top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : பரிசுச்சீட்டில் வென்றவை – நிலைப்பதில்லை – ஏன்?

Updated: Aug 3, 2022


அதிர்ஷ்டம் ஆண்டியையும் அரசனாக்கும்


நம்முடைய பேராசை


நம் எல்லோருக்குமே, உலகின் மிகப் பெரிய பணக்காரனாக வேண்டுமென்று ஆசை இருக்கிறது. அதற்கு ஏதேனுமொரு அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்று எப்போதுமே, ஒருவித பேராசை எல்லோர் மனதிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படிப்பட்ட பேரரசை, ஒரு சிலருக்கு சிறிய அளவுகளில் பரிசுச்சீட்டு [லாட்டரி சீட்டு] போன்ற வடிவங்களில் திடீரென்று அவ்வப்போது நிறைவேறுகிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டப் பணம் யாருக்காவது நீண்டகாலம் நிலைத்து இருக்கிறதா? என்று சற்று விசாரித்துப் பாருங்கள்.


பரிசுச்சீட்டு மோகம்


இன்றைய காலங்களில் தமிழகத்தில் பரிசுச்சீட்டுக்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. 20-25 வருடங்களுக்கு முன்னர், பரிசுச்சீட்டு வியாபாரம் எல்லா ஊர்களிலும், எல்லா தெருக்களிலும் களைகட்டி இருந்தது. தீபாவளி, பொங்கலுக்கு அரசாங்கமே சிறப்பு பரிசுச்சீட்டுக்கள் என்று 5 கோடி ரூபாய் வரை பரிசு அறிவித்திருந்தது. எங்கள் ஊரில், 10-15 நபர்கள் ஒன்றாகச் சேர்ந்து, அந்த 500 ரூபாய் மதிப்புள்ள பரிசுச்சீட்டை வாங்கியதை பார்த்திருக்கிறேன்.


அப்படி மாநிலம் முழுவதுமாய் விற்ற பரிசுச்சீட்டில், யாரேனும் ஒருவருக்கு, அந்த 5 கோடி ருபாய் பரிசு விழத்தான் செய்தது. அந்த அதிர்ஷ்டம் பெற்றவர், அந்தப் பணத்தைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்தாரா? என்று பார்த்தால், நான் அறிந்தவரை, அப்படி பரிசுச்சீட்டில் பணம் பெற்றவர் ஒருவர் கூட, அந்த செல்வத்தை நீண்டகாலம் தக்க வைத்துக் கொள்ளவில்லை. ஏன் அவர்கள், அந்த அதிர்ஷ்ட செல்வத்தை சீக்கிரத்தில் தொலைத்து நிற்கின்றனர்? இந்த கேள்விக்கான விடையை அலசும் முன் ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.


உழைத்தபணத்தை வீச முடியுமா?


ஒரு இளைஞன், தன் தாத்தாவிடம் கைச்செலவுக்கு அவ்வப்போது பணம் பெற்று ஊதாரியாக செலவு செய்துவந்தான். அவன் அவருடைய அறிவுரையை கேட்டி தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள தயாராக இல்லை. ஒரு முறை, அந்த தாத்தா பணத்தை கொடுக்கும் போது, அதிலிருந்து 10 ரூபாய் தாள் ஒன்றை வீட்டுக் கிணற்றிலே போடும்படி சொன்னார். அவனும் அதை தட்டாமல் செய்தான். அடுத்த வாரம், அவனுக்கு கொடுக்கப்பட்ட காசில், 100 ரூபாய் தாள் ஒன்றை எடுத்து கிணற்றில் போடச் சொன்னார். அதையும் ஏன் என்று கேட்காமல் செய்தான். அடுத்த வாரம், 500 ரூபாய் தாள் ஒன்றை எடுத்து பேடச் சொன்னார். அதையும் கிணற்றிலே வீசினான். ஒரு வாரம் கழித்து, அவன் மீண்டும் செலவிற்கு பணம் கேட்டபோது, அன்றையதினம் அவருடைய தோட்டத்தில் சில வேலைகள் இருக்கிறது, அதை இருவரும் சேர்ந்து செய்ய உதவினால்தான் தருவேன் என்று சொல்ல, ஒத்துக்கொண்டு அவனும் தாத்தாவுடன் சேர்ந்து தோட்ட வேலையை கவனித்தான். அன்றைய தினம் கடுமையான வெயிலில் இருவருமே மற்ற தொழிலாளர்களுடன் சற்று கஷ்டப்பட்டு உழைத்தனர். மாலையில் தாத்தா எல்லோருக்கும் கூலி கொடுக்கும் போது, பேரனுக்கும் ரூபாய் 200-ஐ கூலியாகக் கொடுத்தார்.


எல்லோரும் சென்றபின் தாத்தா அவனிடம் இருக்கும் ரூபாய் 200 தாளை அந்த வீட்டுக் கிணற்றில் வீசச் சொன்னார். பேரனுக்கு இப்போது பேரதிர்ச்சி. அவன் தாத்தாவிடம் இந்தப்பணம் தான் வேர்வை சிந்தி சம்பாதித்த காசு என்று வாதாடினான். உழைக்காமல் எளிதாக காசு கிடைத்தபோது, அதை கிணற்றில் போட்ட போது மனம் பதறவில்லை. அதுவே, தன் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை, கிணற்றில் வீச மனம் ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படிப்பினையை அந்த இளைஞரை சிந்திக்க வைத்து இப்போது திருத்தியது.


இது பேச்சுவழக்கில் யாரோ சொன்ன சிறிய கதை. இப்படி ஒரு தாத்தா பணத்தை கிணற்றில் வீச சொல்லி இருப்பாரா? என்று தெரியவில்லை. ஆனால் நடைமுறை வாழ்க்கையில், தம் உழைப்பின்றி வரும் பணத்தை பலரும் இப்படித்தான் தேவையற்றவைகளில் விரையம் ஆக்குகின்றனர்.


உங்கள் பரம்பரை சொத்து என்ன ஆனது?


உங்கள் ஊர்களில், தந்தை/பரம்பரை சொத்துக்களை மேலும் பெருக்கியவர்கள் எத்தனை பேர்? அந்தப் பரம்பரைச் சொத்தை தொலைத்தவர்கள் எத்தனை பேர்? என்று சற்று யோசித்துப் பாருங்கள். என் ஊரில், எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் அலசிய 50 குடும்பங்களில், கிட்டத்தட்ட 35 குடும்பங்கள், தங்களின் பரம்பரைச் சொத்தை தொலைத்துவிட்டனர். குறிப்பிட்ட சில 5 குடும்பங்கள் அவற்றைக் சிலமடங்காக பெருக்கியுள்ளனர். மீதமுள்ள 10 குடும்பங்கள், அந்த பரம்பரை சொத்தில் வரும் வருமானத்தைக் கொண்டு ஏதோ வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.


பரம்பரைச் சொத்தை தொலைத்தவர்கள் - 70%

சொத்துக்களை பெருக்கியவர்கள் - 10%

பரம்பரை சொத்தில் பிழைப்பவர்கள் - 20%


ஏன் இந்தப் பரம்பரை சொத்தைக்கொண்டு, அவர்களால் வெற்றி காண முடியவில்லை. இன்றும் தந்தையின் சொத்துக்களில், பாகம் பிரித்துக் கேட்டு தொலைத்தவர்கள் ஏராளமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சற்று யோசித்துப் பார்த்தால், இதுவும் ஒரு வகையில் அந்த தாத்தா-பேரன் கதை போலத்தான்.


உழைப்பில்லாத பணத்தில் அலட்சியம் ஏன்?


தங்களின் உழைப்பில்லாமல், மூதாதையரின் உழைப்பில் தங்களுக்கு கிடைத்தவற்றை வேண்டுமென்றே ஊதாரியாய் செலவு செய்து தொலைக்கின்றனரா? என்பதை அறிய, அப்படி சொத்தை தொலைத்த சிலரை ஆராய்ந்து பார்த்தேன்.


யதார்த்தத்தில், பலரும் அந்த சொத்துக்களை தொழிலில் முதலீடாக கொண்டு, நன்றாக வியாபாரம் செய்து பெருக்கப்போவதாகவே நினைத்து கொண்டு துவங்குகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்களால், அதில் கவனமாக இருந்து அந்த செல்வத்தை பெருக்கவும், காக்கவும் முடிவதில்லை. அவர்கள், ஏனோ தான் கடுமையாக உழைத்து ஈட்டிய பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் / கவனத்தைப் போல, பிறரது உழைப்பில் வந்த பணத்திற்கு கவனம் செலுத்த முடிவதில்லை. ஏன் இந்த இயல்பான கவனக்குறைவும், ஊதாரித்தனம் – தன் உழைப்பின்றி சும்மா வந்த பணத்திற்கு மட்டும்?


பரிசுச்சீட்டு வென்றவை எங்கே போனது


இதே தாத்தா-பேரன், பரம்பரை சொத்து கதை போலத்தான், பரிசுச்சீட்டு வெற்றியாளர்களின் கதையும். திடீரென்று பரிசுச்சீட்டின் கருணையில் பெரும் காசு கையில் வந்தால், அதை வைத்து என்ன செய்வதென்று உடனடியாக அவர்களுக்கு தெரிவதில்லை. அந்த தருணத்தில், நல்ல ஆலோசனை சொல்கிறேன் என்ற முறையில், விட்டுப்போன சில உறவுகளும், நட்புகளும் வந்து ஒட்டிக்கொள்ளும். அவர்கள் ஆயிரம் ஆலோசனைகளை அள்ளி வீசுவார்கள்.


அவற்றை முழுமையாக அலசிப் பார்க்கும் மனப்பக்குவமும், நிதானமும் அந்த பரிசுச்சீட்டு வெற்றியாளரிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. அந்த திடீர் செல்வந்தர்கள், தங்களுக்குள் ‘தாம் நிதானமாக யோசித்து, ஜாக்கிரதையாக செய்வதாகவே’ எண்ணிக் கொண்டு, அந்த செல்வத்தை, சிலவற்றில் முதலீடு செய்து தொலைத்து விடுகின்றனர். தொலைத்துவிடக்கூடாதென்று ஜாக்கிரதையாக செய்வதாக எண்ணி கவனமாக செய்பவர்களும் தொலைப்பது எதனால்?


செல்வத்தை கையாள்வதொரு கலை


நம்மிடம் இருக்கும் செல்வம், பெரியதோ-சிறியதோ, அதை கையாள்வது ஒரு மிகப்பெரிய கலை. மாதம் 10,000/- ரூபாய் ஊதியம் பெறுபவரிடம், திடீரென்று 10 கோடி ரூபாய் கொடுத்து இதை வைத்து, தொழில் செய்து நன்றாக வாழ், என்று கொடுத்தால், அவரால் கட்டாயம் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது.


நடைமுறையில், பணத்தை முதலீடு செய்து பெருக்க, அன்றைய காலகட்ட வியாபாரங்கள், சந்தை நிலவரங்கள் குறித்த சரியாண புரிதல் வேண்டும். மேலும் சந்தை நிலவரங்கள் குறித்து தொடர்ந்து அலசி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். எது பாதுகாப்பான முதலீடு, எந்தத்துறையின் முதலீடுகளில் ஆபத்துக்கள் அதிகம், எதில் லாபம் அதிகம், அந்த அதிக லாபத்திற்கு இணையாக வரும் ஆபத்துக்கள் என்ன, என்பதை அலசிப் பார்த்து தொடர்ந்து சந்தையை கற்றுக்கொள்ள வேண்டும்.


சந்தைகுறித்த எல்லோரும் முறையாக கற்கின்றனரா?


சந்தையை குறித்த புரிதலை ஆழப்படுத்தி, செல்வத்தை கையாளும் தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, அதிர்ஷ்டப் பணமானாலும், பரம்பரைச் சொத்தானலும், அவற்றைக் உரியமுறையில் காத்து, பெருக்க முடியும். அப்படி சந்தை குறித்த அறிவை எல்லோரும் முறையாக வளர்த்துக்கொள்கின்றனரா? இந்தக் கேள்விக்கான விடை, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் செயல்பாடுகளை அலசிப்பார்த்தால் உங்களுக்கே புரியும். நான் பார்த்தவரை, கிட்டத்தட்ட 80% பேருக்கு, சந்தையைப் பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை.


அவர்கள், சந்தை எப்போதும் தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று அனுமானித்து, ஏதாவதொரு வியாபாரத்தைத் துவக்கி நஷ்டப்படுகின்றனர். பலசமயங்களில், ஆட்டுமந்தை குணம்போல, ஒருவர் செய்து வெற்றிபெற்ற தொழிலையே, பலரும் துவக்கி சீக்கிரத்தில் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியாலேயே தொலைந்து போகின்றனர். அதிலும் உழைப்பின்றி சும்மா வந்த காசை, வியாபாரம் செய்கிறேன், முதலீடு செய்கிறேன் என்று தொலைப்பது மிக மிக அதிகம்.


செல்வம் காக்க என்ன செய்யலாம்


ஒருபுறம் உழைக்காத காசை தொலைக்கும் கூட்டம், மறுபுறம் உழைத்த காசை பெருக்க எண்ணி அதிக வட்டி தருபவர்களுக்கு கொடுத்து ஏமாறும் கூட்டம். இந்த கவர்ச்சி வட்டிகளைப் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம். நம்மிடமுள்ள செல்வத்தையும், நமக்கு அதிர்ஷ்டத்தினால் வந்த செல்வத்தையும், நமக்காக நம் முன்னோர் சேர்த்து வைத்த செல்வத்தையும், முதல் கட்டம் தொலைக்காமல் இருக்க வேண்டும். அடுத்ததாக, அதை நம் அடுத்த தலைமுறைக்கு பெருக்கிக் கொடுக்க வேண்டும்.


இவை இரண்டையும் நிறைவேற்ற, சந்தை நிலவரம், அதன் நடைமுறை குறித்த தெளிவான புரிதல் வேண்டும். அவசரகதியில், ஆலோசனையின்றி, உரிய சந்தை அறிவுமின்றி எடுக்கும் முடிவுகளால் தான், எல்லா திடீர் செல்வங்களையும் தொலைத்து நிற்கிறோம்.


கவனமாக இருக்க,


  • தொடர்ந்து வாசியுங்கள். சந்தையின் செயல்பாடுகளை கவனமாக ஆராய்ந்துகொண்டே இருங்கள்;

  • ஒரே தொழிலில் எல்லாவற்றையும் முதலீடு செய்துவிடாதீர்கள். ஏனெனில், எல்லா தொழிலும் ஒருநாள் சரிவை சந்திக்கும்;

  • வெவ்வேறுபட்ட தொழில்களில் பிரித்து முதலீடு செய்தால், இக்கட்டான வியாபார சூழலிலும், நஷ்டம் குறைவாக இருக்கும்;

  • அதே நீங்கள் தொழில் செய்வதாக இருந்தால், அகலக்கால் வைக்காதீர்கள். படிப்படியாய் முன்னேறுவதுதான் நடைமுறைக்கு ஒத்துவரும்;

செல்வம் சேர்க்க – சேர்த்ததைக் காக்க

பணம் பற்றிய புரிதல் வேண்டும்;

சந்தை பற்றிய புரிதல் வேண்டும்;

உங்களின் புரிதலை ஆழப்படுத்துங்கள்;

மறந்துவிடாதீர்கள் - “பேராசை பெருநஷ்டம்”

நடைமுறையை புரிந்து கொள்ள போதுமான நேரம் செலவிடுங்கள்

படிப்படியாய் செல்வம் சேர்த்து வாழ்வில் முன்னேறுங்கள்!


- [ம.சு.கு 03-08-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page