top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : மனச்சலனம் – மனவுறுதி

மார்ஷ்மெல்லோ ஆய்வு


1960-களில் அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வால்டர் மிஷல் என்பவர், 4 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டு ஒரு முக்கியமான ஆய்வை நடத்தினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட "மார்ஷ்மெல்லோ" எனும் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு இனிப்புப் பதார்தத்தை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டமையில், இது "மார்ஷ்மெல்லோ ஆய்வு" என்று பிரபலமடைந்தது.


இந்த ஆய்வில், குழந்தைகளை தனித்தனியே ஒரு அறையில், நாற்காலியில் அமர வைத்தனர். அவர்கள் முன்னாலிருக்கும் மேசையின் மேல் ஒரு தட்டில் ஒரு மார்ஷ்மெல்லோ பதார்த்தத்தை வைத்தனர். பின் ஆய்வாளர்கள், அந்த குழந்தையிடம், “இந்த மார்ஷ்மெல்லோவை நீ சுவைக்க விரும்பினால் எடுத்துக் சாப்பிட்டுக்கொள். ஆனால், இதை இப்போதைக்கு எடுத்துக் கொள்ளாமல் அப்படியே வைத்திருந்தால், சிறிது நேரம் கழித்து நாங்கள் உனக்கு இரண்டு மார்ஷ்மெல்லோ தருவோம்” என்று கூறி விட்டு ஆய்வாளர்கள் வெளியேறிவிட்டனர். பின் சிறிது நேரத்திற்கு, அந்த குழந்தைகளின் நடவடிக்கைகளை நிகழ்பதிவு (video Camera) மூலம் கண்காணித்தனர்.


சில குழந்தைகள் கதவை சாத்திய சில வினாடிகளிலேயே அந்த மார்ஷ்மெல்லோவை எடுத்துத் தின்றன. வேறு சில குழந்தைகள், பின்னர் கிடைக்க இருக்கும் இரண்டு மார்ஷ்மெல்லோவை நினைத்து, சற்று பொறுமையாக காத்திருந்தன.நேரம் செல்லச்செல்ல குழந்தைகளின் கவனம் முன்னிருக்கும் ஒரு மார்ஷ்மெல்லோவையே சுற்றி சுற்றி வந்தது. சில குழந்தைகள் அதை எடுத்து முகர்ந்து பார்த்தனர். சில நிமிடங்களில் அவர்களின் அடக்க முடியாத ஆசை மற்றும் ஆவலினால் அந்த மார்ஷ்மெல்லோவை எடுத்து தின்றுவிட்டனர். வெகுசில குழந்தைகளே, இந்த ஆய்வின் இறுதிவரை, முன்னிருந்த் ஒரு மார்ஷ்மெல்லோவை உடனே சுவைக்கும் ஆசைக்கு அடிபணியாமல், பொருமையாக காத்திருந்து, இறுதியில் இரண்டு மார்ஷ்மெல்லோக்களை பெற்றுச் சென்றனர்.


இந்த ஆய்வரிக்கையை 1972-ல் பேராசிரியர் வெளியிட்டார். இந்த ஆய்வு வெறுமனே குழந்தைகளின் ஆவல் மற்றும் ஆசையின் தூண்டுதல் பற்றியதானதாக மட்டுமே மக்கள் எண்ணினர். ஆனால் இந்த ஆய்வில் பங்கெடுத்த குழந்தைகளின் வளர்ச்சி குறித்து அடுத்த 10-20 ஆண்டுகளுக்கு கண்காணித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.


குழந்தைகளின் பிற்கால வாழ்வு


இந்த ஆய்வின் இறுதி வரை அந்த ஒரு மார்ஷ்மெல்லோவை தவிர்த்து, இரண்டாக கிடைக்க காத்திருந்து வெற்றிபெற்ற குழந்தைகள், அவர்களது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் பிற குழந்தைகளை விட மேம்பட்டு விளங்கினர் என்கிறது இந்த தொடர் ஆய்வறிக்கை.


மேலும், இந்த ஆய்வில் வெற்றி பெற்ற பல குழந்தைகள், மற்றவர்களைக் காட்டிலும் அறிவாற்றல் மிக்கவர்களாகவும், சமுதாய நடைமுறையில் மேம்பட்டவர்களாக திகழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்வில் ஏமாற்றமும், மன அழுத்தமும் குறைந்தவர்களாகவும், மிகுந்த விழிப்புணர்வு நிலையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைபவர்களாகவும் உள்ளனர் என்று அந்த தொடர் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.


வாழ்க்கைப்பாடம் - சிற்றின்பம் (எ) பேரின்பம்


இந்த ஆய்வு முடிவுகள் தவறான சோதனை மாதிரியை கொண்டுள்ளன என்று பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்த போதிலும், நாம் அறிந்துகொள்ள வேண்டிய மிகமுக்கியமான வாழ்க்கைப் பாடம் ஒன்றுதான். அவ்வப்போது வந்து மறையும் சிற்றின்பத்திற்காக நமது கொள்கை, குறிக்கோளை தவறவிட்டால், நம் வாழ்வில் வெற்றியெனும் பேரின்பத்தை இழக்க நேரிடும். சிற்றின்பத்திற்கு அடிபணிந்தவர்கள், கட்டாயம் செல்வத்தையும், நன்மதிப்பையும் சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.


உதாரணமாக;

  • குழந்தைகள் தினமும் தொலைக்காட்சியில் வரும் பொம்மை படங்களைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறக்கலாம். மாயப்பெட்டியின் முன் சிக்குண்டு கிடந்தால், கண்ணும் கெட்டு, சிந்தனை வளமும் குறைந்து சீரழிய நேரும்;

  • உணவகத்தில் அமர்ந்து உணவுப் பட்டியலைப் பார்க்கும்போது, நாவை அடக்கி சத்தான உணவுகளை மட்டும் அளவாக கேட்டு உட்கொண்டால்', நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நாவை கட்டுப்படுத்த முடியாதவர்களால், தங்களின் தொப்பை வளர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாது;

  • பணம், புகழ், அகங்காரம் என்னும் சிற்றின்பத்தை விளக்கி, இறைவனை சரணடைந்தால், இறைவன் ஆட்கொள்ளும் பேரானந்தம் கிட்டும். ஆசையே எல்லா துன்பங்களுக்கும் அடிப்படை என்று போதிமரத்தடி புத்தன் சொன்னது சத்தியமன்றோ!!

  • தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யாமல், உறக்கத்தின் மீதான மோகத்தில் இலயித்துருந்தால், விளையாட்டில் சாதிப்பதெப்படி. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல ஆசைப்பட்டால், நாள் தவறாமல் உடல்வருத்தி பயிற்சிக்கத்தான் வேண்டும்;

சலனங்களை மனவுறுதியால் வெல்லுங்கள்


நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஏதேனுமொரு சின்ன ஆசை நம்மை சலனித்துக்கொண்டேதான் இருக்கும். மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் தானே. அதைப்போலவே அங்குமிங்கும் மனிதனின் மனமும் தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டேதான் இருக்கும். இந்த அலைபாயும் மனதை அடக்க தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். வெற்றிபெற ஆசையிருந்தால் தொடர்ந்து போராடும் மன உறுதி அதிமுக்கியம்.


பேரின்பத்தை நோக்கிய பயணத்தில், இடைவரும் சிற்றின்பம் எனும் மாயை தவிர்க்கும் மனவுறுதி கொண்டவர்கள் மட்டுமே, வாழ்வில் வெற்றியாளர்களாய் உலாவர தகுதி உடையவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.


வெற்றி என்பது விற்பனைப் பொருளல்ல;

அது அவரவர்களின்

வேர்வைத்துளிகளில் உருவாகும் முத்துக்கள்;

முத்தெடுக்க வேர்வைக் குளியல் தான் ஒரேவழி


- [ம.சு.கு - 06.04.2022]6 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page