்டு [இவர்கள் வெற்றியோடு பாவத்தையும் சேர்த்துக்கொள்கின்றனர்]

எதுவானாலும், ஏதேனும் ஒருவகையில் உழைப்பை துவக்கினால்தான் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். முதலடியை எடுத்து வைத்தவுடன் கால்வலிக்கிறது என்று உட்கார்ந்தால் வெற்றியின் படிகளை எப்படி ஏறுவது?


வென்றவர்களைப் படியுங்கள்


தேவையின்றி சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்கும் தருணங்களில், வெற்றியாளர்களின் சரிதையை படியுங்கள். குறிப்பாய், மாற்றுத்திறனாளிகள் எப்படி எல்லாத் தடைகளையும் தாண்டி, தங்களைத் தாங்களே முதலில் வெற்றிகொண்டு, சமுதாயத்தில் சாதித்தார்கள் என்பதை படித்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வெற்றியாளர்களைப் பார்த்த பின்னும் நீங்கள் ஓய்வின்றி உழைக்க முற்படவில்லை என்றால், நீங்கள் ஒரு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டிய நிலையில் உள்ளீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


விளையாட்டு


ஒவ்வொரு சாதனையாளரையும் கேட்டுப்பாருங்கள், அனுதினமும் எவ்வளவு மணி நேரம் களத்திலே வேர்வை சிந்தி பயிற்சி செய்கிறார்கள் என்று? உணவுக்கட்டுப்பாடு துவங்கி, ஓய்வின்றி தினம் தினம் மனம் தளராமல் பயிற்சி மேற்க்கொள்பவர்களால் மட்டுமே, போட்டி நாளில் எளிதாக யாரையும் சந்தித்து வெற்றி காண முடியும்.


இன்றெனக்கு கைவலிக்கிறது, கால்வலிக்கிறது,

நாளை செய்கிறேன் என்று தவிர்ப்பவர்களுக்கு

தினமும் சொல்ல ஏதேனும் ஒரு காரணம்

இருந்துகொண்டேதான் இருக்கும்;

வெற்றி பெற இந்த வலிகளை பொறுத்துத்தான் ஆகவேண்டும்;

வலி ஏற்படுமென்று பயந்தால்

விளையாட்டில் வெற்றிக்கு வாய்ப்பேயில்லை.


கல்வி


நன்றாகப் படிப்பவர்களால், எந்தவொரு தேர்விலும் எளிதாக வெல்ல முடிகிறது. இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றிபெற்று ஆட்சிப் பணிகளில் அமர, ஒவ்வொருவரும் தினமும் 14-16 மணிநேரம் படித்து தயாராகிறார்கள். படித்துப்படித்து களைத்துப் போகும் இந்த அறிவுஜீவிகளுக்கு முன்னால், நாம் புத்தகம் வாசிக்கவே சோம்பேறித்தனப்பட்டால், எங்கிருந்து முன்னேறுவது.


முதல்தலைமுறை செல்வந்தர்கள்


முதல் தலைமுறை செல்வந்தர்களோடு சிறிது நேரம் பேசி பாருங்கள். எப்படி? எங்கு? எதைக் கொண்டு? தங்களின் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள் என்று. அசந்துபோவீர்கள்!!


ஒன்றுமே இல்லாமல் துவக்கி

இன்று ஓராயிரம் ஊழியர்களுக்கு

ஊதியம் வழங்க முடிவதற்கு

எத்தனை உழைத்திருக்க வேண்டும்;


தொழிலை வளர்க்க, மழை-வெயில் பாராது, தெருத்தெருவாய் எத்தனை அலைந்து வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பார்கள். எத்தனை எத்தனை மனக்கஷ்டங்கள், ஏசுதல்கள், புறக்கணிப்புகள், தூற்றல்களைக் கடந்து சாதித்திருப்பார்கள். இந்த கஷ்டங்கள் எதுவுமே இல்லாமல் கோடிகளில் பணம் சேர்க்க முடியுமா? [பிறர் பொருளை அபகரிக்கக்கூட கொஞ்சமாவது உழைத்தால் தான் முடியும்].


கலைஞர்கள்


ஒரு நல்ல ஓவியராக, ஆயிரமாயிரம் ஓவியங்கள் வரைந்தால்தான் முடியும். எழுத்தாளராக ஆசைப்பட்டால், குறைந்தது 100-200 கட்டுரை/கதைகளை எழுதி பயிர்ச்சித்தால் மட்டுமே முடியும். வாசகர்களின் தேவையை அறிந்து, சமுதாயத்தின் தேவையை கருத்தில் கொண்டு, தங்களின் கருத்துக்களை எழுத்தாக்கி முறையாக தொகுப்பவர்களால் மட்டுமே சிறந்த படைப்புக்களை கொடுக்க முடியும். சொற்களில் எளிமையும், புரிதலும், இயல்பாக அமைய நிறைய எழுதி பயிற்சித்திருக்க வேண்டும். தொடர்ந்து எழுதுபவர்களாள் மட்டுமே காலப்போக்கில் பொக்கிஷங்களை படைக்க முடியும்.


வெற்றிபெறுவது ஓய்வெடுப்பதற்கல்ல


இங்கு கல்வி, செல்வம், விளையாட்டு என்று அலசப்பட்ட துறைகள் யாவும் சிறு பட்டியல் தான். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்து, அடுத்தகட்ட நிகழ்வுக்கு உங்களை தயார் படுத்திக் கொண்டே இருந்தால் தான் வெற்றியை தொடரமுடியும். ஒரு வெற்றிக்கே ஓய்வெடுக்க துவங்கிவிட்டால், பெற்ற வெற்றியும் குறுகிய காலத்திலேயே கைநழுவிப் போகும்.

உங்களின் வெற்றியை தீர்மானிப்பது – இலட்சியமா? (அ) உழைப்பா?
இலட்சியம் – 1% & உழைப்பு – 99%
இலட்சியம் இல்லாத உழைப்பு அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தும்
உழைப்பில்லாத இலட்சியம் வாய்பேச்சிலேயே நிற்கும்
குறிப்பிட்ட இலட்சியமும், தொடர் உழைப்பும் வெற்றியின் வாயில்கள்!

மறவாதீர்

“வெற்றிக்கு உழைக்க வேண்டும்” என்பது நிதர்சனம்;

அதேசமயம் – அந்த உழைப்பு

சமய-சந்தர்ப்ப-சாதுர்யம் கலந்த உழைப்பாக இருந்தால்

வெற்றி சற்றே எளிதாகவும், சீக்கிரமாகவும் கிடைக்கப் பெறும்:


- [ம.சு.கு 02.07.2022]4 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 355 - வியாபாரத்தில் போர்த்தந்திரம்!"

எல்லா சவால்களையும் கடந்து நீங்கள் ஜெயிக்க உங்கள் திறன்களை மேம்படுத்துவதோடல்லாமல் எதிரியின் பலவீனங்களை தெரிந்து வீழ்த்த வேண்டும்!

Comentarios


Post: Blog2 Post
bottom of page