top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : நல்ல பழக்கங்களை கட்டாயமாக்குங்கள்

 • சற்று பருமனாக இருக்கும் என் நண்பருக்கு, உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆசை. பல முறை உடற்பயிற்சி செய்யத்துவங்கி தொடரமுடியாமல் தோற்றுவிட்டார்!

 • கல்லூரி மாணவர்களுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற ஆசை. தேர்வின்போது இரவு-பகல் பாராது கண் விழித்து படிக்கின்ற சிலரால், குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற மட்டுமே முடிகிறது!

 • அலுவலக வேலைகளை சிறப்பாக செய்து பதவி உயர்வு பெற ஆசை. ஆனால் தினம் தினம் அவசரகதியில் வேலை செய்வதே வழக்கமாகிவிட்டது!

 • எல்லா இடங்களுக்கும் குறித்த நேரத்தில் சென்று சேர ஆசை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாகிவிடுகிறது!

 • 26 மைல் முழு மராத்தான் முழுவதுமாய் ஓட பேராசை. வல்லுநர்களை சந்தித்து போதுமான ஆலோசனைகளை பெற்றாயிற்று. ஆனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கால் வலி வந்து உடல் கலைத்து ஓட முடிவதில்லை!


எண்ணிய எண்ணியாங்கு முடிவதில்லை – ஏன்?


வெவ்வேறு துறைகளில் பலவற்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணற்ற ஆசைகள் நம் எல்லோருக்கும் இருக்கின்றன. அவற்றை அடைய, பல முயற்சிகளை நாம் அவ்வப்போது எடுத்து வருகிறோம். ஆனால், இவற்றில் எத்தனை ஆசைகளை எண்ணிய எண்ணியாங்கு நம்மால் அடைய முடிகிறது? இந்த ஆசைகளைப் பொருத்தமட்டில், வெகு சிலர் மட்டுமே தங்களின் கனவுகளுக்கு முழுவடிவம் கொடுத்து வெற்றி பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெருகின்றனர், இந்த கனவுகள் எல்லோருக்குமானதுதான். ஆனால், ஏன் மற்றவர்களின் கனவுகள் முழுமையான வடிவம் பெருவதில்லை?


ஏன் இந்த தோல்விகள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்துள்ளீர்களா? இல்லை நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று அதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுகிறீர்களா?


வெற்றியென்பது அதிர்ஷ்டமா?


வெற்றி என்பது அதிர்ஷ்டம் சார்ந்ததா? ஒரு வேலை அதிர்ஷ்டம் கட்டாயம் இருந்தால் தான் வெற்றயென்றால், அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வாய்க்கப்பட்ட எல்லோருமே நிரந்தரமாக உயர்ந்துவிட்டார்களா?


பெரும்செல்வம் சேர்ப்பதில் வெற்றி கண்டவர்கள் பலர் தன் உடலைப் பராமரிக்க முடியாமல், நோய்களில் அவதிப்படுவதைக் கண்கூடக் பார்க்கிறோம். அதேசமயம், உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும் பலரிடம் பெரும் செல்வம் இருப்பதில்லை. ஒரு வேலை அதிர்ஷ்டம் இருந்தால் தான் எல்லா வெற்றியும் கிடைக்கும் என்றால், ஏன் இந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு, ஒன்று கிடைத்தால் மற்றொன்று கிடைப்பதில்லை. அதிர்ஷ்டம் ஒருவருக்கு ஒன்றில் இருக்கும்! இன்னொன்றில் இருக்காதா? அதிர்ஷ்டம் அளந்துதான் கொடுக்குமா?


நடைமுறையில், ஒருவேலை உங்களுக்கு பணக்காரனாக அதிர்ஷ்டம் இருக்கிறதென்றால், அது தானாக நடந்து விடுமா? நீங்கள் எந்தவொரு முயிற்சியும் செய்யாமல் பெரும் செல்வம் சேருமா?


என்னைப் பொருத்தமட்டில் அது சாத்தியமேயில்லை. ஒரு பரிசுச்சீட்டு உங்களுக்கு விழுவதானாலும், குறைந்தபட்சம், ஒரு 10 ரூபாய் கொடுத்து நீங்கள் பரிசுச்சீட்டு வாங்கினால்தான் உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கைகூட வாய்ப்பு ஏற்படுகிறது. உங்கள் பெயர் போட்டியாளர் பட்டியலில் இல்லாவிட்டால், அதிர்ஷ்டமே ஆசைப்பட்டாலும் உங்களுக்கு வெற்றியை எப்படி கொடுக்க முடியும். உங்களை நோக்கி வருகின்ற அதிர்ஷ்டத்தை வரவேற்க, குறைந்தபட்சம் உங்களின் கதவுகளையேனும் திறந்து வைத்திருக்க வேண்டுமே.


திறமை – அதிர்ஷ்டம்


வெற்றி உங்களுக்கென்று இறைவனே தீர்மானித்தாலும், அதைத் தொடர்ந்து தக்கவைக்க உங்களுக்கு திறமை இருக்கவேண்டும்.


 • அதிர்ஷ்டத்தைத் தாண்டி வெற்றியை அடைய, அடைந்த வெற்றியை தக்கவைக்க ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் தனித்திறமை மிகமுக்கியமாகிறது. அந்த தனித்திறமையை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

 • மேலே சொன்ன உதாரணங்களில் வரும் எல்லா நபர்களும், தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டு, அதற்குரிய மாற்றத்தை துவக்கினார்கள். ஆனால் அதை அவர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை. ஏன் அவர்களால் அதில் இறுதி வரை பயனித்து வெற்றி காண முடியவில்லை?

இந்தக் இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில் “அன்றாட பயிற்சி”.


உடல்நலம் பேனிட


உடல் பருமன் குறைய ஓரிரு மாதம் உணவுக் கட்டுப்பாடும், கடுமையான உடற்பயிற்சியும் போதுமானதாக இருக்கலாம். அதன் மூலம் சிறியளவில் எடையும் குறையலாம். ஆனால் குறைந்தபின், அந்த கட்டுப்பாட்டை விட்டுவிட்டால், எடை கிடுகிடுவென ஏறிவிடுகிறது. குறைக்க முயற்சித்து, முன்னைவிட ஒரிரு கிலோ சிலருக்கு கூடிவிடுகிறது. இப்படி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யாமல், படிப்படியாய் உணவுப் பழக்கங்களை சீர்படுத்தி, அவற்றுடன் அளவான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தல் வேண்டும். இவற்றை உங்களின் அன்றாட வாழ்க்கை முறைமையாக்குவதுதான் மிகமுக்கியம். முறையான உணவுப்பழக்கமும், போதுமான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்துவந்தால், உங்களின் உடல் எடை படிப்படியாக குறைந்து, ஒரே சீராய் காலாகாலத்திற்கும் இருக்கும்.


நல்ல கல்விக்கு


தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற, கடைசிப் 10-15 நாட்களில் விழுந்துவிழுந்து படித்தால் போதாது. கல்வி என்பது வெறும் பாடங்களை மனப்பாடம் செய்வதில் முடிவதில்லை. அதை போதிப்பவரிடம் செவிச்செல்வமாய் கிடைக்கும் அறிவு, கல்விக்கும், அன்றாட வாழ்க்கை முறைமைக்குமான தொடர்பு குறித்த அறிவு, பாடங்களின் செய்முறை அறிவு, போன்ற பல விடயங்களை உள்ளடக்கியது தான் கல்வி.


10 நாட்களில் மனப்பாடம் செய்து தேர்வுகளை சந்தித்தால், வெறும் 35% - 40% சதவீதம் தேர்ச்சி மதிப்பெண்தான் கிடைக்கும். அன்றாடம் ஆசிரியர் நடத்தியதை கவனித்து, அவற்றை தினம்தினம் படித்து, போதுமான செய்முறை பயிற்சிகளை செய்தால்தான், படங்களைப் பற்றிய தெளிவான புரிதல் ஏற்படும். அந்த தெளிவான புரிதல் இருந்தால், எந்தத் தேர்வையும் முழுமையாக எழுதி முதல் மதிப்பெண் பெற முடியும்.


பணிகளை நிறைவேற்ற


அலுவலக வேலை - நம்மில் எத்தனை பேர் தினமும் திட்டமிடலுக்கு நேரம் ஒதுக்கி, வேலைகளின் அவசர அவசியமங்களுக்கு ஏற்ப முன்னிலைப்படுத்தி, படிப்படியாய் செய்து முடிக்கிறோம். போதுமான நேரம் இருக்கும்போது, அந்த வேலைகளை அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போட்டுவிட்டு, நேரத்தை தேவையற்ற அரட்டைகளில் வீணடிக்கிறோம். பின்னர் அதே வேலைகளை, தலைக்குமேலே போகும்போது அவசர கதியில் செய்கிறோம்.


அவசரகதியில் செய்யும் எதுவுமே, வெறுமனே முடிக்கப்பட்டிருக்குமே தவிர, சிறப்பாக இருக்க வாய்ப்பு குறைவு. யாரொருவர் செய்ய வேண்டிய பணிகளுக்கு முறையாக பட்டியலிட்டு, முன்னிலைப்படுத்தி, நேரத்தில் அவசியத்தைப் புரிந்து அதை முறையாக பயன்படுத்தி, பணிகளை செய்கிறாரோ, அவரால் எல்லாப் பணிகளையும் உரிய நேரத்தில் முடித்து நிறுவனத்திற்கு பயனுள்ளவராக இருந்து எல்லா வெற்றிகளையும் பெற இயலும்.


நேர மேலாண்மை


தினம் தினம் எண்ணற்ற சாலை விபத்துக்களுக்கான முக்கிய காரணம் கவனக்குறைவு, அதிவேகம், திடீர் வாகன பழுது...... இவற்றுள் பெரும்பான்மையான விபத்துக்கள் அதிவேகத்தின் காரணமாகவே நடந்திருக்கிறது. வேகத்தின் காரணமாக விபத்துக்கள் ஏற்படும் என்பது நன்கு தெரிந்திருந்தும், பலர் சாலையில் தொடர்ந்து வேகமாக செல்ல காரணம் என்னவென்று சற்றே யோசித்துப்பார்த்தால், பெரும்பாலும் அவர்கள் தாமதமாக கிளம்பியதுதான் காரணமாக இருக்கிறது. குறித்த நேரந்தில் சென்றடைய வேண்டுமென்பதால், வேறுவழியின்று வேகமாக செல்கின்றனர். அவர்கள் கிளம்ப தாமதான நேரத்தை, வேகமாக செல்வதன் மூலம் ஈடுசெய்துவிடலாம் என்று அபாயகரமான முயற்சியில் இறங்குகின்றனர்.


எங்கு, யாரை சந்திக்க செல்வதானாலும், அங்கு போய் சேர்வதற்கான பயன நேரத்திற்கேற்ப, கூடுதலாக 10-20 நிமிடங்கள் முன்னதாக கிளம்பி பாதுகாப்பாக செல்லும் பழக்கத்தை நம்மில் ஏற்படுத்த வேண்டும். எப்போதும், எல்லா இடங்களிலும் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாகவே இருக்கும் என்று எண்ண வேண்டாம். திடீர் மழை, போக்குவரத்து நெரிசல், வாகன பழுது, என்று எண்ணற்ற தடைகள் நம்மை தாமதப்படுத்தலாம். சற்று முன்னதாக கிளம்பினால், இந்த தடைகளை சமாளித்து குறித்த நேரத்தில் சென்று சேரலாம். இது ஒரு நாள் மட்டும் செய்து பார்க்க வேண்டிய விடயம் அல்ல. நம் வாழ்வில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான நேர மேலான்மை பாடம்.


விளையாட்டில் சாதிக்க


முழுமையான மராத்தான் [26 மைல் – 42 கி.மீ] ஓட ஆசை இருந்தால், குறைந்தபட்சம் 1-2 ஆண்டுகளேனும் தொடர்ந்து ஓட்டப்பயிற்சியும், உடல் வழுவேற்றலுக்கான பயிற்சிகளையும் செய்திருக்க வேண்டும். வல்லுநர்களின் ஆலோசனைகள் எல்லாம், தொடர்ந்து பயிற்சி செய்பவர்களுக்குத்தான் பயனளிக்குமேயன்றி திடீரென்று போட்டியன்று ஒடுபவருக்கு எந்த பயனும் இருக்காது. முழு மராத்தான் என்பது, கிட்டத்தட்ட 3-4 மணி நேர தொடர் ஓட்டம். அவ்வளவு நேரம் தொடர்ந்து ஓட உடலும் மனமும் எண்ணற்ற பயிற்சிகளை கடந்து வந்தால்தான் முடியும்.


அன்றாடம் குறைந்தபட்சம் 2 மணி நேர உடற்பயிற்சி செய்து கால்களைப் பழக்கப்படுத்தியிருந்தால், போட்டியன்று கால்கள் அந்த ஓட்டத்திற்கு ஒத்துழைக்கும். பொதுவாக 10-20 நிமிடங்களிலேயே உடல் சோர்வடைந்து விடும். அப்படி சீக்கிரத்தில் களைப்பை உணர்ந்துவிடும் உடலை, உங்களின் மனவுறுதியால் 3-4 மணி நேரங்களுக்கு தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஓடவைக்க எண்ணற்ற மனப்பயிற்சி தேவை. இவை யாவும் ஒரே நாளில் கைகூடும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். தினம் தினம் பயிற்சி செய்து உடலையும் மனதையும் திடப்படுத்தியிருந்தால் மட்டுமே முழு மாரத்தான் கனவுகள் சாத்தியப்படும்.


சோம்பல்தான் வெற்றிக்கான ஒரே எதிரி


இப்படி, பல துறைகளில் எண்ணற்ற விடயங்களை நாம் சாதிக்க ஆசைப்பட்டு, அவற்றிற்கான பல நல்ல பழக்கங்களை துவங்குகிறோம். ஆனால் அவற்றைத் தொடர்ந்து கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. நம் மனித இயல்போடு கூடிய பொதுவான சோம்பேறித்தனம், அந்த நல்ல பழக்கங்களை அவ்வப்போது தள்ளிப் போட வைத்து, நாளடைவில் தோல்விக்கு வழிவகுத்து விடுகிறது.


தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமானால், அதை நாள் தவறாது கட்டாயம் செய்ய நம்மை நாமே தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு நாட்கள் உங்களால் உடற்பயிற்சிக்கு போதுமான நேரம் ஒதுக்க முடியாவிட்டால், அதன் காரணமாக உடற்பயிற்சியை தவிர்ப்பதற்க பதிலாய், குறைந்தபட்சம் 10-15 நிமிடங்களை பணிகளுக்கிடையே ஒதுக்கி, ஒரு சில உடற்பயிற்சிகளையேனும் செய்துவிடுங்கள். இந்த கட்டாயப்பயிற்சி, உங்களை அந்த வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க பேருதவியாய் இருக்கும். ஒரு நாள் தானே என்று வரும் சோம்பேறித்தனம், மெதுமெதுவாக நாட்களை கூட்டி நிர்ந்தரமாகிவிடுவதுதான் எல்லோருக்கும் இங்கு பொதுவான பிரச்சனை. அந்த சோம்பேறித்தனத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.


வெற்றிக்கு என்ன செய்யலாம்?


 • நல்ல பழக்கங்கள் எவை என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அதை எப்படி கட்டாயமாக கடைபிடிப்பது என்பதை யோசியுங்கள்

 • சோம்பேறித்தனத்திற்கு வாய்ப்பளிக்காதீர்கள். ஒருவேலை தவறினால், கூடியவிரைவில் உங்களின் வழக்கத்திற்கு திரும்பிவிடுங்கள்; ஒருநாள் கூட காலம் தாழ்த்தாதீர்கள்;

 • ஒருவேளை அன்றைய தினம் ஒருமணி நேரம் ஒதுக்க முடியாவிட்டால் 10 நிமிடம் ஒதுக்கி ஒரு பகுதி வேலையைச் செய்யுங்கள். உங்களின் இந்த அர்ப்பணிப்பு, உங்களைத் தொடர்ந்து அந்த நல்ல பழக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க உதவும்.

 • மேலும், எந்த வேலையும் தொடங்கும்வரையில்தான் எல்லாச் சோம்பேறித்தனமும். வேலையை தொடங்கி, முதல் 5 நிமிடம் செய்ய ஆரம்பித்து விட்டால், அது தானாகவே முழுமை பெறும் வரை உங்களை இழுத்துச் சென்றுவிடும்.


உங்களால் முடியும்


ஆதலால், சாதிக்க முடியவில்லையே என்று வருந்த வேண்டாம். எப்படி சாதனையை நோக்கிய நல்ல பழக்கங்களை தொடர்ந்து அன்றாடம் கடைபிடிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துங்கள். நாள் தவறாமல் இலக்கை நோக்கிய பழக்கங்களை வழக்கமாக உங்களால் செயல்படுத்த முடிந்தால், சாதனைகளும் வெற்றிகளும் தானாக வந்து சேரும்.


நல்ல பழக்கங்களை தேர்வு செய்யுங்கள்;

அந்த பழக்கங்களை வழக்கமாக்குங்கள்;

இயல்பான சோம்பேறித்தனத்திடம் கவனமாய் இருங்கள்

போதியளவு நேரம் கிடைக்கவில்லை என்றால்

கிடைக்கின்ற நேரத்தில் முடிந்தளவு செய்யுங்கள்;

உங்களின் கடமையுணர்ச்சியும், அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும்,

கட்டாயம் வெற்றியின் உச்சியில் உங்களை அமர்த்தும்;

நல்ல பழக்கங்களை வழக்கமாக்கி வெற்றி பெறுவோம்!!


- [ம.சு.கு 24.08.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Yorumlar


Post: Blog2 Post
bottom of page