top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வெற்றிக்கான “எண்ணம்” தான் “வெற்றி”

 • பள்ளிகளில் உங்களுடன் பயின்ற மாணவர்களிள், முதல் மதிப்பெண் எடுத்த மாணவனே, தொடர்ந்து முதல் மதிப்பெண் எடுத்து வருவான்.

 • விளையாட்டில் உலக சாம்பியனான நபரே, தொடர்ந்து சில வருடங்களுக்கு வெற்றி பெற்று வருவார்.

 • யதார்த்த உலகில் பணம் இருப்பவரிடம் தான் மேலும் பணம் குவிந்து கொண்டே இருக்கிறது.

இதையெல்லாம் ஏன் என்று நீங்கள் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதை என் கோணத்தில் அறிவதற்கு முன், சில உதாரணங்களைப் பார்ப்போம்.


மட்டைப் பந்தாட்டம் [கிரிக்கெட்]


கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணி ஒரு சில மாதங்கள் தொடர்ந்து வெற்றி கண்டு பல ஜாம்பவான்களை துவம்சம் செய்தது. அதேசமயம், சில மாதங்கள் ஏனோ தொடர் தோல்விகளை சந்தித்து. அந்தத் தருணங்களில், சாதாரண கத்துக்குட்டி அணிகளிடம் கூட படுதோல்வி கண்டது.


அதே வீரர் குழு, அதே பயிற்சியாளர், அதே களங்கள்தான். ஆனால் ஏன் இந்த முரண்பட்ட வெளிப்பாடு?


கல்வி


பள்ளியில் படிக்கும் மாணவர்களில், நன்றாகப் படிப்பவர்கள் தொடர்ந்து எல்லா தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற்று ஆசிரியர் மத்தியில் நற்பெயருடன் வலம் வருகின்றனர். அடுத்தடுத்து தேர்வுகளில் மதிப்பெண்ணும் உயர்கிறது. அவர்கள் அரசு பொது தேர்வுகளிலும் அவ்வண்ணமே அதிக மதிப்பெண் பெற்று எளிதில் மேற்கல்விக்கு கல்லூரிகலில் இடம் கிடைத்து நுழைகின்றனர். ஆனால் அதே மாணவன் ஏதேனும் ஒரு பிரச்சினையில் சிக்கி, படிப்பில் கவனம் சிதறினால், அவனால் அந்த சிக்கலில் இருந்து வெளியே வர முடிவதில்லை. படிப்படியாய் தன் கல்வியையும் இழந்து, தான் சேர்த்த நற்பெயரையும் தொலைத்து நிற்கிறான். சில கண்கூடான உதாரணங்களை நீங்களே பார்த்திருப்பீர்கள்.


முன்னர் வெற்றி பெற்றவனால், மீண்டும் இப்போது வெற்றி பெற முடியவில்லை. ஏன்?


வெற்றியும்-தோல்வியும் “மனப்பான்மையே”


 • வெற்றி பெறுபவர்கள் தொடர்ந்து வெல்கிறார்கள், ஏன்?

 • தோற்பவர்கள் தொடர்ந்து தோற்கிறார்கள் [அல்லது] விலகி விடுகிறார்கள், ஏன்?

 • வெற்றிபெறுபவர்களும், சில சமயங்களில் ஏதோ காரணத்தினால் ஏற்படும் தோல்வி வலையில் சிக்கி, தொடர்ந்து தோல்வியாளர்களாய் தங்களின் பாதையை தொலைக்கின்றனர். ஏன்?

இந்த “ஏன்” என்ற கேள்விக்கான ஒரே நேரடி பதில், அவர்களின் “மனப்பான்மையே”.


மனப்பான்மை தான் எல்லாமே


முதல்முறை ஒரு சிறிய வெற்றி பெற்றால், அந்த சிறிய வெற்றி நமக்கு ஒரு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. அந்த வெற்றி தரும் நம்பிக்கை, அடுத்த முயற்சியில் நம்மை இன்னும் தைரியமாக செயல்பட வைக்கிறது.


பொதுவாக “நம்பிக்கையோடு களம் காண்பவருக்குத்தான், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்”.


அந்த பொது விதிதான் நமக்கும், எல்லா தருணங்களிலும், எல்லா முயற்சிகளிலும் பொதுவாக பொருந்துகிறது. சிறுசிறு வெற்றிகளை தொடர்ந்து, நாம் நம்பிக்கையோடு முயற்சிப்பதால், அடுத்த கடினமான முயற்சிகளிலும் தைரியமாக போராடி வெற்றி காணுகிறோம். [குறிப்பு: தொடர்ந்து வரும் வெற்றிகள் உங்களின் அகங்காரத்தைக் கூட்டி உங்களின் கவனத்தை சிதறடித்துவிடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிமுக்கியம்].


இதே வெற்றி மனப்பான்மையின் நேரெதிர் விளைவுதான் தோல்வியின் கதையும். ஓரிரு முறை தோற்றால், அந்த தோல்வி பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. அடுத்த முயற்சியில் தோல்வி ஏற்பட்டுவிடுமோ? என்ற பயம் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த பயமே நம் செயலை, நம் திட்டமிடலை அதீதமாக பாதிக்கிறது. சில கடினமான முயற்சிகளை எடுக்க அது அச்சுறுத்துகிறது. கடினமான முயற்சி எடுக்காவிட்டால் எப்படி வெற்றி பெறுவது?


சிறு வெற்றிகளும் – சூதாட்டமும்


சூதாட்ட கேளிக்கை விடுதிகளில் பார்த்திருந்தால், அங்கு முதல்முறையாக வந்து பங்கெடுக்கும் நபர்களில் பலர், ஆரம்பத்தில் சிறுசிறு வெற்றிகளைப் பெறுவார். அவர் தொடர்ந்து ஓரிரு முறை வெற்றி பெறும் வகையில் அங்கு இருப்பவர்கள் சூழ்நிலையை உருவாக்குவார்கள். அந்த சிறு வெற்றிகள் அவருக்கு பெரிய நம்பிக்கையை அளித்து, அவருக்கு அன்றைய தினம் ஏதோ அதிர்ஷ்டம் இருப்பதுபோல உணர வைத்து, அடுத்தடுத்து பெரிய தொகையை அந்த சூதாட்டத்தில் கட்ட செய்வார்கள். இந்த மாய சூதாட்ட வலையில் இப்படித்தான் ஒவ்வொருவரும் படிப்படியாய் உள்ளே சிக்கிக் கொள்கிறார்கள்.


ஆரம்பத்தில் கிடைக்கும் சிறுசிறு வெற்றிகளை தங்களின் அதிர்ஷ்டம் [அல்லது] திறமையின் வெளிப்பாடு என்று நம்பி அதை தொடர்கிறார்கள். இந்த ஆரம்ப வெற்றிகள், மற்ற துறைகளுக்கு வேண்டுமானால் நல்ல நம்பிக்கை அளித்து நம்மை முன்னேற வழி வகுக்கலாம். ஆனால் சூதாட்டத்தில் இந்த ஆரம்பகால சிறு வெற்றிகள், நம்மை அகல பாதாளத்தில் தள்ளிவிடுவதற்கான மாய வலை என்பதை உணராவிட்டால், நம் விதி அதோகதிதான்.


தோல்வியெனும் சுழல்


வெற்றியைப் போல இந்த தோல்வியும் ஒரு மாறுபட்ட மனப்பான்மையாக நம்மை தொற்றிக் கொள்ளும் போது, பெரிய சிக்கல் உருவாகிறது. எதைச் செய்வதானாலும், உள்ளூர ஒரு பயம் தொடர்ந்து வருகிறது. நாம் செய்வது தவறாகி விடுமோ என்ற பயம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதென்று ஒரு விரக்தி. இப்படி எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து, தோல்வி மனப்பான்மையிலேயே உழலாமல், யார் ஒருவர் கவனமாக செயல்பட்டு, அதிலிருந்து விடுபடுகிறாரோ, அவரால் மீண்டும் வெற்றிச்சக்கரத்தில் பயணிக்க முடியும்.


ஆலோசகர்கள் தேவை


இந்த தோல்வியெனும் சக்கரத்தில் சிக்கிக் கொள்பவர்கள், தாங்களாக அதை புரிந்துகொண்டு பொறுமையாக அதிலிருந்து வெளிவர திட்டமிடாமல், சில அவசரகதி முறைகளை கையாண்டு மேலும் சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள். இங்குதான், அவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாளர் / ஆலோசகர் இருப்பது மிகமிக அவசியமாகிறது. ஏனெனில், தோல்வி வலையில் சிக்கி உழல்பவரால் அதைவிட்டு விலகி, வெளியில் இருந்து சிந்திக்க முடிவதில்லை. அந்த பிரச்சனையிலிருந்து விலகியிருந்து, அந்த தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, உரிய திட்டம்வகுத்து படிப்படியாய் வெளிவர உதவுவதற்கும், நமக்கு நம்பிக்கையளிக்கவும், உத்வேகமளிக்கவும் ஒரு நல்ல பயிற்சியாளர் / ஆலோசகர் தேவைப்படுகிறது.


தோல்வியில் உழலும் வீரர்களுக்கு


விளையாட்டுத்துறையில், அவ்வாறாக தன்னம்பிக்கையிழந்த சூழலில் சிக்கியுள்ள வீரரை, ஒரு நல்ல பயிற்சியாளர் போதிய ஒய்வளித்து, உத்வேகம் அளித்து, பின் ஆரம்பத்தில் எளிய போட்டியாளர்களுடன் விளையாட வைத்து, அதன் மூலமாய் படிப்படியாய் அவர்களுக்கு நம்பிக்கை கூட வழி செய்வார். அவ்வாறு வெவ்வேறு படிநிலை வீரர்களுடன் விளையாடி படிப்படியாக முன்னேறும் போது, அந்த வீரருக்கு நம்பிக்கை தானாகவே வளர்கிறது. சில வாரங்களிலேயே பெரிய வீரர்களை நம்பிக்கையோடு எதிர் கொள்ளும் மனப்பான்மை வலுப்பெருகிறது. இது மல்யுத்தம், சதுரங்கம், போன்ற தனிநபர் விளையாட்டுக்களில் சாதாரணமாக கையாளப்படும் பயிற்சி யுத்திகள்.


“மனப்பான்மையை” உணர்வதுதான் முக்கியம்


இந்த படிப்படியான நம்பிக்கை வளர்க்கும் முறை விளையாட்டுத் துறைக்கு மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்க்கைக்குமான ஒன்றுதான். சில வியாபார முயற்சிகளில், சில உறவுகளில், சில திட்டச் செயல்பாடுகளில் நாம் தோற்றிருக்கலாம். எதேச்சையாக அந்தத் தோல்வி ஓரிருமுறை தொடர்ந்திருக்கலாம். அந்த தோல்வியில் உழலும் மனப்பான்மையில், நீங்கள் சிக்கியுள்ளீர்கள் என்பதை நீங்கள் உணர்வது தான் இங்கு முக்கியம். அதை புரிந்து கொண்டால், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.


வெறுமனே வெற்றிபெருவதற்காக உழைப்பதற்கும், நாம் கடந்துவரும் பாதை, நமது திறமைகள், நம்முடைய தற்போதைய மனநிலை போன்றவற்றை சீராய்ந்து, நம்பிக்கையை வளர்க்க சாதுரியமாக செயல்படுவதற்கும், எண்ணற்ற வேறுபாடு உண்டு. உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி / ஆலோசகர் அமையப் பெற்றால், உங்களின் நிலையை அவர் இனங்கண்டு வழிநடத்துவார். அதனால்தான், எப்போதும் நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியை / ஆலோசகரை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர்.


எண்ணிய எண்ணியாங்கு


நீங்கள் ஆயிரக்கணக்கான வழிகாட்டி நூல்களையும், தன்னம்பிக்கை நூல்களையும் வாசித்திருந்தால், அவை எல்லாவற்றிலும் பொதுவாய் வலியுறுத்தப்பட்டிருக்கும் ஒரே விடயம், “மனப்பான்மை” என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கள் வெற்றி தோல்விகள் யாவுமே உங்களின் மனப்பான்மை சார்ந்த ஒன்று என்பது அறிவியலும், ஆன்மீகமும் பொதுவாக ஒத்துக்கொண்ட ஒரு யதார்த்தம். அதனால் தான் வள்ளுவர் “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்ற குறல் வாயிலாக, நாம் திண்ணிய நெஞ்சத்தோடு எண்ணங்களை மேம்படுத்தி முயற்சி செய்தால், நம் எண்ணங்கள் யாவும் அவ்வண்ணமே ஈடேறும் என்று நமக்கு பாடம் போதித்திருக்கிறார்.


அடுத்த செயலை ஆக்கப்பூர்வமானதாக்குவோம்


ஒரு பிரச்சனை வரும்போது தன்னம்பிக்கை உள்ளவர்கள் அதை தீர்ப்பதற்கான வழி தேடுகிறார்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன, என்ன இழப்புகள் ஏற்படும் என்று பட்டியலிடுகிறார்கள். பிரச்சனைகளின் விளைவுகள் குறித்து பட்டியல் மட்டும் பெரிதாய் போட்டுக் கொண்டிருப்பதில் என்ன பயன். ஒவ்வொரு சூழ்நிலைக்குமான அடுத்தகட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை சிந்தித்து துவங்குவதுதானே அதிமுக்கியம்.


பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை துவக்காமல், பயந்து காலம் தாழ்த்திக் கொண்டிருந்தால் எப்படி அந்த பிரச்சனையிலிருந்து முற்றிலுமாய் வெளிவருவது.


போலி சமாதானம் வேண்டாம்


உங்களின் கண்ணோட்டத்தையும், தற்போதைய மனநிலையையும் நன்றாக அலசுங்கள். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று உங்களை நீங்களே போலியாய் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே முன்னேற்ற, முதலில் உங்களின் “தான்” என்ற அகங்காரத்தை தவிர்த்து, உங்களின் மனப்பான்மையையும், கண்ணோட்டத்தையும் நன்றாக ஆராயுங்கள்.


தேவைப்பட்டால், ஒரு நல்ல மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெருவதில் நீங்கள் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டீர்கள். வீழ்ச்சிக்கான சூழலில் சிக்கித் தவிப்பதை விட, ஒரு நல்ல வழிகாட்டி / மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற்று சரி செய்து கொள்வது மிக நன்று.


நீங்கள் வெற்றியாளராக


உங்களை நீங்கள் வெற்றியாளராக்க, பல மேதைகளும், அறிஞர்களும் பட்டியலிட்ட எண்ணற்ற வழிமுறைகளில் ஒன்றிரண்டை இங்கு நினைவு கூறுகிறேன்:


 • உங்களின் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாய் இருக்கும் வண்ணம் தொடர்ந்து கவனமாய் மேம்படுத்துங்கள்;

 • ஒரு நல்ல வழிகாட்டியை தேர்வு செய்து, அவரின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் கேளுங்கள்;

 • எடுத்தவுடன் வலுவான போட்டியாளர்களுடன் மோதாதீர்கள். படிப்படியாய் உங்களின் கடின அளவை கூட்டினால் நம்பிக்கை தானாய் வளரும்.

 • வெற்றியும்-தோல்வியும் நிரந்தரமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய தனிப்பட்ட திறமை, கால சூழ்நிலைகள், செயல்பாட்டுக்கான முன்னேற்பாடுகளுக்கு ஏற்ப, வெற்றியும்-தோல்வியும் மாறிமாறி வந்து போகும் ஒரு நிலை தான் என்பதை உணருங்கள்.

இப்படி “வெற்றி”, “எண்ணம்”. “கண்ணோட்டம்” என்பது குறித்து எழுதிக்கொண்டிருந்தால், அது பெரிய புத்தகமாகவே வளர்ந்துவிடும். பின் படிப்பதற்கு உங்களுக்கு சலிப்பு தட்டிவிடும். ஆதலால் இந்த சிறிய கட்டுரையின் சாராம்சமாய், நீங்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய ஒரே பாடம்:


உங்களின் எண்ணம், மனப்பான்மை தான் உங்களுக்கு எல்லாமே;

உங்களின் வெற்றி-தோல்விகள் யாவும் - உங்களின் எண்ணத்திலும்

அவற்றை எதிர்கொள்ளும் மனப்பான்மையிலுமே தீர்மானமாகிறது;

உங்களின் மனப்பான்மை,அணுகுமுறைகளில் கவனம் செலுத்தி,

ஆக்கப்பூர்வமாக மாற்றி வெற்றி காணுங்கள்


- [ம.சு.கு 20.08.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page