“திரைப்படம் பிடிக்கவில்லை பாதியிலே வந்துவிட்டேன்”
“அவருடைய பேச்சு எனக்கு பிடிக்கவில்லை, அதனால் வெளியே வந்துவிட்டேன்.”
இப்படி பல செயல்களிலிருந்து பாதியில் வெளிவருபவரா நீங்கள்?
என்னுடைய முதல் கேள்வி, இப்படிப்பட்ட திரைப்படங்கள், பேச்சுக்களுக்கு ஏன் முதலில் போனீர்கள்?
ஒன்றைச் செய்ய தேர்வு செய்யும் போது, கவனமாக செய்ய வேண்டும் அல்லவா?
அப்படித் தேர்வு செய்ததை முழுமையாக செய்து பார்க்க வேண்டுமல்லவா? எதையும் பாதியிலேயே விட்டுவிடுவதில என்ன பயன் ?
அதுக்கு தொடங்காமலே இருந்திருந்தால், நேரமாவது மிஞ்சி இருக்கும் அல்லவா?
கேட்டால் தானே புரிந்துகொள்ளமுடியும்
வீடுகளில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும், மனச்சங்கடங்களுக்கும் முக்கியமான காரணம், சக குடும்பத்தினரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் இருப்பது. அவர்களின் அன்றைய சூழ்நிலை நாம் யோசிப்பதில்லை. அவர்கள் சொல்ல வருவதை முழுமையாக கேட்பதுமில்லை. நாமாகவே ஒன்றை அனுமானித்து கொண்டு, வார்த்தைகளை கொட்டிவிடுகிறோம். ஏன் செய்தார்கள்? எதற்காக அப்படி செய்தார்கள்? என்று அவர்கள் விளக்கம் சொல்ல வாய்ப்பு அளிப்பதில்லை. அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்காமல் எப்படி அவர்களை நாம் புரிந்து கொள்வது சாத்தியமாகும்? அவர்களை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், நம்மை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில், அவர்களைப் பற்றி புகார்கள் வரும் பட்சத்தில், முதலில் உங்கள் பிள்ளைகளிடம் என்னவென்று கேட்டு விசாரிக்க வேண்டுமல்லவா? எடுத்தவுடன் அவர்களை அடித்தால், அவர்கள் தரப்பு நியாயத்தை யார் கேட்பார்?
“கண்ணால் காண்பதும் பொய்;
காதால் கேட்பதும் பொய்;
தீர விசாரிப்பதே மெய்;”
என்ற பழமொழியை காலங்காலமாய் படித்தும், கேட்டும் வருகிறோம். இதை எந்த அளவு நம்முடைய வாழ்வில் பயன்படுத்துகிறோம் என்று உங்களை நீங்களே அலசிப்பாருங்கள். அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் நாம், நம் பிள்ளைகள் சொல்வதை கேட்க செவி சாய்ப்பதில்லை. ஏன்?
இருதரப்பு நியாயம்
வாடிக்கையாளரின் புகார் கேட்கும் நாம், நம் சக ஊழியரின் பிரச்சினைகள் என்ன என்று கேட்காமல் அவர்களைத் திட்டினால் என்ன பயன்?
களநிலவரத்தை தெளிவாக புரிந்துகொள்ள
அதிக நேரம் செலவிடுங்கள்;
பிரச்சனைகளுக்கான காரணம் சரிவரதெரிந்தால்
அதை தீர்பதற்கான வழிகளை வகுப்பது எளிதாகும்;
களநிலவரம் சரியாக தெரிந்தால்
முடிவுகளை முதல்முறையே சரியாக எடுக்கமுடியும்;
எப்போதுமே, ‘சரி’ எதுவென்று தீர்மானம் செய்ய, இருதரப்பு நியாயங்களையும் கேட்டால்தானே முடியும். கேட்க வேண்டியவர்களிடம் முழுமையாக கேட்காமல், நாமே அனுமானித்துக் கொண்டு விடை தேடினால் அது அரைவேக்காடாகத்தானே இருக்கும். ஏன் இந்த அவசர கதி? எதற்காக முடிவுகளுக்கு அவ்வளவு அவசரத்தில் தாவுகிறீர்கள்? ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக கேட்பதில் என்ன கப்பலா மூழ்கிவிடப்போகிறது? மாறாக, நீங்கள் கேட்காமல் அவசரப்பட்டால், சில சமயம் குடியேகூட முழ்கிப்போகலாம் அல்லவா?
பொறுமை கொள்
இந்த ‘பொறுமை’ என்பது பேச்சு என்ற விடயத்திற்கு மட்டுமல்ல, வாழ்வின் எல்லா தருணங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம். பொறுமை இருக்கும் இடத்தில், இழப்புகள் குறைவாக இருக்கும். அவசரகதியில் எண்ணற்ற தவறுகள் நேர வாய்ப்பு அதிகம்.
எல்லா சாலை விபத்துகளும், எவரேனும் ஒருவரின் அவசரத்தினாலோ, கவனக்குறைவினாலோதான் நிகழ்கிறது. இந்த விபத்துக்களின் பாதிப்பு, அந்த ஒருவருடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏதுமறியாத மற்றவர்களையும் வெகுவாக பாதித்துவிடுகிறது.
எங்கும் எதிலும் பொறுமை தேவை - ஆனால்
இன்று எதற்கெடுத்தாலும் அவசரமே இயல்பாகி விட்டது;
அவசரகதியானது, அந்தச் செயலைத் தாண்டி
நம்மையும் அவசரத்திலே ஆண்டவனிடம் சேர்த்துவிடும்;
அவசரங்களினால் இரத்த கொதிப்பும்
மாரடைப்பும் தான் அதிகரிக்கிறது – மறவாதீர்
எங்கும் எதிலும் பொறுமை தேவை;
படிகளை படிப்படியாய் எறலாம் – தாவாதீர்கள்
ஒன்றைத் தேர்வு செய்வதற்கு முன் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள்.
பொறுமையாக சூழ்நிலையையும் மனிதர்களையும் கவனியுங்கள்;
எல்லாச் செயல்களின் பலா-பலன்களையும், ஆதாய -பாதகங்களையும் கணித்துப் பாருங்கள்;
செயலோ, பொருளே அது நமக்குத் தேவைதானா என்று மறுமுறை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்;
இப்படி எல்லாவற்றையும் அலசி தேர்வு செய்தபின், நாம் செய்வது சரிதானா என்று சந்தேகப்படாதீர்கள்;
அதற்காக தேர்வு செய்த ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்டு நிற்பதும் சில சமயங்களில் தவறாகிவிடும்;
அவ்வப்போது உங்களின் தேர்வுகளை முறையாக மறுஆய்வு செய்து வேண்டிய திருத்தங்களை செய்யுங்கள்;
பொதுவான ஒரு சொலவடை
"மனிதன் தன் பிரச்சனைக்கு வக்கீலாகவும்,
அடுத்தவர் பிரச்சனைக்கு நீதிபதியாகவும் மாறிவிடுகிறான்"
இப்படி அடுத்தவன் பிரச்சனை என்று வரும்போது, எல்லாவற்றையும் ஆற அமர கேட்டுத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் நம்முடைய பிரச்சனை என்று வரும்போது, அதீத அவசரம் காட்டுகிறோம்.
நான் யோசிப்பதும், செய்வதும் மட்டுமே சரி என்று ஒரே கோணத்தில் போவது;
யாரேனும் அறிவுரை சொன்னாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக நிற்பது;
மாற்று தரப்பு நியாயத்திற்கு செவிசாய்ப்பதிமில்லை, பொருட்படுத்துவதுமில்லை;
தான் மட்டுமே சரி என்று ஒரே பார்வையில் பயணித்தால், வாழ்க்கையில் சரிவு நிச்சயம்;
நம் அவசரத்திற்கேற்ப, வீழ்ச்சியும் சீக்கிரத்தில் நிகழ்ந்துவிடும்;
ஒருவர் சொல்ல வருவதை பொறுமையாக கேளுங்கள். அவராக கேட்டால் மட்டுமே அறிவுரைகள் வழங்குங்கள். நீங்களாகவே அனுமானித்துக் கொண்டு, முந்திரிக்கொட்டை போல சென்று அறிவுரை வழங்காதீர்கள்.
பொதுவாக எந்த ஒரு செயலுக்கும் காரண-காரியங்கள் இருக்கும். அது என்னவென்று சிறிது பொறுமையாக யோசித்து, பின் செயல்படுதல் நன்று.
திட்டமிட்டு செயல்படுங்கள்
சில பிரச்சனைகளுக்கு காலம் மட்டுமே மருந்தாகும். எதுவும் செய்யாமல் இருப்பது காலப்போக்கில் அமைதியை உருவாக்கும். எங்கு அமைதி காக்க வேண்டும், எதிலிருந்து விலகி இருக்க வேண்டும், என்பதை சிந்தித்து செயல்படுங்கள். சில பிரச்சினைகள் வந்தால் தீர்ப்பது கடினம். அப்படிப்பட்ட பிரச்சனைகள் என்னவென்று முன்கூட்டியே கணித்து, அந்த பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை காலத்தே செய்து, வாழ்க்கையை பிரச்சினைகள் இன்றி நிம்மதியாக நடத்துங்கள். உங்களின் அனுமானங்கள், திட்டமிடல்களைத் தாண்டி பிரச்சனைகள் வந்து விட்டால், அவசரகதியில் முடிவுகளுக்கு தாவாதீர்கள். பிரச்சனை தோன்றி காரணத்தையும், தீர்பதற்கான வழிமுறைகளையும் யோசித்து, படிப்படியாக செயல்படுத்தி வெற்றி காணுங்கள்;
மறவாதீர்!
அவசரத் தீர்வுகள் அப்போதைக்கு மட்டும் தான்;
நிரந்தர தீர்வுகாண
பொறுமையாக சிந்தித்து, சமயோசிதமாகவும்,
ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வெளிவரவேண்டும்;
சில தருணங்களில்,
அவசரமான செயல்பாடு அவசியமே;
ஆனால் அந்த அவசரமே வாழ்க்கையாகிவிட்டால்
பின் மரணம் கூட அவசரகதியாகிவிடும்;
அவசியங்களுக்கு மட்டும் அவசரம் காட்டுங்கள்;
எல்லா அத்தியாவசியங்களுக்கு
முன்கூட்டியே திட்டமிடுங்கள்;
பொறுமையாக திட்டமிட்டு முன்கூட்டியே செயல்பட்டால்
அவசரத் தேவைகள் குறைந்துபோகும்;
வாழ்க்கையில்,
நிம்மதியும், அமைதியும் நிறைந்து
அன்புமயமானதாக அமையப்பெறும்.
- [ம.சு.கு - 08-06-2022]

Comments