top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : ஏன் திட்டமிட வேண்டும்?

எச்சரிக்கை மணி


நாளை காலை 5 மணிக்கு பேருந்து பிடித்து வெளியூர் செல்ல வேண்டும். அதற்கு காலை 4 மணிக்கே எழுந்து, தயாராகி பேருந்து நிலையத்திற்கு சென்று சேர வேண்டும். காலை 4 மணிக்கு தானாக விழிப்பு வராது என்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? கடிகாரத்திலோ, கைப்பேசியிலோ அதற்கான குறித்த எச்சரிக்கை மணி (விழிப்புக் கடிகை - அலாரம்) வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டுமல்லவா? இந்த "எச்சரிக்கை மணி" வைக்க மறந்தால், பெரும்பாலும் பேருந்தை தவறவிட நேரும். இல்லாவிட்டால் கடைசி நிமிடத்தில் எழுந்து அவசரவசரமாக ஓட நேரிடும்.


முன்கூட்டிய அறிவிப்பு – தயார்படுதல்


அரசாங்கம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை 6 மாதங்கள் முன்னதாகவே அறிவித்து விடுகின்றனர். ஏனெனில் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண், மேற்படிப்புக்கு மிக முக்கியமான ஒன்றாக இருப்பதால். அறிவிப்பு வந்ததும், இன்னும் ஆறுமாதம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தால், கடைசிப் 10 நாட்களில் படித்து அதிக மதிப்பெண் பெற முடியுமா?


அதே சமயம், ஆறு மாதம் நன்கு படித்து நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்ற கனவுடன் அறிவியல் பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், இதர பாடங்களான கணிதம், வரலாறு, மொழிப்பாடங்களில் எப்படி வெற்றி பெறுவது. ஆறு மாதம் இருக்கிறதென்றால், எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டுமென்று திட்டமிட்டு, காலையில் எது? மாலையில் எது? புத்துணர்வுடன் இருக்கும் போது எதை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்று சற்றே சிந்தித்து, திட்டமிட்டு கற்றால், தேர்விற்கு முழுமையாக தயாராகலாம் அல்லவா. அதை விடுத்து கடைசி நிமிடத்திற்கு எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால், வாழ்க்கையும் அவ்வாறே கடைசி கட்டத்துக்கு தள்ளிக் கொண்டே போய்விடும்.


கல்லோ, மலையோ - திட்டமிடுங்கள்


சிறு கல்லை நகர்த்துவதானாலும், பெரும் மலையை உடைப்பதானாலும், சிறிதாய் துவங்கி தொடர்ந்து செய்தால்தான் வெற்றி பெற முடியும். சிறிய கல்லை நகர்த்த பெரிய திட்டமிடல் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய மலையைப் பிளந்துகற்ற, எத்தனை திட்டமிடல் தேவைப்படும்?

எங்கு துவங்குவது? எப்படி பொருட்களை அங்கிருந்து கடத்துவது? வாகனங்களுக்கான பாதை? எத்தனை ஆட்களை பணியமர்த்துவது? என்னென்ன உபகரணங்கள் தேவை? எத்தனை நாட்கள் தேவைப்படும்? இயற்கை சீற்றங்களை எப்படி சமாளிப்பது? என்று எண்ணற்ற விடயங்களில் மிகப் பெரிய திட்டமிடல் தேவைப்படும் அல்லவா?


அந்தத் திட்டமிடல் இல்லாமல் மலையை அகற்ற முற்பட்டால், நூறு பேர் சேர்ந்து முயற்சித்தாலும், ஒரு வருடத்தில் செய்யவேண்டிய வேலையை முடிக்க 9 வருடங்கள் கூட ஆகலாம். திட்டமிடல் இல்லாவிட்டால் யார் எதை செய்யவேண்டும்? என்று குழப்பத்தில் துவங்கி, நீயா-நானா? என்ற போட்டியும், பொறாமையும் தொற்றி, எடுத்த வேலையை செய்ய இயலாமல் போய்விடும்.


காலை 10 நிமிடம் போதும்


இந்தத் திட்டமிடல், இந்திந்த பெரிய காரியங்கள், நிகழ்வுகளுக்கு மட்டுமே முக்கியம் என்றில்லை. இது நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கும் பெரும் தேவையாகிறது. இன்றைய தினம், என்ன செய்ய வேண்டுமென்று சரியான திட்டமிடல் நம்மிடம் இல்லாவிட்டால், எது அவசியமானது? எந்த நேரத்தில் செய்ய வேண்டும்? என்ற தெளிவின்றி முன்னுக்குப்பின் முரணாக செய்ய நேரிடலாம். அன்றைய தினம் செய்து முடிக்க வேண்டிய வேலையைவிடுத்து, இதர விடயங்களில் கவனம் சிதறி, எந்த ஒரு முக்கியச் செயலுமே முடிக்கப்படாமல் போய்விடவும் வாய்ப்புண்டு...


மாறாக காலையில் 10 நிமிடம் ஒதுக்கி, என்ன என்ன செயல்கள் இன்றைக்கு செய்ய வேண்டும், அவற்றில் எது அவசியம், எது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டியவை என்று பிரித்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதை பிரதானப்படுத்தி செய்யத் தொடங்கினால், செய்யவேண்டிய எல்லா செயல்களையும் குறித்த கால நேரத்தில், யாதொரு குழப்பமுமின்றி செய்து முடிப்பது எளிதாகும்.


திட்டமிடல் – என் அனுபவம்


என் அன்றாட வாழ்க்கை அனுபவத்தில், நானே பல முறை எந்த திட்டமிடலும் இல்லாமல் சில செயல்களைத் துவக்கி, பின் என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? என்பதிலேயே குழப்பம் அடைந்திருக்கிறேன். இன்றைக்கும் சில ஞாயிறுகளில், தாமதமாக எழுந்திருப்பது தொடங்கி, என்ன செய்ய வேண்டுமென்று திட்டமிடல் இல்லாமல், பெரும் பொழுதை சலிப்புடனும், தொலைக்காட்சியிலும் கழிக்கிறேன். இரவு உறங்கச் செல்லும் போது சற்றே அந்த நாளை பின்னோக்கிப் பார்த்தால், அன்று நான் செய்திருக்க வேண்டிய செயல்கள் என்ன? அவற்றுள் எதையும் தொடாமலேயே அன்றைய தினம் முழுவதும் வீணடித்திருப்பதை உணர்வேன்.


திட்டமிடல் – எல்லோரும் அறிந்துணர்ந்ததே


இந்தத் திட்டமிடல் பற்றி பேசவும், எழுதவும் நம் எல்லோருக்கும் முழுத்தகுதி உண்டு. ஏனெனில் இந்தத் திட்டமிடலால் ஏற்பட்ட பலன்களையும், திட்டமிடாமல் செய்ய துவங்கியதால் ஏற்பட்ட தோல்வி மற்றும் காலவிரயங்களையும், நாமனைவருமே அனுபவத்தில் கட்டாயம் பார்த்திருப்போம்.


என் எண்ணத்தில் இந்தத் திட்டமிடல் குறித்து எழுந்த சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து உங்களுடன் பகிர்கிறேன். இதை அப்படியே உங்கள் அனுபவத்துடன் ஒத்துப் பார்த்து, திட்டமிடல் குறித்த விழிப்புணர்வை அனுதினமும் சிந்தித்து ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாய் அமைத்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செய்வதாலும், திட்டமிடாமல் செய்வதாலும், என்ன நேரலாம் என்று பட்டியலிட்டிருக்கிறேன். இது வெறும் உதாரணம் பட்டியல் தானே தவிர, முழுமையானதல்ல. ஒவ்வொருவரும், அவர்களின் அனுபவம் சார்ந்து இந்தப் பட்டியலை வளர்த்துக் கொண்டே போகலாம்...

இப்படி, இந்த திட்டமிடலால் ஏற்படும் பயன்களுக்கான பட்டியலை வளர்த்துக் கொண்டே போகலாம். கட்டுரையின் அளவைக் கருத்தில் கொண்டு இதை இங்கேயே நிறுத்துகிறேன். உங்களின் அன்றாட அனுபவங்களில், திட்டமிடலின் நேர்மறை பயன்களை கண்டுணர்ந்து, அனுதினமும் தவறாது திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணுங்கள்.


மறந்துவிடாதீர்கள்!!


எப்போதும் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!!

அந்த தூரத்தை அளந்து

என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு செயல்பட்டால்

வெற்றியை எளிதில் எட்டிவிடலாம்...


- [ம.சு.கு - 26.03.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page