top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : தவிர்க்கமுடியாத தோல்விகள்

“வெற்றியும் நிரந்தரமில்லை;

தோல்வியும் நிரந்தரமில்லை;

வாழ்க்கையும் நிரந்தரமில்லை;

இப்படி எதுவுமே நிரந்தரம் இல்லை என்றால்

எதை நம்பி வாழ்வது;”


என்ன ஒரு குழப்பமான நிலை நமக்கு. இந்தக் கேள்விகளுக்கான விடையை, பலநூறு நூற்றாண்டுகளாய் மனித இனம் தொடர்ந்து தேடிக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு அறிஞரும், ஒவ்வொரு யோகியும், ஒவ்வொரு முனிவரும் வெவ்வேறு விதங்களில், அவர்களின் வாழ்க்கை குறித்த அனுபவ அறிவை விளக்கியுள்ளனர். எத்தனைதான் அனுபவ மொழிகளை ஆன்றோர்கள் பகிர்ந்தாலும், நமக்கு அவற்றில் எவ்வளவு புரிகிறது? அவற்றில் எவற்றையெல்லாம் ஏற்று அதன் வழி நடக்கிறோம்? என்பதை பொறுத்தே நம்முடைய வாழ்க்கை தீர்மானமாகிறது.


  • தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் சோதனை முயற்சிக்கு பின்னரே மின்விளக்கை உருவாக்கி வெற்றி கண்டார்;

  • பல ஆயிரம் முறை பந்தை இலாவகமாக உதைத்து பயிற்சி செய்ததனாலேயே, ரொனால்டோவும், மெஸ்ஸியும் மிகத்துல்லியமாக கால்பந்தாட்டத்தில் கோல்களைப் அடிக்க முடிகிறது;

  • சிறந்த பேச்சாளராக இன்று மேடையில் நிற்கும் பலரின் ஆரம்பகால முயற்சிகள் பரிகசிக்கப்பட்டிருக்கின்றன;

  • சிறந்த நடிகராக மிளிரும் எல்லோரும், ஆரம்பகாலங்களில் எண்ணற்ற புறக்கணிப்புகளைத் தாண்டித்தான் தங்களை நிரூபித்துள்ளனர்.

  • ஒலிம்பிக் போட்டி ஓட்டப்பந்தயத்தில், ஆரம்பத்தில் 40வது இடத்தை பிடித்த உசேன் போல்ட், அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் முடிசூடா மன்னனாக உலகசாதனை படைத்தார்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் உணர்த்தும் ஒரே பாடம், மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம், எண்ணற்ற தோல்விகளுக்கு பின்னரே கிடைத்துள்ளது என்பதே! அது ஏன்? வெற்றிபெற தோல்வியை சந்திப்பது என்ன ஒரு முன்தகுதி நிலையா?


யாரும் முதல் முறையிலேயே வெற்றி காண முடியாதா என்று பலரும் கேட்கலாம்? இந்த கேள்விக்க பதிலளிக்கும் முன், சில அடிப்படைகளை சற்று நினைவு கூறுவோம்:


  • நாணயத்தின் இருபுறம் போல் வெற்றியும் தோல்வியும் ஒவ்வொரு சூழலிலும் மாறி மாறித்தான் வரும்;

  • போட்டி என்று வந்துவிட்டால், பெரும்பாலும் ஒருவர்தான் [ஒரு அணிதான்] வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். ஏனையவர்களுக்கு தோல்விதான்.

  • எல்லோராலும் எல்லா சமயங்களிலும் சரியாகவே செய்துவிடமுடியாது. சில மாற்றங்கள், தவறுகள் நேரலாம். அந்த சிறு தவறுகள் நம்மை கீழே தள்ளிவிடக்கூடும். ஆனால் அந்த சிறுசிறு தவறுகளை அறிந்து, யாரொருவர் முறையாக சரி செய்து, தொடர்ந்து முயற்சிக்கிறாரோ, அவரே வெற்றியடைய தகுதியுடையவர் ஆகிறார்.


தோல்விகளை தவிர்க்க முடியுமா?


நீங்கள் புதியதொரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். உங்களின் சக போட்டியாளர் அந்த விளையாட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இந்தச் சூழ்நிலையில் உங்களின் வெற்றி சற்று கேள்விக்குறியாகத்தான் இருக்கும். தோல்விக்கான வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், அவருடனான விளையாட்டில் உங்களுக்கு கற்றல் அனுபவம் மிகஅதிகம். அதேசமயம் அவர் அலட்சியமாக இருக்கும் தருவாயை பயன்படுத்தி நீங்கள் வெற்றிபெறவும் செய்யலாம். ஆனால் அதே விளையாட்டை நீங்கள் நூறாவது முறையாக விளையாடும்போது, அனுபவமில்லாத ஒரு போட்டியாளரிடம் நீங்கள் தோற்றால், உங்களின் அந்த கவனக்குறைவை, திறமையின்மையை என்னவென்று சொல்வது.


எங்கு யாருடன் மோதுகிறோம்? அவருடைய பலம்-பலவீனம் என்ன? போட்டிக்கான சூழ்நிலைகள் யாருக்கு சாதகமாக இருக்கின்றன என்று எண்ணற்ற விடயங்கள் வெற்றி-தோல்வியில் அடங்கியிருக்கிறது. இவை ஒவ்வொன்றையும் சரிவர ஆராய்ந்து, உரிய பயிற்சியுடனும், சூழ்நிலை சார்ந்த முன்னேற்பாடுகளுடனும் களத்தில் இறங்குபவர்க்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம். ஒருவேளை இருவருமே சமமானவர்களாக இருக்கும் பட்சத்தில், யார் அதிக விழிப்புடன் செயல்படுகிறாரோ, அவர் வெல்ல வாய்ப்பு அதிகரிக்கிறது.


மென்பொருள் செயலிகள் எப்படி முழுயாகின்றன


உங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் புதியதொரு செயலியை உருவாக்குகிறீர்கள். உங்களால் எல்லாவகையான சூழ்நிலைகளையும் ஒரே பட்டியலாய் அனுமானித்து, செயலியை ஒரே முயற்சியில் 100% முழுமையுடன் செய்துவிட முடியுமா என்றால், அதற்கான சாத்தியம் குறைவுதான். எல்லா செயலிகளும், மக்களின் பயன்பாட்டிலிருந்து கிடைக்கும் ஆலோசனைகள், கருத்துக்கள், விமர்சனங்களுக்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களை உடனுகுடன் செய்து, அந்த செயலியை மேம்படுத்தி முழுமைபெறச் செய்கிறார்கள்.


முதன் முறையில் செய்தபோது அந்த செயலி, முற்றிலுமாய் செயல்படாமலே கூட இருந்திருக்கக்கூடும். மென்பொருள் செயலிகளில், எது எப்போது வேலை செய்யாமல் போகும் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை. உங்கள் கட்டுப்பாடுகளையும் மீறி சில சரிவுகள் வரும். அவற்றை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அடுத்த முயற்சியில் இறங்கினால் தான் வெற்றி பெற முடியும்.


குழுவாக இயங்கும்போது பொறுமை முக்கியம்


நீங்கள் தனிநபராக இயங்கும் இடங்களில், உங்களின் முயற்சி, பயிற்சி மற்றும் விழிப்பான செயல்பாடுகளால் தோல்விகளை தவிர்த்துவிடக்கூடும். ஆனால் ஒரு குழுவாக செயல்படும்போது, எல்லோருமே உங்களைப்போல் அதிபுத்திசாலியாக விழிப்புடன் செயல்படுவார்கள் என்று முழுமையாக எதிர்பார்ப்பதும், நடைமுறையில் என்ன நடக்கும் என்பதும் உங்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. அதிகபட்சம் உங்களால் அவர்களுக்கு போதிய பயிற்சியைக் கொடுத்து வழிநடத்த முடியும். ஆனால் தோல்வி, சரிவுகளை முற்றிலுமாய் தவிர்க்க முடியுமா என்றால்? அது சாத்தியமில்லை. அந்த சரிவுகளை ஏற்றுக்கொள்ளப்பழக வேண்டியதுதான்.


வெற்றி வேறு – சராசரி வேறு


ஒரு நண்பர் கேட்டார், “எப்படி பள்ளியில் மட்டும் தவறாமல் ஆண்டுதோறும் தேர்வில் வெற்றி பெற்று கல்வியைப் பூர்த்தி செய்கிறோம், ஆனால் வாழ்க்கையில் தோல்விகள் வந்து கொண்டே இருக்கிறது” என்று?


இந்த கேள்வியை சற்று ஆழமாக யோசித்தால், வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்துவிடும். பள்ளியில் 35% மதிப்பெண் எடுத்தாலேபோதும், தேர்வில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்பிற்கு நகர்ந்து விடுகிறார்கள். அங்கு முதல் மதிப்பெண் பெற்றால் தான் வெற்றி, 95% மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றால் தான் வெற்றி என்ற கட்டாயங்கள் இல்லை.


ஒரு மாணவர், குறிப்பிட்ட சராசரியை [35% / 50%] பெற்றாலே, அடுத்த வகுப்புக்கு தகுதி பெற்றுவிடுகிறார். அதே சராசரி முறையை நம் அன்றாட வாழ்க்கைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் எல்லோருமே தொடர்ந்து வெற்றி பெற்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு போய்க் கொண்டேதான் இருக்கிறோம். நமக்கு தேவையானதை நாமே உழைத்து சம்பாதித்து மாதாமாதம் காலத்தை வெற்றிகரமாகத்தானே கடத்துகிறோம். ஆனால் அன்றாட வாழ்வில், இதையாரும் வெற்றி என்ற ஏற்றுக்கொள்வதில்லை. இங்கு, வெற்றி என்பது பெரிய புகழையும், பெரும் செல்வத்தையும் சேர்ப்பதாக எல்லோரும் கருதுவதால், ஒரு சிலரே அந்த முதல் நிலையை அடைகின்றனர். மற்றவர்கள் சராசரியை பெற்று வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.


ஒரு வெற்றியாளரின் பின்னால்


அன்றாட நடைமுறையில், வாழ்வின் சராசரி என்பது தோல்வியல்ல! அதேசமயம் அது பெரிய வெற்றியும் அல்ல? பெரிய வெற்றி என்பது பல நபர்களின் தோல்விகளை மறுபுறத்தில் மறைத்திருக்கிறது. நீங்கள் வெற்றியாளராக நிற்கும் ஒரு நபரா? அல்லது அந்த வெற்றியாளருக்கு பின்னால் நிற்கும் ஆயிரத்தில் ஒரு தோல்வியாளரா? என்பது ஒவ்வொரு நிகழ்விலும் மாறுபடும். என்றுமே, வெற்றியும்-தோல்வியும் நிரந்தரமில்லை. தொடர்ந்து நம்பிக்கையோடு முயற்சிப்பவர்களுக்கு, தோல்விகளுக்குப் பின்னால் கட்டாயம் வெற்றிகளும் தொடர்ந்து வந்தே தீரும்.


நான் தோல்வியே காணாமல் வெற்றி பெறுவேன் என்று சபதம் எடுத்தாலும், பல வேலைகளை செய்யும்போது, அவைகள் சிலவற்றில் ஏதேனுமொரு சறுக்கல் வந்தே தீரும். எல்லோரும் எல்லாத்துறைகளிலும், எல்லாவற்றையும் முன்னரே அனுமானித்து சரிவர செய்வது சாத்தியமில்லை. ஏனெனில் நம் அறிவிற்கும் ஒரு எல்லை உண்டு.


எந்த ஒரு முயற்சியிலும், செயலிலும் தவிர்க்க முடியாத சில சரிவுகளும், சில தோல்விகளும் வந்து போகும். அந்த தோல்விகளில் இருந்து கிடைக்கும் பாடங்களை துணையாகக் கொண்டு, அடுத்த பெரும் வெற்றிக்கு உழைப்பவர்கள் மட்டுமே, காலத்தால் அழியாத பெரும் புகழை அடையத் தகுதி பெறுகிறார்கள்.


எங்கும் எதிலும்

சில சரிவுகளும், தோல்விகள்

தவிர்க்க முடியாமல் போகலாம்;

தோல்விகளுக்கு மனம் தளராமல்

அதன் படிப்பினைகளை கொண்டு

வெற்றிக் கொடி நாட்ட

தொடர்ந்து உழைத்தால்

வெற்றி நமதே!!


- [ம.சு.கு 16.07.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page