• ம.சு.கு

[ம.சு.கு]வின் : இயற்கையின் போக்கில் வாழலாமே !!

காற்றும் – கடலோடிகளும்


ஒவ்வொரு கால நிலைக்கும், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப காற்றின் அளவு, திசை ஆகியவை வேறுபடுகிறது. ஒரு குறிப்பிட்ட திசையில் காற்று வீசும்போது, அதன் எதிர் திசையில் கப்பலைச் செலுத்த, பாய்மரங்களை மூட்டைகட்டி விட்டு, வேகமாக துடுப்புப் போட்டு கப்பலை செலுத்த வேண்டும். அதேசமயம், காற்றின் திசையில் பயணிக்க வேண்டியிருந்தால், பாய்மரங்களை விரித்து விட்டு, மெதுவாக துடுப்புப் போட்டாலே போதும், கப்பல் வேகமாக செல்லும். காற்றின் திசை, காலசூழ்நிலை ஆகியவற்றை தொடர்ந்து ஆய்ந்தறிந்து கப்பலை வழி நடத்துவதுதான் கைதேர்ந்த கடலோடிகளின் ஆற்றல். காற்றின் திசையில் கப்பலைச் செலுத்துவது பிரயானத்தை வேகப்டுத்தி மேலும் எளிமைப்படுத்திவிடுகிறது. அதை எதிர்த்து பயனிப்பதற்கு அதிக ஆற்றலும், நேரமும் தேவைப்படுகிறது.


நீரின் பயனம்


மலை உச்சியில் உள்ள நீர்நிலையில்ருந்து தண்ணீர் சிறு ஓடையாக கீழ் நோக்கி பாய்கிறது. எங்கெல்லாம் சரிவான பாதை இருக்கிறதோ, அதன் வழி தன் பாதையை அமைத்து கடலை சென்றடைகிறது. மேட்டிலிருந்து பள்ளத்தை பார்த்து பாய்வது நீரின் இயல்பு. அதே நீரை பள்ளத்திலிருந்து மேட்டுக் கொண்டு செல்ல, நாம் வாளியை பயன்படுத்தி சுமந்து செல்லவேண்டும். இன்று அவற்றுக்கு மோட்டார் வந்துவிட்டாலும், அதை இயக்க மின் ஆற்றல் தேவைப்படுகிறது. நீரின் பாதைக்கு எதிர் திசையில் பயணிக்க நாம் சற்று கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியுள்ளது.


நீரை மேலே எடுத்துச் செல்வது இயலாததன்று. ஆனால் மனிதன் தன் ஆற்றலை கூடுதலாக பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த நீரின் இயற்கைப் போக்கில் [புவியீர்ப்பு விசை] பயன்படுத்துவதற்கு, தனிப்பட்ட ஆற்றல் தேவையின்றி மிக எளிதாக நிகழ்கிறது. ஒரு மரத்தை மலை உச்சியில் இருந்து கீழே கொண்டுவர காட்டாற்றில் தள்ளிவிட்டாலே போதும். அது நீரின் போக்கில் கீழே வந்து சேர்ந்துவிடும். ஆனால் அதே கட்டையை மேலே எடுத்துச் செல்ல வாகனமும் எரி பொருளும் விரயமாகும்.


இயற்கையின் ஆற்றலோடு ஒருங்கிணைத்தல்


ஆம் !

இயற்கையின் போக்கில் அதை பயன்படுத்தும் போது நமக்கு மிகக்குறைந்த ஆற்றல் இருந்தாலே போதுமானதாகிறது. அதே இயற்கையின் போக்கிற்கு எதிராகச் செய்ய விரும்பினால், எண்ணற்ற ஆற்றலைச் செலவிட வேண்டும்.

மேலே சொன்னவை யாவும், நாம் எளிதாக புரிந்து கொள்வதற்கான சிறு உதாரணங்களே. இதன் அடிப்படையில் அன்றாட வாழ்வில் நமது லட்சியங்களை அடைய இந்த இயற்கை பாதையை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்துவதென்பது நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. நம்மால் இயற்கையின் ஆற்றலை நம் தேவைகளுடன் ஒருங்கிணைத்து செயல்பட முடிந்தால் வெற்றி எளிதாகும்.


செயற்கை ஆற்றல்


இன்றைய அவசர உலகில் இயற்கையின் செயல்பாடுகள் குறைந்துவருகின்றன. பல செயல்கள் / இயக்கங்கள் இயந்திரமயமாகிவிட்டன. அதேசமயம், இந்த இயந்திரமயமான நிலையிலும், அவற்றின் எண்ணற்ற ஆற்றல் வீணாகப்போவதும் நம் கண்கூட காணமுடிகிறது. இயற்கை ஆற்றலைத்தாண்டி, இயந்திர ஆற்றலுக்கு எதிராகவும் சில செயல்கள் தேவையின்றி நிகழ்ந்தேறுகின்றன. மனிதன் இயற்கையோடு பயணிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு குறையும் போது, குறைந்தபட்சம் மனிதன் உருவாக்கிய செயற்கை ஆற்றலினையாவது வீணடிக்காமல், அதன் போக்கில் பயணித்து வெற்றி கொள்ள வேண்டும்.


ஆற்றல் வீணடிப்பும் – மாற்றுப் பயன்பாடும்


  • இயந்திர ஆற்றல் பயன்பாடு - ஒரு சிறு விவசாயி, தன் பொருட்களை மாட்டுவண்டியில் வெகுதூரம் சந்தைக்கு கொண்டுவர மிகவும் சிரமப்பட்டார். அதேசமயம், அந்த ஊருக்கு பொருட்கள் கொண்டு வரும் வாகனத்தில் ஒன்று மதியம் காலியாக திரும்பி வருவதை அறிந்து, தனது விவசாய பொருட்களை அந்த வண்டியில் குறைந்த விலையில் நகரத்திற்கு கொண்டு செல்ல வழி செய்து கொண்டார். அந்த வாகன உரிமையாளருக்கு காலியாக செல்ல வேண்டிய இடத்தில், சிறு வருமானம் கிடைத்தது. வீணாய்ப்போன இயந்திர ஆற்றல் இருவருக்கும் பயன்பட்டது.


  • உடல் அமைப்புக்கேற்ப செயல்படுதல் - நண்பர்கள் சிலர் இரவில் வெகு நேரம் படிப்பார்கள். ஒரு சிலர் இரவில் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பார்கள். அவர்களின் இயற்கையான உடலமைப்பு, மனநிலைக்கு ஏற்ப அவர்களின் ஈடுபாடு கவனம் மாறுபடும். அந்த இயற்கை நிலைக்கு ஏற்ற நேரத்தில் அமர்ந்து படித்துக் ஆற்றலை சிறப்பாக்க வேண்டும். அதை விடுத்து, அவனைப்போல் நானும் படிப்பேன் என்று தனக்கு ஒவ்வாத நேரத்தில் படித்தால் பயன் குறைவாகவே இருக்கும். இது படிப்பு மட்டுமில்லாமல், உணவு, விளையாட்டு என்று எல்லாவற்றிலும், நம் உடலுக்கு இயற்கையாக எது பொருந்துமோ, அதன் வழி நடந்தால் பயன் அதிகரிக்கும்.


  • தகுதியினும் ஈடுபாடு அதிமுக்கியம் - நாம் வேலைக்கு ஆள் சேர்க்கும்போது, அந்த குறிப்பிட்ட வேலையில் ஈடுபாடு உள்ளவர்களை தேர்வு செய்தால், பயிற்சியளித்து பணியமர்த்துவது எளிது. அவர்களும் ஈடுபாட்டுடன் அங்கு செயல்படுவார்கள். அதற்கு மாறானவர்களை பணியமர்த்தினால் நமக்குத்தான் பெரும் கஷ்டம். உரிய கல்வித்தகுதி இருந்தாலும் ஈடுபாடு இல்லாவிட்டால் காரியம் கெடுவது உறுதி. கல்வித்தகுதி சற்றே குறைந்தாலும். ஈடுபாடு உள்ளவர்கள், அந்த வெற்றிடங்களை சீக்கிரத்தில் கற்று நிரப்பிவிடுவார்கள்.


  • உடல்-உணவு-மருந்து - நம் உடலுக்கு உணவே மருந்து என்கிறார்கள். அதை விடுத்து, சிறுசிறு உபாதைகளுக்கும் மருந்து மாத்திரைகளை நாடினால், அவை அப்போதைக்கு பயனளித்தாலும், காலப்போக்கில் பின்விளைவுகள் அதிகமாகவே ஏற்படுகின்றன. இயற்கையாக நம் உடலுக்கு ஏற்புடைய, காலச் சூழ்நிலைகளுக்கு உகந்த உணவுகளை அளவுடன் உண்டுவந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இலட்சிய பாதையில் நிம்மதியாய் பயணிக்கலாம்.


ஆற்றலின் பாதையில் வாழ்க்கையை எளிதாக்குங்கள்


இப்படி இயற்கையின் ஆற்றல், இயந்திரத்தின் ஆற்றல்களை எப்படி பயன்படுத்துவது என்று எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம். இவைகளிலிருந்து, நீங்கள் மனதில் பதிய வேண்டியது ஒன்றுதான். இயற்கையின் ஆற்றலோ, செயற்கை இயந்திர ஆற்றலோ, எந்த ஒரு ஆற்றலையும் எதிர்த்து செயலாற்ற முற்படுவதை விட, அந்த ஆற்றலின் பாதையில், அதன் போக்கை பயன்படுத்தி நமது தேவைகளை / வேலைகளை எப்படி சுலபமாக முடிப்பது என்று திட்டமிட்டால் வாழ்க்கை எளிமையாகவும், சுலபமாகவும் இருக்கும்.


பந்தின் போக்கில் ஓட்டங்களை கூட்டலாமே


ஆற்றலை அதன் போக்கில் பயன்படுத்தும்போது, அதன் பலன் அதிகரிக்கிறது. உங்களின் வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. (உத.,) மட்டை பந்து விளையாட்டில் வேகமாக வரும் பந்தை இலாவகமாகத் திருப்பி அந்த வேகத்தைப் பயன்படுத்தி ஓட்டங்களை கூட்டும் விளையாட்டு வீரர்கள் எளிதாக அணியின் ஓட்டங்களை அதிகரிக்கிறார்கள். அதற்கு எதிராக போராடுபவர்கள், மிகவும் கஷ்டப்பட்டு ஓட்டங்களை சேர்க்க வேண்டியுள்ளது.


உங்களைச் சுற்றி இயங்குபவைகளையும், ஆற்றல்களையும் நன்றாக அறிந்து வைத்திருங்கள். உங்களுக்கத் தேவையானவைகள் என்னென்ன என்று திட்டமிட்டு, அதை இப்போதைக்கு இருக்கும் ஆற்றல் / செயல்களின் பால் எப்படி ஒருங்கிணைத்து செயல்படுத்துவது என்று அலசிப்பார்த்து, ஏற்ற முறையை பயன்படுத்தி, வெற்றி காணுங்கள்.


மறவாதீர்கள்!


“வெற்றிக்கு உழைக்க வேண்டும்” என்பது நிதர்சனம்

அதேசமயம் – அந்த உழைப்பு

சமய-சந்தர்ப்ப-சாதுர்யம் கலந்த உழைப்பாக இருந்தால்

வெற்றி சற்றே எளிதாகவும், சீக்கிரமாகவும் கிடைக்கப் பெறும்."


- [ம.சு.கு - 19.03.2022]