• ம.சு.கு

[ம.சு.கு]வின் : புதைக்கப்பட்டவைகள்

சாதிக்கும் கனவுகள்


இன்று திரையுலகில் கமல், ரஜினி, விஜய், அஜித் என சில நூறு வெற்றி பெற்ற திரை நட்சத்திரங்களை பார்க்கின்றோம். அவர்களின் வெற்றி, புகழ், வருமானம் போன்றவற்றை கேட்டு நம்மில் பலர் நடிகர்களாகி வெற்றி பெற எண்ணி, பல ஆயிரம் பேர் சென்னைக்கு ரயிலில் ஏறி செல்கின்றனர்.


சென்னை கோடம்பாக்கத்தில் இலட்சத்திற்க்கும் மேற்பட்டோர், மிகப் பெரிய நடிகன் ஆகி விடுவேன் என்ற கனவுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். இதில் பல பெண்களும் கதாநாயகி ஆகும் ஆசையில் தங்களையே தொலைத்துக்கொண்டு திரிவதும் அறிந்த விடயமே.


எழுத்துலக கனவுகள்


எழுத்தாளர் கல்கி, பாலகுமாரன், சாண்டில்யன் என்று பல வெற்றி பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி அறிவோம். ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழகத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிட்ட 5-10 புத்தகங்கள் மட்டுமே, இலட்சம் பிரதிகள் தொடுகின்றன. ஏனைய பல ஆயிரம் நூல்கள், அதன் முதல் பதிப்பான ஆயிரம் பதிப்புகளையே தாண்ட முடியாமல் திணறுகின்றன.


புகழ்பெற்ற ஒரு புத்தகத்திற்கு பின்னால் பிரபரமடையாத நூற்றுக்கும் மேற்பட்ட, பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. இந்த பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கு பின்னாலும், அச்சகம் சென்றடையாத 10 கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கையெழுத்துப் பிரதிக்குப் பின்னும், குறைந்தது 100 எழுத்தாளர்களின் புத்தகம் எழுதும் எண்ணமும், கனவுகளும் நிறைந்திருக்கின்றன. இப்படிப் புகழ்பெற்ற ஒரு புத்தகத்திற்கு பின்னோக்கிப் பார்த்தால், குறைந்தது 10,000 புத்தகங்களுக்கான அடிகோடுகள் இடப்பட்டிருக்கின்றன.


நம் கண்ணுக்குத் தெரிவது இந்த பிரபலமான புத்தகங்கள் மட்டும்தான். பல பிரசுரமான புத்தகங்களைப் பற்றி நமக்குத் தெரியவருவதே இல்லை [வாய்ப்புகிடைத்தால் இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்று பாருங்கள்].


யதார்த்த நிலை இப்படி இருக்க, இன்னும் எழுத்தாளனாக முயற்சிக்கும் நபர்களின் எண்ணத்தில் இருக்கும் பல இலட்சம் புத்தகங்கள் உருபெருமா? என்பது பெரிய கேள்விக்குறிதான். இப்படி இலட்சம் எழுத்துக் கனவுகளுக்கு மத்தியில் சில வெற்றி பெற்ற புத்தகத்தை மட்டும் நம் மனதில் நிறுத்திக்கொண்டு, நாமும் வெற்றியடைவோம் என்று கண்மூடித்தனமாக களத்தில் குதிப்பது சற்று ஆபத்தானதல்லவா?


கனவுகள் மட்டும் போதுமா?


இலட்சம் நடிப்பு கனவுகள்,

இலட்சம் எழுத்துக் கனவுகள்,

இலட்சம் முதலமைச்சர் கனவுகள்

என்று எண்ணற்ற கனவுகள் இருக்க, இந்த இலட்சோபலட்ச கனவுகளின் மத்தியில் நாமும் கண்மூடித்தனமாக குதிப்பது சரியா?


வெற்றிக்கு எங்கு படிக்கலாம்?


வெற்றியாளர்களைப் பற்றி பல செய்திகளும் நூல்களும் உங்களை வந்தடையும். அவற்றில் உங்களுக்கு பல தகவல்களும் செய்திகளும் கிடைக்கும். ஆனால் தோல்வியாளர்களிடமிருந்து உங்களுக்கு படிப்பினைகள் கிடைக்கும்.


நாம் வெற்றி பெற வேண்டுமென்றால், எதை செய்தால் தோற்று விடுவோம் என்ற படிப்பினையை மிகவும் அவசியம். ஏனெனில் வெற்றி பெறுவதற்கான வழிகள் என்பது, தோல்விக்கான வழிகளை அடைப்பதில் தான் அடங்கியுள்ளது.


வெற்றிக்கெ தனி ஒரு வழி கிடையாது.

எதைச் செய்தால் தவறாகும்

எதைச் செய்யாமல் விட்டால் தவறாகும்

என்கின்ற தோல்வியை தவிர்ப்பதற்கான எல்லாவற்றையும் அறிந்து செயல்படுவதில் தான் வெற்றியின் பாதை இருக்கிறது.


இந்த பாதையை சரியாக அறிந்து பயணிக்க, நாம் பெருமளவில் தோல்வியுற்றவர்களின் படிப்பினைகளை அறிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் தோற்றவர்களை புறக்கனித்துவிட்டு, வெற்றியாளர்களுடன் மட்டுமே நேரம் செலவிட முயற்சிக்கிறார்கள்.


தோற்றவர்களிடம் கேளுங்கள்


உண்மையில், எண்ணற்ற கணவாளிகளின் புதைக்கப்பட்ட படிப்பினைகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். வெற்றியை தவறவிட்ட எண்ணற்றவர்களின் புதைக்கப்பட்ட அனுபவங்களையும் படிப்பினைகளையும், எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் அந்தத் தவறுகளை தவிர்த்து வெற்றிப் பாதையை சரியாக பிடிக்க முடியும்.


ஒரு சிறந்த படைப்பை தருவதற்கு, வெளிவராமல் புதைக்கப்பட்ட எண்ணற்ற படைப்புகளில் படிப்பினைகளையும் தோல்வியின் காரணத்தையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த புதைக்கப்பட்டவற்றில், சிறிது பயணம் செய்து கொண்டே இருங்கள். உங்கள் வெற்றிக்கான பாதையில் வரும் தடைக்கற்கள் என்னவென்று அவை சொல்லித்தரும். அந்தத் தடைகளை எப்படி தாண்டுவது என்ற வழிமுறையை கண்டு கொள்வதற்கு அங்கு உங்களுக்கு திட்டங்கள் கிடைக்கும்.


நடைமுறைக்கு உகந்த பாதை


திரையுலகில் யாரை அணுக வேண்டும்

எங்கு துவங்க வேண்டும்

எதெல்லாம் ஏமாற்று வேலைகள்

என்பதை அறிந்துகொள்ளவது அவசியம். யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு பயனப்பாதையை வகுத்தால், புகழின் உச்சியை அடைய முடியாவிட்டாலும் நல்லதொரு நடிகனாக கட்டாயம் மிளிர முடியும்.


இலட்சம் பிரதிகளைத் தாண்டும் புத்தகமாய் புகழ் பெறாவிட்டாலும், காலத்திற்க்கும், பயன்படும் படியாக சில பயனுள்ள புத்தகங்களை வழங்க முடியும். சமுதாயத்திற்கு ஏற்றதொரு சிறந்த நூலைப் படைத்தால், இன்றில்லாவிட்டாலும் கட்டாயம் எதிர்காலத்தில் அது போதிய அங்கீகாரத்தை பெற்று விடும்.


உன்னதமான படைப்புக்களை கொடுத்த பல கவிஞர்களும், எழுத்தாளர்களும், அவர்களின் மரணத்திற்குப் பின்புதான் உலகப்புகழ் பெற்றார்கள். உங்களுடைய படைப்பு எல்லா கோனல்களையும் கடந்த ஒரு உன்னத படைப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள். அதற்கான அங்கீகாரத்தை சமுதாயம் கட்டாயம் அளிக்கும்.


மறவாதீர் !


புதைக்கப்பட்டவைகள் தேவையற்றவைகள் அல்ல.

நம் வெற்றிப்பாதைக்கான எண்ணற்ற யோசனைகளும்

அதன் சாதக பாதகங்களும்

உங்களுக்கு அங்குதான் இலவசமாகக் கிடைக்கும்.


- [ம.சு.கு - 29-12-2021]

Recent Posts

See All

கணக்கீடுகள்தான் வாழ்க்கை மூளை போட வேண்டியதை மனம் போட்டாலோ மனம் போட வேண்டியதை மூளை போட்டாலோ கணக்கு ஏதேனுமொரு விதத்தில் நஷ்டமாகும்