top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வெறுமனே இயங்காதீர்கள் ! வெற்றிகரமாக முடியுங்கள்!

“என்னத்த செஞ்சு, என்னத்த சாதிச்சோம்!”


“நானும் மாடாக உழைத்து தேய்கிறேன்;

ஆனா ஒன்னும் முன்னேற்றமே இல்லை!”


இந்த வழக்கமான வசனங்களை, நீங்கள் எண்ணற்ற குடும்பஸ்தர்களிடம் அடிக்கடி கேட்டிருக்கக்கூடும். உண்மைதான்! நிறைய செல்வம் சேர்க்க வேண்டும், தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும் என்று மக்கள் கடுமையாக உழைக்கத்தான் செய்கின்றனர். ஆனால் 99% மக்கள் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே அதே நிலையில் வாழ்கின்றனர். அது ஏன்?


  • உழைப்புதான் வெற்றி என்று எண்ணற்ற அறிஞர்கள் சொன்னது அவர்களுக்குப் பொருந்தாதா?

  • அப்படி நிறைய உழைத்தாலும் வெற்றி பெற அதிர்ஷ்டம் வேண்டுமா?

  • வெற்றி பெறும் தகுதி இருக்கிறதென்று நம் தலையில் எழுதப்பட்டிருக்க வேண்டுமா?


இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமலே, நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.


வேடிக்கை மனிதர்கள்


உழைக்கிறோம், ஆனால் வெற்றி பெற முடிவதில்லை! அது ஏன் என்று தெரியவில்லை? தெரிந்து கொள்ள ஒருசிலரே முயற்சிக்கிறார்கள்! பலர் அது ஏன் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்ற புரிதலே இல்லாமல் வாழ்க்கையில் உழைக்கிறோம் என்ற பெயரில் ஒடுகின்றனர். இன்றைய வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்.


இங்கே மகாகவி பாரதியின் வரிகளை நான் நினைவு கூற விரும்புகிறேன்;


தேடிச் சோறு நிதந்தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ!.


பாரதி, தான் எல்லோரையும் போல சாதாரணமானவன் இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார். அப்படியானால், அவர் சொன்னதுபோல நாமெல்லாம் வேடிக்கை மனிதரா?


கடுமையாக உழைத்தும், வெற்றிபெற முடியாமல் போக நாம் என்ன தவறு செய்கிறோம்? எங்கு கோட்டைவிடுகிறோம்?


காகமும் தண்ணீரும்


சிறுவயதில் காகம் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி பானையிலிருந்து அருந்திய கதையை கேட்டிருப்பீர்கள். அதிலிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன? சற்று புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் [கற்களை நிரப்பி பானை நீரை மேலே வரவழைப்பது போல], நமக்கு தேவையானது கிடைக்க வழிபிறக்கும். அப்படி நாம் புத்திசாலித்தனமாக செயல்படுகிறோமா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!


விறகு வெட்டியும் – மேலான்மை அறிவும்


காகத்தின் கதை போல, சிறுவயதில் விறகுவெட்டியின் கதையையும் கேட்காதவர்கள் இருக்க முடியாது. தேவதை வந்து, விறகுவெட்டியின் நேர்மையை மெச்சிய கதை. இன்று மேலாண்மை கல்வி பயில்பவருக்கு ஒரு மாறுபட்ட விறகு வெட்டியின் கதை சொல்லப்படுகிறது.


ஒரு விறகுவெட்டி, புதிதாய் வேலைக்குச் சேர்ந்து மரம் வெட்டிய போது, அவனது உற்பத்தித்திறன் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால் நாளடைவில், அவனது அன்றாட உற்பத்தியின் அளவு [வெட்டும் மரங்களின் அளவு] குறைந்து கொண்டே வந்தது. அவன் அதை ஈடு செய்ய, தினமும் கூடுதலாக 1-2 மணி நேரம் மரங்களை வெட்டினான். ஆனாலும் அவனது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை. என்ன ஆயிற்று அந்த விறகு வெட்டிக்கு? இது மேலாண்மை கல்வி பயில்பவர்களிடம் கேட்கப்படும் ஒரு வழக்கமான கேள்வி!


நீங்கள் சற்று உங்கள் மூளையை கசக்கி யோசித்து பாருங்கள்! அந்த விறகுவெட்டி கூடுதலாக உழைத்தும் பலன் கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம்?


கடினமாக உழைத்தாலும் வெற்றி கிட்டுவதில்லையே


யதார்த்தத்தில், அந்த விறகுவெட்டியின் நிலையில் தான் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தினம் தினம் மாடாய் உழைத்தும், எந்தவொரு பெரிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை. சந்தையில் பொருட்களின் விலை உயரும் அளவிற்கு, நம்முடைய ஊதியம் ஏறுவதில்லை. விளைவு, நம்முடைய தேவைகளை தினம்தினம் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.


விடைதான் என்ன?


இந்த விறகு வெட்டியின் கதைக்கும்? நம் வாழ்க்கையின் அன்றாட போராட்டத்திற்கும்? விடை இல்லையா என்று என்னை நீங்கள் கேட்பது தெரிகிறது.


  • உலகின் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கத்தான் செய்கிறது!

  • எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கத்தான் செய்கிறது!

ஆனால் அது நம் அருகிலேயே இருந்தாலும், அதை உணர்கின்ற திறன் நம்மில் பலரிடம் இருப்பதில்லை என்பதுதான் பெரிய கொடுமை.


விறகுவெட்டி அன்றாடம் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி கடுமையாக உழைத்தாலும், வீழ்கின்ற மரங்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கிய காரணம், அவன் மரங்களை வெட்ட பயன்படுத்தும் உபகரணங்களின் மீது கவனம் செலுத்தாது. குறிப்பாக கோடாரி! ஒரு கோடாரியானது, தொடர்ந்து பயன்பாட்டின்போது அதன் கூர்மை படிப்படியாக குறையும். தினமும் 10-15 நிமிடம் அந்த கோடாரியை தீட்டி கூர்மையை அதிகரித்தால், வெட்டுவது எளிதாவதுடன், வீழ்கின்ற மரங்களின் எண்ணிக்கையும் தானாக அதிகரிக்கும்.


நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள், நாம் பயன்படுத்தும் பொருட்கள், போன்ற முக்கியமான சில விடயங்களின் மீது உரிய கவனம் செலுத்தாமல் எத்தனை உழைத்தாலும், உற்பத்தி அதிகரிக்காது. அதே சமயம் அந்த கோடாரியின் கூர்மையை தொடர்ந்து அதிகரித்து, மரம் வெட்டத் தேவைப்படு்ம் இதர உபகரணங்களையும் [ஆப்பு, நெம்புகோல், இரம்பம்...] சரிவர பராமரித்து வைத்திருந்தால், மரம் வெட்டுபவரின் உற்பத்தித்திறன் குறையாமல் இருக்கும்.


கடனுக்கு செய்கிறோமா? காரியமாய் செய்கிறோமா?


மரம்வெட்டுபவருக்கு இருந்திருக்க வேண்டிய இந்த யதார்த்த அறிவு, நம் அன்றாட வாழ்க்கைக்கும் ஒரு பொதுவான தேவை!

  • நம்மில் எத்தனை பேர் அன்றாடம் செய்யும் வேலைகளை, செய்ய வேண்டுமே என்கிற கடனுக்காக செய்கிறோம்?

  • எத்தனை பேர் அன்றாடம் செய்யும் செயலை மேம்படுத்தி முன்னேற்றம் காணவேண்டுமென்கின்ற விழிப்புடன் செய்கிறோம்?

நாம் விழிப்புடன் செய்யாத வேலை எதுவுமே வெறும் கடனுக்கு செய்பவைகள்தான். இந்த கடனுக்கு செய்பவைகளில் எத்தனை உழைத்தாலும், முன்னேற்றமல்ல, பின்னடைவு ஏற்படுவதற்கே சாத்தியமதிகம்.


உழைப்போடு விழிப்பும் முக்கியம்


ஒரு செயலை தினம் தினம் செய்கிறோம், கடுமையாக உழைக்கிறோம், என்பதற்காக நாம் அதில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். நாள்தோறும் அதை செய்தாலும், அதில் விழிப்புடன் செயல்பட்டு அன்றாடம் என்ன முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்பது முக்கியமான கேள்வி. விழிப்புடன் செய்யாவிட்டால், செய்வதில் வேகமும், நேர்த்தியும் குறையும். விளைவு, பின்னடைவுதான்!!


எதிராளியின் பலம்-பலவீணங்களும் தெரிந்திருக்க வேண்டும்


நீங்கள் நல்ல விளையாட்டு வீரராய், அன்றாடம் கடுமையான உடற்பயிற்சி செய்து தயாரானாலும் வெற்றி பெறுவது உறுதி என்று சொல்லிவிட முடியாது. உங்களின் அன்றாட பயிற்சி என்பது வெறும் செயலின் அன்றாட போக்குதான். அதனால் உடல் வலுபெறலாம். செய்கின்ற செயல் பழக்கத்தினால் எளிமையாகலாம். ஆனால் வெற்றி கிட்டுமா என்றால் உறுதியில்லை, ஏனெனில் எதிராளியும் அதே மாதிரிதான் தயாராகிக் கொண்டிருக்கக்கூடும்.


அப்படி நமக்கு சமமாக தயாராகும் எதிராளியின் திறமைகளை, பலம்-பலவீணங்களை அறிந்து, அதற்குரிய கூடுதல் திறமைகளை எப்படி வளர்ப்பது? நம் அனுகுமுறையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துவது? என்று தினமும் சிந்தித்து மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம், வெற்றியும் சாத்தியமாகும்.


கஷ்டப்பட்டு செய்கிறோம் என்பதற்காக அது கடின உழைப்பாகிவிடாது


ஒரு குறிப்பிட்ட வேலையை தினந்தினம் செய்ய வேண்டும்;

அதை நாம் தினம் தவறாமல் செய்கிறோம்;

இது வெறும் இயக்கம்தான்;

அந்த சாதாரண இயக்கமல்ல வெற்றி;


அப்படி தினமும் செய்து கொண்டே இருந்தால் வெறுமனே செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்; அதில் வரும் சிறு ஊதியத்தைக் கொண்டு வேடிக்கை மனிதராய் வாழ்ந்து முடிய வேண்டியதுதான்.


நாம் அன்றாடம் செய்யும் இந்த சாதாரண இயக்கத்திற்கு, “நம்முடைய கடினமான உழைப்பு” என்று முத்திரை குத்தி வெற்றி கிட்டவில்லை என்று சலித்துக்கொண்டாள், எந்த மாற்றமும் வராது. இந்த சாதாரண இயங்குதலில் சலித்துக்கொண்டு வாழ்க்கையின் மீது விரக்தி அடைபவர்கள் அப்படியே வாழ்ந்து சாக வேண்டியதுதான்.


வேகமும் – விவேகமும் கூடினால் வெல்லலாம்


இந்த அன்றாட இயக்கத்தைத் தாண்டி, நாம் அடைய வேண்டிய வெற்றியை நோக்கி அடுத்த என்ன செய்கிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் சவால்!

வெற்றியை சாத்தியப்படுத்த உழைக்க வேண்டும், வெறும் இயக்கத்தை முன்னிலைப்படுத்தியல்ல!


செய்யவேண்டுமே என்று செய்தால் வெறுமனே செய்துகொண்டே இருக்க வேண்டியதுதான். சாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செய்தால், செயலின் வேகமும், விவேகமும் கூடும். வேகமும், விவேகமும் கலந்துவிட்ட செயலில், வெற்றிபெறும் வரை நாம் தொடர்ந்து உழைத்து சாதிப்போம்.


இலக்கை நோக்கி முன்னேற


உழைக்க வேண்டும் என்பதற்காக செய்பவை எல்லாம் வெரும் இயக்கம்தான். கடிவாளம் போட்ட குதிரை போல ஒரே பாதையில் இயங்கிக் கொண்டிருந்தால் அப்படியே போகவேண்டியதுதான். வெற்றி பெற ஆசையிருந்தால், அன்றாட இயக்கத்திற்கு தாண்டி இலக்கை நோக்கி முன்னேர தொடர்ந்து திட்டமிட வேண்டும். அடைய வேண்டிய இலக்கை நோக்கி, நாம் அன்றாடம் செய்யும் வேலையில் சின்னச் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.


நம்முடைய இயக்கமானது, இலக்கை நோக்கிய இலட்சியப் பயணமாக இருக்க வேண்டும். வெறுமனே காலத்தை கடத்தும் அன்றாட செயலாக இருந்தால் பயனேதுமில்லை.


அடுத்து என்ன செய்யலாம்?


தலைப்பு புரிந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்காதீர்கள். உங்களை நீங்களே அன்றாடம் கேளுங்கள். சூழ்நிலைகள் தினம்தினம் மாறும். நேற்று சாத்தியம் இல்லாதது இன்று சாத்தியப்படக் கூடும். ஒவ்வொரு நாளும் புதிய உதயம் தான்.


  • தொடர்ந்து இன்றென்ன மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றம் அடையலாம் என்று யோசியுங்கள். நேற்று செய்ததையே இன்றும் செய்வது வெறும் இயக்கம் தான், முன்னேற்றமல்ல! இந்த வெறுமனேயான இயக்கத்தைத் தாண்டி, முன்னேற்றம் காண, தினமும் குறைந்தபட்சம் ஒரு சதவீகித முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தினம்தோரும் ஏற்படுத்தும் ஒவ்வொரு சிறு முன்னேற்றமும், காலப்போக்கில் கூட்டுத்தொகையாய் உற்பத்தியின் ஆளவுகளை பன்மடங்காய் மாற்றிவிடும்.

  • புதுமைகளைப் புகுத்தி வெற்றி காண நிறைய படியுங்கள். உலகத்தின் போக்கை தொடர்ந்து கவனியுங்கள். நாட்டுப் பொருளாதாரத்தின் நிலவரம் தெரியாமல் பெரிய சம்பாத்தியத்திற்கு திட்டமிடுவதில் பயனில்லை.

  • இன்று கணினியால், உலகமே உங்கள் கைகளுக்குள் வந்துவிட்டது. இந்த தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்.

  • உங்களுக்கான மாற்றத்தை யாரும் வந்து வழிநடத்த மாட்டார்கள். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, நீங்களே ஏற்புடையவைகளை இனங்கண்டு புதுமைகளை புகுத்தி வெற்றிகளைக் காண வேண்டும். நீங்கள் உரிய மாற்றங்களை செய்யத் தவறினால், காலத்தின் மாற்றம் உங்களை தேவையற்றவராக்கி விடக்கூடும் (கணினி வந்ததால், தட்டச்சர்களின் தேவை குறைந்தது போல).

  • உங்கள் அறிவை தொடர்ந்து கூர்மைப்படுத்துங்கள். இன்றைய நடைமுறையை புரிந்துகொண்டு மாற்றங்களையும், புதுமைகளையும் தொடர்ந்து உள்நுழைக்க வழிதேடுங்கள். உங்கள் உற்பத்தியின் அளவை நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு எளிமையாக்கி அதிகரிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு வெற்றி உங்களுடையதாகும்.

எல்லோருக்கும் பிறப்பு முதல் இறப்புவரை

வாழ்க்கை ஏதேனுமொருவகையில் நகர்கிறது;

உங்களில் எத்தனைபேர்

வாழ்க்கையை மனநிறைவோடு வாழ்கிறீர்கள்?

வாழ்வதற்கும், வெறுமனே நகர்வதற்கும்

எண்ணற்ற வேறுபாடு உண்டல்லவா!

உங்களுக்கு எப்படி

சென்றுகொண்டிருக்கிறதென்று சிந்தித்துப்பாருங்கள்!

வெறுமனே நகர்ந்துகொண்டிருந்தால்

வெற்றியை நோக்கி திசைதிருப்ப

விழிப்புடன் செயல்களை செம்மைப்படுத்துங்கள்!


- [ம.சு.கு 28-09-2022]



15 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page