பொதுவாக வீட்டில் நம்மிடம் ஏதேனும் வேலையை சொன்னால், நம்மில் பெரும்பாலானவர்களின் பதில் "அப்புறம் செய்கிறேன்" என்பதாகவே இருக்கிறது. அதுவும், ஏதேனும் கை வேலையாக இருக்கும்போதோ, தொலைக்காட்சிகளில் மும்முரமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் போதோ, வேறு வேலைகளைச் சொன்னால், பின்னர் செய்கிறேன் என்பது நிரந்தர பதில்தான். சற்று யோசியுங்கள் - அப்படி பின்னர் செய்கிறேன் என்று சொன்ன வேலையை, சரியான நேரத்தில் தானாகவே செய்து முடித்தீர்களா?
பின்னர் செய்கிறேன் என்று சொன்ன வேலை - ஒன்று மறந்து போயிருக்கும் (அல்லது) நமது வீட்டில் உள்ளவர் யாரேனும் "இவரிடம் சொல்லிப் பிரயோசனமில்லை" என்று தாங்களே செய்து முடித்திருப்பார்கள்.
இப்படி ஓரிரு வேலைகளைத் தள்ளிப் போட்டு இருந்தால் கூட பரவாயில்லை. அதுவும் வீட்டிலென்றால் நம்முடன் இருக்கும் யாரேனும் ஒருவர் சற்றே நம்மை திட்டிவிட்டு, அந்த வேலையை செய்து விடுவர்.
“தரத்தையும்”, “நேரத்தையும்” இழக்கிறோம்
அலுவலகத்தை எடுத்துக்கொள்வோம். பல கோப்புகள் அன்றாடம் உங்களிடம் வந்த வண்ணம் இருக்கும். அன்றைய வேலையை அன்றையதினம் செய்யவில்லை என்றால், மறுநாள் புதிய கோப்புகளுடன் பழைய வேலையும் சேர்ந்து, செய்து முடிக்க வேண்டியவைகள் மலையென உருவெடுக்கும். அப்படி வேலை அதிகரிக்கும் போது, நம்மால் நேரத்தையும், தரத்தையும் தக்க வைக்க முடியாது.
இப்படி வேலையை நாளை செய்யலாம் என்று தேக்கினால், உற்பத்தி நிறுவனங்கள் என்னவாகும்? குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய இயலாது. ஓரிரு முறை என்றால் பரவாயில்லை. தொடர்ந்து தாமதித்தால் வாடிக்கையாளர்களை இழந்து தொழிலையே மூட நேரிடும்.
வேலை செய்வதற்கே சோம்பேறித்தனம்
குறித்த நேரத்தில் பட்டியலிட்டு வேலைகளை முடித்தால், அடுத்த புதிய வேலைகளை எடுத்துச் செய்ய நம்மிடம் நேரம் அதிகம் இருக்கும். புதிய வேலைகள், புதிய வாடிக்கையாளர்கள் நம் வருவாயை அதிகரிக்கும். மாறாய், சில அலுவலகங்களில் பார்த்தால், ஒரு சில அலுவலர்கள் தங்கள் அன்றாடப் பணியை தேக்கிக் கொண்டே போவார்கள். அவர்களுக்கு ஒரு கணக்கு, “இருப்பவற்றை உடனே முடித்தால், மேலாளர் புதிய வேலையை தருவார்”. அதிக வேலை செய்வதை தவிர்க்க, இருக்கின்ற வேலையையே மிக நீண்டு இழுத்தடித்து செய்து கொண்டிருப்பது.
சில அரசுத்துறை வேலைகளுக்கு வேண்டுமானால் அது ஒத்துப் போகலாம். தனியார் நிறுவனங்களில், அவ்வாறு தாமதிப்பவர்கள் பலர், அவ்வப்போது இனங்கண்டு வேலையில் இருந்து வெளியேற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது.
ஏன் இப்படி தாமதிக்கிறார்கள்
வேலைகளை ஏதேனும் அற்பக் காரணங்களுக்காக இப்படி தாமதித்தால், எண்ணற்ற சிக்கல்கள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் ஏன் இப்படித் தாமதிக்கிறோம்;
அந்த வேலை நமக்கு பிடிக்காமல் இருக்கலாம்
உடல் சோர்வு, மனச்சோர்வின் காரணமாக இருக்கலாம்
அந்த வேலையை நம்மால் செய்ய முடியாது என்று நாம் நம்புவதால்
அந்த வேலை தன் தகுதிக்கு உகந்த வேலை இல்லை என்று நினைப்பதால்
தன்னால் செய்ய இயன்ற அளவிற்கு மேல், வேலைகளை எடுத்துக் கொள்வதால்.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெரியாததால்
ஒரு பணியை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால்
அது நடந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? என்ற பொறுப்பின்மையினால்
கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடுவது அன்றாட வழக்கமாகி விட்டதால்
தன்னால் கடைசி நிமிடத்தில் அதை செய்துவிட முடியும் எனும் அதீத நம்பிக்கையால்
துவக்குவதற்கு சோம்பேறித்தனம் படுவதால்
மறதியின் காரணத்தால்
நல்ல நேரத்திற்காக காத்திருப்பதால்
எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்று தொடர்ந்து யோசனை மட்டுமே செய்து கொண்டிருப்பதால்
வேறு அவசர வேலை இருக்கிறது என்று இதை தள்ளிப் போடுவதால்
நேர்த்தியை எதிர்பார்த்து இன்னும் தொடங்காமலே இருப்பதால்.
இப்படி வேலைகளைத் தள்ளிப்போட எண்ணற்ற காரணங்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கும்.
“நேற்று முடிக்கப்படாத வேலைகள்
இன்று காலை தலைவலியாய் வந்து முடியும்.
நீரைத் தேக்கினால் பயன் உண்டு
வறட்சிக் காலத்தில் உதவும் -ஆனால்
வேலையை தேக்குவதால் என்ன பயன்?
நமக்கு வருவாய் இழப்புதான் ஏற்படும்.”
அறிந்தும் பயனில்லை
உண்மையில் சொன்னால் வேலைகளை நாளை செய்யலாம் என்று சொல்லிச் சொல்லித் தேக்குவதால் நமக்குத்தான் நஷ்டம் என்று நம்மில் பலருக்கும் நன்றாக தெரியும். அதன் கஷ்டத்தை பல தருணங்களில் சந்தித்திருப்போம். ஆனால் நிதர்சனம் யாதெனில், அந்த கஷ்டத்தை பற்றிய அறிவு இருந்தும், தொடர்ந்து தள்ளிப் போடவே நமது மனம் தயாராகிறது என்பதுதான்.
"இயல்பாகவே இந்த மனித மனம் சுலபங்களையும், சோம்பேறித்தனத்தையும் நோக்கிச் செல்லும். பல அரிய செயல்களை செய்து சாதிக்க வேண்டுமென்று எல்லோரும் ஆசைபட்டாலும், இயல்பான சோம்பேறிதனத்தின் காரணமாக, என்றுமே அவற்றை துவக்குவதே இல்லை";
வெற்றியாளர்கள்
யதார்த்த வாழ்க்கையில், இந்த இனம்புரியாத சோம்பேறித்தனத்தை வென்று வேலையை தேக்காமல் செய்பவர்கள்:
நல்ல ஆளுமை கொண்டவர்களாக முன்னேறுகின்றனர் !
சொன்ன சொற்களை காப்பாற்றுபவர்களாக, நம்பிக்கையாளர்களாக நற்பெயர் ஈட்டுகின்றனர் !
சுயகட்டுப்பாடும், சுயஒழுக்கமும் நிறைந்தவர்களாக அவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது !
தன் செயல்களை செய்வதோடு தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் வழிகாட்டுபவர்களாக இருக்கிறார்கள் !
மாறாக, இந்த "நாளை" என்ற சொல்லில் சிக்குண்டவர்களுக்கு என்றும்;
நிம்மதி இருப்பதில்லை !
கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடிவதில்லை !
எப்போதும் மன அழுத்தத்துடன் அலைகிறார்கள் !
எப்படி மாற்றுவது
இப்படி அன்றாட வேலைகளை தள்ளிப்போடும் இயல்பானது, உண்மையில் ஒரு உளவியல் பிரச்சனையாகும். அதை எதிர்கொள்ள முதலில் நாம் மனதால் தயாராக வேண்டும். அன்றாட வாழ்க்கையில் கீழே குறிப்பிடப்படும் சிறுசிறு மாற்றங்களை துவக்கி, தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் எதையும் குறித்த நேரத்தில் நம்மால் செய்ய முடியும்:
தினமும் காலையில் பத்து நிமிடத்தை திட்டமிடுவதற்காக ஒதுக்கி, அன்று முடிக்க வேண்டிய வேலைகளுக்காண பட்டியலை தயார் செய்யுங்கள்;
வேலைகளின் முக்கியத்துவம், அவசர அவசியங்களுக்கு ஏற்ப பட்டியலை மாற்றியமையுங்கள்;
பெரிய வேலையென்றால் அதை பகுதிகளாய் பிரித்து சிறிது சிறிதாய் செய்ய துவங்குங்கள் (முழு புத்தகத்தையும் ஒரே நாளில் முடிக்க முடியாது. தினம் ஐந்து பக்கங்கள் என்றால் எளிதாக சாத்தியப்படும்);
தள்ளிப்போடும் சிந்தனை வருகிறதா என்பதில் சற்று விழிப்புணர்வுடன் இருங்கள்;
வேலை செய்யும் நேரங்களில், தேவையற்ற சமூகவலைத்தளங்கள் பக்கம் செல்வதை தவிர்த்து விடுங்கள்;
செய்யும் செயல்களில் சிறுசிறு மைல்கற்கலைத் திட்டமிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாய் அடையும் போது, உங்களுக்குள் செய்துமுடித்த மன நிறைவு ஏற்படும். அதுவே உந்துதலாக இருந்து அடுத்து முன்னேற வழிவகுக்கும்;
தொடர்ந்து செய்து கொண்டே இருக்காதீர்கள் - சீக்கிரம் சலிப்பு வந்துவிடும். போதிய இடைவெளி தாருங்கள்;
அன்றாடும் செய்த – செய்யாதவற்றை, மாலையில் ஒரு முறை மறுபரிசீலனை செய்யுங்கள்;
முக்கியமாக - உங்கள் பொறுப்பை நீங்களே உணருங்கள்.
தள்ளிப் போடுவதால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும்
செய்ய தாமதிப்பது
உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக தோன்றலாம்;
என்னைப் பொறுத்தமட்டில் அது "கொழுப்பு" தான்;
நாம் அம்பானி வீட்டு பிள்ளைகளல்ல
அடுத்தவர் வந்து செய்து கொடுப்பதற்கு
நம் செயலை நாமே செய்து தான் வெற்றி பெற வேண்டும்;
தாமதிக்காதீர்கள்! தள்ளிப்போடாதீர்கள்!
இன்றே செய்து வெற்றிப்பாதையை தொடர்ந்திடுங்கள்;
மறவாதீர்கள்!!
பணிகளில் தேக்கம் உங்கள் தோல்வியின் துவக்ககமாவிடும்;
மலம் தேங்கினால் நோய் வருவதுபோல்
வேலை தேங்கினால் நிம்மதி போவது உறுதி;
"இன்றே செய் ; இன்னே செய்"
எனும் முதுமொழியை என்றும் மறவாதீர் !!
- [ம.சு.கு -09.04.2022]
Commentaires