top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : நேர மேலான்மை சாத்தியமா ?


இயற்கையின் நியதி;


மனிதன் அறிவியலின் துணையுடன் எத்தனையோ மாற்றங்கள், புதுமைகளை செய்துகொண்டேயிருந்தாலும் அவனால் கட்டுப்படுத்த முடியாத இரண்டு நிகழ்வுகள் – (1) மரணம் (2) காலத்தின் ஓட்டம் (நேரம்). பிறந்தவர் ஒருநாள் இறப்பது உறுதி. அறிவியலால் அதை தவிர்க்க இயலாவிடினும், மரணத்தை சற்றே தள்ளிப்போட முயற்சிக்கிறது. அதுபோல நமக்கு இருக்கும் நேரமும், கூட்டவோ-குறைக்கவோ இயலாத ஒன்று. நம் கட்டுப்பாட்டில் இல்லாத இந்த நேரத்தை நம்மால் நிர்வகிப்பது சாத்தியமா ?


நேர மேலான்மை என்ற ஒன்று உண்மையில் மனித செயல்பாட்டில் கிடையாது. நேரத்தை கட்டுப்படுத்த நம்மால் இயலாது. காரணம் காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காத ஒரு நிலையற்ற நிலையான விடயம்.


நம்மால் எது முடியும்;


நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றானால், பின்னர் நேர மேலான்மை என்ற தலைப்பில் நாம் அறிய என்ன இருக்கிறதென்று தோன்றும். ஆம்! நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள அந்த சிறிய நேர இடைவெளிப் பொழுதை நமக்கு ஏற்றபடி பயன்படுத்தி நிர்வகிக்க முடியும்.


குறிப்பிட்ட காலத்தில், எதை முதலில் தேர்வுசெய்து முடிக்க வேண்டுமென்ற விருப்பத்தேர்வு நம்மிடம் தான் உள்ளது. எந்த நேரத்தில் எதை செய்துமுடித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென்ற செயல் மேலான்மை நமக்கு சாத்தியமே !


நாம் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன, எது அவசியமானது? எது அவசரமானது? எது அவசியமில்லாதது? என்று பிரித்துப் பார்த்து, எதை? எப்பொழுது? செய்ய வேண்டுமென்ற தேர்வை செய்து, செயல்படுத்தி வெற்றிபெறுவது நம் மேலான்மை திறனாகும்.


நேரமேலான்மை என்னும் செயல் மேலான்மையின் பரிணாமங்கள்;


நேர மேலான்மை என்றவொன்று இயலாவிடினும், அந்த தலைப்பு பல நூற்றாண்டுகளாய் பல்வேறு கோணங்களில் கையாளப்பட்டு என்னற்ற பரிமாணங்களை கடந்து வந்துள்ளது.


 • செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிட்டு செய்து முடிப்பதில் தொடங்கிய நேரமேலான்மை அறிவு, அன்றைய தினம் கடந்து நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம் என்ன செய்ய வேண்டுமென்று திட்டமிடலாய் உருவெடுத்து பல பரிணாமங்களைக் கடந்து இன்று எண்ணற்ற நிர்வாகவியலாளர்கள் பொதுவாக பயன்படுத்தும் ‘ஐசனோவர் அணி’ என்பது வரை வளர்ந்திருக்கிறது.

 • இந்த மேலான்மை கோட்பாடு, இன்று எண்ணற்ற கைபேசி செயலிகளாய் உருவெடுத்து நம் அன்றாட பயன்பாட்டிற்கு மிக எளிமையானதாய் இருந்தபோதிலும், நம்மில் எத்தனை பேர் செயல் மேலான்மை அறிவுடன் அதை பயன்படுத்துகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி ?


 • மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் மிக எளிய சுயவிளக்கமளிக்கும் படம். அது மேலோட்டமாய் பார்க்கும்போது அன்றாடம் செய்யும் செயல்களை இவற்றில் பிரித்து செயல்களின் முக்கியத்துவத்திற்கேற்ப செய்துமுடிக்கும் ஒரு சாதாரண வரைகட்டம் போல காணப்படும். செயல் திட்டமிடலுக்கு மிக ஏற்றதோடல்லாமல், நாம் எதில் எத்தனை நேரத்தை செலவிட்டு நம் திறன்களை வளர்த்து நம் குறிக்கோள்களை குறித்தநேரத்தில் எட்ட நம்மை வழிநடத்தும் ஒரு அற்புதமான வழிகாட்டியாகும்.

 • அவசரம் ! அவசியம் ! என்ற இருவேறு கோணங்களில், வாழ்வில் நமக்குள்ள குறைந்த நேரப்பொழுதில், எந்த செயலில் கவனம் செலுத்தி, எந்த செயலை பிறர்மூலம் செய்வித்து, எதை முழுவதுமாய் ஒதுக்க வேண்டுமென்று நம்மை வழிநடத்துமொரு அற்புதமான திட்ட அறிக்கையாகும்.

பகுதி I - அவசரம் ! அவசியம் !

 • குறிப்பிட்ட நேரத்தில் செய்வதாக ஒத்துக்கொண்டு விடயங்களை முடித்தல்

 • போர்க் காரியங்கள் {வீடும் - நாடும்}

 • சரியாண நேரத்தில் செய்யதவறிய செயல்கள்


பகுதி II - அவசரம் ! அவசியமில்லை !

 • செய்யவேண்டியது – அதேசமயம் பிறரிடம் கொடுத்து செய்து முடிக்கவல்லது


பகுதி III - அவசரமில்லை ! அவசியம் !

 • திட்டமிட்டு செய்யவேண்டிய எல்லா செயல்களும்

 • சுய முன்னேற்றம்

 • ஆரோக்கியம் - உடற்பயிற்சி


பகுதி IV - அவசரமில்லை ! அவசியமில்லை !

 • தேவையில்லாதது {தொலைக்காட்சி பார்ப்பது, சமூக வளைதளங்களில் உலவுதல்}

என்ன செய்ய வேண்டும்

 • நம்முன் இருக்கும் செயல்களை இந்த நான்கு வகைகளாக பிரித்து எதை முதலில் செய்ய வேண்டும், எதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும், எதை நாம் தவிர்க்க வேண்டுமென்று ஆராய்ந்து நமது செயல்களை செய்வதால் நம்மால் சிறப்பாக நமது செயல்களை மேலான்மை செய்ய இயலும். நமது செயல்களை சரியாய் நிர்வகிப்பதன் மூலம், நமக்கென்று இருக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாய் பயன்படுத்திய மனநிறைவையும் நாம் பெறுவோம்.


 • செயல்களின் மீது கவனம் செலுத்தாதபோது, நம்மில் பலர் எண்ணற்ற நேரத்தை நான்காவது பகுதியாகிய அவசரமற்ற, அவசியமில்லாத செயல்களில் செலவிட்டு நேரத்தை வீணடிக்கிறோம். (உத;) தொலைக்காட்சி பார்ப்பது, இனையம் மற்றும் சமூகவலைதளங்களில் தேவையின்றி நேரத்தை வீணடிப்பது போன்றவைகள். தொலைக்காட்சி மூலமாக நாட்டுநடப்பை உடனுக்குடன் அறிந்துகொள்கிறோம் என்று சமாதானம் சொல்வதாயிருந்தால், ஒரே செய்தியை எத்தனை மூறை கேட்டு நேரத்தை வீணடிக்கிறோம் என்பதை கவணியுங்கள். இன்றைய தினம், கைபேசியில் எந்த தளத்தில், எந்த செயலியில் எவ்வளவு நேரம் செலவிட்டோம் என்று கணக்கிட்டு காட்டும் வழிகளிருக்கின்றன. இதை பயன்படுத்தி சில தினங்களுக்கு உங்கள் கைப்பேசிப் பயன்பாட்டை நீங்களே அலசிப்பாருங்கள். உங்கள் நேரத்தை எப்படி பயனுடனும், பயனற்றதாயும் செலவிட்டீர்கள் என்பது தெரியும்.


 • நம் செயல்களின்மீது கவனமில்லாதபோது, நான்காம் பகுதியில் எண்ணற்ற நேரத்தை செலவிடுவது ஒருபுறம் என்றால், செயல்களைப் பட்டியலிட்டு செய்யும்போது, மறுபுறம் அவசரமாக செய்து முடிக்க வேண்டியவைகளென்று பிரிக்கப்பட்ட செயல்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி, ஒன்றாம் பகுதியில் அதிக நேரத்தையும், அதைத்தொடர்ந்து இரண்டாம் பகுதியில் அடுத்தபடியான அதிக நேரத்தையும் செலவிடுவது நம்மில் பலரும் இயல்பாக தேர்வு செய்யும் முறைமையாகும். இது அறிவுசார்ந்த தேர்வாக இருக்குமா என்று சற்றே அலசுவோம்.


 • இயல்பாகவே இந்த இரண்டு பகுதிகளும் அவசரமாக செய்யவேண்டிய செயல்களின் பட்டியல்தான். பகுதி ஒன்றில் அவசரத்தினுடன் அவசியமென்ற நிலையும் கலந்திருப்பதினால், அதற்குரிய நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். ஆனால் அந்த கட்டாயம், பகுதி இரண்டிற்கும் பொருந்துமா ? என்றால் நம்மில் பலர் வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். பகுதி இரண்டில் அவசரமாக செய்யவேண்டிய செயல்களாக இருந்தாலும் அது அவசியமற்றதாக இருக்கும்பட்சத்தில் அதில் நம் பயனுள்ள நேரத்தை செலவிடுவதினால் என்ன பயன் ? (உத;) ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கைப்பேசியை எடுத்து மின்னஞ்சல், குறுஞ்செய்தி வந்துருக்கிறதா என்ற பார்த்து நம் கவனத்தை அடிக்கடி சிதறடிப்பதால் நேரம்தான் வீணாகும். ஐந்து நிமிடத்திற்கு பதிலாய் ஒன்று அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை அதை பார்த்து கவனத்துடனும், தரமாகவும் பதில் அளித்தால் போதுமானதுதானே. இரண்டாம் பகுதியில் உள்ள எண்ணற்ற செயல்கள்தான் நம்மை திசைதிருப்புவது. அது நமக்கு அந்த கனத்தில் அவசியமில்லாத செயலாக இருக்கும்போது, அதில் நாம் ஏன் நேரத்தை வீணடிக்கவேண்டும். அப்படியே அவசரமாக இருப்பினும், அதை பிறரிடம் கொடுத்து முடிக்கச் செய்யலாமே!


 • ஒன்று, இரண்டு மற்றும் நான்காம் பகுதிகளில் உள்ள செயல்கள் மற்றும் அதற்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்று பார்த்தோம். பொதுவாக அன்றாட வேலைப்பழுவில் உள்ளவர்கள் மூன்றாம் பகுதியை முற்றிலுமே மறந்துவிடுகிறார்கள் அல்லது தவிர்த்துவிடுகிறார்கள். ஏனெனில் அந்த பகுதியில் பட்டியலிட்ட செயல்கள் அவசரமில்லை என்பதால். ஆனால் இந்த அவசரமில்லாத அவசியமான செயல்கள் பின்னாளில் முதலாவது பகுதிக்கு தானாக நகர்ந்து நம் தலைக்குமேல் உட்காரும்போது அதை வழக்கம்போல் அவசர அவசரமாக செய்துமுடிப்போம்.(உத;) நம் ஆரோக்கியம் காக்கும் உடற்பயிற்சி, சரியான நேரத்தில் சத்தான உணவில் கவணம், அறிவு வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் அன்றாடம் நூல் வாசித்தல்,.....


 • அன்றைய தினம் இது அவசரமில்லாத ஒன்றாக இருந்தாலும், அந்த செயலின் அவசியம் கருதி, இந்த மூன்றாம் பகுதிக்கு போதுமான நேரத்தை ஒதுக்கினால், எல்லா அவசியமான செயல்களும் என்றுமே குறித்த காலத்திற்குள் அவசரமின்றி சிறப்பாக செய்ய இயலும். மூன்றாம் பகுதிக்கு போதிய கவனம் செலுத்திவிட்டால், எந்தவொரு அவசியமான செயலும் முதல் பகுதிக்கு வராமலே முடிக்கப்பட்டுவிடும். இதனால் தேவையற்ற பதற்றமும், மன அழுத்தமும் முற்றிலும் குறையும்.


 • இப்படி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட செயல்களில், எந்த பகுதிக்கு எத்தனை நேரம் ஒதுக்க வேண்டும் என்பது அவரவர் இருக்கும் சூழ்நிலைக்கும், செயலுக்கும் ஏற்றவாறு மாறுபடும். நம்மில் பெரும்பாலானவர்களின் செயல்கள் மற்றும் ஒதுக்கப்படவேண்டிய இன்னதென்று பட்டியலிட்டு அணி செய்தால், பொதுவாக இப்படியான நேர ஒதுக்கீடு தேவைப்படும்;


 • மேலே குறிப்பிட்ட படம் பொதுவான நிலையாக இருந்தாலும், எந்த நிலையில் இருப்பவர்க்கும் மூன்றாம் பகுதியில் செலவிடும் நேரம்தான் அவர்களின் வாழ்க்கை ஓட்டத்தை பயனுடையதாகவும், மனஅழுத்தம் மற்றும் பதற்றமும் இன்றியும் அமைத்துக்கொள்ள இயலும்.


 • நேர மேலான்மை சாத்தியமா என்ற கேள்வியில் துவங்கி, நேரமேலான்மை என்பது நாம் எந்த செயலை எப்படி தேர்வு செய்து எப்பொழுது செய்ய வேண்டுமென்ற செயல் மேலான்மையில் தான் உள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் வாயிலாய் தெளிவு பெற்றோம்.


 • கிட்டத்தட்ட எல்லா வெற்றியாளர்களும் தங்களின் வாழ்க்கைப்பாதையில் தாங்கள் தங்கள் நேரத்தை வீணடிக்காமல் சரியாக நிர்வகித்ததாக கூறுவர். அவை அனைத்தும் அவர்களுக்கென இருந்த 24 மணி நேரத்தில் எந்த செயலை தான் செய்ய வேண்டும், எதை மற்றவர்களிடம் கொடுத்து செய்துமுடிக்க வேண்டுமென்ற செயல் மேலான்மையின் முக்கியத்துவத்தை அறிந்து கடைபிடித்ததால் வெற்றிபெற்றனர் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.


 • நேரத்தைக் குறித்தும், செயலைக் குறித்தும் சிந்திக்கும்போதெல்லாம், மறவாது இந்த கேள்வியை உங்களுக்குள் அலசுங்கள்.

அ. இது நமக்கு அவசியமான செயலா ?

ஆ. இது நாம் அவசரமாக செய்யவேண்டியதா ?

இ. இதை பிறரிடம் கொடுத்து செய்ய இயலுமா ?

ஈ. இது என் இலட்சியத்திற்கு ஒத்துப்போகும் செயலா ?


 • நீங்கள் செய்ய நினைக்கும், செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும் எண்ணும்போதே இந்த கேள்விகளையும், இதற்கான பதிலையும் மனதில் ஓடவிட்டால், எதை எப்பொழுது செய்ய வேண்டுமென்ற செயல் மேலான்மை நிர்வாகவியலில் கைதேர்ந்தவராகி வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வீர்கள்.


- ம.சு.கு [22-12-2021]

33 views2 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page