• ம.சு.கு

[ம.சு.கு]வின் : விழித்திருங்கள்


சாலை விபத்துக்களை சந்தித்து மீண்ட ஓட்டுநர்களை கேட்டுப்பாருங்கள், அந்த விபத்து எதனால் நிகழ்ந்ததென்று. பலரின் பதில், ‘சில நொடிகள் தன் கவனம் திசை திரும்பியதால்’ என்றிருக்கும். அல்லது எதிரில் வந்தவர் கவனிக்காமல் வந்து மோதிவிட்டார் என்பர். வாகனத்தை வேகமாக ஓட்டுவது முக்கியமல்ல! வேகத்திற்கு ஏற்ப, சாலையின் மீதான நமது கவனம் சிதறாமல் இருப்பதுதான் அதிமுக்கியம்.


தானியங்கி செயல்பாடு


தினமும் இருசக்கர - நான்கு சக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று வருபவரா நீங்கள்? அந்தப் பயணத்தின்போது சாலையின் மீதான உங்கள் கவனத்தின் அளவு எவ்வளவு?


நொடிப்பொழுதும் கவனம் சிதறாமல், சாலையிலேயே கவனத்தை வைத்து ஓட்டுகிறீர்களா? இல்லை வெவ்வேறு சிந்தனைகளில் மனம் மூழ்கியிருக்க, ஆழ்மனதின் போக்கில் வாகனம் செல்கிறதா?


யதார்த்தத்தில், அன்றாடம் சென்று வரும் பாதையாக இருந்தால் நமது கவனம் சாலையில் இருப்பதில்லை. ஆழ்மனத்தின் வழிநடத்தலில் நாம் சென்று விடுகிறோம். சாலையின் இருபுறத்திலும் இருப்பவற்றை கவனிப்பதில்லை. ஏதோ ஒரு சிந்தனையில் பயணம் முடிந்து விடுகிறது. இது வாகனப் பயணம் என்று மட்டுமில்லை. வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும், எவற்றையெல்லாம் நாம் கவனத்தோடு செய்கிறோம்? எவையெல்லாம் கவனமின்றி ஆழ்மனதின் வழி நடக்கிறது? என்று சிந்தித்துப் பாருங்கள்.


ஆயிரத்தில் ஒருவரா? ஆயிரத்துள் ஒருவரா?


உங்கள் ஆழ்மனத்தின் வழி நடப்பதில் தவறேதும் இல்லை. பின் எதற்காக இங்கு அதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறேன் என்று கேட்கிறீர்களா? உங்களின் நேரடி கவனம் இல்லாமல் ஆழ்மனதின் வழி நடப்பதனால், நீங்கள் புதிதாய் எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை! எதையும் சாதிக்கப் போவதுமில்லை! வெறுமனே காலம் கடந்து செல்லப் போகிறது. காலப்போக்கில் உங்களின் நினைவாற்றலும் குறையத் தொடங்கிவிடும். வாழ்க்கையை, நீங்கள் உங்கள் எண்ணம் போல் வழி நடத்துவதற்கு பதிலாக, வாழ்க்கை தன் இஷ்டம்போல் உங்களை இழுத்து சென்று கொண்டிருக்கும். கடைசியில் ஆயிரத்தில் ஒருவனாக சாதிக்காமல் அந்த ஆயிரத்துள் ஒருவனாக கும்பலோடு கும்பலாகக் வாழ்க்கை கரைந்து போயிருக்கும்.


இப்படி பாரதி சொன்ன ‘வேடிக்கை மனிதர்’ போல வாழ்க்கையை கடத்தி, மடிவது தான் உங்களின் இலட்சியமா? உங்களின் பதில் ‘இல்லை’ என்பதாக இருந்தால், உடனே விழித்துக் கொள்ளுங்கள்!!


பார்த்தல் {எ} கவனமாக கவனித்தல்


ஏதேனும் தூசி பறந்து கண்ணருகில் வந்தால், கண் தன்னை தற்காத்துக்கொள்ள தானாக மூடிவிடும். இது உடலின் தானியங்கி தற்காப்பு செயல்பாடு. கண் மூட வேண்டும் என்று நீங்கள் தனியாக நினைக்கவில்லை. அது தானாக நிகழ்ந்தது. இந்த தானியங்கித் தன்மை, நம் உடல் பாதுகாப்பை தாண்டி, நம் அன்றாட வாழ்க்கையையே நடத்திக் கொண்டிருப்பது தான் இங்கு பிரச்சனை!!


நீங்கள் அன்றாடம் செய்கின்ற வேலைகளில் மிகவும் கை தேர்ந்தவராக இருந்தாலும், அப்போதைக்கு செய்யும்போது, அதன் மீது அதிக கவனம் செலுத்தவில்லை என்றால் என்னவாகும்? அந்தக் காரியம் பெரும்பாலும் நடந்து விடும். ஆனால் உங்களின் திறமையால் அதில் என்ன புதுமை? சிறப்பைக் கூட்டினார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள் - ஒன்றுமே இருக்காது.

வாழ்க்கையில் சாதிக்க, உழைப்பு தான் முக்கியம் என்று பலமுறை கேட்டிருப்பீர்கள்! படித்திருப்பீர்கள்! முயற்சி, தன்னம்பிக்கை என்பதெல்லாம் தேவை. ஆனாலும் அவை அனைத்துக்கும் அடிப்படையாக, அவற்றின் மீதான உங்கள் விழிப்புநிலை தான் அதிமுக்கியம். ‘விழிப்புநிலை’ என்றால் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பதன்று. உங்களை சுற்றியிருக்கின்றவற்றை, அங்கு நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல், கவனத்தோடு கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.


கவனித்துப் பாருங்கள் – வாழ்க்கை மாறும்


  • கவனத்தோடு படிக்கத் தொடங்கினால், பாடம் எளிதாக புரியும் நன்றாக நினைவில் பதியும்.

  • கவனத்தோடு சமையல் செய்தால், அதன் சுவை சிறப்பாக இருக்கும். கவனமில்லாமல் இருந்தால், உப்பும்-காரமும் சரியில்லாமல் தான் போகும்.

  • உங்களைச் சுற்றி நடப்பவற்றை கவனிக்கத் தொடங்கினால், அடுத்து என்ன நடக்கலாம் என்று உங்களால் நன்றாக யூகிக்க முடியும். அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதை எவ்வளவுக்கெவ்வளவு சரியாக யூகிக்க முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் திட்டமிட்டு நடப்பவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம்.

  • அன்றாடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள், இடர்ப்பாடுகளுக்காண தீர்வு உங்களைச் சுற்றியுள்ளவற்றிலேயே இருக்கும். நீங்கள் நடப்பவற்றை கூர்ந்து கவனித்தால், பிரச்சனையில் மூலாதாரத்தை எளிதில் உணர்ந்து தீர்வு காணமுடியும். கவனம் இல்லாதுபோனால், பிரச்சனைகள் வளர்ந்து பூதாகரமாகிவிடும்.

  • சாலையின் மீது கவனத்தோடு வாகனத்தை ஓட்டினால், வாகன விபத்தென்பதே இல்லாமல் ஆக்கலாம்.

  • விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்கிறீர்களா? போட்டியில் உங்களை எதிர்த்து விளையாடுபவர்களின் ஆட்டங்களை, வாய்ப்பு கிடைக்கும்போது கவனமாக கவனித்தால், அவர்களின் நிறை-குறைகளை அறிந்துகொள்ள முடியும். எதிர்த்து விளையாடுபவரின் பலவீனங்கள் தெரிந்தால், அவர்களை வெல்வது எளிதாகிவிடும்.

  • திரைப்படங்களை பார்க்கிறீர்களா? வெறுமனே அமர்ந்து விட்டு வந்தால், அந்த கதை உங்களை வழி நடத்தி இருக்கும். சற்று ஆழமாக கவனிக்கத் தொடங்கினால், பல புதிய தகவல்களை கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும். அந்த படம் எங்கு படமாக்கப்பட்டிருக்கிறது? என்னென்ன இடங்களைக் காண்பிக்கிறார்கள்? எதற்காக இப்படி காட்சியமைப்பை வைத்துள்ளார்கள்? என்று சிந்தித்து அதன் காரண-காரியங்களை அறியலாம். இவை, உங்களின் பொது அறிவைக்கூட்டுவதோடு, வாழ்க்கையின் புரிதலை செம்மையாக்கும்.

  • ‘என்ன உண்கிறீர்கள்’? ‘எவ்வளவு உண்கிறீர்கள்’? என்று கவனிக்கத் தொடங்கினால், பசிக்கு போதுமான அளவு உண்டவுடன், தானாக நிறுத்திக் கொள்ளலாம். உடல் பருமன் மற்றும் இதர உடல் உபாதைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். கவனமின்றி சாப்பிட்டால் வயிறு நிறைவது தெரிய சற்று தாமதமாகும். அதற்குள் வயிறுபுடைத்திருக்கும். பொதுவாக, பல உணவுவகைகள் கண்முன்னே வைத்திருக்கும்போது, இதிலொரு வாய், அதிலொரு வாய் என்று பலவற்றை சுவைத்து வயிறு புடைப்பதுதான், தினம்தினம் எல்லோருக்கும் நடக்கிறது. கவனத்தோடு சாப்பிடுங்கள்! என்ன சாப்பிட்டேன்? எவ்வளவு சாப்பிட்டேன்? என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அதை ஆய்வு செய்யச்செய்ய, உங்களின் உணவு முறை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.


நீங்கள் எதைச் செய்தாலும், எப்பொழுதும் உங்களைச் சுற்றி நடக்கின்றவற்றை தொடர்ந்து கவனத்துடன் கவனித்து வந்தால், எதுவும் உங்கள் கைமீறி போகாமல், அந்தச் செயல்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.


'கவனிப்பை அதிகரியுங்கள்

வாழ்க்கையின் போக்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்;'


'உங்களின் விழிப்புநிலைதான்

உங்கள் வெற்றியின் அளவுகோள்;

விழித்திருங்கள்!! வெற்றி நிச்சயம்!!'


- [ம.சு.கு 23-04-2022]