top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : கற்றுக்கொடுங்கள்

Updated: Apr 14, 2022

கற்றல் சிறந்தது - கற்பித்தல் அதனினும் சிறந்தது

கற்றலால் அறிவு விரியும்

கற்பித்தலால் அறிவு ஆழமாகும்.”


கல்வியறிவு என்பது நமக்கு மட்டுமே சொந்தமான தனிப்பட்ட சொத்து அல்ல. நாம் பெற்ற அறிவை பிறருக்கு வழங்க வேண்டுமென்பது உலக நியதி. உலகநியதியென்று எங்கு எழுதியிருக்கிறதென்று கேட்காதீர்கள். நமக்கு நம் முன்னோர்கள் அந்த அறிவை கற்பித்து சென்றனர். நம் சந்ததிக்கு அந்த அறிவை கடத்த வேண்டியது நமது தலையாய கடமை. அந்தச் சங்கிலித் தொடரை உடைத்தால், மீண்டும் கற்காலத்திலிருந்தல்லவா நமது அடுத்த தலைமுறை ஆரம்பிக்க நேரிடும்?


கற்றல்-கற்பித்தல் சங்கிலித்தொடர்


நம்முடைய ஆசான்கள் நமக்கு மெனக்கெட்டு சொல்லிக் கொடுத்தனர். அந்த அறிவைக் கொண்டு இந்த அவசர உலகில் அசராமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மில் சிலர் கோடிகளிலும், பலர் இலட்சங்களிலும், ஏனனயோர் ஆயிரங்களிலும் பொருளீட்டி வாழ்க்கையை நகர்த்துகின்றனர். செல்வம் ஈட்டுதல் கல்வியின்‌ ஒரு சிறு பயனே. பொருட் செல்வத்தை தாண்டி, அருட்செல்வத்தை வழங்கவல்ல அறிவை ஆழமாக்க, இன்னும் ஆயிரமாயிரம் முறை படித்துணர வேண்டியுள்ளது. அந்த வாய்ப்பு பிறருக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் எளிதில் கிடைக்கிறது.


கற்பிக்க தயார்படுதல்


பிறருக்கு சொல்லிக் கொடுக்க நாம் நம்மைத் தயார்படுத்தும் விதமும், நமக்கு நாமே படித்தறிந்து கொள்ளும் விதமும் முற்றிலும் வேறுபடும். பிறருக்குச் சொல்லிக் கொடுக்க எண்ணி ஒன்றைப் படிக்கும்போது, நாமே ஏன்? எதற்கு? என்ற கேள்விகளில் சற்று ஆழமாக சிந்திக்க நேரிடுகிறது. மேலும் சொல்லிக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து பல புதிய கேள்விகள் தோன்றுதல் இயல்பே. அந்த கேள்விகளுக்கான விடைத்தேடல், நம் அறிவை மேலும் விருத்தியடையச் செய்கிறது. அறிவின் வளர்ச்சியே, யாதொன்றின் காரண-காரியத் தையும், மூலத்தையும் முழுவதுமாய் உணர்வதுதானே!


உங்கள் வேலைக்கு யார்?


நீங்கள் பணி புரியும் அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை நன்றாக வளர்த்து, அந்தப் பணிக்கு நீங்கள் இன்றியமையாதவராக இருக்கிறீர்கள். அந்த பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று மேலதிகாரியாக விரும்புகிறீர்கள். நீங்கள் மேலாண்மை வேலைக்குச் சென்று விட்டால் நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை “யார் செய்வர்?” என்னும் கேள்வி கட்டாயம் உங்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆலோசிக்கும் போது வரும். அதைச் செய்ய ஆளில்லை என்றால், உங்கள் பதவி உயர்வு தடைபடுக்கூடும்.


அதே தரணத்தில், உங்கள் பணிகளை செய்ய வேறு ஊழியர் யாரேனும் தயாராக இருந்தால், உங்கள் பதவி உயர்வின் மீதான முடிவுகள் எளிதாகும். ஆதலால், உங்கள் பணிகளை உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியருக்கு கற்பிக்க வேண்டும். அது உங்கள் இடத்தை எதிர்காலத்தில் நிரப்ப ஏதுவாக இருக்கும். இந்த கற்பித்தல் ஒருபுறமிருக்க, உங்களின் மேலதிகாரி பணியை நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அது உங்களின் பதவி உயர்வுக்கு உங்களை முழுமையாக தகுதி பெறச் செய்யும்.எந்தப் பணியில் இருந்தாலும், நீங்களும் உங்கள் நிறுவனமும் சிறக்க, நீங்கள் உங்களின் கற்றல்-கற்பித்தலை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்களின் இந்த கற்றல்-கற்பித்தல் என்று நிற்கிறதோ, அன்றிலிருந்து உங்களின் வளர்ச்சி தேங்கிவிடும். காலப்போக்கில் பணியாற்றும் நிறுவன்த்திற்கு நீங்கள் தேவையற்றவர் ஆகிவிடுவீர்கள்.


பெரிய வெற்றிக்கு – குழு தேவை


நீங்கள் ஒருவரே செய்தால், ஒரு குறிப்பிட்ட அளவு பணியைத்தான் செய்து முடிக்க முடியும். அதே செயலை ஒரு குழுவைக் கொண்டு செய்தால், பல மடங்கு உற்பத்தியை அதிகரிக்கலாம். ஒரு குழுவை தேர்வு செய்து நன்கு பயிற்சியளித்து பயன்படுத்துவதன் மூலம், உங்களின் வருவாயை பல மடங்கு பெருக்கிக் கொள்ளலாம்.


உதாரணமாக, ஒரு இயந்திரத் தொழில் நுட்பக்கூடம் வைத்திருக்கிறீர்கள். இயந்திர வடிவமைப்பில் நீங்கள் மிக கைதேர்ந்தவர். உங்கள் திறமையில் ஒரு நாளைக்கு எத்தனை இயந்திரங்களை வடிவமைக்க முடியும்? இன்று வடிவமைத்ததைவட இருமடங்கு நாளை செய்ய முடியுமா? உங்களுக்கு இருக்கும் 24 மணி நேரத்தில், உங்களால் செய்யக்கூடியது ஒரு குறிப்பிட்ட அளவே. ஆதலால் உங்களின் பொருளீட்டும் அளவும் அளவானதே. அதே நீங்கள் இன்னும் பத்து பொறியியல் மாணவர்களுக்கு பயிற்றுவித்து, எண்ணற்ற வடிவமைப்புகளை உருவாக்கினால், உங்கள் வருவாய் தானாக பல மடங்கு பெருகும். அதே சமயம், உங்கள் வியாபாரத்தையும் உலகளாவிய அளவிற்கு விரிவடையச் செய்யலாம்.


கவனமாய் இருத்தல் அவசியம்


ஒன்றை மறந்துவிடாதீர்கள்! இந்த உலகத்தில் எந்த தொழிலையும், எந்த பொருளையும், நீண்ட நாட்கள் ரகசியமாக வைத்திருக்க முடியாது. எந்தப் பொருளும் சந்தைக்கு வந்தால், மறுநாளே அதற்கு நிகரான அல்லது அதே பொருளின் பிரதியை சந்தை உருவாக்கி விடுகிறது. பிறர் நம் தொழிலை ஆக்கிரமித்துவிடுவர் என்று பயந்து, கற்பித்தலை நிறுத்தாதீர்கள். எந்தச் செயலிலும் நேர்மறை-எதிர்மறை இருக்கத்தான் செய்யும். எதிர்மறைகளை முற்றிலும் ஒழிக்க முடியாது. சற்றே கவனமாய்ப் பார்த்துகொண்டால் போதும்.


வியாபாரத்தில், பொதுவாக ஒரு பயம் இருக்கும் - வேலையாளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டால், அவன் நாளை நம் கடைக்கு எதிரே கடை திறந்து விடுவான் என்று. உங்களுக்கும் இந்த பயம் உள்ளூர வருவது இயல்பு தான்.


ஒன்றை மறந்துவிடாதீர்கள்! இந்தியச் சந்தை மிகப்பெரியது. இங்கு உங்களைப் போல் நூற்றுக்கணக்கானோர் கடை விரித்து வியாபாரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தந்தால், உங்களுக்கு யாரும் போட்டியாக வந்து விட முடியாது. ஒரே கோணத்தில் யோசித்து, போட்டியாகிவிடும் என்று பயந்து, கற்பித்தலை தவிர்த்து விடாதீர்கள்.


அடுத்த தலைமுறை


எல்லாவற்றையும் நீங்களே காலத்திற்கும் செய்து கொண்டிருக்க முடியாது. உங்களின் திறமையை, கற்பித்தல் மூலம் அடுத்த பணியாளர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் கட்டாயம் கடத்தப்பட வேண்டும். எண்ணற்ற நிறுவனங்கள், யதார்த்த வாழ்க்கையில், ஒரு முதலாளி இறந்தவுடன், அவர் செய்து வந்த தொழிலை தொடர்ந்து செய்ய வழிதெரியாததால் மூடநேரிடுவதை சாதாரணமாக காணலாம். தனக்குப்பின் அந்தத் தொழிலை யார் ஏற்று, எப்படி நடத்தவேண்டும் என்ற கற்பித்தலை தவிர்ப்பவர்களின் தொழில் கட்டாயம் இப்படி தொடராமல் மூடப்படுவது இயல்பு. நீங்கள் உருவாக்கியது, உங்களுக்கு பின்னால் தொடர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், கற்பித்தலை சரியான நேரத்தில் துவக்கிடுங்கள்.


"கற்றலும் -கற்பித்தலும்

வாழ்வின் நிரந்தரத் தொடர்கதை;

நீங்கள் கற்க வேறொருவர் கற்பிக்கிறார்;

இன்று நீ கற்பது

நாளை உன்னால் கற்பிக்கப்படுகிறது;"


- [ம.சு.கு - 13.04.2022]



7 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page