சின்னச்சின்ன சிக்கல்கள்
ஒரு குறிப்பிட்ட பொருளை 500 மைல்களுக்கு அப்பாலுள்ள சென்னைக்கு, நாளை காலை கொண்டு சேர்க்க வேண்டிய அவசர சூழ்நிலை. சில காரணங்களினால் உங்களால் பயணிக்க இயலாது. நேரம்கடந்துவிட்டதால், தபால் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இரவு நெருங்கிவிட்டதால் இனி அனுப்பவது சாத்தியமில்லை என்று விட்டுவிடுவீர்களா?
உணவு சமைத்து முடித்தாயிற்று. பரிமாறுவதற்குமுன் சுவைத்துப்பார்த்ததில், குறிப்பிட்ட காய்கறியில் உப்பு சேர்க்க மறந்தது தெரிகிறது. எல்லாம் சமைத்து முடிந்துவிட்டதால், இனி ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டுவிடுவீர்களா?
தடங்கள்களுக்கு வருந்துவீர்களா? தகர்ப்பீர்களா?
இப்படிச் சின்னச் சின்ன இக்கட்டான சூழ்நிலைகள் அன்றாடம் வந்துபோகும். எல்லாவற்றிலும் இருக்கும் ஏதேனுமொரு தடையை பார்த்து அந்த செயலையே செய்யாமல் தவிர்த்து விட முடியுமா? எந்த செயலையும் செய்யாமல் தவிர்க்கலாம் - ஆனால் நஷ்டம் யாருக்கு? தவிர்த்து விலகினால், நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்னடைவை சந்திக்க நேரிடுமல்லவா? இந்த சின்னச்சின்ன தடைகளை தகர்க்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டியது நாம் தானே. இயற்கையில், எல்லாவற்றிற்கும் ஒரு வழி இருக்கும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் அந்த வழி என்ன என்பது நமக்கு புலப்பட உரிய முயற்சியை நாம் மேற்கொண்டால் தானே முடியும்.
உப்பு போட தவறவிட்டு பண்டத்தை என்ன குப்பையிலா கொட்ட முடியும்! அதில் எப்படி கடைசியில் உப்பு சேர்ப்பது? {அல்லது} அதனுடன் வேறு ஒரு உணவுப்பொருளைக் கலந்து எவ்வாறு சரி செய்வது? என்று யோசிக்க வேண்டும் தானே.
நம்மால் சென்னை செல்ல முடியாவிட்டால், நண்பர்-தெரிந்தவர் என யாரேனுமொருவரை அனுப்ப வழியிருக்கலாமே. அப்படியும் யாருமில்லாது போனால், தனியார் பேருந்து ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்ப முடியுமா என்று முயற்சிக்கலாமே!
எந்த ஒரு தடைக்கும், அதன் பின்னால் பல வழிகள், தீர்வுகள் கட்டாயம் மறைந்திருக்கும். அந்த மறைபொருளை தேடிப் பிடிப்பவர்கள் மட்டுமே தடைகளைத் தகர்த்து முன்னேறுகிறார்கள்.
சூழ்நிலையும் – சாத்தியக்கூறுகளும்
அன்றாட வாழ்வில், பல செயல்களைத் தொடர்ந்து நாம் செய்துவருகிறோம். இயல்பான இயக்கத்தினுள், சிலவற்றை சாதிக்க, அதில் இறங்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை முதலில் எடுக்க வேண்டும்.
யதார்த்தம் யாதெனில், நம் முயற்சியினால் சிலவற்றை சாதிக்க முடியும். அதேசமயம் இந்த அண்டபிரம்மாண்டத்தில், பலவற்றை நெருங்கக்கூட முடியாது. கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில் எது சாத்தியமான ஒன்று? அதை எப்படி சாதிக்க முடியும்? என்ற இரு கேள்விகள் எப்போதும் நம் முன்னே இருக்கும். இந்த இரு கேள்விகளுக்கும், சரியான பதிலை கண்டுபிடித்து செயல்படுத்துவதுதான் நம் சாதனையின் முதல்படி.
நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் தான் – ஆனால்
எது சாத்தியம்? எப்படிச் சாத்தியம்?
என்பதை அறிந்துணராமல்
நேரத்தை வீணடித்துவிடாதீர்கள்!
யாரால் எது முடியும்?
புதியதாக ஒரு ஊழியர் பணியில் சேருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு அந்த நிறுவன வேலை எதுவுமே தெரியாது. அதற்கு அவர் பயனற்றவர் என்று முத்திரை குத்த முடியாது. சில நாட்கள் பயிற்சி அளித்தால், அவர் அந்த வேலையை சிறப்பாக செய்யக்கூடும். நீண்டகால நோக்கில், அந்த நிறுவனத்திற்கு அவர் ஒரு பெரிய சொத்தாகக்ககூட ஆகலாம். ஆரம்பத்தில் தெரியவில்லை என்பதற்காக விட்டுவிட்டால், முத்துக்கள் கிடைக்காது.
அந்த மனிதரின் திறமை என்ன? அவரது கற்றுக் கொள்ளும் ஆர்வம் எப்படி? என்ற விடயங்களை பார்த்து பணியமர்த்த வேண்டும். அப்போதைக்கு அந்த குறிப்பிட்ட பணியில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரால் எது சாத்தியம் என்று மேலாளருக்க பார்க்கத் தெரியவேண்டும். யாரால் இது சாத்தியம் என்று கண்டுணர்ந்து, அவர்களிடம் அந்தப் பணியை கொடுத்து செய்து முடிப்பதில்தான் உங்களின் பெரிய வெற்றி அடங்கியுள்ளது. எல்லாவற்றையும் நீங்கள் ஒருவரே செய்வது சாத்தியமில்லை.
நீங்கள் செய்பவற்றை, அப்படியே சிறப்பாக செய்யக்கூடிய அனுபவசாலிகள் / சிறந்த ஊழியர்கள் கிடைப்பதும் அரிது. தானாக ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். அவற்றைச் செய்யும் ஆற்றல் கொண்டவர்களை கண்டுணர்ந்து, அவர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களை தயார்படுத்தி செயல்களை சிறப்புற முடிக்கலாம். அப்படி திறமைகளை கண்டுபிடித்து செயல்களை பகிர்ந்தளித்தால் தான், உங்களால் அடுத்தகட்ட செயல்களுக்கு சென்று முன்னேற்றத்தை காண முடியும். உலகளாவிய அளவில் உங்கள் பொருட்களை-சேவைகளை விரிவுபடுத்த முடியும். இல்லாவிட்டால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
மாயவார்த்தைகளுக்கு மயங்கிவிடாதீர்கள்
ஒரு குறிப்பிட்ட செயலை, யாரால் செய்யமுடியும் என்ற சாத்தியத்தை பார்ப்பதுபோல, கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இது சாத்தியம் என்பதும் சரிவர கணிக்கப்பபட வேண்டும். நடக்காத காரியத்தின் பின்னால் ஓடுவதில் எந்தப் பயனுமில்லை.
கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எது சாத்தியம் என்றறியும் யதார்த்தத்தை தவறவிட்டு, கற்பனையின் பின்னால் ஓடினாள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். பணம் சேர்க்கும் மோகத்தில், அடிப்படை யதார்த்தத்தை தவறவிட்டுவிட்டு, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு (தேக்குமர திட்டங்களுக்கும், ஈமுகோழி வளர்ப்புக்கும்) எண்ணற்ற நிறுவனங்களில் பணம் கொடுத்து ஏமாந்த கதை நம்மூரில் தெருவுக்குத் தெரு உண்டு.
கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை திரைபடத்தில் பார்த்திருப்போம். அது சித்தர்களால் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், யாரோ ஒருவர் உங்களிடம் வந்து, இதுதான் கூடுவிட்டு கூடுபாயும் மந்திரம், பழங்கால சித்தர்களின் ஓலைச்சுவடியில் கிடைத்தது, இதை விரதம் இருந்து, இப்படி பூஜை செய்து ஜெபித்தால் நீயும் உடல் மாறலாம், என்று ஆசைகாட்டினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?. சில உண்மைச் சம்பவங்களில், இவற்றை நம்பி பணத்தையும், பொருளையும் இழந்துள்ளனர். நடைமுறை சாத்தியங்களை அறியாமல், இப்படிப்பட்ட மாயவார்த்தைகளை நம்பி ஏமாறுபவர்களை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.
சில அறிவியல் யதார்த்தங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சித்தர்கள் செய்தனர் என்பதற்காக, நம்மால் அப்படியே செய்ய முடியும் என்று நம்புவது முட்டாள்தனம். அந்த சித்தர்களின் வாழ்க்கை முறை வேறு- உங்களின் வாழ்க்கை முறை வேறு. இன்றைய காலகட்டத்தில் எது சாத்தியப்படும் என்று, அறிவியல் கண்ணோட்டத்தில் பாருங்கள்.
எதை - எப்படிச் செய்வது
ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியும் என்று தீர்மாணித்து இறங்கும்போது, அடுத்துவரும் கேள்வி - அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று? சில செயல்கள் பார்ப்பதற்கு எளிதாக தோன்றக்கூடும், ஆனால் போட்டியில் இறங்கினால்தான் அதற்குத்தேவையான கடுமையான போராட்டம் புரியும்.
உத; ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு. இது எளிதான விளையாட்டு - தன்னால் எளிதாக செய்து சாதிக்கமுடியும் என்று யூகித்து, உடனே தன்னை ஒலிம்பிக்கிற்கு அனுப்புங்கள் என்று ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதினால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும். அந்த விளையாட்டு எளிதானதாக இருக்கலாம். ஆனால் அதிலுள்ள நுணுக்கங்கள், தேவையான உடற்பயிற்சி, போதுமான அளவு களப்பயிற்சி என்ற அடிப்படைகள் எதுவுமில்லாமல், எப்படி தேசத்திற்காக களம் அனுப்புவார்கள்.
நீங்கள் தேசத்திற்காக பதக்கம் வெல்ல ஆசைப்பட்டால், முதலில் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்ற தெளிவான திட்டத்தை வகுக்க வேண்டும். அந்ததிட்டம் அன்றைய கால யதார்த்தத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். எடுத்தவுடன் நான் 40 கிலோ மீட்டர் ஓடுவேன் என்று இறங்கினால் பாதியிலே சுருண்டு விழ வேண்டியதுதான். தொடர்ந்த பயிற்சியும், படிப்படியான முன்னேற்றமே நடைமுறை சாத்தியம்.
அதிர்ஷ்டக்கார துரதிர்ஷ்டசாலிகள்
எதையுமே எப்படி சாத்தியப்படுத்துவது என்ற முறையான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நம்முடைய கடுமையான முயற்சி / பயிற்சிகளில், சில படிநிலைகளை வேகமாக கடக்கலாம். ஆனால் எல்லாப்படி நிலைகளையும் கடந்து போனால்தான் வெற்றி நிரந்தரமாகும். யாரும் நேரடியாக உச்சியில் போய் அமர்வது சாத்தியமில்லை. அதிர்ஷ்டத்தினால் அப்படியொரு வாய்ப்புகிட்டினாலும், அதை சமாளிக்கமுடியாமல் திணறி சரிந்துவிடுகின்றனர்.
உங்கள் ஊரில் பாருங்கள் – பரிசுச்சீட்டில் கோடி ரூபாய் பெற்றவர் யாராவது, அதை வைத்து சிறப்பாக வாழ்ந்துள்ளனரா என்று? பணத்தை எப்படி கையாள்வது, எது பாதுகாப்பான முதலீடு என்ற அடிப்படை அறிவில்லாமல் அதைமுற்றிலும் தொலைத்த அதிர்ஷ்டமான துரதிர்ஷ்டசாலிகள்தான் ஏராளம்.
சவால்களை சந்தித்து உயர்ந்தவர்கள் மட்டுமே, உச்சியில் இருக்கும் போது வரும் சவால்களையும் சந்தித்து அதில் நிலைத்திருக்க முடியும்
எங்கு இருக்கிறோம் - எங்கே போக வேண்டும்
எது சாத்தியம் - எப்படி சாத்தியம்
யதார்த்தத்தைப் புரிந்து உணர்ந்து
சாத்தியங்களை பட்டியலிடுங்கள்
செய்முறையை வகுத்திடுங்கள்
இடையிடையே சில சிக்கல்கள் வரலாம்;
சற்று சிந்தித்தால், சிக்கலை சிதறடிக்க கட்டாயம் ஒரு வழிகிடைக்கும்.
திட்டமிட்டு செயல்படுங்கள்
சாத்தியம் ஆனவைகளையெல்லாம் நிதர்சனம் ஆக்கிடலாம்!
- [ம.சு.கு 14-05-2022]
Comments