top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியுமா

என்ன ஒரு முட்டாள்தனமான தலைப்பு என்று சிரிக்கிறீர்களா?


இந்த வரியை என் நண்பர்கள் என்னிடம் கேட்டபோது, எனக்கும் சற்று ஆச்சரியமான கேள்வியாகத்தான் இருந்தது. சற்றே முட்டாள்தனமாக தோன்றினாலும், வழக்கம்போல அந்த வரிகளை சற்றே ஆராயத் துவங்கினேன். முதல் கோணமாய், முட்டை உடையாமல் ஆம்லெட் ஆக சாத்தியக்கூறு உள்ளதா? என்று சிந்தித்த பொழுது, நீரிலோ அல்லது ஆவியிலோ வேக வைத்தால் முட்டை கட்டாயம் வெந்து , “முட்டை வடிவ எண்ணெய் இல்லாத ஆம்லெட்” [Oil free Egg shaped Full boil omlette] தயாராகும். எப்படியோ எதிர்பார்த்த ஆம்லெட் தயாராகிவிட்டது. ஆனால் அதனால் தீர்வு கிடைத்து விட்டதா? அதைப் தின்பதற்கு இப்போது அதன் ஓட்டை உடைத்துத்தானே தீர வேண்டும்!


குகையிலிருந்து வெளிவந்தால்தான் இறைகிட்டும்


ஆம்! வாழ்க்கையில் வெற்றிபெற, மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருக்க, நம்மை சுற்றி நாமே விரித்திருக்கும் மாயவலையை உடைத்து வெளியே வந்தாக வேண்டும்.


முட்டை, ஓடு என்பதெல்லாம் ஒரு சிறு உதாரணங்கள் தான். எந்த செயலையும் முயற்சியின்றி செய்துவிடமுடியாது. எந்த வெற்றியையும் கடின உழைப்பின்றி பெற்றுவிட முடியாது. மாரத்தான் ஓட்டம் ஓடுவதானாலும், பக்கத்து வீட்டுக்கு செல்வதானாலும், முதல் அடியை நாம் எடுத்து வைத்தால்தான் அது சாத்தியப்படும். இருந்து இடத்திலேயே இருந்துகொண்டு மாரத்தானில் ஜெயிப்பது சாத்தியமில்லாத ஒன்றுதானே?


காட்டுக்கு ராஜாவானாலும், குகையை விட்டு வெளியேவந்து முயற்சி செய்தால்தான், அதற்குத் தேவையான இரை கிடைக்கும். தொடர்ந்து போராடி தன்னைத்தானே நிரூபித்துக் கொண்டிருந்தால்தான், தன் தலைமைத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.


தன்னைத்தானே வென்றால்தான் எதிரியை வெல்லமுடியும்


  • அன்றாடும் உடற்பயிற்சியும், போர் பயிற்சியும் இல்லாமல் போர்க்களத்தில் எதிரியை வீழ்த்த முடியுமா?

  • அன்றாடம் படிக்காமல் ஆட்சிப்பணி தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா?

  • அன்றாடம் எழுதுகின்ற பழக்கம் இல்லாமல் நூலாசிரியர் ஆக முடியுமா?

எவ்வளவு களைப்பு இருந்தாலும், தவறாமல் பயிற்சி செய்பவன் விளையாட்டில் சாதிக்கிறான். சூழ்நிலைகள் சரியில்லாத போதும் தொடர்ந்து முயற்சிப்பவன் {மட்டுமே} வெற்றி பெறுகிறான். ஒரு சிறுதோல்வி கண்டு விலகுபவனும், செய்யாமல் இருக்க ஆயிரம் காரணம் கூறுபவனும் என்றுமே வென்றதில்லை.


தோல்விகள் நிரந்தரமல்ல;

வெற்றியும் நிரந்தரமல்ல;

தோற்றவுடன் நிறுத்திவிடாதீர்கள்;

உங்கள் முயற்சி மறக்கப்படும்;

வென்றபின் நிறுத்தினால் வென்ற வரலாறு நீடிக்கும்;

வெற்றிச் சரித்திரம் வேண்டுமானால்

வெற்றி பெறும் வரை போராட வேண்டும்;


யாக்கைபேனிட வேர்வை சிந்தித்தானாக வேண்டும்


பெரிய விஷயங்களையெல்லாம் விடுங்கள். அன்றாடம் உணவிற்கு வருவோம். சுவையான உணவு வேண்டுமானால், யாரேனுமொருவர் சமையலறையில் கண்ணீர் வர வெங்காயம் அரிந்துதானே ஆகவேண்டும்.

கஷ்டமேபடாமல் சாதித்தவர்கள் எவரேனும் உண்டா?


உண்டென்று ஒரு சிலர் யோசிப்பது எனக்கு புரிகிறது. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எதையும் செய்யாமல் 100 வேலையாட்களை வைத்து செய்து கொண்டு உயரத்திலேயே இருக்கிறார்களே! என்று நீங்கள் சிந்திக்கலாம். அன்பர்களே! உடல் உழைப்பில்லாமல் உண்டு வந்தால் சீக்கிரத்தில் அந்த உடலே அவர்களுக்கு மிகவும் பாரமாகிவிடும். அவர்கள் வீட்டு வேலைகளை செய்வதற்கு பதிலாக, உடற்பயிற்சிக் கூடம் சென்று வேர்வை சிந்துகிறார்கள். இப்போது அந்த பணக்காரர்கப் பிள்ளைகளின் வாழ்க்கைமுறை பற்றி ஆராய்வதில் நமக்கு யாதொரு பயனுமில்லை. நம் இலட்சியங்கள், நம் இலக்குகளை கவனிப்போம்.


தேர்வில் – சராசரி மதிப்பெண் / முதல் மதிப்பெண்


10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகளில், பள்ளி அளவில் முதலிடம் பெற, பாடங்களை கவனமாக படித்து, பாடங்களில் உள்ள எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்தும் தேர்வு எழுத வேண்டும். அதுவே மாநில அளவில் முதலிடம் பெற வேண்டுமானால், அதற்கு போட்டி அதிகமாக இருக்கும். பாட புத்தகங்களை படித்தது போக, மேலும் பல திறமைகளையும், நுணுக்கங்களை அறிந்து செயல்படுத்தவேண்டும் [அழகாக எழுதுதல், மிக நேர்த்தியாக படங்களை வரைதல், கணக்குகளை படிப்படியாய் தெளிவுபட எழுதுதல் என்று.......]. எந்த ஒரு முயற்சியும், பயிற்சியும் இல்லாமல் முதலிடம் பெறுவது “முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது” போல் ஆகி விடாதா?


அதேசமயம், பெரிதாய் கஷ்டப்படாமல் தேர்விலே சராசரி மதிப்பெண் பெற்று தேர்வு பெருபவர்கள் பலபேர் இருக்கிறார்கள். இவர்கள் வெறுமனே தேரியவர்கள் தான் - பெரிய வெற்றியாளர்களில்லை. உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வகைதான். சராசரியை ஒட்டியே தங்களின் வாழ்க்கை முழுவதையும் ஓட்டிவிடுகிறார்கள்.


போட்டியை எதிர்கொள்கிறோமா?


போட்டி என்று வந்துவிட்டால், பொதுவாக மூன்று நிலைதான்;

  • போட்டியில் கலந்துகொண்டு போராடி வெற்றி பெறுவது

  • போட்டியிட்டு தோல்வி அடைவது

  • போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளாமல் விலகி இருப்பது


இந்த மூன்றைப் பற்றி எல்லோரும் தெளிவாக அறிவர். இதில் எதை தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டால், எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசை “வெற்றி வேண்டும் ஆனால் போட்டியிருக்கக் கூடாது”. உடல் வருத்தாமல் வெற்றிகாணவே எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் யதார்த்தம் யாதெனில் கஷ்டப்படாமல் வெற்றியில்லை என்பது பலருக்கு அனுபவத்தில் தெரிந்திருந்தாலும், மேற்கொண்டு கஷ்டப்பட்டு உழைக்க தொடர்ந்து தயங்குகின்றனர்.


உற்சாகமும் – சோம்பலும் மாறிமாறி வரும்


சிலர் ஏதோவொரு உத்வேகத்தில் ஒரு காரியத்தின் பொருட்டு கடின உழைப்பைத் துவக்கிவிடுகின்றனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல, மனிதனின் இயல்பான சோம்பேறித்தனம் சீக்கிரத்திலேயே அவர்களை தொற்றிக்கொள்கிறது. அதன் விளைவாக நாளை செய்யலாம் என்று காரியங்களைத் தள்ளிப் போடத் தொடங்கிவிடுகிறார்கள். இவ்வாறு காரியம் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு, இறுதியில் அது பயனற்ற ஒன்றாகிவிடுகிறது.


எப்படி துவக்குகிறோம் என்பதைக் காட்டிலும், எப்படி அதை தொடர்ந்து செய்து வெற்றிகரமாக முடிக்கிறோம் என்பது அதிமுக்கியம். வாழ்க்கை என்பது 100 மீட்டர் ஓட்டப்பந்தயமல்ல. அது மிகநீண்ட மாராத்தான் ஓட்டம். ஆரம்பத்தில் திணறினாலும், போகப்போக யார் உற்சாகத்துடன் தொடர்ந்து போராடுகிறார்களோ, அவர்கள்தான் இறுதியில் வெற்றியாளராக முடியும்.


ஆம் !

தொடர்ந்த பயிற்சியும், அன்றாட சிறுசிறு முன்னேற்றமும்

கட்டாயம் வெற்றியின் உச்சத்திற்கு வழிசெய்யும்.

அன்றாடம், எத்தனையோ செயல்களைச் செய்கிறோம் – சற்று

முயற்சியும், பயிற்சியும் செய்துதான் பாருங்களேன் !!


மீண்டும் முட்டைக்கு வருவோம்


இந்த கட்டுரையின் தலைப்பிலே முட்டை பற்றிக் குறிப்பிட்டுருந்தேன். முட்டை உடைந்து தோசைக்கல்லில் வெந்தால்தான் “ஆம்லெட்”. அப்படியே முழுதாக வெந்தால் அது “அவித்த முட்டை” தான். இரண்டுமே வேக வைக்கப்பட்டவைதான். அதன் சுவையிலே சின்ன மாற்றம் இருக்கலாமே தவிர, வேறெதுவும் பெரிய வேறுபாடு இருக்கப்போவதில்லை. முட்டை உடைந்து ஆம்லெட் ஆனதா? உடையாமல் அவித்த முட்டை ஆனதா? என்பதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. அது நம் பசிதீர்க்க வேண்டுமானால், அதன் ஓடு உடைபட்டுத்தான் ஆகவேண்டும்.


நாம் எப்படி வெற்றி பெறுவது, பிறருக்கு பயனுள்ளவராகவும், நமக்கு நாமே பயனுள்ளவரகவும் இருப்பது எப்படி என்று சிந்தித்துச் செயல்படத் தொடங்குங்கள்.


வெற்றியாளர்கள் பிறப்பதில்லை;

பிறரால் உருவாக்கப்படுவதுமில்லை;

வெற்றியாளர்கள் உண்மையில்

தங்களின் தனிப்பட்ட திறமைகளைக் கடந்து

தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும்,

விடாமுயற்சியாலும் உருவாகிக் கொள்கிறார்கள்;


- [ம.சு.கு- 23-07-2022]


[குறிப்பு; ஆம்லெட் என்ற ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணையான சரியாண தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. வளைதளத்தில் அதற்கு இணையான சொல்லாக “முட்டை ஊற்றப்பம்” என்று இருக்கிறது. அது சற்று பொருந்தவில்லை என்பதால் “ஆம்லெட்” என்றே கட்டுரையில் எழுதியுள்ளேன்.]



14 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page